ஊடக அரசியலை முன்வைத்து..
முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8
மனித உரிமை என்பது, எல்லா மனிதர்களுக்கும் உரித்தான அடிப்படை உரிமைகளும் சுதந்திரங்களும் ஆகும். இனம், சாதி, நிறம், சமயம், பால், தேசியம், வயது ஆகியவற்றுக்கு அப்பால் ஒவ்வொரு தனி மனிதருக்கும் இருக்கும் இந்த அடிப்படை உரிமைகள், மனிதர் சுதந்திரமாக, சுமுகமாக, நலமாக வாழ அவசியமான உரிமைகளாகக் கருதப்படுகின்றன. மனிதர்களுக்கு மனித உரிமைகள் மிகவும் முக்கியமானவைகளாகக் கருதப்படுவதால் சில நேரங்களில் மனித உரிமைகளை அடிப்படை உரிமைகள் என்றும், இயற்கை உரிமைகள் என்றும், பிறப்புரிமைகள் என்றும், நாம் அழைக்கின்றோம்.
மனித உரிமைகள் என்பன யாராலும் உருவாக்கப்பட்டதல்ல, அதுபோல் மனித உரிமைகள் எவராலும் வழங்கப்பட்டனவுமல்ல. எனவேதான் மனித உரிமைகள் எவராலும் பறிக்கப்பட முடியாத உரிமைகள் என அறிஞர்களால் அழைக்கப்படுகின்றன. மனிதனாகப் பிறந்த காரணத்தினால், ஒருவனுக்கு இயற்கையிலேயே உடன் பிறந்த உரிமைகள் மனித உரிமைகள். இந்த உரிமைகள் எந்த ஒரு சமுதாயத்தினாலோ, அரசினாலோ அரசியல் அதிகார அமைப்புகளினாலோ உருவாக்கப்பட்டதல்ல. அதனால்தான் எந்த ஒரு அரசிற்கும், அதிகார அமைப்பிற்கும் மனித உரிமைகளை மீறுவதற்கான அதிகாரம் அளிக்கப்படவில்லை.
ஐ.நா. பொதுச்சபை 10-12-1948 அன்று மனித உரிமைகள் பற்றிய சர்வ தேசியப் பிரகடனத்தை நிறைவேற்றி வெளியிட்டது. அதில் விவரிக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் பட்டியல், ‘எல்லா நாடுகளுக்கும் எல்லா மனிதருக்கும் பொதுவான மனித உரிமையின் எட்டப்பட வேண்டிய இலக்கினைக் குறிப்பிடுகின்றது. இப்பிரகடனத்தின் உலகளாவிய சரித்திரப் புகழ் காரணமாகவே அவ்வறிக்கை வெளியிடப்பட்ட டிசம்பர் 10 ஆம் நாளை நாம் உலக மனித உரிமைகள் நாளாகக் கொண்டாடி வருகிறோம்.
ஐ.நா. பொதுச்சபையின் சர்வ தேசியப் பிரகடனம் வழங்கும் மனித உரிமைகள் அனைத்துமே சமமான முக்கியத்துவம் உடையவை. அவ்வுரிமைகளில் எவ்வகைப்பட்ட ஏறு வரிசைகளோ இறங்கு வரிசைகளோ கிடையா. மேலும் ஐ.நா. பிரகடனம் மனித உரிமைகளை எவ்வகையிலும் வகைப்படுத்திக் கூறவில்லை. ஆயினும் மனித உரிமைகளை நாம் பின்வரும் வகைப்பாடுகளுக்குள் பொருத்திப் பார்க்கலாம்.
1. குடியியல் உரிமைகள்
2. அரசியல் உரிமைகள்
3. பொருளாதார உரிமைகள்
4. சமூக உரிமைகள்
5. பண்பாட்டு உரிமைகள்
என்கின்ற இந்த வகைப்பாடுகளுக்குள் இடம்பெறும் அனைத்து உரிமைகளையும் பெற்று வாழ ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உரிமையுண்டு. இவ்வுரிமைகள் அனைத்துமே ஒவ்வொரு மனிதனுக்கும் உரிய பிறப்புரிமை ஆகும்.
