Saturday 31 October 2009

அட! வலைப்பதிவுன்னா இவ்வளவுதானா?

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

வலைப்பதிவு: தம் படைப்புகளைத் தாமே இணையத்தில் பதிப்பிக்கும் வசதி. ஆங்கிலத்தில் இதனை Blogging என்பர். தமிழில் இது வலைப்பதிவு எனப்படும். இதனை வலைப்பூக்கள் என்றும் சிலர் வழங்குவர். ஒருவர் தம் பெயரில் ஒரு வலைப்பதிவை உருவாக்கத் தேவைப்படுவன, கொஞ்சம் கணினி அறிவு, இணையத் தொடர்புள்ள கணினி இவை இரண்டு மட்டுமே.

வலைப்பதிவுக்குப் பொருள் செலவு ஏதும் கிடையாது. இணையத்தில் இந்தச் சேவை இலவசமாகவே வழங்கப்படுகிறது. யுனிகோட் குறிமுறையைப் பயன்படுத்தித் தமிழிலேயே ஒருவர் தம்முடைய படைப்புகளைப் பதிப்பிக்கலாம்.

வலைப்பதிவுகளை வேறுவிதமாகவும் விளக்கலாம். அதாவது இணையத்தின் வழி ஒரு தனிநபர் உருவாக்கும் இதழ் அல்லது நாட்குறிப்பு. இந்த நாட்குறிப்பு அனைவரும் படிப்பதற்கானது.

தினமும் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வலைப்பதிவுகளில் பல்வேறு பதிவுகளைப் பதித்து வருகின்றார்கள். இதில் பலர் கணிப்பொறி, இணையத் தொழில் நுட்பம் அறியாதவர்கள். வலைப்பதிவாளர்களுக்குப் பயன்படும் வகையில் பல்வேறு புதிய எளிய தொழில்நுட்பங்கள் தினந்தோறும் உருவாகிக் கொண்டேயிருக்கின்றன. பெரும்பாலும் இத்தகு தொழில்நுட்ப உதவிகள் அனைவருக்கும் இணையத்தில் இலவசமாகவே கிடைக்கின்றன. கணினி பற்றிச் சிறிதளவே தெரிந்தவர்கள் கூட, தங்களுக்கென்றுச் சொந்தமான வலைப்பதிவினை உடனே உருவாக்கிக் கொள்ள முடியும்.

அநேகமாக ஒவ்வொரு வலைப்பதிவும் வாசகர்களை இலக்காகக் கொண்டே எழுதப்படுகின்றன. ஒவ்வொரு வலைப்பதிவுக்கும் தனித்ததொரு வாசகர் வட்டம் அமைந்து விடுவதுண்டு. இக்காரணம் பற்றியே வலைப்பதிவுகள் வாசகர்கள் கருத்துரையாடுதற்கு ஏற்றார்போல் அமைக்கப்படுகின்றன.

பதிவுகளைப் படித்த வாசகர்கள் அதற்கான தமது எதிர்வினையை, கருத்துக்களைப் பின்னூட்டங்களாக உடனடியாக அவ் வலைப்பதிவில் பதிவு செய்துகொள்ளக் கூடிய வசதி வழங்கப்பட்டிருக்கும். பின்னூட்டங்களையும் அடுத்து வரும் வாசகர்கள் பார்க்க வலைப்பதிவுகளில் வாய்ப்புண்டு. தேவையேற்படும் போது பின்னூட்டம், பின்னூட்டங்களுக்குப் பின்னூட்டம் என்று சங்கிலித் தொடர்போல் பதிவு தொடரந்து சென்றுகொண்டே யிருக்கும்.

தகவலின் இடையிடையே படமோ, ஒலியோ, சலனப்படமோ எது தேவையோ அதனை இணைத்துத் தரும் பல்லூடகத் தகவல் முறை வலைப்பதிவுகளில் சாத்தியம். அச்சு ஊடகங்களில் எழுத்தோடு படங்களை மட்டுமே இணைக்க முடியும்.

வலைப்பதிவில் நாம் இதற்குமுன் எழுதிய அனைத்துத் தகவல்களும் தனியே வார வாரியாகவோ, மாத வாரியாகவோ வகைப்படுத்தி சேமிப்பகம் (Archive)பகுதியில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும். தேவைப்படுவோர் பழைய தகவல்களையும் இந்தப் பகுதியில் இருந்து படித்துக் கொள்ளலாம்.

Tuesday 27 October 2009

எதைச் சாதிக்க இந்த வலைப்பதிவுகள்?

முனைவர் நா.இளங்கோ
இணைப்பேராசிரியர்,
பட்டமேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8.

தொடக்கக் காலத்தில் தமிழகத்தைப் பொறுத்த மட்டில் அச்சு இயந்திரங்களாகிய கருவிகளும் அச்சிட வேண்டிய தகவல்களை எழுதித் தர உதவும் கல்வியும் உயர் வர்க்கத்தினரிடம் மட்டுமே இருந்தன. எனவே தமிழகத்தைப் பொறுத்தமட்டில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அச்சு ஊடகங்களின் வழி கருத்தியல் அதிகாரம் செலுத்துவோராக உயர் சாதியினராகவும் உயர் வர்க்கத்தினராகவும் இருந்த ஒரு சிறுபான்மைக் கூட்டத்தினரே இருந்தனர்.

ஆங்கிலேயர் தந்த கல்வியும் ஆங்கிலவழிக் கல்வியும் இருபதாம் நூற்றாண்டில் பரவலான போது எழுத்தறிவும் எழுதும் மற்றும் வாசிக்கும் பழக்கமும் அதிகமானது. ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் கல்விஅறிவு பெறத்தொடங்கி அச்சு ஊடகத் தகவல்களை வாசிக்கத் தொடங்கிய பிறகுதான் அச்சு ஊடகங்களின் அதிகாரம் கவனம் பெறத் தொடங்கியது. அச்சு ஊடக உரிமையாளர்கள் மற்றும் இதழாசிரியர்களின் அதிகாரம் படைப்பையும் வாசகனையும் வெகுவாகப் பாதிக்கும் தன்மை வெளிச்சத்துக்கு வந்தது.

