Saturday, 23 November 2019

நழுவும் காலம் - மலையருவி முன்னுரை

முன்னுரையாக…“நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல் இமைப்பொழுதும் சோரா திருத்தல்” என்றான் பாரதி. எனக்குத் தொழில் கவிதை இல்லை. இப்பொழுது யாருக்கும் கவிதை தொழிலாய் இருக்க முடியாது, இருக்கவும் கூடாது. நான் ஒரு ஆய்வாளன், ஆசிரியன். அதே சமயம் பாரதி சொன்னது போல் கொஞ்சம் போல தவம் செய்து வருவதனால் யோகம் வந்து சேர்ந்திருக்கிறது. புரியும் படியாகவே சொல்கிறேன். பாரதி விநாயகர் நான்மணி மாலையில்,
செய்க தவம்! செய்க தவம்! நெஞ்சே! தவம் செய்தால்
எய்த விரும்பியதை யெய்தலாம் - வையகத்தில்
அன்பிற் சிறந்த தவமில்லை; அன்புடையார்
இன்புற்று வாழ்த லியல்பு.
என்று பாடியதற்கேற்ப கொஞ்சம் தவம் செய்து வருகிறேன். அதாவது சாதி மதங்களைக் கடந்து சக மனிதர்கள் மீதும் பிற உயிரினங்களின் மீதும் அன்பு பாராட்டி வருகிறேன். அதன் பொருட்டு ஊருக்கு உழைக்க முயல்கிறேன். அதுதான் எனக்கு வந்து சேர்ந்த யோகம். “ஊருக்கு உழைத்தல் யோகம்” என்பது பாரதியின் வாக்கு அல்லவா?
      அன்பு செய்யத் தொடங்கினாலே சிக்கல்தான். இன்றைக்கு அன்புக்கு எதிரான சுயநலமிக்க மதவெறியும் சாதிவெறியும் கொண்டு அலையும் மனித விலங்குகளைப் பார்க்கும்போது கோபம் கோபமாக வருகிறது. திருவள்ளுவர் சொன்னதுபோல் (அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை –குறள்: 76) சமூகத்தோடு முரண்பட்டுச் செயலாற்று வதற்கும் நாம் செய்யும் அன்பே காரணமாகி விடுகிறது. நமது காந்தி தேசத்தில் நாமெல்லாம் அகிம்சையைத்தான் ஆயுதமாக எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து போதிக்கப் பட்டு வருகிறது. ஆனால் அரசு ஒருபோதும் அகிம்சையின் பக்கம் வருவதே யில்லை, அது அகிம்சைப் போராட்டங்களை ஒடுக்குவதற்கு வன்முறையைதான் கையில் எடுக்கிறது. இதற்குப் பல உதாரங்களைச் சொல்ல முடியும். சமீபத்திய உதாரணம் மெரீனாப் போராட்டம், ஸ்டெர்லைட் தூத்துக்குடிப் போராட்டம். நான் யார் பக்கம் நிற்க! அன்பு செய்பவன் எப்பொழுதும் அடக்கி ஒடுக்கப் படுகிறவர்கள் பக்கம்தான் நிற்பான், நிற்க வேண்டும். நானும் அப்படித்தான்.
என்னுடைய கவிதை உலகம் அலாதியானது. அது சமூகத்தின் வெளிமுரண்களைப் பற்றி மட்டுமே பேசுவதில்லை. அது மனிதனின், சமூகத்தின் அகமுரண்களையும் பேசுகிறது. எல்லாவற்றுக்கும் அன்புதான் அடிப்படைக் காரணம். அகமுரண்கள் எப்பொதும் கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருக்கும். எல்லாக் கேள்விகளுக்கும் விடை கிடைத்துவிடாது. விடை கிடைக்க வில்லை என்றோ கிடைக்காது என்றோ கருதிச் சோர்ந்துவிடக் கூடாது. கேள்விகளை நாம் தொடர்ந்து உற்பத்தி செய்துகொண்டே இருக்க வேண்டும். எனக்கு அதிகமாகப் பிரபஞ்சம் குறித்தும் காலம், இடம் குறித்தும் கேள்விகள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. “நழுவும் காலம்” என்பது என்னுடைய வினா விடைகளுக்கான கூட்டுப் படிமம்.
எனக்கு அரசியல் பிடிக்கும் ஆனால் அரசியலற்ற அரசியல்வாதிகளைப் பிடிப்பதில்லை. இன்றைக்குக் கண்முன்னே தட்டுப்படும் பெரும்பாலான அரசியல்வாதிகள் செய்யும் அரசியல் சகிக்கக் கூடியதாயில்லை. அரசியல்தான் இப்படியென்றால் ஆன்மீகம் என்ற பெயரில் நடக்கும் அடாவடிகள் மத அடிப்படை வாதிகளின் சமீபத்திய அசுர வளர்ச்சிக்குப்பின் எல்லையில்லாமல் போய்விட்டது. அன்பே தவமாய் வாழும் எங்களின் ஆன்மீகம் வேறு. மத அடிப்படை வாதிகளின் போலி ஆன்மீகம் வேறு. எங்கள் ஆன்மீகத்திற்குக் கடவுள் தேவையில்லை. அவர்களோ கடவுளின் பெயரால்தான் ஆதிக்கம் செய்கிறார்கள், அத்துமீறு கிறார்கள். எனவே இப்பொழுது என்ன செய்ய? பொய்ம்மையைத் தோலுரிக்காமல் மெய்ம்மையைப் பேச முடியுமா? என்னுடைய கவிதை உலகம் இதுதான்.

