Thursday 31 May 2012

பாவேந்தரும் பொதுவுடைமையும்


முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி - 8.


புதுவை நா.இளங்கோ

உலகம் உண்ண உண், உடுக்க உடுப்பாய் என்று உலகு தழுவிய பார்வையால் மானிட சமுத்திரம் நானென்று கூவிய புதுவைக் குயில் பாவேந்தர் பாரதிதாசன் இருபதாம் நூற்றாண்டு தந்த பாவலர்களில் தலைசிறந்தவர். பாவேந்தரின் கவிதை வீச்சு தனித்தன்மை வாய்ந்தது. செம்மாந்த மொழிநடையும் செழுமையுடைய சொல்லழுகும் பொருளழகும் ஒரு சேர இணைந்து அவரின் பாடல்களுக்குத் தனியழகையும் மெருகையும் ஊட்டவல்லன.

தமிழ்க் கவிஞர்களில் மட்டுமில்லாது இந்தியக் கவிஞர்களிலும் கூட வேறு எவரோடும் இணைவைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு அவருடைய கவிதைகள் தமிழ், தமிழர் என்று தொடங்கி திராவிடம் பாடி, தேசியம் பாடி, உலகப் பொதுமைபாடி, மானிடத்தின் மகத்துவம் பாடி விசாலப் பார்வையால் விரிந்து விரிந்து செல்லும் இயல்புடையன.


தமிழ், தமிழர், திராவிடம் எனத் தமிழ்த் தேசியம் பாடும் பாவேந்தரின் கவிதைகள் இந்தியையும் வடக்கையும் ஆரியத்தையும் மூர்க்கமாகச் சாடும் இயல்வுடையன என்றாலும் அவர்  குறுகிய கண்ணோட்டம் உடையவரல்லர். உலகப் பொது நோக்கமே பாவேந்தரின் உயர்ந்த குறிக்கோள். தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு சம்பாத்யம் இவையுண்டு தானுண்டு என்போன் சின்னதொரு கடுகு போல் உள்ளங்கொண்டோன்... என்று சாடும் கவிஞர், தூயஉள்ளம் அன்புள்ளம் பெரியஉள்ளம் தொல்லுலக மக்கள் எலாம் ஒன்றே என்னும் தாயுள்ளம் தனிலன்றோ இன்பம் என்று விசாலப் பார்வையால் மக்களை விழுங்குகின்றார்.

அறிவை விரிவுசெய்! அகண்டமாக்கு
விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!
அணைந்துகொள்! உன்னைச் சங்கமமாக்கு!
மானிட சமுத்திரம் நான் என்று கூவு!
பிரிவிலை எங்கும் பேத மில்லை
உலகம் உண்ண உண்! உடுத்த உடுப்பாய்
புகல்வேன், உடைமை மக்களுக்குப் பொது!
புவியை நடத்துப் பொதுவில் நடத்து!



என்று முழங்கும் பாவேந்தருக்கு, உடைமை மக்களுக்குப் பொது என்பதும் புவியைப் பொதுவில் நடத்த வேண்டும் என்பதும்தான் கனவு, இலட்சியம் எல்லாமே.

    உலகு தழுவிய மானிடத்தின் மேன்மையே பாவேந்தர் காண விரும்பிய முன்னேற்றம். அதுவும் சமத்துவத்தின் உச்சியில் நிற்கும் மானிடமே ஆற்றல் வாய்ந்தது என்பது அவர்கொள்கை, மானிடம் என்பது குன்று- தனில் வாய்ந்த சமத்துவ உச்சியில் நின்று, மானிடருக்கு இனிதாக.. வாழ்வின் வல்லமை மானிடத் தன்மை என்று தேர் இது கவிஞரின் வாக்கு.

    மானிடத்தை நேசிக்கும் கவிஞன், மனிதனுக்கு நேர்ந்த அவலங்களைப் பற்றிச் சிந்திக்காமல் இருப்பானா? பாவேந்தரைப் பொருத்தமட்டில் ஒடுக்கப்பட்ட மக்களின் நலமே மனித சமூகத்தின் நலம். தமிழகத்தில், இந்தியாவில், உலகத்தில் எங்கே வாழும் மனிதனாக இருந்தாலும் எளியோர் துன்புறுதலைக் காணச் சகிக்காதவர் பாவேந்தர். வலியோர் சிலர் எளியோர் தமை வதையே புரிகுவதா? என்று கோபப்படும் கவிஞர், கொலை வாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே  என்று அதற்குத் தீர்வு காணவும் புறப்படுகிறார்.