வெற்று இலக்கியங்களும் துணுக்குத் தோரணங்களும் அதிகாரத்தை இனங்காட்டாத மலிவான ரசனைப் போக்கும் எழுத்துக்களாக்கப்பட்டன. வெகுஜனங்கள் மத்தியில் எது அதிக விலைபோகுமோ அதனையே அச்சு இயந்திரங்கள் கக்கத் தொடங்கின. அச்சு ஊடகங்கள் வணிகமயமாயின. விலைபோகும் சரக்குகள் என எழுத்துக்கள் முத்திரை குத்தப்பட்டன. தீவிரமான எழுத்துக்களும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையும் எழுத்துக்களும் விலைபோகாச் சரக்குகள் ஆக்கப்பட்டன.

இத்தகு சூழலில்தான் சிறுபத்திரிக்கைகள் தோற்றம் பெற்றன. வணிகமயம் பின்னுக்குத் தள்ளப்பட்டு தீவிரமான எழுத்துக்களும் சோதனை முயற்சிகளும் விளிம்புநிலை மக்கள் ஆக்கங்களும் அச்சில் இடம்பிடித்தன. சிறுபத்திரிக்கைகளில் அதிகாரம் இடம்பெயர்ந்தது. ஊடக முதலாளிகளின் இடத்தைக் குழுவும் குழுவாதங்களும் பிடித்தன. சிறுபத்திரிக்கைகள் கருத்து ரீதியான அதிகாரத்தைப் படைப்பாளிகளிடத்தும் வாசகர்களிடத்தும் செலுத்தின. அவை அறிவுஜீவிகளின் தன்முனைப்பு மோதல் களங்களாயின. தம்மைத் தாமே புகழ்ந்து கொள்வதும் பிறரை மட்டம் தட்டுவதுமே படைப்புகளில் மேலோங்கின.

கணிப்பொறி சார்ந்த D.T.P. தொழில்நுட்பத்தின் வருகை ஆளுக்கொரு இதழ், ஆளுக்கொரு குழு என்ற போக்குகளுக்குத் துணைசெய்தது. அச்சு ஊடகங்களின் அதிகாரம் தொடர்கதையானது.புதிதாய் வருகிற படைப்பாளிகளுக்கு அவ்வளவு சுலபத்தில் ஊடகங்கள் இடமளித்து விடுவதில்லை. ஊடகங்கள் பிரபலங்களை வைத்துக் காசு பார்க்கும் வணிக நிறுவனங்களாக மாறிப் போயின.

புதியவர் எழுத்துக்களின் மீது குழுவாதம், மதம், சாதி, கட்சி, இயக்கம், சித்தாந்தம் முதலான பலவும் அதிகாரம் செலுத்தின. ஒருவர் எழுத்தின் மீது தேர்ந்தெடுத்தல், வடிகட்டல், திருத்துதல், நீக்குதல், சான்றளித்தல் என்று அதிகாரம் செலுத்த பிறர் யார்? அந்த அதிகாரத்தை அவருக்குக் கொடுத்தது யார்? அவருக்கு என்ன தகுதி? என்ற விடை தெரியாத வினாக்கள் பலப்பல. இத்தகு ஊடக அதிகாரங்களை உடைத்தெரியும் புதிய படைப்புலக வடிவம்தான் வலைப்பதிவுகள்.

Friday 23 October 2009

ஊடகங்கள் சொல்லும் கதை

ஊடகங்கள் சொல்லும் கதை

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்,
பட்டமேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8.

கதையானது மனித வாழ்க்கையின் ஆரம்பக் காலத்திலேயே தோன்றிவிட்டது என்பதனைத் தமிழ்க் கலைக்களஞ்சியம் ‘வேட்டையாடச் சென்று திரும்பிய மனிதன் தனது அனுபவத்தைப் பிறருக்குக் கூற முற்பட்ட அன்றே கதை தோன்றிவிட்டது’ எனக் குறிப்பிடுகிறது. மனித வாழ்வின் தொடக்கம் முதலே இப்படிக் கதை கேட்டுப் பழக்கப்பட்ட மனிதன் அண்மைக்காலம் வரை தாத்தா பாட்டிகளிடம் கதை கேட்டுக் கேட்டு கதைகளுக்கு அடிமையாகிப் போனான்.

இந்த இயல்பு மனித மனத்தின் ஆழத்தில் வேரோடி இருப்பதால்தான் கதை சொல்வதை ரசித்த காலம் போய் இப்போதெல்லாம் கதை விடுகிறவர்களுக்கு அடிமையாகிக் கிடக்கிறோம். இன்றைய வேகமான வாழ்க்கைச் சூழலில் கதை சொல்வதும் கேட்பதும் இயலாததாகி இருக்கிறது. ஆனால் மனித மனத்தின் ஆசை? விடுபட்ட அந்த இடத்தை நிரப்புவதற்காக ஊடகங்கள் இப்பொழுது கதை சொல்ல ஆரம்பித்து விட்டன.

ஊடகங்கள் செய்திகளை ஒரு கதையாகத் தருகின்றன. கதை என்கிறபோது பொய் என்ற பொருள் கொள்ளத் தேவையில்லை. நிகழ்வுகளின் / தகவல்களின் பன்முகத் தன்மை மறைக்கப்பட்டு தொடக்கம், வளர்ச்சி, முடிவு என்று நேர்க்கோட்டுப் பார்வையில் கதைகள் வடிவமைக்கப் படுகின்றன. இந்தக் கதையாடலில் பல தகவல்கள் விடுபட்டுப் போவதும் சுவாரஸ்யத்திற்காகப் புதிய புதிய விஷயங்கள் இணைக்கப்படுவதும் தவிர்க்க முடியாததாகிறது.

தமிழகத்தில், இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் ஊடகங்களிடையே இத்தகைய போக்குக் காணப்படுகிறது. செய்தித்தாள்களும் பத்திரிக்கைகளும் இத்தகு கதையாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றன. தற்போது தொலைக்காட்சிகளும் விளம்பரங்களும் கதையாடலில் அதிகக் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டன.

