Sunday 17 January 2010

பாக்கியராஜ் செய்யாத புரட்சி - சினிமாராணி டி.பி.ராஜலட்சுமி பகுதி -6

பாக்கியராஜ் செய்யாத புரட்சி

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

நாவலும் திரைப்படமும்:

1931 இல் வெளிவந்த கமலவல்லி என்ற இந்நாவல் 1936 இல் நாவலாசிரியராலேயே திரைக்கதை அமைக்கப்பட்டு அவரின் சொந்தத் தயாரிப்பில் சொந்த இயக்கத்தில் மிஸ்.கமலா என்ற பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்ட செய்தி கட்டுரையில் முன்பே குறிப்பிடப்பட்டுள்ளது. நாவலைப் புரட்சிகரமான மரபு மீறல்களோடு படைத்த டி.பி.ராஜலட்சுமியால் அதே துணிச்சலோடு திரைப்படத்திற்குத் திரைக்கதை அமைக்க இயலவில்லை என்பது ஒரு முக்கியப் பதிவு.

மிஸ்.கமலா திரைப்படத்தின் முன்பாதிக் கதை சற்றொப்ப நாவலை ஒட்டி அமைக்கப்பட்டிருந்தாலும் பின்பாதிக் கதை திரைக்கதையில் மாறுபடுகின்றது.
திரைப்படத்தில், கதைத்தலைவி கமலி கண்ணப்பன் காதல் -கமலி டாக்டர் கட்டாயமணம் -முதலிரவில் கமலி டாக்டரிடம் தன்காதலை வெளிப்படுத்தல்- டாக்டர் காதலர்களைச் சேர்த்துவைப்பதாக உறுதியளித்தல் என்று தொடரும் கதை பின்னர் மாற்றமடைகிறது. எஸ்.எம். உமர் எழுதும், மிஸ். கமலா திரைப்படக் கதைச்சுருக்கத்தின் பின்பாதி வருமாறு,

“கமலி, கண்ணப்பனிடம் சென்று தன்னை ஏற்றுக்கொள்ளும்படிக் கேட்டுக் கொள்கிறாள். கண்ணப்பன் மறுத்து விடுகிறான். நீ இன்னொரு வனால் தாலி கட்டப்பட்டவள் என்று! பாவம் கமலி! வேறு என்ன செய்வாள் அவள்? தற்கொலை செய்துகொள்ளப் போகிறாள். ஆனால் எதிர்பாராதவிதமாக ஒரு கார்விபத்தில் சிக்கிக்கொள்கிறாள்.

அந்தக் காரில் இருந்தவர்கள் கண்ணப்பனின் பெற்றோர். அவர்கள் கமலியைத் தங்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்கின்றனர், சிகிச்சைக்காக. சிகிச்சை பார்க்கவந்த டாக்டர் வேறு யாருமல்லை, கமலிக்குத் தாலிகட்டிய, தற்போது அவளைச் சகோதரியாகப் பாவிக்கும் அதே டாக்டர்தான்.
தன் வீட்டிற்குள்ளேயே கமலி வந்துவிட்டதைக் கண்ட கண்ணப்பன் கலங்குகிறான். ஆனால் அவனால் ஒன்றும் சொல்லமுடியவில்லை.

உடல்நலம் தேறிய கமலி வயிற்றுப் பிழைப்புக்காக ஜிப்சி வேஷம் போடுகிறாள். அந்த வேஷத்தில் அவளைக் காதலிக்கத் தலைப்படுகிறான் கண்ணப்பன். ஜிப்சி வேஷத்தில் இருந்த கமலி, மிக சாமார்த்தியமாக, தன்னை அவன் மணந்துகொள்வதாக ஓர் உறுதிமொழி வாங்கிக்கொண்டு, வீட்டில் அனைவரும் இருக்கும்போது அதை எடுத்துக் காட்டுகிறாள்.

‘நான்தான் ஜிப்சி, ஜிப்சிதான் நான்!’ என்கிறாள். டாக்டரும் கமலி என் சகோதரிதான் என்கிறார். கண்ணப்பன் கமலி காதல் கைகூடுகிறது.”
(எஸ்.எம். உமர், கலை உலகச் சக்கரவர்த்திகள், பக். 436)

கமலவல்லி நாவலில் தன் அக்காள் பத்மாசனி பாரிஸ்டர் இவர்களின் வற்புறுத்தலுக்கு ஒருவாறு உடன்பட்டுக் கமலவல்லியை மணந்துகொள்கிறான் கண்ணப்பன். ஆனால் திரைப்படத்திலோ கண்ணப்பன், ‘இன்னொருவன் தாலிகட்டிய பெண்’ என்று கமலியை ஏற்றுக்கொள்ள மறுத்துவிடுகிறான். பிறகு ஜிப்சி வேஷம் போட்டு ஒருவகையில் ஏமாற்றித்தான் கண்ணப்பனை மணக்கிறாள் கமலி.