    பாவேந்தரின் கவிதை நெடுகிலும் உழைக்கும் மக்களின் அவலம் விரிவாகப் பேசப்படுகிறது. தொழிலாளர், விவசாயி போன்ற உடலுழைப்புப் பணியாளர்களின் துயரமே பாவேந்தரை பெரிதும் வாட்டுகிறது. உழைப்பரின் மேன்மைகளைப் புகழ்ந்தும் உழைக்காதவர்களின் கீழ்மையைச் சாடியும் தம் கவிதைகளைப் படைக்கிறார். நடவுசெய்த தோழர் கூலி நாலணாவை ஏற்பதும் உடல் உழைப்பிலாத செல்வர் உலகை ஆண்டு உலாவலும் கடவுளின் ஏற்பாடு என்றால் அந்தக் கடவுளையே விட்டொழிக்க வேண்டும் என்கிறார். மண்மீதில் உழைப்போர் எல்லாம் வறியராக இருப்பதும் உரிமை கேட்கும் மக்கள் துன்புறுத்தப்படுவதையும் கண்டு வேதனைகொள்கிறார்.

சித்திரச் சோலைகளே, உமைத்திருத்த இப்பாரினிலே முன்னர் எத்தனைத் தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ உங்கள் வேரினிலே என்றும் அக்கால உலகிருட்டைத் தலைகீழாக்கி அழகியதாய் வசதியதாய் செய்து தந்தவர்கள் உழைப்பாளர்களே என்றெல்லாம் உழைப்பின் மேன்மையை, உழைப்பாளரின் மேன்மையை பலபடப் புகழ்ந்து பேசுகின்றார்.


    மானிடத்தின் மகத்துவம் பேசும் கவிஞன், சமத்துவத்தின் தேவையை, உயர்வைப் பேசும் கவிஞன், உழைக்கும் மக்களின் உன்னதத்தைப் பேசும் கவிஞன் என்பதோடு நில்லாமல்,

    புதியதோர் உலகம் செய்வோம்- கெட்ட
    போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
    பொதுவுடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
    புனிதமோடு அதை எங்கள் உயிரென்று காப்போம்


என்று புதிய உலகம் அதுவும் பொதுவுடைமை உலகம் அமைக்க விரும்புகிறார் பாவேந்தர். மேலும் உலகப்பன் பாடலில் ஓடப்பராய் இருக்கும் ஏழையப்பர் உதையப்பராகி விட்டால் ஓர் நொடிக்குள் ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆய்விடுவர் என்று வர்க்கப் போராட்டத்தின் தேவையை வெளிப்படையாகவே வலியுறுத்துகின்றார். சமத்துவ சமுதாயம் காண விழையும், வழிகாட்டும் பாடல்கள் பலவற்றைப் பாவேந்தர் பாடியிருந்தாலும் பாவேந்தர் தம்மை ஓர் பொதுவுடைமை இயக்கக் கவிஞராக வெளிப்படுத்திக் கொள்ள விரும்பினாரா? என்பது ஒரு சிக்கலான கேள்வி.

II                   
பாரதியின் அறிமுகத்திற்கு முன்பே பாவேந்தர் கவிதைகள் எழுதும் பயிற்சி உடையவராயிருந்தார். ஆனால் அந்தக் கவிதைகள் எல்லாம் தேய்ந்த பாட்டையில் செல்லும் சராசரிக் கவிதைகளாகத்தான் இருந்தன. பாடலில் பழமுறை பழநடை என்பதோர் காடு முழுதும் கண்டபின் கடைசியாய்ச் சுப்பிரமணிய பாரதி தோன்றியென் பாட்டுக்குப் புதுமுறை புதுநடை காட்டினார்.  என்று பாவேந்தரே பாரதியால் தாம்பெற்ற புதுமுறை புதுநடை பற்றிக் குறிப்பிடுகின்றார்.