ஊடகக் கதைகள் சில:

அண்மைக் காலத்து உதாரணங்கள் சிலவற்றின் மூலம் ஊடகங்களின் கதையாடலை விளங்கிக் கொள்ளலாம். கும்பகோணம் பள்ளித் தீவிபத்து, சிவகாசி ஜெயலட்சுமி வழக்கு, கஞ்சா இளம்பெண் ஷெரீனா பானு வழக்கு, செக்ஸ் டாக்டர் பிரகாஷ் விவகாரம், சரவணபவன் அண்ணாச்சி வழக்கு இதுபோன்ற நிகழ்வுகள் ஊடகங்களால் கதையாக்கப் படுகின்றன.

இத்தகு கதையாடல்களில் செக்ஸ் டாக்டர், கஞ்சா பெண், போலி சாமியார் போன்ற பெயரிடல்கள் கதை அம்சத்திற்குப் பெரிதும் உதவியாய் அமைகின்றன. செய்திகள் ஒவ்வொரு நாளும் புதிய புதிய அதிரடித் தகவல்கள், பகீர் ரிப்போர்ட், திடுக் திருப்பங்கள் போன்றவற்றால் மர்மக் கதைகளைப் போலவும் ஆக்ஷன் கதைகளைப் போலவும் வளர்த்து சொல்லப்படுகின்றன.

ஊடகங்களைப் பொறுத்தமட்டில் இவை செய்திகள் மட்டுமல்ல, ஊடகச் செய்திகளைப் பரபரப்புக்கு உள்ளாக்கும் வணிக விஷயம். இது வியாபாரம் சம்பந்தப்பட்டது. இவற்றை வெறும் செய்திகளாக்குவதில் வருவாய் குறைவு. கதையாக்குவது வாசகர்களை / பார்வையாளர்களைத் தக்கவைத்துக் கொள்ளும் வியாபார உத்தி. தினம் தினம் புதிய புதிய தலைப்புகளில் இந்தக் கதைகள் சொல்லப்படும். கதையாடலின் முக்கிய நோக்கமே வாசகர்களுக்குச் சுவாரஸ்யத்தை உண்டாக்குவது என்பதுதான்.

Monday 19 October 2009

திரைப்படத்தைப் புரிந்துகொள்வது எப்படி?

திரைப்படத்தைப் புரிந்துகொள்வது எப்படி?

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
தமிழ்த்துறை
கா.மா.பட்ட மேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8


இருபதாம் நூற்றாண்டின் மிகச் சக்தி வாய்ந்த ஊடகம் திரைப்படம்தான் என்பதில் யாருக்கும் கருத்து வேற்றுமை இருக்க முடியாது. ஏனைய ஊடகங்களைவிட இப்பொழுதுதான் நூறு வயதைக் கடந்திருக்கும் இந்த அறிவியற்கலை சார்ந்த ஊடகத்தின் உடனடித் தாக்கம் வியப்பளிக்கக்கூடியது.

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் திரைப்படங்களால் சூழப்பட்ட உலகில் நாம் வாழ்கிறோம் என்பது உண்மை. தினசரிச் செய்தித்தாள்கள், வார மாத இதழ்கள் தொடங்கி, அன்றாடம் நம் கண்களில் படும் சுவரொட்டிகள், பேனர்கள் போன்றவற்றில் நாம் படிப்பது / பார்ப்பது, நம்மைச் சுற்றி வீட்டில், பள்ளி - கல்லூரிகளில், அலுவலகங்களில், பொது இடங்களில் பேசப்படுவது என அனைத்திலும் திரைப்படங்கள் விரவிக் கிடக்கின்றன.

இது போதாதென்று நாம் எப்பொழுதும் மூழ்கிக் கிடக்கும் தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் திரைப்படங்கள், திரைப்படத் துணுக்குகள், திரைப்படப் பாடல்கள், நடிகர் நடிகையர் பேட்டிகள் என்று திரைப்படம் தொடர்பான தகவல்களே கொட்டிக் கிடக்கின்றன. ஆக நம்மைச் சுற்றியுள்ள காற்று, நீர், வெளி போன்று திரைப்படங்களும் நம்மைச் சூழ்ந்துள்ளன.

திரைப்படங்கள் ஒரே சமயத்தில் நமக்குக் கலை அனுபவமாகவும், சூழலாகவும், வியாபாரப் பண்டமாகவும், தகவல்களைச் சொல்லும் தகவல் தொடர்புச் சாதனங்களாகவும் உள்ளன. எனவே ஒரு பொழுதுபோக்குச் சாதனம் என்ற ஒற்றை நேர்க்கோட்டுப் பார்வையோடு திரைப்படங்களை அணுகுவதைவிட, மேலே சொல்லப்பட்ட பன்முகப் பரிமாணங்களைப் புரிந்து கொண்டு அவற்றை அணுகுவதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும்.
திரைப்படங்களைப் புரிந்து கொள்ள, பின்வரும் கருத்தாக்கங்களை மனதில் நிறுத்திக்கொள்வது நல்லது.

1. திரைப்படங்கள் என்பது பிம்பங்கள் ஆட்சி செய்யும் சாம்ராஜ்யம். திரைப்படங்களை அணுகும்போது இந்த பிம்பங்களை அதிகக் கவனத்தோடு பார்க்க வேண்டும்.

2. திரைப்படம் என்பது முழுக்க முழுக்க உருவாக்கப்பட்ட ஒன்று. நடிகர் நடிகையரின் அங்க அசைவு உட்படக் கட்டிடங்கள், இயற்கைக் காட்சிகள் அனைத்துமே குறிப்பிட்ட திரைப்படத்துக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுக் காட்டப்படுகின்றன. திரைப்படத்தில் தோன்றுவது எதுவுமே தற்செயலானதும் இயல்பானதும் இயற்கையானதுமல்ல.

3. திரைப்படத்தை ஒலி, ஒளி, காமிரா கோணம் எனும் பல்வேறு வி~யங்களோடு சேர்த்தே பார்க்க வேண்டும். வெறுமனே கதை அல்லது வசனங்கள் என்கிற ரீதியில் திரைப்படம் பார்ப்பதைத் தவிர்த்து விடுங்கள். (சுரேஷ் பால், மீடியா உலகம், ப.185)

திரைப்படங்கள் என்பது பிம்பங்களின் தொகுப்பு; காட்டப்படுபவை அனைத்துமே உருவாக்கப்பட்டவை. காமிரா, ஒலி, ஒளி இவைகளால் கட்டமைக்கப்படுவதே திரைப்படத்தின் மொழி என்கின்ற புரிதல்களோடு திரைப்படங்களைப் புரிந்துகொள்ள முயலலாம்.