நாவலுக்கும் திரைப்படத்துக்குமான இந்த வேறுபாடு கவனத்தில் கொள்ளத்தக்கது. நாவல் என்ற படைப்பிலக்கியத்தில் பேசப்படும் மரபுமீறல்களும், சீர்திருத்தங்களும் வெகுசன ஊடகமாம் திரைப்படத்திற்கு என்று வருகிறபோது வழுக்குகிறது. நாவலுக்கும் திரைப்படத்துக்கும் படைப்பாளி ஒருவராய் இருந்தபோதும் இதில் மாற்றமில்லை.

இருபதாம் நூற்றாண்டின் முப்பதுகளில்தான் இந்நிலை என்றில்லை, எண்பதுகளில் சற்றேறக்குறைய இதே கமலவல்லி நாவலின் கதையை தம் சொந்தப் படைப்புபோல் இயக்குநர் கே.பாக்யராஜ் அந்த ஏழு நாட்கள் என்ற பெயரில் திரைப்படமாக எடுத்தபோது, தன்மனைவியைக் காதலித்தவனுக்கு மீண்டும் அவளையே திருமணம் செய்துவைக்கக் கணவன் தயாராக இருந்தாலும் திருமணம் மற்றும் தாலி பற்றிய புனிதங்களிலிருந்து விடுபட இயக்குநர் கே.பாக்யராஜ் தயாராயில்லை. மரபு மற்றும் புனிதங்களை மீறாதவனாகவே காதலனைச் சித்தரிக்கின்றார் அவர்.

எண்பதுகளில் கூடப் படைப்பாளிகள் செய்யத் தயங்கிய மரபுமீறல்களை முப்பதுகளிலேயே செய்துகாட்டிய நாவலாசிரியர் டி.பி.ராஜலட்சுமியின் துணிச்சல் உண்மையிலேயே பாராட்டத்தக்கது.

தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முதல் சகலகலாவல்லி என்ற பெருமைக்குரிய டி.பி.ராஜலட்சுமியின் படைப்பிலக்கியப் பங்களிப்பும் நாவல் இலக்கிய வரலாற்றில் அவருக்குரிய தனியிடம் குறித்த பதிவுகள் கால ஓட்டத்தில் மறக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் சுவடுகளற்றுப் போகாமல் உரிய கவனம் பெறுதல்வேண்டும்.

Sunday 10 January 2010

காதல் மணத்தை வலியுறுத்தும் டி.பி.ராஜலட்சுமி - சினிமாராணி டி.பி.ராஜலட்சுமி பகுதி-5

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

காதல் மணத்தின் மேன்மை:
நாவலாசிரியர் டி.பி.ராஜலட்சுமி நாவலில் மையப்படுத்தி விவாதப் பொருளாக்குவது பெண்களின் திருமணச் சுதந்திரம் குறித்த சிக்கலையே. இப்பிரச்சனை அவர் தம்சொந்த வாழ்க்கையில் எதிர்கொண்ட பிரச்சனையும் கூட. தம் வாழ்க்கையிலும் தம்மையொத்த பெண்களின் வாழ்க்கையிலும் நேர்ந்த இக்கட்டாயமணக் கொடுமைகளுக்குத் தீர்வுகாணும் போக்கிலேயே கமலவல்லி நாவலின் கதைப்பின்னல் அமைக்கப்பட்டுள்ளது.

கட்டாயமணத்திற்கு மாற்றாக, பழந்தமிழர்களின் வாழ்க்கை முறையை அடியொற்றிய காதல் மணம் வழிவந்த இல்லறமே மேலானது என்பதை வலியுறுத்த விரும்புகிறார் நாவலாசிரியர், அதனோடு பெண்களை எல்லாநிலைகளிலும் சுந்திரமாகச் செயல்படத் துணைபுரிவதே ஆண்களின் கடமையாயிருக்க வேண்டும் என்பதனையும் வலியுறுத்தும் போக்கில் நாவல் அமைக்கப்பட்டுள்ளது.

நாவலில் கமலவல்லியின் தடபுடலான மறுமணத்திற்குப் பின்னர் திருமணத்திற்கு வந்திருந்தவர்களை நோக்கிப் பாரிஸ்டர் பேசும் நீண்டஉரையின் மையக் கருத்தாக இடம்பெற்றிருப்பது காதல் மணத்தின் மேன்மையும், பெண்களின் சுதந்திரம் குறித்த பிரகடனமுமே.

பாரிஸ்டர் பக்தவச்சலம் உரையின் ஒரு பகுதி,

“இப்பரத கண்டத்தில் அக்காலத்தில் பருவமடைந்த ஆண்பெண்கள் ஒருவரையொருவர் மறைமுகமாய்ச் சந்தித்துக் காதலித்த பின்னரே பகிரங்கத் திருமணம் செய்துகொள்ளும் வழக்கமிருந்து வந்தது. இதனால் அக்காலத்திலிருந்த குடும்பங்களில் உண்மைக்காதலும் உறுதிப்பாடும் நம்பிக்கையும் மலிந்து கிடந்தன. இவ்வுண்மைகளுக்குத் தொல்காப்பியம், மணிமேகலை, குண்டலகேசி முதலிய காவியங்களே தக்கசான்றாகும்.