    பாரதியின் நட்புக்குப் பின்னர் பாரதிதாசன் ஆன கனக.சுப்புரத்தினம் தொடக்கக் காலங்களில் தேச விடுதலைக்குக் காளியை வேண்டுவது, பாரத தேசத்தை வாழ்த்திப் பாடுவது, காந்தி, லஜபதிராயைப் பகழ்ந்து பாடுவது எனப் பாரதியின் சிந்தனைத் தடத்தை ஒட்டியே தம் கவிதைகளை யாத்துக் கொண்டிருந்தார். பாரதி மறைவுக்குப் பின்னர்- 1930 க்குப் பிறகே பாவேந்தர் பாடல்கள் புதிய பரிமாணங்களைப் பெற்றன. தமிழக அரசியலில் சிங்கார வேலரும் தந்தைப் பெரியாரும் ஏற்படுத்திய சமூக விழிப்புணர்வு நெருப்பு பாவேந்தரிடமும் பற்றிக்கொண்டது. இந்தக் காலக் கட்டங்களில் பாரதிதாசன் படைத்த படைப்புக்களில் பொதுவுடைமைச் சிந்தனைகளும் சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களும் பின்னிப் பிணைந்து காணப்பட்டன. பாரதிதாசன் கவிதைகள் முதல் தொகுதி இதற்குத் தக்கதோர் சான்று.

    மக்கள் தலைவர் வ.சுப்பையா அவர்கள் வழிகாட்டுதலின் பேரில் புதுவையின் மூன்று பஞ்சாலைத் தொழிலாளர்களும் இணைந்து தொழிலாளர் உரிமைகளுக்காக போராடிய போராட்டமும், அதன் உச்சகட்டமாக 1936 ஜூலை 30 அன்று நடந்த பஞ்சாலைத் தொழிலாளர்கள்- பிரஞ்சு ராணுவம் இடையிலான வீரப்போரும், அன்றைய துப்பாக்கிச் சூட்டில் 12 தொழிலாளர்கள் பலியானதுமான புதுவையின் முதல் சுதந்திரப் போரை,

    பார்க்கப் பரிதாபமே மில்லில் பாடுபட்டோர் சேதமே- உளம்
    வேர்க்கும் அநியாயமே மக்கள் வீணில் மாண்ட கோரமே

என்று தொடங்கும் நீண்ட கவிதையாகப் பாவேந்தர் உள்ளம் உருக வடித்துத் தந்துள்ளார்கள்.

    1940 தொடங்கிப் பாவேந்தர் தம்மை முழுமையான திராவிட இயக்கக் கவிஞராக, தமிழ்த் தேசியம் நாடும் கவிஞராக, தனித் தமிழ்நாடு அல்லது தனித் திராவிடநாடு கோரும் கவிஞராகத் தம்மை அடையாளப் படுத்திக்கொண்டார். ஆனாலும் தாம் சார்ந்த சுயமரியாதை இயக்கம் காண விரும்பும் சமுதாயமாக அவர் சமத்துவச் சமுதாயத்தைக் காட்டத் தவறியதே இல்லை. பாவேந்தர் பாடல்கள் வழி ஊற்றம் பெற்ற திராவிட இயக்கத்தினர் அனைவரும் பொதுவுடைமைச் சமூகமே, திராவிட இயக்கத்தின் குறிக்கோள் என்பதாக உணர்ந்தார்கள். ஆனால் திராவிட இயக்கத் தலைவர்கள் அப்படிப்பட்ட திட்டம் எதனையும் முன்மொழியவேயில்லை. சாதி வேறுபாடுகளுக்குக் காரணமாயிருந்த ஆரிய பௌராணிகக் கருத்துக்களே வர்க்க வேறுபாடுகளுக்கும் காரணம் என்ற தொனியிலேயே பாவேந்தர் வர்க்கமுரண் பற்றி சிக்கல்களை வெளிப்படுத்தினார்.

1960 வரை பாவேந்தர், திராவிடத் திருநாடு அமையும் என்ற கனவிலேயே எல்லா இயக்க உள்முரண்களோடும் தம் பாட்டுப்பயணத்தைத் தொடர்ந்தார்.
இடையில் புதுவையின் முதல் தேர்தல் 1955 ஆம் ஆண்டு நடந்தது. கம்ய+னிஸ்ட் கட்சியின் தலைமையில் அமைந்த மக்கள் முன்னணியின் சார்பில் பாரதிதாசன் காசுக்கடைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். மக்கள் தலைவர் சுப்பையாவும் பாரதிதாசனும் இணைந்து நின்று தேர்தல் களத்தில் பணியாற்றினர். மக்கள் முன்னணி எதிர்க்கட்சியாகப் பணியாற்றிய அந்தச் சபையில் வ.சுப்பையா எதிர்க்கட்சித் தலைவர், பாவேந்தர் எதிர்க்கட்சித் துணைத் தலைவர். புதுவையில் ஓர் பல்கலைக் கழகம் ஏற்படுத்த வேண்டும், அதற்கு பாரதியார் பெயர் சூட்டப்பட வேண்டும் என்ற மக்கள் முன்னணியின் தீர்மானத்தை முன்மொழிந்து பாவேந்தர் பேசினார். சபை இத்தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றியது.