Thursday 15 October 2009

தமிழ்த் திரைப்படங்களில் கால நகர்வுக் குறியீடுகள்

தமிழ்த் திரைப்படங்களில் கால நகர்வுக் குறியீடுகள்

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
தமிழ்த்துறை
கா.மா.பட்ட மேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8

காலம் என்பது இயக்கத்தில் இருப்பது. கண்ணால் காண முடியாதது. திரைப்படங்களில் இடத்தைச் சித்தரிப்பதைப் போல் அவ்வளவு எளிதாகக் காலத்தைச் சித்தரித்துவிட முடியாது. காட்சியின் தொடக்கத்திலேயே இட மாற்றத்தை பார்வையாளனுக்கு உணர்த்திவிட முடியும். கால மாற்றத்தை / கால நகர்வை வெளிப்படுத்தாமலேயே பார்வையாளன் உணர்வான். ஏனெனில் ஒவ்வொரு செயலுக்கும் நேரம் தேவை. ஒவ்வொரு செயலின் முடிவும் காலம் பயன் படுத்தப்பட்டிருப்பதை அறிவுறுத்துகிறது. திரைப்படத்தில் காட்சிகள் தொடர்ந்து ஆற்றொழுக்கு போல் காண்பிக்கப்பட்டாலும், திரைக்கதை என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட காட்சிகளின் தொகுப்புதான் என்பதை நாம் உணர்தல் வேண்டும். சொல்லப்பட்ட காட்சிகளுக்கிடையே சொல்லப்படாத காட்சிகள் புதைநிலையில் உள்ளன. எனவே காட்சிகளுக்கு இடையே கடந்துபோன காலம், நிமிடங்களா? மணிநேரமா? பொழுதா? நாட்களா? மாதங்களா? ஆண்டுகளா? என்பதைத் திரைப்படம் சொல்லித்தான் ஆகவேண்டும்.

காட்சிகளுக்கு உள்ளேயே ஷாட்களுக்கு இடையே காலம் நகர்கிறபோது, அநேகமாக நிமிடம், மணிநேரம் என்ற அளவில் காலம் கடந்ததைக் கடிகாரத்தின் துணையோடு, அதாவது கடிகார முள் சுழற்சியை டிசால்வ், சூப்பர் இம்போஸ் செய்து காண்பித்துவிடுவார்கள். சான்றாக, நாயகன் கடிதம் எழுதும் நேரம், நாயகி உடை மாற்றிக்கொண்டு வரும் நேரம், நோயாளி மருத்துவருக்காகக் காத்திருக்கும் நேரம் போன்ற கால நகர்வுகள் இவ்வகைக் குறியீடுகளின் வழி பார்வையாளருக்கு உணர்த்தப்படும். அழகன் திரைப்படத்தில் நாயகனும் நாயகியும் தொலைபேசியில் மாலை தொடங்கி இரவு கடந்து மறுநாள் காலை வரை உரையாடும் காட்சியில் கால நகர்வுகள் இயக்குநர் பாலசந்தர் அவர்களால் பல்வேறு குறியீடுகளின் வழியாக காண்பிக்கப்படுவதை இங்கு நினைவில் கொள்ளலாம்.

இரண்டு காட்சிகளுக்கிடையே இடையீட்டுக் காட்சியின்றி காலம் நகர்கிற பொழுது அதாவது நாள் அல்லது காலை, மாலை போன்ற பொழுது நகர்கிறபோது இத்தகு காலநகர்வைக் வெளிப்படுத்துவதற்காகத் தமிழ்த் திரைப்படங்களில், விளக்கேற்றப்படுதல் அல்லது விளக்கணைத்தல், சூரிய உதயம் அல்லது சூரிய அஸ்தமனம், கோயில் மணியோசை, பாங்கோசை, தேவாலய மணியோசை, பூபாள இசை, சுப்ரபாதம், பறவைகளின் சப்தம், நாள்காட்டியில் நாள்தாள் கிழித்தல் முதலான காலநகர்வுக் குறியீடுகள் இடம்பெறுவதுண்டு.

காட்சிகளுக்கிடையே சில நாட்கள் கடந்துள்ளமையைப் புலப்படுத்த நாள்காட்டியின் நாள்தாள்கள் படபடவெனப் பறந்து ஒரு குறிப்பிட்ட நாளில் நிலைகொள்வதாகக் காண்பிப்பதுண்டு. இயக்குநர் பாலச்சந்தர் தம் சிந்து பைரவி திரைப்படத்தில் கதைநாயகன், கதைநாயகி இருவரும் கோபித்துக் கொண்டு சிலநாட்கள் பேசாமல், சந்திக்காமல் காலம் கடத்துவதை ஒவ்வொரு நாளும் செய்தித்தாள் மற்றும் ஒரு கிழமை இதழ் என இணைத்துப் போடும் ஷாட்களைத் தொடர்ந்து காண்பித்து நாட்களின் நகர்வை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார்.

காட்சிகளுக்கிடையே பல மாதங்கள் கடந்திருப்பதை வெளிப்படுத்த இலையுதிர்ந்த மரத்தைக் காண்பித்து அதே பிரேமில் சூப்பர் இம்போஸில் அந்த மரமே பூத்துக் குலுங்குவதைப்போல் காண்பிப்பதுண்டு. சற்றேறக்குறைய இதே உத்தியில் செடி வளர்வது, கொடி வளர்ந்து பூ பூப்பது போன்ற காலக்குறியீடுகள் தமிழ்த் திரைப்படங்களில் இடம் பெறுவதுண்டு.

இரண்டு காட்சிகளுக்கிடையே பல ஆண்டுகள் கடந்திருக்கும் நிலையில் இத்தகு கால நகர்வைப் பார்வையாளர்களுக்கு விளக்கிக் காட்டச் சுழலும் சக்கரத்தைக் காண்பிப்பதுண்டு. காலச் சக்கரத்தின் சுழற்சியைக் குறிப்பிடும் சக்கரங்களாகக் திரைக்காட்சியில் வண்டிச் சக்கரம், தையல் இயந்திரச் சக்கரம், தொழிற்சாலையின் ஏதேனும் ஒரு இயந்திரச் சக்கரம் முதலான சக்கரங்களில் ஒன்று இடம்பெறுவதுண்டு. ஒரு சில திரைப்படங்களில் கால நகர்வைச் சில நாட்களுக்குப் பின்.., சில ஆண்டுகளுக்குப் பின்.., 20 வருடங்களுக்குப் பிறகு.. என எழுத்தில் எழுதிக் காண்பித்து விடுவதும் உண்டு.