Ø விருந்தைப் பரிமாறிவிட்டுச் சாப்பாட்டின் பெருமையை விரிவுரை ஆற்றிக் கொண்டிருப்பதைப் போலத்தான் இதுபோன்ற முன்னுரைகளும். இன்னபிற உரைகளும் விருந்துக்கு விரையுங்கள் எங்கள் விளக்க வுரைகளை விட்டு விலகுங்கள்.
Ø சம்பிரதாயமாக இல்லை, உண்மையில் உளப்பூர்வமான நன்றிக்கு உரியவர்களைப் போற்றி மகிழ்கிறேன்.
Ø  என் கல்லூரிக் காலத் தோழர் என் எழுத்துக்களைக் கண்டு உவப்பவர். அதனைத் தன்பராமரிப்பால் வளர்ந்தெடுப்பவர் இனிய நண்பர் சின்ன.சேகர் அவருக்கு இந்நூல் அன்புக் காணிக்கை.
Ø  நழுவும் காலம் என்ற இந்நூலை ஓராண்டுக்கு முன்பாகவே நேர்த்தியான செயலியாக (ANDROID APP) வடிவமைத்து உலகத் தமிழர்களின் கரங்களில் உலவவிட்ட மென்பொருள் வித்தகர் கனடாவைச் சேர்ந்த இனிய நண்பர் அந்தமில் கார்த்தி அவர்களுக்கு அகங்கனிந்த நன்றி.
Ø  பதிப்புத் துறையில் பல புதுமைகள் படைப்பதோடு தேர்ந்த படைப்பாளியாகவும் வலம்வரும் விழிகள் பதிப்பகத் தோழர் தி.நடராசன் அவரின் நேர்த்தியான கைவண்ணத்திற்கு நன்றிகள் பல.
மலையருவி
(முனைவர் நா.இளங்கோ)
nagailango@gmail.com

Saturday, 1 June 2019

சிங்கப்பூரில் பாவேந்தர் விழா -2019 : முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா.இளங்கோவின் முத்தமிழ் உரை:

ஏ.பி.இராமன் அவர்களின் முகநூல் பதிவிலிருந்து (26-04-2019)
தமிழோடு சுழன்ற சொற்போர்-
இலக்கியக் களத்தின் பேச்சு விழா!