ஐ.நா. பொதுச்சபையின் சர்வ தேசியப் பிரகடனத்தின்படி ஒவ்வொரு தனிமனிதர்க்கும் உறுதி செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளில் முக்கியத்துவம் வாய்ந்த சில உரிமைகள் பின்வருமாறு:
1. உயிர் வாழ்வதற்கான உரிமை
2. சமத்துவ உரிமை,
3. சுதந்திரமாக வாழும் உரிமை,
4. சட்டத்திற்கு முன் சமமாக நடத்தப்படுவதற்கான உரிமை
5. கருத்துகளை வெளியிட உரிமை
6. வாக்களிப்பதற்கான உரிமை
7. அரசியல் பங்கேற்புக்கான உரிமை
8. வேலைக்கான உரிமை
9. கல்வி பெறுவதற்கான உரிமை
10. சமூகப் பாதுகாப்புக்கான உரிமை
11. சுகாதாரப் பாதுகாப்புக்கான உரிமை
12. பாலியல் சமத்துவத்திற்கான உரிமை
2. சமத்துவ உரிமை,
3. சுதந்திரமாக வாழும் உரிமை,
4. சட்டத்திற்கு முன் சமமாக நடத்தப்படுவதற்கான உரிமை
5. கருத்துகளை வெளியிட உரிமை
6. வாக்களிப்பதற்கான உரிமை
7. அரசியல் பங்கேற்புக்கான உரிமை
8. வேலைக்கான உரிமை
9. கல்வி பெறுவதற்கான உரிமை
10. சமூகப் பாதுகாப்புக்கான உரிமை
11. சுகாதாரப் பாதுகாப்புக்கான உரிமை
12. பாலியல் சமத்துவத்திற்கான உரிமை
மனித உரிமைகள் என்பன தனி மனிதர்களின் வாழ்வுரிமை, சுதந்திரம், சமத்துவம் ஆகிய மூன்று அம்சங்களையும் பேணிப் பாதுகாப்பதைத் தம் அடிப்படை இலக்காகக் கொண்டுள்ளன. இந்திய அரசியலமைப்புச் சட்டமும் சர்வதேசிய மனித உரிமைப் பிரகடனத்தின் அனைத்து அடிப்படை மனித உரிமை அம்சங்களையும் உள்வாங்கியே உருவாக்கப் பட்டுள்ளது.
இந்தியாவில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான முதன்மையான கொள்கைத் திட்டத்தை 1993-ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம்தான் நிறைவேற்றித் தந்துள்ளது. இந்த மனித உரிமைப் பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையிலேதான் நம் நாட்டில் தேசிய மனித உரிமை ஆணையம் (National Human Rights Commission) அமைக்கப்பட்டது. அரசு அல்லது அரசின் கீழுள்ள அமைப்புகள் மனித உரிமைகளைப் பறிக்க முயலும்போதும் மீறுகிற போதும் ஆணையம் அந்த விவகாரத்தில் தலையிடும். அது தானாகவோ, பாதிக்கப்பட்டவரின் புகார் அடிப்படையிலோ விசாரணை மேற்கொள்ளும். மனித உரிமைகள் தொடர்பான அரசியல் சட்டங்கள் சரிவர நிறைவேற்றப் படுகின்றனவா என்பதனை ஆராயவும் உரிய தீர்வுகளைப் பரிந்துரைக்கவும் ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு.
இந்தியா தன் அரசியல் அமைப்புச் சட்டத்திலேயே மனித உரிமைகளுக்கு உரிய பாதுகாப்பினை வழங்கியிருந்தாலும் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றி யிருந்தாலும் தேசிய, மாநில மனித உரிமை ஆணையங்களை முறைப்படி அமைத்திருந்தாலும் இந்தியாவில் இன்றைக்கும் மனித உரிமை என்பது ஓர் ஏட்டுச் சுரைக்காயாகவே உள்ளது. குறிப்பாகக் கொலை, கொள்ளை, பயங்கரவாதம் முதலான குற்றங்களுக்காகக் கைது செய்யப்படும் குற்றம் சாட்டப்பட்டவர்களை என்கவுண்டர் என்ற பெயரில் கொன்று குவிக்கும் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
மத்திய உள்துறை அமைச்சகப் புள்ளி விவரத்தின்படி இந்தியாவில் கடந்த 2009–ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2013–ஆம் ஆண்டு பிப்ரவரி 15– ஆந்தேதி வரை பாதுகாப்புப் படைவீரர்கள், துணைப் பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் போலீசாரால் 555 போலி என்கவுண்டர் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகத் தேசிய மனித உரிமை ஆணையம் பதிவு செய்துள்ளது. இந்தியாவில் அதிக அளவிலான போலி என்கவுண்டர்கள் நடைபெற்றது உத்தரபிரதேச மாநிலத்திலாகும். அங்கு 138 போலி என்கவுண்டர்கள் அரங்கேறியுள்ளன. தமிழ்நாட்டில் 23 என்கவுண்டர்கள் மற்றும் மணிப்பூர் 62, அஸ்ஸாம் 52, மேற்கு வங்காளம் 35, ஜார்கண்ட் 30, சட்டீஷ்கர் 29, ஒடிஸா 27, ஜம்மு-கஷ்மீர் 26, மத்தியபிரதேசம் 20 என மாநில வாரியான என்கவுண்டர்களின் பட்டியல் நீண்டு செல்கிறது. போலி என்கவுண்டர் தொடர்பான பெரும்பாலான வழக்குகள் தேசிய மனித உரிமை கமிஷனின் தலையீட்டின் காரணமாகவே பதிவு செய்யப்பட்டுள்ளன என்று ஏசியன் செண்டர் ஃபார் ஹியூமன் ரைட்ஸின் இயக்குநர் சுஹாஸ் சக்மா தெரிவித்துள்ளார். (தகவல்: http://www.newindia.tv/tn/india/141-crime/)
கடந்த பதினைந்து ஆண்டுகளில் (1998- 2012) தமிழகத்தில் நடந்தேறிய காவல்துறை என்கவுண்டர்களின் பட்டியல் பின்வருமாறு,
· 1998: சென்னையில் நடந்த மோதலில், ரவுடி ஆசைத்தம்பி, அவரது கூட்டாளி .