திரைப்படங்களில் இடம்பெறும் பாடல் காட்சிகள் குறித்துப் பலவகை விமர்சனங்கள் உண்டு. பல தமிழ்த் திரைப்படங்களில் பாடல்காட்சிகள் கால நகர்வுக்கான உத்தியாகப் பயன்படுத்தப் படுகின்றன என்பதை நாம் கவனத்தில்கொள்ள வேண்டும். சில பல நாட்கள், மாதங்கள், ஆண்டுகள் திரைக்கதையில் கடக்கும் கால நகர்வைப் பாடல்காட்சி ஒன்றைப் புகுத்துவதன் மூலம் மிக எளிமையாக இயக்குநர் பார்வையாளர்களுக்குப் புலப்படுத்தி விடுவார்.

தமிழ்த்திரைப்படங்களில் ஒரே பாடல் காட்சியில் ஒருத்தி கலெக்டர் ஆகிவிடுவதையும், ஓர் ஏழை பணக்காரன் ஆகிவிடுவதையும் நாம் பலமுறை பார்த்ததுண்டு. விபத்துக்குள்ளான/ நோய்வாய்ப்பட்ட கதைப் பாத்திரங்கள் பலர் முழுக்குணம் பெறுவதற்கான கால நகர்த்தலைப் பாடல் காட்சிகள்தாம் செய்கின்றன. இத்தகு பாடல் காட்சிகள் அந்தச் செயல்ககளுக்குரிய முழுமையான கால இடைவெளியைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்றன.

அன்பே சிவம் திரைப்படத்தில் இடம்பெறும் "யார் யார் சிவம்? அன்பே சிவம்!" என்ற பாடல் காட்சியில் கடுமையான விபத்துக்குள்ளான கதைநாயகன் முழுமையாக குணம்பெறும் நெடியகாலம் கடத்தப்பட்டிருப்பதை இங்கு நினைவில் கொள்ளலாம்.

இயக்குநர் கௌதமன் இயக்கத்தில் அண்மையில் வெளிவந்த "வேட்டையாடு விளையாடு" திரைப்படம் காட்சிகளுக்கிடையிலான கால நகர்வை (இட நகர்வையும் சேர்த்து) படம் முழுவதும் எழுத்தில் எழுதிக் (Sub Title) காண்பித்தது.

சான்றாக, கதாநாயகன் விமானத்தில் மதுரை வந்திறங்கி, கொலையைத் துப்புத் துலக்கும் ஒருநாள் நிகழ்ச்சியை விளக்கும் தொடர்ச்சியான காட்சிகளில் காலை 8-30 மணி, காலை 10-30 மணி, மாலை 5-00 மணி எனக் கால நகர்வை எழுத்தில் காண்பித்தது. இந்த உத்தி சற்றேறக்குறைய ஊமைப்படக் கால உத்தி என்றாலும் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தைப் பொறுத்தமட்டில் கதையின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் புதிய உத்தியாகவே பயன்பட்டது. ஏனெனில் கதாநாயகன் துப்பறியும் கதையின் வேகப் போக்குக்கு, வழக்கமான இடையீட்டுக் காட்சிகளால் கால நகர்வை வெளிப்படுத்தும் பழைய முறை பொருத்தமற்றதாக இருக்கலாம் என்று இயக்குநர் கருதியிருப்பார்.

Tuesday 13 October 2009

திரைப்படத்தில் முதல்பொருள்கள்: நிலமும் பொழுதும்.

திரைப்படத்தில் முதல்பொருள்கள்: நிலமும் பொழுதும்.

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
தமிழ்த்துறை
கா.மா.பட்ட மேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8

ஒரு காவியம் எவ்வாறு பல்வேறு காதை, இயல் போன்ற உட்பகுப்புகளால் கட்டப்படுகிறதோ அதேபோல் திரைப்படங்கள் காட்சிகள் என்ற பகுதிகளால் உருவாக்கப்படுகின்றன. காட்சிகள் பல்வேறு ஷாட் களால் (படத்துணுக்கு) உருவாக்கப் படுகின்றன. ஷாட் என்பது திரைப்படக் காட்சியின் அடிப்படை அலகு. அதன் நீளம் வரையறுக்கப் படவில்லை. ஒவ்வொரு ஷாட்டும் ஒவ்வொரு தனித்த துண்டுப் படம்; எந்த வெட்டும் இல்லாமல் தொடர்ந்து படமாக்கப்பட்ட ஒரு படத் துணுக்கு.

காட்சி என்பது திரைப்பட முழுக்கதையின் ஒரு பகுதி. அதில் ஒரு குறிப்பிட்ட நிகழ்வு நிகழ்த்தப்படுகிறது. ஒவ்வொரு நிகழ்வும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்த்தப்படுகிறது. எனவே ஒவ்வொரு நிகழ்வுக்கும் இடம், காலம் என்பன தவிர்க்க முடியாத அங்கங்கள் ஆகின்றன. இடம், காலம் என்ற பின்புலம் இல்லாமல் எந்தவொரு நிகழ்வும் யதார்த்தத்தில் நடப்பதில்லை. திரைப்படங்களிலும் அப்படித்தான்.

தொல்காப்பிய இலக்கியவியல் கோட்பாட்டின் அடிப்படையில் மேலே சொல்லப்பட்டவற்றைப் பின்வருமாறு விவரிக்கலாம். திரைப்பட முழுமையின் ஒரு பகுதியாக அமையும் காட்சிகளில் நிகழ்த்தப்பெறும் நிகழ்வு 'உரிப்பொருள்' ஆகும். காட்சியின் பின்புலமான இடமும் காலமும் 'முதல்பொருள்'.