முனைவர் நா.இளங்கோ - சிறப்புரை

முனைவர் நா.இளங்கோ - நினைவுப் பரிசு

முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா.இளங்கோ - சிங்கப்பூர்

’சங்கே முழங்கு’ நடனத்துடன் (கிருபா-மீனலோசனி) சிங்கப்பூர் தமிழ் இலக்கிய களத்தின் ‘பாவேந்தர் 129’ நிகழ்ச்சி 21/4 ஞாயிறன்று நடந்தபோது, கூடியிருந்தோரின் ஆவல் அனைத்தும் இறுதியில் இடம் பெற விருந்த சுழலும் சொற்போரிலேயே இருந்தது. காரணம், பாரதிதாசனின் தமிழ் அருவியில் குளித்து எழுந்த புதுவை முனைவர் நா.இளங்கோவின் சிறப்புப் பங்கேற்பு!
நெறி தவறா நெறியாளர் கவிஞர் விஜயபாரதி நிகழ்ச்சிக்குக் கவிதைக் காற்று வீச, இன்னொரு பேச்சாளர் வீர விஜயபாரதி , சொற்போர் நிகழ்ச்சிக்குத் தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தார்.இதன் மற்ற இருவர் இலக்கியக் களத்தின் தலைவர் முனைவர் இரத்ன வேங்கடேசன், ஸ்டாலின் போஸ்!
சுருதிலயாவின் சுருதி சேர்ந்த தமிழ் வாழ்த்திற்குப் பின் சரளாதேவி தங்கதுரை கச்சித வரவேற்பு தந்தார்.தலைமை வகித்த தமிழ் வள்ளல் போப் ராஜ், மாண்டிசோரி கல்வி நிலயத்தின் தலைவர் டி.சந்துரு இருவரும் சுருக்க உரையாற்றி சிறக்க முடித்தனர். பாரதிதாசன் வழியில் இன்றும் பணியாற்றுபவர்களில் ஒருவராக கவிஞர் பொன்னடியானை போப்ராஜ் குறிப்பிட்டார்.அந்தக் காலத்தில் கலைமக்ள் பள்ளியில் பாவேந்தரின் பிறந்த நாள் கொண்டாடப் பட்டதை நினைவு படுத்தினார்.அருமை.
நம் மூத்த எழுத்தாளர்-ஆய்வாளர் செ.ப. பன்னீர்செல்வத்திற்குப் பொருத்தமான பாரதிதாசன் விருதை அளித்து சிறப்பித்தனர்.
பட்டிமன்ற பாணியிலான சுழலும் சொற்போர் நிகழ்ச்சியின் தொடக்க உரையில், பாண்டிப் பேச்சாளர், பாரதிதாசனை முற்றிலும் ’விழுங்கிய ’ முனைவர் நா.இளங்கோ , பளிச்செனப் புரியும் முன்னுரை ஒன்றைத் தன்னுரையாகத் தந்தார்.
மேடை மாண்பைக்குறைக்காத இலக்கியக் களம் என்ற புகழுரையுடன், தமிழ் உணர்வுக்கு ஊக்கம் தந்த ராமலிங்க வள்ளலாரை முதலில் முன்னிறுத்தினார். சிறந்த மாதா மொழி சமஸ்கிருதம் என்றபோது,ஆத்திரமடையாமல் , வள்ளலார், உண்மைதான் . ஆனால் தமிழ் பித்ரு மொழி என்றவர் என கைதட்டல்களுக்கிடையே பேச்சைத் துவக்கினார். சாதி, சழக்கை வெறுத்த வள்ளலார், மொழிப் பற்றை வளர்த்தவர் என்பதை உணர்த்த இந்த உதாரணம்.பயிர்களுக்கு வேலி போட்டால் மட்டும் வளராது- வளர்க்க வேண்டும் என்பது போல், தமிழை நாம் பாதுகாப்புடன் வளர்க்க வேண்டும் என்றார் முனைவர் இளங்கோ. 21ம் நூற்றாண்டில் பாரதியார் தொட்டதை யெல்லாம், பாரதி தாசன் பெரிதாக்கினார். பாகவதர் பாடிய பிரபல பாடல் ‘பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமே’ என்ற பாபநாசம் சிவனின் பாடல் மெட்டில், பாவேந்தர் இயற்றிய வாழ்வியல் நீயே என்ற பாடலை அருங் கருத்துடன் இயற்றியதை முனைவர் பாடி நினைவூட்டினார். பாரதிக்குப் பின் பாரதிதாசனே கவிதைகளில் மன்னனாகத் திகழ்ந்தவர் எனக் குறிப்பிட்ட முனவர் இளங்கோ, பாவேந்தரின் பழக்கத்தில் வராத பல்சுவைப் பாடல்களை யெல்லாம் சரளமாக எடுத்துச் சொல்லி பிரமிக்க வைத்தார்.
முதல் பேச்சாளர் முனைவர் இரத்ன வேங்கடேசன், தாசனாரின் கவிதைச் சிறப்பை வெளிக் கொணர்ந்த விதம், நுட்பமானது. சூரியனை, நிலவைக் காட்டும் அழகினைபாரதி தாசன் விவரித்த கவிதைத்துவத்தை கண்முன் நிறுத்தினார்.. சிறந்த கவித்துவத்திற்குத் தேவையான ஆழம், பொருள்,கற்பனைத் திறம், உவமை அத்தனையையும் அடக்கம், புரட்சிக் கவிஞனின் கவிதை வரிகளிலே என்று அழுத்தம் திருத்தமாக விளக்கிய போது, அரங்கின் பாராட்டு எம்பிக் குதித்தது. கவிதைகளுக்கு சிறப்புச் செய்த நாடகப் பாணித் தமிழையும் நினைவு படுத்தினார் முனைவர்.
வீரத்துடன் வலம் வந்த வீர விஜயபாரதி, தமிழை கருத்தாழத்துடன் சுவாசித்தவர் பாரதி தாசன் என்றார். இந்தியைத் திணிக்க முனைந்த ஒரு காலத்தில், தமிழ் தழைக்கக் கருத்துக் குரல் எழுப்பினார் பாரதிதாசன். குருநாதர் பாரதியார் வைத்த புள்ளியைத் தான், பாவேந்தர் பின்பற்றினார். அவரின் கருத்துக்கள் ஒவ்வொன்றும் கவனிக்கப்பட்டன-தேவைப்பட்டன. தமிழிசையைப் பற்றிக் கருத்து கூறியவர் பாரதிதாசன். கடவுளின் பெயரால் சோம்பித் திரிந்த நமக்கு அவருடைய பாடல்களின் கருத்து மிக அவசியமாக இருந்தது. காலத்தைத் திசை மாற்றிய கருத்து, பாரதிதாசனுடையது என முடித்தார்.
உணர்ச்சியிலேயே ஊறித் திளைத்த பாவேந்தரின் பாடல்களில் விஞ்சி நின்று நெஞ்சை ஈர்ப்பது உணர்ச்சி தான் என்று எழுந்து நின்ற பேச்சாளர் ஸ்டாலின் போஸ். இவர் பேச வர மாட்டார் -பேசினால் பேசித் தீர்த்து விடுவார். எல்லாரும் ஆத்திச்சூடி எழுதினர் - யாராவது ‘அம்மா’ என்ற உணர்வுப் பெருக்கைத் தந்தார்களா? தாலாட்டை எடுத்துக் கொள்ளுங்கள், உணர்ச்சிகளைத் தானே ஊட்டி வளர்க்கிறார். அவரின் பாடல்களில் அடுப்படியிலிருந்து உணர்ச்சி கொப்பளிக்கிறது. பாரதி தாசனின் ஒவ்வொரு பாடலிலும் உணர்ச்சியைத் தவிர வேரொன்றும் காணோம் என்று முடித்தார்.
அஞ்சலைப் பெட்டி இல்லாவிட்டால் சுக்கு எப்படிக் கிடைக்கும் என கவித்துவத்தை நிலை நாட்ட முனைந்தார் முனைவர் இரத்தின வேங்கடேசன். நூலைப் படி-முறைப்படி படி - படி-படி படி படி என கவித்துவம் பொங்கக் கூறினாரே பாவேந்தர் என்றார் அவர்.
நடனத்தில் கூட கருத்தைக் காட்டியவர் பாரதி தாசன். ஆலையின் சங்கே ஊதாயோவில் எத்தனை கருத்து!தமிழை விட்டு விடாதே , அதுதான் உனக்கு உயிர் என்று சொன்னவர் பாவேந்தர் என்று முடித்துரைத்தவர் வீரவிஜயபாரதி.
உணர்ச்சி தான் கவிதை. அதைத் தான் பாவேந்தர் தந்தார். முதுமைக் காதலிலும் உணர்ச்சியைக் கொட்டியவர் அவர் என்றவர் ஸ்டாலின் போஸ்.
சொல்லாற்றல் மிக்க நடுவர் இளங்கோ, கம்பர், வள்ளுவர், மற்ற அனைவரையும் அழகாக வரிசைப் படுத்தினார் .. கவித்துவம், கருத்து அத்தனைக்கும்பொருத்தச் சுவை சேர்த்த அவர், பாரதி தாசனுக்கு உணர்ச்சி தான் உயிர் நாடி என்றார்.
இறுதியில் நன்றி உரை! அதிலும் தனிச் சுவை சேர்த்தார் மேடைக் கலைஞர் கண்ணன் சேஷாத்ரி.
--ஏ.பி.ஆர்.
ஏன் தாமதம்?
கடந்த சில வாரங்களாக தமிழ் மொழி மாத நிகழ்ச்சிகள் பலவற்றிற்கும் நிர்ப்பந்த அழைப்பில் கலந்து கொள்ள நேரிட்டது. நாள் முழுவதும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதால், செய்திகளை அன்றாடம் முகநூலில் பதிவு செய்வது சாத்தியமற்றதாகப் போய்விட்டது. குறிப்பாக புரட்சிக் கவிஞனின் நிகழ்வை, பேச்சாளர்களின் கருத்துக்களை நினைவு வைத்து எழுதுமளவுக்கு எனக்கு ஆற்றலும் கிடையாது. எப்படியோ யோசித்து எழுதி உங்கள் பார்வைக்குத் தாமதமாக வைக்கிறேன்.