· 2002: பெங்களூருவில் பதுங்கியிருந்த இமாம் அலி கூட்டாளிகள் ஐந்து பேர்.
· 2003: சென்னையில் வெங்கடேசப் பண்ணையார். அதே ஆண்டு சென்னையில் ரவுடி வீரமணி.
· 2004 அக். 18: சந்தனமரக் கடத்தல் வீரப்பன்.
· 2007 ஆக. 1: ஓசூர் அருகே வெள்ளை ரவி, கூட்டாளி குணா .
· 2008 ஏப். 11: தூத்துக்குடியைச் சேர்ந்த ரவுடி ஜெயக்குமார் அவரது கூட்டாளி. அதே ஆண்டு ஜூலை 11இல் ரவுடி பாபா. நவ.16 ஆம் தேதி, ஆறு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டுத் தலைமறைவாக இருந்த "கொர' கோபி என்ற கோபி.
· 2010 ஆம் ஆண்டு கோவையில் பள்ளிக் குழந்தைகளைக் கொலை செய்த கார் டிரைவர் மோகனகிருஷ்ணன்.
· 2010 நீலாங்கரைப் பகுதியில் திண்டுக்கல் பாண்டி உள்ளிட்ட இருவர்.
· 2012 பிப்., 23: சென்னை வேளச்சேரியில் வங்கிக் கொள்ளையர்கள் எனச் சந்தேகிக்கப்பட்ட ஐந்து பேர்.
· 2012 நவ., 30: திருப்பாச்சேத்தி எஸ்.ஐ., ஆல்வின் சுதன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி பிரபு, பாரதி சுட்டுக்கொலை.
(தகவல்: http://newsalai.blogspot.in/2012/12/blog-post_1704.html)
(தகவல்: http://newsalai.blogspot.in/2012/12/blog-post_1704.html)
மனித உரிமைகள் பற்றிய சர்வதேசியப் பிரகடனத்தின் கீழ்க்காணும் விதிகள் கவனத்தில் கொள்ளத்தக்கன. இவ்விதிகள் என்கவுண்டர்களோடு தொடர்புடையன.
விதி எண்-3:
ஒவ்வொருவருக்கும் வாழும் உரிமை, சுதந்திரம், தமக்கான பாதுகாப்பு ஆகிய உரிமைகள் உண்டு.
விதி எண்-5:
யாரையும் சித்திரவதைக்கோ, கொடுமையான மனித நேயமற்ற முறையில் அவமானபடுத்தவோ தண்டனைக்கு ஆட்படுத்தவோ கூடாது
விதி எண்-6:
சட்டத்தின்முன் ஒரு மனிதனாக நடத்தப்படும் உரிமை எங்கும் எவருக்கும் உண்டு.
விதி எண்-11:
குற்றம் சாட்டப்பட்ட எவருக்கும் விசாரணைப்படி குற்றம் நிரூபிக்கப்படாதவரை நிரபராதி என்றுதான் கொள்ளப்பட வேண்டும் என்ற உரிமை உண்டு.
சர்வதேசியப் பிரகடனத்தின் மேற்சொன்ன விதிமுறைகள் குற்றம் சாட்டப்பட்டவர் களுக்கான மனித உரிமைகளைத் தெளிவாக வரையறுக்கின்றன. மேலும் “சட்டத்தினால் உருவாக்கப்பட்ட நடைமுறைகளை மீறி வேறு எந்த வகையிலும் ஒரு நபரின் உயிரைப் பறித்தல் கூடாது” (விதி எண்: 21) என்று இந்திய அரசியலமைப்புச் சாசனமும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் மனித உரிமைக்கு மதிப்பளிக்கும் வகையில் விதியினை வரையறுத்துள்ளது. மனித உரிமையின் அடிப்படை உரிமைகளில் இதுவும் ஒன்று என்பதோடு அல்லாமல், இதுவே பிரதானமான உரிமையாகவும் கருதப்படுகிறது. ஆனால் நடைமுறையில் இவ்வகை மனித உரிமைகள் பெரும்பாலும் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை என்பதோடு வேண்டுமென்றே திட்டமிட்டு என்கவுண்டர் என்ற போர்வையில் மீறப்படுகின்றன என்பது மனித உரிமை ஆர்வலர்களின் குற்றச்சாட்டாகும்.
சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றுவதற்காகவும் வன்முறையில் ஈடுபடுகிறவர்களை ஒடுக்குவதற்காகவுமே இவ்வகை என்கவுண்டர்கள் நிகழ்த்தப்படுகின்றன என்று அரசும் காவல்துறையும் இந்நிகழ்வுகளை நியாயப்படுத்தினாலும் சட்டத்தின் அடிப்படையில் இவை மிகக்கொடிய மனித உரிமை மீறல்களாகும். காவல்துறையின் என்கவுண்டர் மரணங்களால் பல உண்மைகள் மக்கள் சமூகத்திற்குத் தெரியாமல் போகிற ஆபத்து ஏற்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்லது குற்றத்தில் ஈடுபட்டவர்கள் உயிரோடு பிடிக்கப்பட்டுக் குற்றத்திற்கான காரணங்கள், பின்னணி உள்ளிட்ட பல உண்மைகளை மக்களுக்குத் தெரிவிக்கின்ற போதுதான் குற்றத்தைத் தடுப்பதற்கு அல்லது ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடமுடியும். அதனைத் தவிர்த்து, தங்கள் உயிரைத் தற்காத்துக் கொள்வதற்காகவும் பொது மக்களின் பாதுகாப்பிற்காகவும் என்கவுண்டர்கள் நடந்ததாகத் தொடர்ந்து காவல்துறையினர் பரப்புரை செய்து வருவது மனித உரிமைகளுக்கு விடப்படும் மிகப்பெரிய சவாலாகும்.
கடந்த 2012 அக்டோபர் மாதம் 30 ஆம் நாளன்று காவல்துறை, சார்பு ஆய்வாளர் ஆல்வின் சுதன் என்பவரைக் கொலை செய்ததாகக் குற்றஞ் சாட்டப்பட்ட மானாமதுரைப் பகுதியைச் சேர்ந்த பாரதி, பிரபு இருவரும் பின்னர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர் .இவ்விருவரையும் நீதிமன்ற விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது தப்பிவிட்டனர் என்றும் பின்னர் அவர்களைக் கண்டுபிடித்துக் கைது செய்ய முயன்றபோது ஏற்பட்ட மோதலில் தங்களைத் தற்காத்துக் கொள்ளக் காவல் துறையினர் முயன்றதில் பாரதி, பாலா இருவரும் நெஞ்சில் குண்டடிபட்டு மரணமடைந்தனர் என்றும் காவல்துறை அறிவித்தது.
இந்த என்கவுண்டர் குறித்துப் பேட்டியளித்த டி.எஸ்.பி.வெள்ளைத்துரை அவர்கள், “நாங்கள் மனிதர்களைக் கொல்வதில்லை. மிருகங்களைத்தான் வேட்டையாடுகிறோம். போலீஸ் தன் கடமையைச் செய்திருக்கிறது. மனிதர்களைத் துன்புறுத்தும் மிருகங்கள் இருக்கும்வரை இதுபோன்ற வேட்டை தொடரும்” என்று கூறியிருந்தார். (தகவல்: http://tamil.oneindia.in/news/2012/12/06/)
மிருகங்களைத்தான் வேட்டையாடுகிறோம் மனிதர்களை அல்ல என்ற டி.எஸ்.பியின் கூற்று மேலோட்டமாகப் பார்க்கும்போது நியாயம்போலத் தோன்றினாலும், விலங்கு, வேட்டை முதலான சொற்பயன்பாடுகள், அவர்கள் வாதத்தில் உள்ள உள்முரண்களை அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றன. வேட்டை தொடரும் என்ற காவல்துறையின் நிலைப்பாடு, நடைபெறும் என்கவுண்டர்கள் எதிர்பாராத நிகழ்வுகள் அல்ல என்பதனையும் அவை ஒரு தயாரிப்பு நிகழ்நிரலின் அடிப்படையில் நிகழ்த்தப்படுகின்றன என்பதனையும் சொல்லாமல் சொல்கின்றன.