முதல்எனப் படுவது நிலம்பொழுது இரண்டின்
இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே
(தொல். பொருள். அகத். நூ. 4)

காட்சியில் பங்கேற்கும் நடிகர்கள், அரங்கப்பொருள்கள், பின்னணி இசை முதலானவை 'கருப்பொருள்கள்'. தொல்காப்பியரின் முதல், கரு, உரிப்பொருள் கோட்பாடுகளைக் கொண்டு திரைப்படங்களை ஆய்வுக்கு உட்படுத்தமுடியும் என்பது தொல்காப்பிய இலக்கியவியல் கோட்பாடுகளின் பரந்த வீச்சினைப் புலப்படுத்துவதாகும்.

உரிப்பொருளைச் சிறப்பிக்க முதல், கருப்பொருள்கள் எவ்வாறு அகப்பாடல்களில் பயன்பட்டனவோ அதேபோல் திரைப்படக் காட்சிகளைச் சிறப்பிக்க/ முழுமைப்படுத்த இடம், காலம் என்கின்ற முதல்பொருளும் மேலே குறிப்பிடப்பெற்ற கருப்பொருள்களும் பயன்படுகின்றன.

Friday 9 October 2009

தகவல் தொடர்புச் சாதனங்கள்

தகவல் தொடர்புச் சாதனங்கள்

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்,
பட்டமேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8.


தகவல் தொடர்புச் சாதனங்கள் உலகத்தை ஒரு கிராமமாகச் சுருக்கிவிட்டன. செயற்கைக்கோள்களும் இண்டர்நெட்டும் தகவல் தொடர்பு உலகத்தில் நுழைந்த பிறகு உலகத்தின் எல்லைகள் சுருங்கிக் கொண்டே வருகின்றன. சமீபத்திய வரவான செல்ஃபோன் உலகை உள்ளங்கைக்குள் சுருக்கிவிட்டது. இன்றைய சூழலில் தகவல் தொடர்புச் சாதனங்கள் இல்லாத உலகை நம்மால் கற்பனை செய்து பார்ப்பது கூட இயலாததாகி விட்டது. நாம் இப்போது தொடர்புச் சாதனங்களால் ஆன ஊடகங்களுக்குள் வாழ்கிறோம்.

ஊடகங்கள் நமக்குத் தகவல்களைத் தருகின்றன. பொழுது போக்க உதவுகின்றன. இத்தோடு ஊடகங்கள் நிறுத்திக் கொள்வதில்லை. நம் வாழ்க்கையை, நம் சிந்தனையை, நம் தேவைகளைத் தீர்மானிக்கும் சக்தியாகவும் ஊடகங்களே விளங்குகின்றன.ஊடகங்கள் உலகைப் பற்றிய தகவல்களைச் செய்தியாகவும் பிற வடிவத்திலும் தருவதோடு நிறுத்திக் கொள்வதில்லை. மாறாக உலகை எப்படிப் பார்க்க வேண்டும், எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதையும் அவை சொல்கின்றன. உலக நிகழ்வுகளில் எவை எவை முக்கியத்துவம் உடையவை, எவை எவை முக்கியத்துவம் அற்றவை என்பதையெல்லாம் தீர்மானிக்கும் சக்தியாக ஊடகங்கள் விளங்குகின்றன.

நாம் எதைப்பற்றிப் பேச வேண்டும் எதை விட்டுவிட வேண்டும் என்பதை ஊடகங்களே முடிவுசெய்கின்றன. இந்தியாவில் பஞ்சமும் பட்டினிச் சாவுகளும் ஊடகங்களால் புறக்கணிக்கப்படும் போது சராசரி இந்தியனும் இந்த விஷயங்களைப் புறக்கணித்து விடுகிறான். சிவகாசி ஜெயலட்சுமியும் கொலைக் குற்றவாளி காஞ்சி பெரியவாள்களும் ஊடகங்களின் பார்வை வளையத்திற்குள் வரும்போது ஊடகங்களால் தீர்மானிக்கப்படும் சராசரி இந்தியச் சிந்தனையில் இவை விவாதத்திற்குள்ளாகின்றன.

ஊடகங்கள் நிகழ்வுகளை, நாம் பார்க்க வேண்டிய கோணங்களை மட்டும் தீர்மானிப்பதில்லை. மாறாக நிகழ்வுகளையே ஊடகங்கள் மாற்றிவிடுகின்றன. ஏனெனில் ஊடகங்கள் சித்தரிப்பவை எல்லாம் உண்மைகள் இல்லை. ஊடகங்கள் தகவல்களை யதார்த்தங்களில் இருந்து உருவாக்குகின்றன, தயாரிக்கின்றன, வெட்டி ஒட்டுகின்றன, கோர்க்கின்றன. அர்த்தங்களை உருவாக்குகின்றன. சான்றாக, சுனாமிப் பேரழிவு. இந்நிகழ்வு ஊடகங்களால் அதாவது வானொலி எழுத்துரைகளால் பத்திரிக்கைச் செய்திகளால் புகைப்படங்களால், தொலைக்காட்சிக் காமிராக்களால் எப்படி உண்மையிலிருந்து உருவாக்கப் படுகின்றன என்று பார்ப்போம்.

முதலில் தேர்ந்தெடுத்தல்: எந்தக் காட்சிகளைத் தேர்ந்தெடுப்பது என்பதிலேயே ஊடகங்களின் பணி தொடங்கிவிடுகிறது. எந்த நிகழ்வைக் காட்சியாக்குவது எந்தக் கோணத்தில் காட்சியாக்குவது படங்களோடு இணைக்கப்பட வேண்டிய அல்லது விடப்பட வேண்டிய வார்த்தைகள் எவை எவை என்று தேர்ந்தெடுத்தலும் தொகுத்தலும் (நீக்குதல் இணைத்தல்) கொண்டு நிகழ்வுகள் உருவாக்கப்படுகின்றன. சாதனங்களில் எவையுமே எதேச்சையாகவோ இயற்கையாகவோ இணைந்துவிடுவதில்லை. எல்லாமே திட்டமிட்டுத் தேர்ந்தெடுத்துக் கோர்க்கப்படுகின்றன.இப்படித் தேர்ந்தெடுத்துக் கோர்ப்பதில்தான் அர்த்தங்கள் உருவாக்கப்படுகின்றன.