சிங்கப்பூர் மூத்த எழுத்தாளர் ஏ.பி.இராமன் ஐயாவுக்கு நன்றி!

Tuesday, 21 May 2019

சமணப் பாறைச் சிற்பங்கள்: உத்தமபாளையம்

முனைவர் நா.இளங்கோ

தமிழ்ப் பேராசிரியர்
புதுச்சேரி-8

27-02-2019
உத்தமபாளையம் (தேனி மாவட்டம்- கம்பம் சின்னமனூர் இடையிலான ஊர்)
இப்பகுதியில் அச்சநந்தி என்ற சமணத்துறவியார் தலைமையில் சமணர்கள் பலர் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் குடியேறினர். 
குடியேறிய சமணத்துறவிகள் இப்பகுதியை சமணப் பள்ளியாகவே மாற்றினார்கள். இப்பகுதியில் உள்ள மலையைக் குடைந்து குடிநீருக்குச் சுணைகளை உருவாக்கி (சுனை இப்பொழுதும் வற்றாமல் நீர்நிரம்பி உள்ளது) இங்கேயே குடிஅமர்ந்தனர்.
இங்கு 23ஆம் தீர்த்தங்கரர் பார்சுவநாதர், 24ம் தீர்த்தரங்கரர் மகாவீரர் ஆகிய இருவரது திருவுருவங்கள் உள்ளன முதல் வரிசையில் ஆறு சிற்பங்களும், இரண்டாம் வரிசையில் எட்டுச் சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன. கோயிலின் நீளம் இருபது அடி. உயரம் பத்து அடியாகும்.
இங்குள்ள பாறைச் சிற்பங்களில் கனகநந்தி, அரிட்டனேமி என்ற பெயரும் 23ம் தீர்த்தங்கரர் பார்சுவநாதர், 24ம் தீர்த்தங்கரர் மகாவீரரின் சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன.
பார்சுவநாதர் தலைக்கு மேல்மூன்று பலதலைகள் கொண்ட நாகம் உள்ளது. மகாவீரர் தலைக்கு மேல் முக்குடை செதுக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் வெண்சாமரம் வீசும் பெண் சிற்பங்களும் உண்டு.
இந்தச் சிற்பங்களுக்கு அருகில் தமிழ் வட்டெழுத்துக்களால் ஆன சில கல்வெட்டுகள் உள்ளன. அதில் அரட்டணமி, அஜநந்தி ஆகிய சமண முனிவர்களின் பெயர்கள் உள்ளன.
இதில் அஜநந்தா என்பவர் பெயர் அப்போது பாண்டிய நாட்டில் இருந்த சமணக்கோயில்கள் அனைத்திலும் இருந்துள்ளது. மேலும் 9-ம் ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டிய மன்னன் சடையன்மாறன் பெயரும் தனியாகப் பொறிக்கப்பட்டுள்ளது.