சென்னை உயர்நீதி மன்றத்தின் மேனாள் நீதிபதி சந்துரு, ஒருமுறை காலச்சுவடு இதழுக்கு அளித்த சிறப்புப் பேட்டியின் ஒரு பகுதி வருமாறு,
கேள்வி: என்கவுண்டர்கள் தொடர்ந்து தமிழகத்தில் ஒரு பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. இது தொடர்பாக உங்களது அனுபவம் என்ன?
சந்துரு: தமிழகத்தில் என்கவுண்டர்கள் மிகப் பரவலாக நடத்தப்படுகின்றன. மக்கள் மத்தியில் விரைவான தீர்ப்பு வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. ஆனால் நீதித் துறையோ மிக மெதுவாகச் செயல்படுகிறது. எனவே என்கவுண்டர்கள் நியாயமான வையாக மக்களுக்குப் படுகின்றன. என்கவுண்டர் என்பது கொலை என்னும் எண்ணம் மக்களுக்குத் தெரிவதில்லை. என்கவுண்டரில் ஈடுபடும் போலீஸ் அதிகாரிக்குக் கதாநாயக அந்தஸ்து கிடைத்துவிடுகிறது. மனித உரிமை ஆணையம் என்கவுண்டரை ஒரு குற்ற வழக்காகப் பதிவு செய்து இதில் ஈடுபட்ட அதிகாரி தன்னை நிரூபித்துக்கொள்ள வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் நடைமுறையில் என்கவுண்டரில் ஈடுபட்ட அதிகாரிகளுக்குப் பரிசும் பாராட்டுமே கிடைக்கின்றன. இந்தியாவில் சட்டத்திற்கு உட்பட்டு இறந்தவர்களைவிட சட்டத்திற்கு உட்படாமல் இறந்தவர்களே அதிகம். அதாவது மரண தண்டனையில் இறந்தவர்களைவிட என்கவுண்டரில் இறந்தவர்கள் அதிகம். (http://www.kalachuvadu.com/issue-161/page40.asp)
மேனாள் உயர்நீதிமன்ற நீதிமதி சந்துரு அவர்களின் பேட்டியில் கவனிக்கத் தக்க தகவல்கள் பல. ஒன்று: என்கவுண்டர்கள் கொலையே. அதனைக் குற்றவழக்காகப் பதிவு செய்யவேண்டும். இரண்டு: என்கவுண்டரில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளுக்குக் கதாநாயக அந்தஸ்தும் பரிசும் பாராட்டும் கிடைக்கின்றன. மூன்று: இந்தியாவில் மரண தண்டனையில் இறந்தவர்களைவிட என்கவுண்டரில் இறந்தவர்கள் அதிகம்.
நீதிபதி சந்துரு அவர்கள் குறிப்பிடும் என்கவுண்டரில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளுக்குக் கதாநாயக அந்தஸ்து என்பது கூர்ந்து கவனிக்கத்தக்க தகவலாகும்.
ஒரு குறிப்பிட்ட என்கவுண்டர் நிகழ்வின்போது, அந்நிகழ்வினை மக்களுக்குக் கொண்டு செல்லும் பணியில் முக்கியப் பங்காற்றுவன ஊடகங்களே. அச்சு ஊடகமோ, காட்சி ஊடகமோ மக்களுக்கு அந்தத் தகவலை ஊடகங்கள்தாம் சொல்கின்றன. என்கவுண்டர்கள் குறித்தான ஊடகங்களின் நிலைப்பாடு என்பது பொதுவில் அரசு மற்றும் அதிகாரத்தின் நிலைப்பாடாகவே இருக்கின்றது. அரசு மற்றும் அதிகாரத்தின் காவலர்களாகக் கட்டமைக்கப் பட்டிருக்கும் காவல்துறையின் என்கவுண்டர்கள் அவர்களின் மொழியிலேயே ஊடகங்களுக்குச் சொல்லப்படுகின்றன. ஊடகங்கள் அந்தத் தகவல்களைத் தங்களுக்கான கதையாடல் மொழியில் மக்களுக்கு விவரிக்கின்றன. வெகுஜன உளவியலைக் கட்டமைக்கும் ஊடகங்களின் அரசியல் இங்கேதான் தொடங்குகிறது.
ஊடகங்கள் செய்திகளை ஒரு கதையாகத் தருகின்றன. நிகழ்வுகளின் அல்லது தகவல்களின் பன்முகத் தன்மை மறைக்கப்பட்டுத் தொடக்கம், வளர்ச்சி, முடிவு என்று நேர்க்கோட்டுப் பார்வையில் கதைகள் வடிவமைக்கப் படுகின்றன. இந்தக் கதையாடலில் பல தகவல்கள் விடுபட்டுப் போவதும் சுவாரஸ்யத்திற்காகப் புதிய புதிய விஷயங்கள் இணைக்கப்படுவதும் தவிர்க்க முடியாததாகின்றன. தமிழகத்தில், இந்தியாவில் மட்டுமன்று உலகம் முழுவதும் ஊடகங்களிடையே இத்தகைய போக்குக் காணப்படுகிறது. செய்தித்தாள்களும் பத்திரிக்கைகளும் இத்தகு கதையாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றன.