சுனாமிப் பேரழிவைக் காட்டும்போது தூக்கி வீசப்பட்ட படகுகள், உருக்குலைந்த குடியிருப்புகள், சிதைந்த உடல்கள் போன்றவற்றைக் காட்டும்போது ஒருவித அர்த்தமும் நிவாரணப் பணிகள் அரசின் உதவிகள் மருத்துவச் சேவைகள் போன்றவற்றைக் காட்டும்போது ஒருவித அர்த்தமும் இரண்டுவிதமான காட்சிகளையும் இணைத்துக் காட்டும்போது வேறுவித அர்த்தமும் உருவாக்கப் படுகின்றன. இவை மட்டுமின்றி பின்னணி இசை, காட்சிகளுக்கான வருணனை, காமிரா கோணம் இவைகளும் அர்த்தங்களைத் தீர்மானிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன. இப்படிக் கோர்ப்பதும் அர்த்தங்களை உருவாக்குவதும் ஊடகங்களால் எந்த நோக்கத்தில் செய்யப்படுகின்றன என்பது ஒரு முக்கியமான வினா.

ஊடகங்கள் எல்லாம் நேர்மையானவை என்றோ நடுவுநிலை வகிப்பன என்றோ சொல்லமுடியாது. ஏனெனில் எல்லா ஊடகங்களுக்கும் சார்புகள் உண்டு. பொதுவாக ஊடகங்கள் இந்தியச் சூழலில் உயர்வர்க்கச் சார்புடையதாகவும், உயர்வகுப்புச் சார்புடையதாகவும் இந்துத்துவச் சார்புடையதாகவும் ஆணாதிக்கச் சார்புடையதாகவும் இருக்கின்றமையை நாம் உணர முடியும். விதிவிலக்குகள் உண்டு. இந்தச் சார்புகளை ஊடகங்கள் எவ்வளவுதான் மூடி மறைத்து வைத்தாலும் அவை ஒவ்வொரு ஊடக நிகழ்விலும் வெளிப்பட்டே தீரும்.

மனிதத் தின்னிகள்

மனிதத் தின்னிகள் (மறுபதிப்பு)

முனைவர் நா.இளங்கோ - மலையருவி

விரும்பியோ விரும்பாமலோ சில காரியங்கள் தொடர்ந்து நடைபெறுவதால் அவை அனிச்சைச் செயல்களைப் போல் ஆகிவிடுகின்றன. காலை சேர விழிப்புக்குப் பின்னர் கண்களும் மனமும் எதையோ தேட ஆரம்பிக்கின்றன. வார்த்தைகளும் படங்களும் காட்சிகளுமாக வீடெங்கும் சிதறிக் கிடக்கின்றன. விழித்தெழுகிற போதெல்லாம் இவைகளின் நடுவிலிருந்துதான் நான் விழிக்கிறேன்.
வீடெங்கும் செய்திக் குப்பைகள். பழைய குப்பைகளை ஒதுக்கி வைத்துவிட்டு புதிய குப்பைகளைத் தேடியது கண்களும் மனமும்.
எப்பொழுதும் போல் அன்றைக்கும் தொலைக்காட்சி முன்பு அமர்ந்து செய்தி கேட்கத் தொடங்கினேன். செய்தி தொடங்கும் முன்பே கண்களை மீறிக்கொண்டு மனம் தேட ஆரம்பித்தது.
செய்தி தொடங்கியது, முக்கியச் செய்திகள் முடிந்து விரிவான செய்திகளை வாசிக்கத் தொடங்கினார் செய்தி வாசிப்பாளர். செய்தி வாசிப்பவரையே கூர்ந்து கவனித்துப் பார்த்தேன். அது ஒரு மனிதமுகம் என்பதே மறந்துபோய், மனிதஉருவில் வடிவமைக்கப்பட்ட இயந்திரமோ என்ற சந்தேகம் என் மனதில் தோன்றியது. முகத்தின் தசைநார்கள் இறுகி உலோகத்தில் வார்த்தெடுத்தது போலிருந்தது அந்த முகம்.
செய்தி வாசிப்பதும் செய்தி தொடர்பான காட்சிகளுமாக நேரம் கடந்து கொண்டே இருந்தது. வழக்கமான அரசியல் செய்திகள், பதட்டம் நிலவுவதாகவும் பரபரப்பு காணப்படுவதாகவும் நீண்டுகொண்டே இருந்தன. நான் பொறுமையிழந்தேன். சே! என்ன எழவு செய்தி இது? சலிப்பூட்டக் கூடியதாகவும் எரிச்சலூட்டக் கூடியதாகவும் இருந்தது அன்றைய காலைநேரச் செய்தி.
கடைசியாகக் கிடைத்த செய்தி என்று ஏதாவது சொல்லக்கூடும் என்று எதிர்பார்த்திருந்தேன். மீண்டும் தலைப்புச் செய்திகள் என்று செய்தி முடிவுக்கு வந்துவிட்டது.
தொலைக்காட்சியை நிறுத்திவிட்டு எழுந்து சோம்பல் முரித்துக் கொண்டேன். குப்பைகளுக்கு நடுவில் இருந்தாலும் அன்றைக்கு அன்றைக்கு புதிய குப்பை இல்லையென்றால், மனம் இயக்கமற்று இருப்பதைப் போலாகிவிடுகிறது. காலை தினசரியைத் தேடி எடுத்துப் புரட்டத் தொடங்கினேன். முதலில் வேகவேகமாக நாளிதழின் முதல் பக்கம் தொடங்கி கடைசிப் பக்கம் வரை ஒரு பார்வை பார்த்துவிட்டு, சுவாரஸ்யமின்றி மீண்டும் முதல் பக்கத்திலிருந்து செய்திகளை மேயத் தொடங்கினேன். செய்தித்தாளில் மனம் ஒன்றவில்லை. பெரிய பெரிய எழுத்துக்களில் எட்டுக்காலம் செய்தியிலிருந்து தொடங்கி ஆறு காலம் செய்தி, நாலு காலம் செய்தி, பெட்டிச் செய்தி என்று உள்ளே இறங்கித் தேடினேன். படங்கள், செய்திகள் என்று பக்கம் பக்கமாகச் செய்திகளைக் கொட்டிக் கவிழ்த்துத் தேடிப் பார்த்து விட்டேன்.
ஏன் இன்றைக்கு என்ன ஆயிற்று?
என்ன செய்திகள் இவை?
இரத்தம், கொலை, சாவு, பிணம் எதுவுமில்லாமல் வெறுமையாய் இருந்தன எழுத்துக்கள், வார்த்தைகள், படங்கள்.
வேறு வழியின்றி பழைய குப்பைகளில் மீண்டும் தேடினேன்.
குவியல் குவியலாய்ப் பிணங்கள். படங்களும் எழுத்துக்களும் வார்த்தைகளுமாய்.
மதக்கலவரத்தில் எட்டு பேர் உயிரோடு எரிப்பு
நிவாரண உதவி வாங்கச் சென்ற நாற்பது பேர் உடல் நசுங்கிச் சாவு
கார் குண்டு வெடிப்பு இருபது பேர் உடல் சிதறி மரணம்
இரத்தம், நிணம், பிய்ந்த சதைத் துண்டங்கள்…
கொலை, சாவு, பிணம்…
பிணவாடை மூக்கைத் துளைத்த பின் எழுந்து என் அன்றாட பணிகளைத் தொடங்கினேன்.