முனைவர் நா.இளங்கோ - களஆய்வு

மேகமலை -ஹைவேவிஸ் -மலைப்பயணம்

முனைவர் நா.இளங்கோ

தமிழ்ப் பேராசிரியர்
புதுச்சேரி-8

27-02-2019
தேனி மாவட்டம் சின்னமனூரிலிருந்து சுமார் முப்பது கி.மீ. தூரத்தில் இருக்கிறது மேகமலை. உயர்ந்த மலைகள் மிக ஆழமான பள்ளத்தாக்கு, அழகிய ஏரிப்பகுதிகள் என இயற்கை அழகுக் கொட்டிக் கிடக்கும் இடம் இது.
எட்டுத்திசையும் மலைச்சிகரங்களால் சூழப்பட்ட இயற்கையான பசுமைப் பள்ளத்தாக்கே மேகமலை. மேகமலை தமிழ்நாட்டில் உள்ள மலைவாச தலங்களில் சிறந்த நிலஅமைப்பு கொண்டது.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,500 மீட்டர் உயரத்தில் உள்ள இம்மலை முழுவதும் 'மேகங்களால் சூழப்பட்டு மேகங்களின் தொட்டிலாக விளங்குவதால் மேகமலை' என்று பெயர் பெற்றதுபோலும்.
பசுமையான நிலப்பரப்புடன் வானுயுர்ந்த மரங்களுடன் மிக அடர்த்தியாக காணப்படுகிறது இந்த வனப்பகுதி.
ஆரம்ப காலங்களில் மேகமலை - ஹைவேவிஸ் மலைப்பாதை இங்குள்ள தனியார் தேயிலைத் தோட்ட நிறுவனம் (லிப்டன் கம்பெனி) ஒன்றின் கட்டுப்பாட்டில் இருந்தது. அந்த நிறுவனம் இந்தப் பாதையை சரியாகப் பராமரிக்க முடியாததால் தமிழக அரசின் மாவட்ட நிர்வாகத்திடம் சாலைப் பராமரிப்பை ஒப்படைத்தது. தற்போது ஹைவேவிஸ் வரை, அங்கே புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேகமலையை அடுத்து ஹைவேவிஸ் உள்ளது. அங்கே பசுமை பரவிக்கிடக்கும் தேயிலைத் தோட்டங்கள் மிகுதியாக உள்ளன. இங்கிருந்து மணலாறு ஏரியின் தோற்றத்தைக் கண்டு ரசிக்கலாம். மலை முகடுகளுக்கு மத்தியில் ஹைவேவிஸ் அணை உள்ளது. இந்த அணையில் தேக்கப்படும் நீர் மேல்மணலாறு வழியாக இரவங்கலாறு அணைக்குக் கொண்டு செல்லப்படுகிறது. ஹைவேவிஸ்ஸில் இருந்து 6 கி.மீ. தொலைவில் மேல்மணலாறு பகுதியில் வட்டப்பாறை என்ற இடம் உள்ளது. இங்கிருந்து வன விலங்குக் கூட்டங்களைக் கண்டு களிக்கலாம். இதற்கு அருகில் வெண்ணியாறு அணை, எக்கோ பாயின்ட் ஆகிய இடங்கள் உள்ளன.
ஹைவேவிஸ்ஸில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள இரவங்கலாறு அணையில் ஆண்டு முழுவதும் தண்ணீர் தேங்கியிருக்கும். ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு அணைகளில் இருந்து இரவங்கலாறு அணைக்குத் தண்ணீர் கொண்டு வரப்பட்டு, சுருளி மின் உற்பத்தித் திட்டத்திற்குக் குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இரவங்கலாறு அணை அருகில் இரவங்கலாறு அருவி உள்ளது. இந்த அருவியில் ஆகஸ்ட் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை நீர்வரத்து இருக்கும்.

