Wednesday 11 November 2009

காலக் குறியீடுகள் -திரைப்பட மொழி ஆய்வு

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

திரைப்படங்களில் காலக் குறியீடு

திரைப்படத்தில் ஒரு திரைக்கதை எடுத்துக் கொள்கிற கதையின் முழுமையான கால அளவு என்பது வரையறுக்க முடியாதது. அது ஒரு மணிநேரத்தில் நடந்த கதையாக இருக்கலாம் அல்லது ஓராயிரம் ஆண்டுகள் நடந்த கதையாக இருக்கலாம். ஆனால் திரைப்படம் ஓடக்கூடிய நேரம் சுமார் இரண்டரை (2½) மணி நேரம்தான். திரைப்படத்தில் காட்சி நடக்கும் நேரம் என்பது உண்மையான நேரத்திற்குச் சமமானதாக இருக்கும். இது திரைப்படத்தின் பொதுவிதி.

இந்த இரண்டரை மணி நேரத் திரைப்படத்தில்தான் பல நூறு ஆண்டுக் காலத்தைப் பார்க்கிறோம். அதாவது கதை நிகழ்கின்ற ஆயிரக்கணக்கான மணி நேரத்தை நாம் வெறும் இரண்டரை மணி நேரத்தில் மட்டுமே பார்க்கிறோம். மீதி உள்ள நேரங்கள் காட்சிகளுக்கு இடையே உள்ள இடைவெளிகளில் இருக்கின்றன.

ஒரு காட்சிக்கும் அடுத்த காட்சிக்குமான மாற்றத்தின்போது உள்ள கால இடைவெளி ஒரு நொடியின் மிகச்சிறிய பகுதி, இந்தக் கால இடைவெளியில்தான் திரைக்கதை சில நாட்களையோ, மாதங்களையோ, சில ஆண்டுகளையோ கடந்து விடுகின்றது. இந்த இடைவெளிகளின் கால ஓட்டத்தைப் பார்வையாளனுக்குச் சரியான அளவில் புரிய வைப்பதில்தான் திரைப்பட மொழி முழுமை பெறுகின்றது.

திரைப்படத்தில் காலத்தைப் பொறுத்தவரை இரண்டு கூறுகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். 1. காட்சி நடக்கும் நேரம். 2. காட்சிகளுக்கு இடையிலான நேரம்.

முதல் கூறாகிய காட்சி நடக்கும் நேரங்களைக் கணக்கிட்டால் திரைப்படம் ஓடக்கூடிய மொத்த நேரத்தைப் பெறலாம். இரண்டாம் கூறாகிய காட்சிகளுக்கு இடையிலான நேரத்தை/ காலத்தை மொத்தமாகக் கணக்கிட்டு முதல் கூறாகிய காட்சி நடக்கும் நேரத்தோடு கூட்டினால் திரைக்கதை நிகழக்கூடிய முழுமையான காலஅளவைக் கண்டுபிடிக்கலாம்.

காட்சிகள் நிகழும் மொத்த நேரம்
+
காட்சிகளுக்கு இடையிலான மொத்த நேரம்
=
திரைக்கதையின் முழுமையான கால அளவு

திரைப்படத்தில் காட்சிகள் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து வருகின்றன. காட்சிகளுக்கான காலமும் தொடர்ந்து நகர்ந்து கொண்டிருக்கின்றது. முதல் காட்சியைத் தொடர்ந்து இரண்டாம் காட்சி, முதல்காட்சி நடைபெற்ற காலத்தைத் தாண்டி இரண்டாம் காட்சி நடைபெறும் காலம். முதல், இரண்டாம் காட்சிகளில் காலம் இடையீடு இன்றித் தொடர்வதில்லை. அப்படித் தொடர்ந்தால் வேறு வேறு காட்சிகளாக அவைகள் சித்தரிக்கப்படுவது பொருத்தமில்லை. காட்சிகள் வேறுபடுவதால் காட்சிகளுக்கிடையே கடந்துசென்ற காலத்தின் அளவைத் தெளிவுபடுத்துவதே காலக் குறியீடுகளின் வேலை.

திரைக்கதையில் கால நகர்வு

திரைப்படத்தில் இரண்டு காட்சிகளுக்கிடையே காலம் கடந்திருப்பதைப் பார்வையாளர்களுக்கு உணர்த்த வேண்டுமெனில் அந்த இரண்டு காட்சிகளுக்கிடையே வேறொரு இடத்தில் நிகழ்கின்ற புதிய காட்சி ஒன்றைப் புகுத்த வேண்டும். இந்தப் புதிய காட்சிக் குறுக்கீடு திட்டமிட்டுத் திரைக்கதை ஆசிரியரால் புகுத்தப்படுவது.

தமிழ்த் திரைப்படங்களில் இந்தவகை இடையீட்டுக் காட்சிக்குப் பெரிதும் பயன்படுத்தப்படும் உத்தி நகைச்சுவைக் காட்சிகளை இணைத்தலே. திரைப்படத்தின் பிரதான திரைக்கதைக்கு இணையாகத் தனித்ததொரு துணைக்கதை (Comedy Track) என்ற போக்கில் இத்தகு காட்சிகள் இணைக்கப்படும்.

No comments:

Post a Comment

புலவர் பூங்கொடி பராங்குசம் அவர்களின் இலக்கியக்களம் - நூல் அணிந்துரை

  முனைவர் நா . இளங்கோ கவிதை இரசனை , இது படைப்புக்கு இணையானதோர் முருகியல் செயற்பாடு . என்றைக்குக் கவிதைகள் தோன்றினவோ அன்றைக்கே கவ...