தனித் திராவிட நாடு பிரிவினைக் கோரிக்கையும் இந்தி எதிர்ப்பும் பாவேந்தரின் பாடல்களில் கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருந்த நேரத்திலும் பாவேந்தர் உலக நடப்புகளை ஊன்றிப் பார்த்து அவ்வப்போது தம் எதிர்வினைகளைப் பாடல்களில் பதிவுசெய்யத் தவறியதில்லை. ரஷ்ய நாடு வான்வெளி ஆய்வுகளில் ஈடுபட்டு நிலவுக்கு ராக்கட் ஏவத் திட்டமிடுவதை, ஒரு ர~;யத் தொழிலாளி விமர்சிப்பதாகக் கவிதை எழுதினார்.

ஏவுகணை ஒன்றை இயற்றுதற்குச் செலவிடும் பெருந்தொகை இருந்தால் உலவும் ஏழை மக்களுக்கு உதவுமே| இது அத்தொழிலாளியின் குமுறல். வியட்நாம் மீது அமெரிக்கா ஏகாதிபத்தியத் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கும் போது , வியட்நாம் மக்களின் வீரம் அமெரிக்காவின் இடுப்பை ஒடித்துப் போடும் என்று அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்தார் நம் பாவேந்தர். அமெரிக்காவைச் சாடும் அதே வரிகளில் இந்திய எல்லையில் கால் நீட்ட நினைக்கும் சீனாவுக்கும் ஒரு குட்டு வைக்கிறார்.
குமுறுகிறார்,

கோணல் மன அமெரிக்காவே!
குடியரசின் பேராலே அடிமை கொள்ளல்
இமயத்தின் எல்லையிலே காலை நீட்டும்
சீனரைப்போல் இழிவெதற்கு? படைவிலக்கு.. .. ..

ஈன்றவரும் வெறுக்கும் வண்ணம், வியத்நாம் வீரம்
இடுப்பொடித்துப் போடும் உனை எச்சரிக்கை.


இபபடி, உலகு தழுவிய பொது நோக்கு என்பதைப் பேச்சோடு நிறுத்திக் கொள்ளாமல். சரியான விமர்சனங்களையும் கண்டனங்களையும் எச்சரிக்கைகளையும் பதிவு செய்து மானிட சமுத்திரம் நான் என்பதை நிறுவுகிறார்.

    1960க்குப் பிறகு பாவேந்தர் நேரடி அரசியலிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகத் தொடங்குகிறார். இந்தக் காலக்கட்டங்களில் பழைய சிலப்பதிகாரம் மணிமேகலைக் காப்பியங்களைக் கண்ணகி புரட்சிக் காப்பியம் என்ற பெயரிலும் மணிமேகலை வெண்பா என்ற பெயரிலும் மறு ஆக்கம் செய்கின்றார். அரசியலில் இருந்து ஒதுங்கும் முயற்சியே இவ்வகை மறு ஆக்கங்கள். திரைப்படம் எடுக்கும் முயற்சியில் முழுதாக ஈடுபட்டுத் தோல்வியடைகின்றார். அரசியலை முற்ற முழுதாக வெறுக்கத் தொடங்குகின்றார்.

    இந்நாள் இருக்கும் கட்சிகள் தாமும்
கட்சித் தலைவர் என்று கழறும்
ஆட்கள் தாமும் அறங்கொல் பவரே!
தமிழ கத்தின் தலைவர் என்பர்
தமிழைச் சாக டிக்கப் பின்னிடார்,
தமிழ்க்கொலை பார்க்கத் தாளம் போடுவர்
பொழுது விடிந்து போழுது போனால்
காசு பறிப்பதே கடனாய்க் கொள்வர்!


என்று தாம் அரசியலில் இருந்து விலகுவதற்கான காரணத்தையும் கசப்போடு வெளிப்படுத்துகின்றார் பாவேந்தர். பாவேந்தர் குற்றம் சாட்டும் கட்சிகள் எவை? தலைவர்கள் எவர்? என்பனவெல்லாம் வரலாறு அறியும்.
இத்தகு சூழலில் பாவேந்தரும், தி.மு.க.வும் வேறு வேறு காரணங்களுக்காக திராவிடத் தனிநாடு முழக்கத்தைக் கைவிடுகின்றனர்.