முனைவர் நா.இளங்கோ - லியாகத் அலி

முனைவர் நா.இளங்கோ - மேகமலை

மேகமலை

மேகமலைப் பயணம்
மேகமலைப் பயணத்தில் நானும் நண்பர் லியாகத் அலியும் உடன் வந்த பேராசிரியர் பழனிவேலு மற்றும் ஓட்டுநர் சித்திக் நால்வரும் இயற்கை அழகை ரசிப்பதோடு மட்டுமல்லாமல் அங்கே தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்களோடும் கொஞ்சம் அளவளாவினோம்.
மேகமலையின் தேயிலைத் தோட்டங்கள் தொடக்கத்தில் லிப்டன் கம்பெனி வசம் இருந்தன. அப்போது தொழிலாளர் களுக்குத் தேவையான மருத்துவம், கல்வி, குடிநீர், சாலைப் போக்குவரத்து முதலான அனைத்து வசதிகளையும் கம்பெனி நிர்வாகமே செய்து வந்தது.
பின்னர் நிர்வாகம் பல கைகளுக்கு மாறிவிட்டன. இந்த நிர்வாக மாற்றங்களால் தொழிலாளர்கள் அடிப்படை வசதிகளுக்கே திண்டாட வேண்டிய நிலைமையாகி விட்டது. இப்போது எல்லாவற்றிற்கும் அரசை எதிர்ப்பார்க்க வேண்டிய அவல நிலை. நீண்ட போராட்டத்திற்குப் பின் மொத்தம் உள்ள 48 கிமீ மலைப் பாதையில் சுமார் 35 கிமீ சாலை இப்போதுதான் சீரமைக்கப்பட்டுள்ளது என அறிந்தோம்.
மேகமலையில் சிஎஸ்ஐ நடத்தும் அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளி ஒன்றிற்கு நாங்கள் நால்வரும் சென்றிருந்தோம். தலைமை ஆசிரியை முத்துமணி, இந்தப் பள்ளியில் மிகக் குறைந்த அளவிலேயே பிள்ளைகள் படிப்பதாகச் சொன்னார். அந்தப் பகுதி தொழிலாளர் குடியிருப்பில் சுமார் 200 குடும்பங்கள் இருந்தும் அவர்களில் பல பிள்ளைகள் படிக்க வருவதில்லை என்றே தெரிகிறது.
இந்த இடத்தில் தோழர் லியாகத் அலியின் பின்வரும் பதிவைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்
-----------------------------------------------------------
இந்த குழந்தைகளுக்கும் சேர்த்துத்தான் ஐந்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என்கிறார்கள் மேதாவிகள்.
இன்னும் கல்விக்குச் சலுகை காட்ட வேண்டிய நிலை இங்கிருக்க, 25 மாணவர்களுக்குக் குறைவாக இருக்குற பள்ளிக்கூடத்தை மூடுங்கிறியே, அப்படி செஞ்சா இந்த பயபுள்ளைக எந்த இன்டர்நேஷனல் ஸ்கூலுக்குப் போகும்.
---------------------------------------------------------------
முனைவர் நா.இளங்கோ - மேகமலை பள்ளிச் சிறார்களுடன்

மேகமலைக் குடியிருப்பு

மேகமலை

மேகமலையில் சிஎஸ்ஐ (CSI) நடத்தும் அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளி ஒன்றிற்கு நாங்கள் சென்றிருந்தோம். தலைமை ஆசிரியை இந்தப் பள்ளியில் மிகக் குறைந்த அளவிலேயே பிள்ளைகள் படிப்பதாகச் சொன்னார். அந்தப் பகுதியில் தொழிலாளர் குடியிருப்பில் சுமார் 200 குடும்பங்கள் இருந்தும் அவர்களில் பல பிள்ளைகள் படிக்க வருவதில்லை என்றே தெரிகிறது.
அங்கே வகுப்பறையில் அமர்ந்திருந்த குழந்தைகளோடு கொஞ்சநேரம் பேசினோம். அவர்களுக்குத் தெரிந்த கதை, பாடல்களைக் கேட்டு மகிழ்ந்தோம்.
ஒரு பாடல் பாடுங்கள் என்று நான் கேட்டவுடனே குழந்தைகள் குழுவாக ஔவையாரின் "சாதி இரண்டொழிய வேறில்லை" என்ற பாடலைப் பாடினார்கள். (காணொலி இணைத்துள்ளேன்) வேறென்ன சொல்ல.. மகிழ்ச்சி.. மிக மகிழ்ச்சி...
நாளைய இந்தியா இவர்கள்தான்.
இங்கே இரண்டே சாதிதான்.
கல்வி கொடுப்பவர் பெரியோர்.
தடுப்பவர் இழிகுலத்தார்..