இத்தகு கதையாடலின் வழி ஊடகங்கள் சொல்லும் என்கவுண்டர் கதைகளில் காவல்துறை அதிகாரிகளே கதாநாயகர்கள். குற்றச்சாட்டுக்கு உள்ளான, குற்றம் நிரூபிக்கப்படாத கைதிகளே வில்லன்கள். என்கவுண்டர்களே சுபமான முடிவு என்ற நேர்க்கோட்டில் ஊடகங்களின் கதைகள் முன்மொழியப் படுகின்றன. இந்த என்கவுண்டரை மக்கள் வரவேற்கிறார்கள். கொல்லப்பட்டவர்கள் யாரும் மகான்கள் அல்லர், பரிதாபப்பட. சட்டப்படி தண்டிக்கக் காலம் கடக்கலாம், குற்றவாளி தப்பிக்கவும் வாய்ப்புண்டு எனவே என்கவுண்டர்களே சரியான தண்டனை, இதுவே நியாயம், இதுவே தர்மம் என்று மக்கள் இதனைக் கொண்டாடுகிறார்கள் என்றெல்லாம் பல கிளைக்கதைகளும் பின்இணைப்புகளும் ஊடகங்களால் சொல்லப்படுகின்றன.
ஊடகங்களைப் பொறுத்த மட்டில் அதிரடி ரிப்போர்ட்களும் பரபரப்புச் செய்திகளும் பகீர் தகவல்களும்தாம் அவற்றின் உயிர்நாடி. குற்றங்களும் கைதுகளும் என்கவுண்டர்களும் ஒரு ஆக்ஷன் படத்திற்கு இணையான விறுவிறுப்புடன் ஊடகங்களால் சொல்லப்பட்டதன் பின்னணியில் வெகுஜனங்களின் உளவியலைக் கட்டமைக்கும் நுண்ஊடக அரசியல் செயல்பாடும் வெகுநேர்த்தியாக நடந்தேறி விடுகிறது. குறிப்பாக, ஆட்சியாளர்கள் மிகப்பெரிய அரசியல் சிக்கல்களை எதிர்கொள்ளும் நேரங்களில் எல்லாம் ஊடகங்களின் இந்த அதிரடி ஆக்ஷன் கதைகள் மீண்டும் மீண்டும் நிகழ்த்தப்படும். விறுவிறுப்பாகப் புனையப்பட்ட ஒவ்வொரு கதையாடலையும் பின்நோக்கிப் புரட்டிப்பார்த்தால் அவை எல்லாமே கவனிப்பாரற்று வழியெங்கும் சிதறிக்கிடப்பதைக் காணலாம். மருத்துவ மாணவன் நாவரசு கொலைவழக்குத் தொடங்கி தர்மபுரி திவ்யா- இளவரசன் பிரச்சினை வரை எல்லாமே பரபரப்பாக நிகழ்த்தப்பட்ட கதையாடல்கள்தாம். இன்று அப்பிரச்சினைகளின் நிலை என்ன? எல்லாமே அப்படித்தான்.
என்கவுண்டர் நிகழ்வுகளிலும் நமது ஊடகங்களின் நிலைப்பாடு இதுதான். என்கவுண்டர்கள்தாம் நியாயமானவை என்றால் ஒரு தேசத்திற்குச் சட்டங்களும் நீதிமன்றங்களும் எதற்கு?. காவல்துறையினரின் கடமை குற்றவாளி என்று அவர்கள் சந்தேகிப்பவர்களைக் கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். கைது செய்யப்பட்டவர் குற்றவாளியா? நிரபராதியா? என்று முடிவெடுக்க வேண்டியது சட்டத்தின் அதாவது நீதிமன்றத்தின் கடமை. காவல்துறையினரே சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு என்கவுண்டர் எனும் பெயரில் மரணதண்டனை வழங்குவதும் அதனை நியாயப்படுத்தும் விதத்தில் ஊடகங்கள் பொதுக்கருத்தை உருவாக்குவதும் அப்பட்டமான மனிதஉரிமை மீறல்களாகும்.
என்கவுண்டர் என்ற பெயரிலான திட்டமிட்ட படுகொலைகளைக் கதாநாயகக் காவல்துறை அதிகாரிகளின் தனிப்பட்ட வீரதீரச் சாகசங்களாகக் காட்டி என்கவுண்டர்களை நியாயப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படங்கள் கடந்த இருபதாண்டுகளில் இந்திய – தமிழகச் சூழலில் வெகுவாக வரவேற்கப்படுகின்றன.