1962 மே மாதம் பம்பாயில் நடைபெற்ற பன்மொழிக் கவியரங்கில் தமிழகத்தின் சார்பில் கலந்துகொண்ட பாவேந்தர் இந்திய தேசியத்தை ஏற்றுக் கவிதை வழங்குகின்றார். இமயச் சாரலில் ஒருவன் இருமினான் குமரிவாழ்வான் மருந்து கொண்டோடினான் என்ற அடிகள் இக்கவியரங்கில் ஒலித்தவைதாம். 1963 ஆம் ஆண்டு நவம்பர் 3 இல் நடைபெற்ற தி.மு.க. செயற்குழு ஷதிராவிட நாடு தனிநாடு| கோ~த்தைக் கைவிடுவதாக அறிவிக்கின்றது.

பாவேந்தரைப் பொருத்தவரையில் 1960 முதல் 64 வரையிலான (பாவேந்தரின் கடைசி காலங்கள்) ஆண்டுகள் பலவகையிலும் அவருக்கு நெருக்கடியான காலம். பாவேந்தரின் திரைப்பட முயற்சியின் தோல்வி, திராவிட இயக்கங்களுடனான மோதல் போக்கு, பொதுவுடைமை இயக்கத்தினருடனான பிணக்கு என பாவேந்தர் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளானார். இந்தச் சூழலில் பாவேந்தர் எழுதிய பொதுவுடைமைக்குப் பகைவனா? நான், என்ற கவிதை அதிக முக்கியத்துவம் பெருகின்றது.

பொது வுடைமைக்குப் பகைவனா? நான்?
பொதுவுடைமைக் காரர் எனக்குப் பகைவரா?
இல்லவே இல்லை, இரண்டும் சரியில்லை.

பாரதி பாட்டில் பற்றிய பொதுவுடைமைத் தீ
என்றன் பாட்டு நெய்யால் வளர்ந்து
கொழுந்துவிட் டெரிந்து தொழிலாள ரிடத்தும்
உழைப்பாள ரிடத்தும் உணர்வில் உணர்ச்சியில்
மலர்ந்து படர்ந்ததை மறுப்பவர் யாரோ?


சிங்கார வேலர் முதல் சீவா வரையில்
அங்காந் திடுவர் என் பாட்டினுக்கே
சுப்பையாவின் தொடர்பும் தோழமையும்
எஸ்.ஆர்.சுப்பிர மணியம் இணைப்பும் பிணைப்பும்
எப்பொழுதும் எனை லெனினால் ஸ்டாலினால்
புதுமை கொணர்ந்த பொதுமை நாட்டை
மதுத் தமிழாலே மடுக்கும் என்பாட்டு


பொதுவுடைமைக்கும் தமக்கும் உள்ள ஆழமான பிணைப்பை வெளிப்படுத்தும் இந்தக் கவிதை ஒரு வரலாற்று ஆவணம். இந்தப் பாடலின் பின்பகுதியில் பொதுவுடைமை இயக்கத்தினர் மீது சில பல குற்றச்சாட்டுகளை பாவேந்தர் அள்ளி வீசுகிறார். கவிஞரின் கோபக்கனலில் வந்து வீழ்ந்த வார்த்தைகள் அவை. சிங்கார வேலர், ஜீவா, சுப்பையா இவர்கள் மீது பாவேந்தர் எந்த அளவிற்கு மதிப்பு வைத்திருந்தார் என்பதையும், என் இயக்கம் பொதுவுடைமை இயக்கம்தான் என்பதை எத்துணை அழுத்தமானக் கவிஞர் பதிவுசெய்கிறார் என்பதும் கூர்ந்து கவனிக்கத்தக்கது.

1963 ஜனவரி 18 ஜீவா மறைவுக்கு பாவேந்தர் வடித்த கவிதையே அவரின் கடைசிக் கவிதை என்ற ஜீவபாரதி அவர்களின் கூற்றும் இங்கே நினைத்துப் பார்க்கத்தக்கது.
    தம் உலகு தழுவிய பார்வையால் மானிடத்தின் மகத்துவத்தைப் பாடி சமத்துவ சமுதாயம் காணத் துடித்த பாவேந்தர் எந்தச் சூழலிலும் விட்டுக் கொடுக்காத ஒரே தத்துவம் மார்க்சீயமே என்பதில் ஏதும் ஐயமில்லை.
                           