முனைவர் நா.இளங்கோ - மேகமலை பள்ளிச் சிறார்களுடன்

முனைவர் நா.இளங்கோ - மேகமலை பள்ளிச் சிறார்களுடன்

ஜென்ஜாரோம் "தொங் ஜென் புத்த ஆலயம் - மலேசியா

ஜென்ஜாரோம் தமிழ்ப்பள்ளிக்குச் சிறப்பு விருந்தினர்களாக எங்களை அழைத்துச் சென்ற இனிய நண்பர் பொன்.பெருமாள் அடுத்ததாக எங்களுக்குக் காண்பித்து மெய்மறக்கச் செய்த இடம் மலேசியா, சிலாங்கூர், ஜென்ஜாரோம் "தொங் ஜென் புத்த ஆலயம்".
இனிய நண்பர்கள் முனைவர் இரத்தின.வேங்கடேசன், பொன்.பெருமாள் இவர்களோடு முனைவர் நா.இளங்கோ. 23-04-2019

முனைவர் நா.இளங்கோ - இரத்தின வேங்கடேசன் - ஜென்ஜாரோம்

முனைவர் நா.இளங்கோ - பொன்.பெருமாள் - ஜென்ஜாரோம்

முனைவர் நா.இளங்கோ - ஜென்ஜாரோம்

முனைவர் நா.இளங்கோ - புத்தர் ஆலயம், ஜென்ஜாரோம்

முனைவர் நா.இளங்கோ - இரத்தின வேங்கடேசன் - ஜென்ஜாரோம்

மலேசிய சிலாங்கூர் மாவட்டம் ஜென்ஜாரோமில் 26 ஏக்கர் பரப்பளவில் தொங்ஜென் புத்தர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கட்டப்பட்ட ஆண்டு 1994. Dong Zen (தொங் ஜென்) என்பதற்கு "கிழக்கின் அமைதியான மனம்" என்பது பொருளாகும்.
இவ்வாலயம் தென் கிழக்கு ஆசியாவின் மிக முக்கியமான பௌத்த ஆய்வு மையமாகவும் பௌத்தம் சார்ந்த வரலாறு மற்றும் கலைகளின் காட்சிக் கூடமாகவும் அமைந்துள்ளது. இவ்வளாகத்தில் அமைந்துள்ள லும்பினி தோட்டமும் பெளத்தச் சிற்பங்களும் தனிச் சிறப்பு பெற்றவைகளாகும்.
இவ்விடத்தை ஆலயம் என்பதா? அழகான தோட்டம் என்பதா? சிற்பக் கலைக்கூடம் என்பதா? ஆவணக் காப்பகம் என்பதா? பௌத்தக் கல்வி ஆய்வு வளாகம் என்பதா? வியப்பில் ஆழ்த்தியது தொங் ஜென் ஆலயம்.
அன்பு நண்பர் பொன்.பெருமாளுக்கு நன்றி! 23-04-2019

முனைவர் நா.இளங்கோ - புத்தர் ஆலயம், ஜென்ஜாரோம்

முனைவர் நா.இளங்கோ - புத்தர் ஆலயம், ஜென்ஜாரோம்

முனைவர் நா.இளங்கோ - புத்தர் ஆலயம், ஜென்ஜாரோம்

புத்தர் ஆலயம், ஜென்ஜாரோம்

தொங் ஜென் புத்த ஆலயம் (மலேசியா, சிலாங்கூர், ஜென்ஜாரோம்) 23-04-2019.
புத்தர் ஆலயம், ஜென்ஜாரோம்

புத்தர் ஆலயம், ஜென்ஜாரோம்

ஜென்ஜாரோம் தமிழ்ப்பள்ளி - இலக்கிய நிகழ்ச்சி. 23-04-2019

கோலாலம்பூர் இனிய நண்பர் பொன்.பெருமாள் ஏற்பாட்டில் மலேசியா, சிலாங்கூர் கோலாலங்காட் ஜென்ஜாரோம் தமிழ்ப்பள்ளியில் தலைமை ஆசிரியர் கணேஷ் இராமசாமி தலைமையில், முனைவர் நா.இளங்கோ, முனைவர் இரத்தின.வேங்கடேசன் இருவரும் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்ற இலக்கிய நிகழ்ச்சி. (23-04-2019 முற்பகல்)


முனைவர் நா.இளங்கோ - மலேசியா தமிழ்ப் பள்ளி


முனைவர் நா.இளங்கோ - மலேசியா தமிழ்ப் பள்ளி

முனைவர் நா.இளங்கோ - மலேசியா தமிழ்ப் பள்ளி

முனைவர் நா.இளங்கோ - மலேசியா தமிழ்ப் பள்ளி

முனைவர் நா.இளங்கோ - மலேசியா தமிழ்ப் பள்ளி


மலேசியா, சிலாங்கூர் ஜென்ஜாரோம் தமிழ்ப்பள்ளியில் முனைவர் நா.இளங்கோ, முனைவர் இரத்தின.வேங்கடேசன் இருவரும் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்ற இலக்கிய நிகழ்ச்சியில் ஸ்ரீதுர்காசினி, நான்காம் வகுப்பு மாணவியின் சுவையான தமிழ்ப் பேச்சு. (23-04-2019 முற்பகல்)
(நல்லதோர் வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த இனிய நண்பர் பொன்.பெருமாள் ஐயாவுக்கு நன்றி!)