தற்காலமோ அத்தகைய களவுக் காதல் மணம் முற்றிலும் ஒழிந்துபோய், விலைமணம் மலிந்து காட்டிலிருக்கும் பெண்ணுக்கும் வீட்டிலிருக்கும் ஆணுக்கும் புரோகிதன் பொருத்தம் தந்தான் என்றவுடன் சதிபதிகளின் இஷ்டத்தையும்கூட எதிர்பாராமல் பலவித சடங்குகளின் மூலம் அவ்விருவரையும் சேர்த்துவைத்து விவாகமென்று சொல்லிவிடுகிறோம்.

அதிலும் பெரியவர்களென்னப் பட்டவர்கள் குழந்தைகளின் கல்யாண விஷயத்தில் பெரும்பாலும் தங்களுடைய உறவு, வருமானம், அந்தஸ்து முதலிய சுயநலங்களையே பெரிதெனக் கருதுகிறார்கள்.”
(டி.பி.ராஜலட்சுமி, கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன், பக். 122-123)

“மாசற்ற ஸ்திரீ ரத்தினங்களை ஆண்களோடு சமமாய்ப் பாவித்து, அவர்களைக் கேவலம் அடிமையென்று கருதாமல் பெண்கள் தங்கள் சுதந்திரத்தைத் தாராளமாய் அனுபவித்து இன்பவாழ்வு வாழ அவர்களைத் தாராளமாய் விட்டுவிடுவதே இப்போது ஆணுலகத்தைச் சார்ந்த பெருத்த கடமையாகும்.

ஆருயிர் நண்பர்களே! தேனினும் இனிய நம்தமிழ்நாடு பழைய சீரும் சிறப்பும் பெற்றுப் புகழ்பெற வேண்டுமானால் நீங்கள் பெண்களை, ஆண்களைப் போலவே நினையுங்கள். அவர்களிடம் உங்கள் சுயநலத்தை விட்டுவிடுங்கள். அவர்களுடைய பெருமைக்கும் உயர்வுக்கும் அவர்களைக் கொண்டாடுங்கள். எதன் பொருட்டும் உங்கள் சுயநலத்திற்காக அவர்களுடைய இ~;டத்தையும் சந்தோ~த்தையும் பறிமுதல் செய்யாதீர்கள்.”
(டி.பி.ராஜலட்சுமி, கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன், பக். 123-124)

மேலே சான்று காட்டப்பட்டுள்ள நாவலின் பகுதியில் பாரிஸ்டர் என்ற கதாபாத்திரத்தின் வாயிலாக, நடைமுறையில் உள்ள ஏற்பாட்டு மணத்தை விலைமணம் என்று சாடியும் மணமக்களின் விருப்பு வெறுப்புகள் புறக்கணிக்கப்பட்டு பெரியவர்களின் சுயநல வெளிப்பாடாகவே இவ்வகைத் திருமணங்கள் நடத்தப்படுகின்றன என்று விமர்சித்தும் புரோகிதன் தருகின்ற பொருத்தம் பார்த்துச் செய்யும் திருமணங்களின் பொருத்தமின்மையை நையாண்டி செய்தும் டி.பி.ராஜலட்சுமி எழுப்பும் எதிர்க்குரல்களின் பன்முகப் பரிமாணம் நம்மை வியக்க வைக்கிறது.

கமலவல்லியின் கணவன் டாக்டர் சந்திரசேகரன் கமலவல்லியைக் கண்ணப்பனுக்கு மறுமணம் செய்துவைக்கும் முயற்சியின் ஊடாகவே நாவலாசிரியர் சந்திரசேகரனுக்குத் தக்கதொரு வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கின்றார். அவள்தான் பாரிஸ்டர் பத்மாசனி தம்பதிகளின் புதல்வி செல்வாம்பாள். டாக்டர் சந்திரசேகரன் செல்வாம்பாள் திருமணத்தை ஒரு ஏற்பாட்டு மணமாக அதாவது பெற்றோர் பார்த்து மணம்முடிக்கும் விலைமணமாகச் சித்தரிக்க டி.பி.ராஜலட்சுமி விரும்பவில்லை.

அது ஒரு காதல்மணமாக அமைய வேண்டும் என்று நாவலாசிரியர் விரும்பியதன் விளைவாக அன்னநடை ஆரணங்கு என்று பெயரிடப்பட்ட நாவலின் பதினோராம் அத்தியாயம் செல்லாம்பாள் சந்திரசேகரன் இருவரின் காதலை விவரிக்கும் போக்கில் அமைக்கப்பட்டுள்ளது. ஆக நாவலாசிரியர் டி.பி.ராஜலட்சுமி காதல்மணத்திற்குத் தரும் முக்கியத்துவத்தின் வெளிப்பாடே செல்வாம்பாள் டாக்டர் சந்திரசேகரன் காதல்பகுதி.

புலவர் பூங்கொடி பராங்குசம் அவர்களின் இலக்கியக்களம் - நூல் அணிந்துரை

  முனைவர் நா . இளங்கோ கவிதை இரசனை , இது படைப்புக்கு இணையானதோர் முருகியல் செயற்பாடு . என்றைக்குக் கவிதைகள் தோன்றினவோ அன்றைக்கே கவ...