Tuesday 1 May 2012

இரத்தின. வேங்கடேசனின் நற்றமிழ் விருந்து நூல் வாழ்த்துரை

முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

    தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் தமிழகத்திற்குமான தொடர்பு ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றுச் சிறப்புடையது. மலேசிய நாட்டின் கடாரத்தில் உள்ள பூஞ்சோங் அருங்காட்சியகத்தில் காணக்கிடைக்கும் தமிழர்களின் மரக்கலங்கள் நமக்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் இடையிலான ஆழமான உறவைப் பறைசாற்றுகின்றன. பிற்காலச் சோழர்களின் ஆட்சிக்காலத்தில் வேரூன்றிய இந்த உறவு ஆங்கிலேய, ஐரோப்பிய காலனியாட்சிக் காலங்களில் பல்கிப் பெருகியது. ஆனால் இந்த இரண்டு நிலைகளுக்கும் அடிப்படையில் பாரிய வேறுபாடுண்டு.

சோழர்கால உறவு நம் அதிகாரத்தை நிலைநாட்டிய உறவு. காலனியாதிக்கக் கால உறவு நம்மைக் கொத்தடிமைகளாக்கிய உறவு. இன்று வணிகம், கல்வி, வேலைவாய்ப்பு என உறவுகள் தொடர்கதையாகத் தொடர்கின்றன. எப்படியிருப்பினும் மலேசிய, சிங்கப்பூர் நாடுகளின் பிரிக்கமுடியாத அங்கமாகத் தமிழும், தமிழர்களும், தமிழ்ப் பண்பாடும் இடம் பிடித்துவிட்டன. தமிழ் மொழிசார்ந்தும், பண்பாடு சார்ந்தும் தமிழகத்துக்கு அப்பால் இலங்கைக்கு அடுத்து மலேசிய, சிங்கப்பூர் நாடுகளின் பங்களிப்புகள் குறித்துப் பேசவும் எழுதவும் களம் அமைந்துவிட்டன.

இந்த இரு நாடுகளிலும் இன்றைக்கு, மாதம் தவறாமல், ஏன்? வாரம் தவறாமல் தமிழிலக்கிய நிகழ்ச்சிகள் பல நடத்தப்படுகின்றன. பல தமிழ்நூல்கள் வெளியிடப் படுகின்றன. பல தமிழ் அமைப்புகள் வெற்றிகரமாக இயங்கிவருகின்றன. தமிழ்க் கவிஞர்கள், எழுத்தாளர்கள், அறிஞர்களைச் சிறப்பிக்கும் பல நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பல தமிழ் விழாக்கள் மதம் சார்ந்தும் மதம் சாராமலும் தொடர்ந்து கொண்டாடப் படுகின்றன. கடந்த இரண்டு, மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு புலம் பெயர்ந்த தமிழர்களும் இன்றைக்கு வேலைவாய்ப்பு, கல்வி, வணிகங்களின் பொருட்டுப் புலம்பெயரும் தமிழர்களும் என அனைவரும் இணைந்தே இத்தகு தமிழ்ப் பணிகளை ஆற்றிவருகின்றனர்.

அந்த வரிசையில் சிங்கப்பூரில் ஆசிரியப் பணிக்காகப் புலம் பெயர்ந்து வாழும் முனைவர் இரத்தின. வேங்கடேசனும் தம் வரலாற்றுக் கடமையைச் சிறப்பாகச் செய்து வருகின்றார். இவருக்கும் சிங்கப்பூருக்குமான தொடர்பு அவருடைய தந்தையார் இரத்தினவேலு முதலியார் காலத்திலிருந்தே தொடங்குகின்றது. தொடக்கத்தில் வியாபாரத்தின் பொருட்டுச் சிங்கைவந்த அவர், இந்திய விடுதலைப் போராட்ட இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு அப்பொழுது மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அமைத்த இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்து தம் அயராத உழைப்பாலும் அர்ப்பணிப்பு உணர்வாலும் ஜொகூர்  படைப்பிரிவின் தலைவராகப் பணியாற்றக் கூடிய வாய்ப்பினைப் பெற்றவர். தந்தையின் சிங்கைத் தொடர்பு ஏற்படுத்திய ஆர்வமே புதுச்சேரிக் கல்லூரிப் பேராசிரியப் பணியை விட்டுவிட்டு வேங்கடேசன் சிங்கப்பூரில் தமிழாசிரியப் பணியை ஏற்கக் காரணமாயிற்று. சிங்கப்பூரின் பணி நெருக்குதல்களுக்கு இடையிலும் தொடர்ந்து அவர் தமிழ்சார்ந்து இயங்குவதற்கு அடித்தளம் அமைத்துத் தந்தது அவரின் புதுச்சேரிப் பின்னணியே.