முனைவர் நா.இளங்கோ - மலேசியா தமிழ்ப் பள்ளி

மலேசியா தமிழ்ப் பள்ளி

சிலோசா கோட்டை - சென்தோசா தீவு சிங்கப்பூர். (22-04-2019)

முனைவர் நா.இளங்கோ

சிலோசா கோட்டை - சென்தோசா தீவு
சிங்கப்பூர். (22-04-2019)
இந்த ஆண்டு சிங்கப்பூர் பயணத்தில் சிலோசா கோட்டை மற்றும் அதன் அருங்காட்சியகத்தைப் பார்க்கும் வாய்ப்பினை இனிய நண்பர் இரத்தின வேங்கடேசன் ஏற்படுத்தித் தந்தார். எங்களோடு முனைவர் இரத்தின. வேங்கடேசன் துணைவியார் தமிழ்மாலை மற்றும் மகன் தமிழ்மாறன் இருவரும் வந்தனர்.
சென்தோசா சிங்கப்பூரின் தெற்கு முனையில் உள்ள ஒரு குட்டித் தீவு ஆகும். இத்தீவின் பழைய பெயர் "புலாவ் பெலகாங் மாடி" இப்பெயரின் பொருள் மரணத் தீவு என்பதாகும். இப்பொழுது அமைதித் தீவு என்று பொருள்படும் "சென்தோசா" என்று பெயர் மாற்றம் செய்யப் பட்டுள்ளது.
தொடக்கத்தில் இத்தீவு பிரிட்டிசாரின் இராணுவத் தளமாகவும் பின்னர் இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானிய போர்க்கைதிகளின் முகாமாகவும் இருந்தது 1972 முதல் இத்தீவு ஒரு சுற்றுலாத் தளமாக மாற்றம் பெற்றது. இன்றைக்கு சிங்கப்பூர் சுற்றுலா மிக முக்கிய அங்கமாக சென்தோசா தீவு வளர்ச்சி பெற்றுள்ளது.
சென்தோசா தீவில் உள்ள சிலோசா கோட்டையை அடைய தற்போது மிதக்கும் பாலத்தை அமைத்துள்ளனர். அந்தப் பாலத்தில் நடந்து கோட்டையை அடைவதே ஒரு மகிழ்ச்சியான அனுபவம்
முனைவர் நா.இளங்கோ - சிங்கப்பூர் சிலோசா கோட்டை

முனைவர் நா.இளங்கோ - சிங்கப்பூர் சிலோசா கோட்டைமுனைவர் நா.இளங்கோ - சிங்கப்பூர் சிலோசா கோட்டை

சிங்கப்பூர் சிலோசா கோட்டை

சிலோசா கோட்டை - சிங்கப்பூர் (22-04-2019)
செந்தோசாவின் அடையாளங்களில் மிக முக்கியமானது இத்தீவில் உள்ள சிலோசா கோட்டை. சிலோசா என்ற சொல்லுக்குப் பாறை என்பது பொருள். சிலோசா கோட்டை 1874இல் கட்டப்பட்டது.
இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிசாரின் ஜப்பானியர்களுக்கு எதிரான இராணுவத் தாக்குதல் கோட்டையாகவும் ஆயுதக் கிடங்காகவும் இருந்த சிலோசா கோட்டை தற்போது 1974 முதல் இரண்டாம் உலகப் போரின் அடையாளங்களைச் சுமந்த போர் நினைவிடமாக மாற்றம் பெற்றுள்ளது. போரில் பயன்படுத்தப் பெற்ற பீரங்கிகள் மற்றும் துப்பாக்கிகள் இங்கே காட்சிப் படுத்தப் பட்டுள்ளன. ஏழு அங்குலத் துப்பாக்கிகள் முதல் 19 அங்குலத் துப்பாக்கிகள் இங்கே இடம் பெற்றுள்ளன.


முனைவர் நா.இளங்கோ - சிங்கப்பூர் சிலோசா கோட்டை

சிங்கப்பூர் சிலோசா கோட்டை

முனைவர் நா.இளங்கோ - சிங்கப்பூர் சிலோசா கோட்டை

முனைவர் நா.இளங்கோ - சிங்கப்பூர் சிலோசா கோட்டை


செந்தோசாவின் அடையாளங்களில் மிக முக்கியமானது சிலோசா கோட்டையும் அதன் போர் நினைவு அருங்காட்சியகமும். எளிதில் பார்க்க முடியாத இரண்டாம் உலகப் போரின் போர்த் தளவாடங்களும் பீரங்கிகளும் அரிய புகைப்படங்களும் இந்த அருங்காட்சி யகத்தில் இடம்பெற்றுள்ளன.

முனைவர் நா.இளங்கோ - சிங்கப்பூர் சிலோசா கோட்டை

 சிங்கப்பூர் சிலோசா கோட்டை

சிங்கப்பூர் சிலோசா கோட்டை

சிங்கப்பூர் சிலோசா கோட்டை

சிங்கப்பூர் சிலோசா கோட்டை

புலவர் பூங்கொடி பராங்குசம் அவர்களின் இலக்கியக்களம் - நூல் அணிந்துரை

  முனைவர் நா . இளங்கோ கவிதை இரசனை , இது படைப்புக்கு இணையானதோர் முருகியல் செயற்பாடு . என்றைக்குக் கவிதைகள் தோன்றினவோ அன்றைக்கே கவ...