வீட்டுக்குள் வளர்ந்த விருட்சம்

வீட்டுக்குள் வளர்ந்த விருட்சம் (மறுபதிப்பு)

முனைவர் நா.இளங்கோ - மலையருவி

யார் அந்த விதையைப் போட்டார்கள் என்றே தெரியவில்லை?
போயும் போயும்
வீட்டு வரவேற்பரையிலா அதைப்போடுவது....

விதை விழுந்ததை எப்படி கவனிக்காமல் போனோம்
விதை விழுந்ததை மட்டுமா
அது வேர்விட்டு வளர்ந்ததையும் அல்லவா
கவனிக்கத் தவறிவிட்டோம்

தொலைக்காட்சி பெட்டி வரவேற்பரைக்கு வந்த பிறகுதான்
அது நடந்திருக்க வேண்டும்
அநேகமாக கேபிள் ஒயரோடு
அந்த ஆலம் விதை வந்திருக்க வேண்டும்

என்ன அசுர வளர்ச்சி
வந்த சில மாதங்களிலேயே
வேர்விட்டு... விழுதுகளைப் பரப்பி
வரவேற்பரை முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டு
வளர்ந்து செழித்தது ஆலமரம்

வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கோ நண்பர்களுக்கோ
எங்கள் முகம் தெரியாமல்
அவர்கள் முகங்களைக் காட்டாமல்
அது வியாபித்திருக்கிறது

வீட்டுக் குழந்தைகள் விளையாட இடந்தராமல்
குறுக்கும் நெடுக்குமாய்க் கிளைகளைப் பரப்பி
கண்டபடி வளர்ந்து காடாக மண்டிவிட்டது

ஏன் பல சமயங்களில்
நாங்களே ஒருவரை பார்க்க முடியாமல்
பேசிக்கொள்ள முடியாமல்
இடத்தை அடைத்துக் கொண்டு
இருப்பிடத்தை இருட்டாக்கி விட்டது

யார் அந்த விதையைப் போட்டார்கள் என்றே தெரியவில்லை?
போயும் போயும்
வீட்டு வரவேற்பரையிலா அதைப்போடுவது....

வரவேற்பரையும் போதாமல்
சில கிளைகள்
படுக்கைஅறையையும்
எட்டிப் பார்த்து அச்சமூட்டுகின்றன.

ஆலமரத்தின் விழுதுகளுக்கிடையே
வேர் முடிச்சுகளில் சிக்கி
கிளைகளின் ஊடே இருகிய முகங்களோடு
விழிகள் நிலைகுத்தி
உறைந்து போகிறோம்

உள்ளங்கையும் கட்டை விரலும்

உள்ளங்கையும் கட்டை விரலும் (மறுபதிப்பு)

முனைவர் நா.இளங்கோ - மலையருவி

உலக உருண்டை
உள்ளங்கைக்குள் ஒடுங்கிப் போனது

கை நீட்டிக் குரலெடுத்து
அழைத்ததெல்லாம் போய்
கட்டை விரலால் அழைப்பு

கண்களைப் பிடுங்கி எறிந்துவிட்டு
விரல்களாலே
தடவித் தடவி அழைப்பு
ஓயா அழைப்பு!

முகங்கள்
உருண்டையாய் நீண்டதாய்
தட்டையாய் கோணலாய்
அழகாய் விகாரமாய்
எத்தனை எத்தனை முகங்கள்
எல்லாம் கரைந்து
0 1 2 3 4 5 6 7 8 9
எண்களில் அமிழ்ந்து போயின

முகங்களற்ற உலகில்
வெட்டவெளியில்
மிரட்டல்கள் கோபங்கள்
சவால்கள் சமாதானங்கள்
கொஞ்சல்கள் கெஞ்சல்கள்
மௌனங்கள்

பிரபஞ்சமே
உதடுகளில் தொடங்கி
செவிகளில் முடிந்து போனது
கண்கள் மட்டும் களவு போயின.

எதிரே
உறவும் நட்பும்
முகங்களைக் காணோம்
எண்கள்… எண்கள்…
கட்டைவிரல்
உள்ளங்கையில் தடவத் தொடங்கியது.

ஊடக வாசல்




வலைப் பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் வணக்கம்! என்னுடைய வலைப்பதிவுப் பயணத்தில் நான்காவது தடம்.

இந்த வலைப்பதிவு தகவல் தொடர்பியல் சார்ந்தது. புதுவையைச் சார்ந்த செய்திகள், விழாக்கள், நிகழ்ச்சி அறிவிப்புகள், நான் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகள், ஊடகங்கள் சார்ந்த தகவல்கள், குறிப்புகள், கட்டுரைகள் என விரியும். தொடர்ந்து உங்கள் பார்வையைப் படர்க்கையின் பக்கமும் செலுத்துங்கள். நன்றி!

முனைவர் நா.இளங்கோ
புதுச்சேரி
இந்தியா

புலவர் பூங்கொடி பராங்குசம் அவர்களின் இலக்கியக்களம் - நூல் அணிந்துரை

  முனைவர் நா . இளங்கோ கவிதை இரசனை , இது படைப்புக்கு இணையானதோர் முருகியல் செயற்பாடு . என்றைக்குக் கவிதைகள் தோன்றினவோ அன்றைக்கே கவ...