நண்பர் இரத்தின. வேங்கடேசன்  புதுச்சேரி, தாகூர் கலைக்கல்லூரியில் முதுகலைத் தமிழ் பயிலும் காலத்தில் என்னுடைய மாணவர். பின்னர் உற்ற தோழராகப் பழகிவருபவர். அந்த நாட்களில் புதுச்சேரி மேடைகளில் என்னோடு அவர் பங்கேற்காத மேடைகள் அரிது. என்னுடைய தலைமையில் பல பட்டிமன்றங்கள், வழக்காடு மன்றங்களைக் களம்கண்டவர். புதுச்சேரியின் நம்பிக்கை நட்சட்திரமாக வலம்வந்த அவரைச் சிங்கப்பூர் அழைத்து அரவணைத்துக் கொண்டது. பணியாற்ற வந்த இடத்திலும் தம் இலக்கியப் பணியைத் தொடர்ந்து ஆற்றிவருவது அவரின் தனிச்சிறப்பு. சிங்கப்பூர்த் தமிழிலக்கிய மேடைகளில் கவிஞராக, பேச்சாளராக, பட்டிமன்ற வழக்காடு மன்ற நடுவராக இப்படிப் பலநிலைகளில் வெற்றிகரமாக அவர் செயல்பட்டு வருவது மகிழ்ச்சிக்குரியது. தம் இனிய பேச்சாற்றலால் சொல்லின் செல்வர் என்று சிங்கை இலக்கிய அன்பர்களால் விருதளித்துப் பாராட்டிச் சிறப்பிக்கப் பெற்றுள்ளார்.

அவர் புதுச்சேரியில் இருந்த காலத்தில் பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார் என்றாலும் சிங்கப்பூர் முனைவர் இரத்தின. வேங்கடேசனாக அவர் எழுதியளிக்கும் இரண்டாவது நூல் இந்த நற்றமிழ் விருந்து. பல்வேறு சூழல்களில் அவர் எழுதிக் கருத்தரங்குகளில் வாசித்தளித்த கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவருகின்றது.

நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

1. சங்க இலக்கியத்தில் விருந்து
2. கலித்தொகையில் திருக்குறள்; இடைப்பனுவலியல் ஆய்வு
3. அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றம்
4. பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழியல் உரையாசிரியர்கள்
5. இருபதாம் நூற்றாண்டுக் கவிதைகளில் தமிழ்மொழி
6. காலத்தை வென்ற கவியோகி
7. அண்ணாவின் சந்திரோதயம் ஒரு சமூக நோக்கு
8. தமிழ்ப் பண்பாட்டின் ஆணிவேர் நாட்டுப்புறப் பழக்க வழக்கங்களே
9. சமூக இயக்கங்களும் இலக்கியப் போக்குகளும்
10. சிங்கப்பூர் மலேசிய நாடுகளில் தமிழ்ப் பண்பாடு
11. சிங்கப்பூரின் தொடக்கக்கால (பக்தி) இலக்கியங்கள் ஒரு பார்வை
12. விழா பண்பாடு

நூலின் பன்னிரண்டு கட்டுரைகளிலும் மையப் பொருளாயிருப்பது தமிழ் இலக்கியம், தமிழ்ப் பண்பாடு குறித்த உள்ளடக்கங்களே. கல்வியாளர்களுக்கே விளங்கும் ஆழமான ஆய்வுப் பொருண்மையில் இல்லாமல் அனைத்துக் கட்டுரைகளுமே பொது வாசிப்புக்கானதாக அமைக்கப் பட்டுள்ளது. சங்க இலக்கியம், கலித்தொகை, திருக்குறள், சிலப்பதிகாரம் முதலான பழந்தமிழ் இலக்கியங்கள் தொடங்கி பாரதி, அண்ணா போன்ற இக்கால இலக்கிய ஆளுமைகள் வரை பேசும் இலக்கியப் பகுதியிலும் தமிழர்களின் பண்பாட்டுச் சுவடுகளை நாட்டுப்புற வழக்காறு, நாட்டுப்புற இலக்கியம், மற்றும் எழுத்து இலக்கியம் இவற்றிலிருந்து தெரிந்தெடுத்து வழங்கும் பண்பாட்டுப் பகுதியிலும் நூலாசிரியரின் கடும் உழைப்பு நமக்குத் தெளிவாகத் தெரிகின்றது.