தர்மம் வெல்லும் பாவம் தோற்கும் என்ற அறமதிப்பீடுகளோடு வெளிவந்த கடந்த தலைமுறைத் திரைப்படங்களில் அறத்தின் அடையாளமாக நிற்கும் கதாநாயகனிடம் பாவத்தின் ஒட்டுமொத்த பிம்பமாகச் சித்திரிக்கப்பட்ட வில்லன்கள் தோற்பதும் திரைப்படக் கதையாடலின் உச்சத்தில் அவர்கள் திருந்தி மன்னிப்பு கேட்பதாகவோ காவல்துறை யினரிடம் ஒப்படைக்கப்பட்டு கைவிலங்கிடப் படுவதாகவோ திரைப்படங்களில் சித்தரிக்கப்படும். ஆனால் இந்தத் தலைமுறைத் திரைப்படங்களில் கதாநாயகன் தனக்கான அறத்தை நிலைநாட்டச் சட்டத்தைத் தானே தன் கையிலெடுத்துத் தனிமனிதனாகவே வில்லன்களைக் கொன்றுகுவிக்கிறான். கதாநாயகர்கள் காவல்துறை அதிகாரிகளாக இருக்கும் பட்சத்தில் வேலை இன்னும் எளிதாகிறது. துஷ்ட நிக்கிரகம் சிஷ்ட பரிபாலனம் என்பதற்கேற்ப அவனே குற்றவாளிக்கு மரணதண்டனை அளித்து உலகைக் காப்பாற்றுகிறான். கடந்த நூற்றாண்டின் எண்பதுகளில் வெளிவந்த தெலுங்கு இறக்குமதி ராஜசேகரின் இதுதாண்டா போலீஸ் தொடங்கி நரசிம்மா, வாஞ்சிநாதன், சாமி, காக்க காக்க, போக்கிரி, வேட்டையாடு விளையாடு, அஞ்சாதே, சிங்கம், துப்பாக்கி, ஹரிதாஸ் என என்கவுண்டர் கதாநாயகர்களின் திரைப்பட வரிசை நீண்டுகொண்டே போகிறது. என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் என்கிற சொல்லாடலைத் தமிழ்த்திரையில் அறிமுகப்படுத்தி அதை நியாயப்படுத்தியது கௌதம்மேனனின் காக்க காக்க திரைப்படம்தான். கௌதம் மேனனின் வேட்டையாடு விளையாடு படமும் இவ்வகையைச் சேர்ந்ததே.
திரைப்படங்களில் என்கவுண்டர்களைக் காவல்துறைக் கதாநாயகர்களின் பக்கம் நின்று நியாயப்படுத்தி, கைதட்டி ரசித்த அதே மனநிலையில்தான் மக்கள் நிஜவாழ்க்கையில் அப்பட்டமான மனித உரிமை மீறல்களாக நிகழ்த்தப்படும் திட்டமிட்ட கொடூர என்கவுண்டர்களையும் நியாயப்படுத்தி, கைதட்டாமல் ரசிக்கப் பழகிக் கொண்டார்கள். மரணம் எங்கு இயற்கையாக நிகழாமல் செயற்கையாக நிகழ்த்தப்படுகிறதோ அங்கே மனித உரிமை மீறல் நடக்கிறது என்பதே உண்மை. மனிதர்களுக்கு மரணம் இயற்கையாகத் தான் நிகழ வேண்டுமேயன்றிக் கொலையாக அன்று. ஒருவர் தன் உயிரைத் தானே மாய்த்துக் கொள்வதைக் கூடச் சட்டம் அனுமதிப்பதில்லை என்ற நிலையில் அடுத்தவர் உயிரைப் பறிக்கும் உரிமையை இவர்களுக்குக் கொடுத்தது யார்? என்று மனித உரிமை ஆர்வலர்கள் கேள்வி கேட்பது நியாயமானதுதானே!.
என்கவுண்டர்கள் குறித்த தேசிய மனித உரிமை ஆணையத்தின் வழிகாட்டுதல்களின் முக்கியமான பகுதிகள் பின்வருமாறு:
1. என்கவுண்டரை கொலையாகப் பாவித்து காவல்துறையினர் மீது கொலைவழக்கு (இந்தியத் தண்டனைச் சட்டம்: 302) பதிய வேண்டும். அவர்கள் தங்களைக் குற்றமற்றவர்கள் என நிரூபிக்க வேண்டும்.
2. கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களைச் சாட்சிகளாக விசாரிக்க வேண்டும். என்கவுண்டரில் ஈடுபட்டவருக்கு உடனடி பதவி உயர்வோ, பாராட்டோ வழங்கக் கூடாது.
3. எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுச் சம்பவம் நடந்த காவல் எல்லைக்கு வெளியே உள்ள காவல்துறையினர் விசாரிக்க வேண்டும்.
4. என்கவுண்டர் குறித்து ஆர்.டி.ஓ. விசாரனைக்குப் பதிலாக நீதிமன்ற விசாரனை நடத்தப்பட வேண்டும். தன்னாட்சி கொண்ட சிபிசிஐடி மற்றும் சிபிஐ தொடர் விசாரணை தேவை.
5. என்கவுண்டரில் இறந்தவர்களுக்காக இரங்கல் கூட்டம் நடத்துபவர்கள், மக்கள் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், நண்பர்கள், ஊர்க்காரர்கள் போன்றவர்களை விசாரணை என்ற பெயரில் சோதனை செய்வதும், உடல், மனரீதியாகச் சித்ரவதை செய்வதும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
தேசிய மனித உரிமை ஆணையத்தின் இந்த வழிகாட்டுதல்கள் பலசமயங்களில் மத்திய, மாநில அரசுகளால் முறையாகப் பின்பற்றப்படுவதில்லை என்பதோடு என்கவுண்டர்களோடு தொடர்புடைய காவல்துறை அதிகாரிகளுக்குப் பரிசும் பாராட்டும் ஆட்சியாளர்களால் வழங்கப்படுகின்றன. அதுமட்டுமன்றி இப்படிப்பட்ட என்கவுண்டர்களுக்கான எதிர்ப்பைப் பதிவுசெய்யும் மனித உரிமை ஆர்வலர்களின் நடவடிக்கைகளைக் குற்றங்களுக்கும் குற்றவாளிகளுக்கும் ஆதரவான நடவடிக்கை எனக் காவல்துறையும் ஆட்சியாளர்களும் ஊடகங்களும் வேண்டுமென்றே திட்டமிட்டுத் திரித்துக் கூறி வருகின்றன. மேலும் மனித உரிமை ஆர்வலர்களைப் பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் எனவும் அவர்கள் சித்தரிக்கத் தயங்குவதில்லை. திட்டமிட்ட இவ்வகைப் பொய்ப் பிரச்சாரங்களால்தாம் மனித உரிமைகள் என்ற கருத்தே பொதுமக்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது.
என்கவுண்டர் படுகொலைகளைத் தடுத்து நிறுத்தி மனிதஉரிமையின் மாண்பினைக் காக்க நாம் பின்பற்றவேண்டிய உடனடி நடவடிக்கைகள் பின்வருமாறு:
1. என்கவுண்டர்களை நியாயப்படுத்தும் நடுத்தர வர்க்கத்தினரின் தவறான அணுகுமுறை குறித்து அவர்களோடு விவாதிக்க வேண்டும். கிரிமினல்கள்தாமே கொல்லப்படுகிறார்கள் என்று அசட்டை கொள்ளும் அவர்களிடம் என்கவுண்டர்களின் உள் அரசியலை விளக்கிக் கூறவேண்டும்.
2. திரைப்படம், பத்திரிக்கை, சமூக வலைத்தள ஊடகத்துறையினரோடு கலந்துரை யாடல்களை நிகழ்த்தி மனித உரிமையின் பக்கம் அவர்களைக் கொண்டுவர முயலவேண்டும்.
3. மனித உரிமை ஆர்வலர்களை ஒருங்கிணைத்து வீரியமிக்க, என்கவுண்டர் எதிர்ப்பியக்கத்தை உருவாக்கிப் பேராட வேண்டும்.
4. தேசிய மனித உரிமை ஆணையம் 1996 நவம்பர் 5இல் வெளியிட்ட என்கவுண்டர்கள் குறித்தான வழிகாட்டுதல்களையும் அவ் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 2007 ஆகஸ்டு 8 இல் தமிழக அரசு உருவாக்கி அளித்துள்ள நெறிமுறைகளையும் தவறாது பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலிமையாக மனித உரிமை ஆர்வலர்கள் முன்னெடுக்க வேண்டும்.
துணைநின்ற நூல்கள்:
1. தமிழகத்தில் மனித உரிமைகள் மக்கள் கண்காணிப்பகம் – 1998-2000 தமிழ்நாடு மதுரை -2, 2000
2. மனித உரிமைகள் ஒரு அடிப்படை நூல் நாக.வேணுகோபால் (தமிழாக்கம்) நேஷனல் புக் டிரஸ்ட், புதுதில்லி, 2011
3. மீடியா உலகம் சுரேஷ்பால், தீபிகா, சென்னை, 1999
4 .கீற்று http://www.keetru.com/
- முனைவர் நா.இளங்கோ, தமிழ் இணைப் பேராசிரியர்