இந்நூலில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க பகுதி சிங்கப்பூர் மற்றும் மலேசியத் தமிழர்களின் தமிழ்ப் பண்பாடு மற்றும் சிங்கப்பூரின் பக்தி இலக்கியங்கள் குறித்த கட்டுரைகளாகும். இவ்விரண்டு கட்டுரைகளும் தமிழகத் தமிழர்களுக்குப் பல புதிய செய்திகளைத் தருகின்றன.
நூலில் இடம்பெற்றுள்ள, சிங்கப்பூர் மலேசிய நாடுகளில் தமிழ்ப் பண்பாடு என்ற கட்டுரையின் ஒருபகுதியை இங்கே சுட்டிக்காட்டுவது பொருத்தமாயிருக்கும்,

சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்கு இடம்பெயர்ந்த தமிழர்கள் இன்றும் தங்கள் மொழி, பண்பாட்டைப் பேணிவருவது குறிப்பிடத்தக்கது. அனைத்துக்கும் மேலாகத் தமது மக்கள் தொகையில் 7 சதவீதத்திற்கும் குறைவான தமிழர்களைக் கொண்ட சிங்கப்பூர், தமிழைத் தேசிய மொழிகளில் ஒன்றாக அறிவித்துள்ளது. இது தமிழர்க்குத் தாய்மண்ணில் கிடைக்காத மற்றுமொரு சிறப்பாகும். மேலும் அரசாங்கத்தின் ஆதரவோடு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் தமிழ்மொழி மாதம் என்னும் தலைப்பில் தமிழ்மொழி நிகழ்வுகளை நடத்துகிறது. மலேசியாவில் ஒரு குறிப்பிட்ட வயதுவரை அனைத்துப் பாடங்களையும் தாய்மொழியில் கற்கத் தமிழ்ப் பள்ளிகள் அங்கு இயங்குகின்றன. தமிழ் பேசவும் படிக்கவும் ஊக்கம் தரும் அரசும் அதைச் சார்ந்த நிறுவனங்களும் தொண்டாற்றுவதால் இவ்விரு நாடுகளிலும் இருக்கும் தமிழருக்குக் கொண்டாட்டங்கள், விழாக்கள் போன்றவற்றில் அதிக ஈடுபாடும் தொன்மையைக் காக்கும் வாய்ப்பும் மிகுந்து காணப்படுகின்றது. சிங்கப்பூரில் அனைத்துப் பள்ளிகளிலும் தமிழை இரண்டாம் மொழியாகக் கற்கும் வாய்ப்பைக் கல்லூரிக்குச் செல்லும்வரை அரசாங்கம் தந்திருக்கிறது.

இரத்தின. வேங்கடேசனின் மேற்சொன்ன கட்டுரையின் பகுதியை வாசிக்க வாசிக்க, சிங்கப்பூர், மலேசியா முதலான நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களுக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்புகள் கூடத் தாய்த் தமிழகத்தில் நமக்குக் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம்தான் மிகுகிறது.
இப்படி, நூலின் பயன்மிக்க பக்கங்கள் பலவாக விரிந்துள்ளன. மொத்தத்தில் நற்றமிழ் விருந்து நூலை உருவாக்கியுள்ள இனிய நண்பர் இரத்தின. வேங்கடேசன் தமிழ் இலக்கிய உலகிற்குத் தக்கதோர் விருந்தைப் படைத்து அளித்துள்ளார் என்றே நாம் மகிழ்வு கொள்ளலாம். தொடர்ந்து நல்ல பல நூல்களை எழுதியளிப்பார் என்ற நம்பிக்கையுடன் அவரை வாழ்த்துகின்றேன்.

புலவர் பூங்கொடி பராங்குசம் அவர்களின் இலக்கியக்களம் - நூல் அணிந்துரை

  முனைவர் நா . இளங்கோ கவிதை இரசனை , இது படைப்புக்கு இணையானதோர் முருகியல் செயற்பாடு . என்றைக்குக் கவிதைகள் தோன்றினவோ அன்றைக்கே கவ...