Sunday 21 November 2010

முத்தொள்ளாயிரம் -சில குறிப்புகள் -(பகுதி-2)

முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
பட்டமேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8

முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியர்:

முழுநூல் நமக்குக் கிடைக்காத காரணத்தால் முத்தொள்ளாயிர நூலின் ஆசிரியர் பற்றி ஏதும் அறியமுடியவில்லை. உரையாசிரியர்கள் பலரும் முத்தொள்ளாயிரத்தை மேற்கோள் காட்டும் சமயங்களில் கூட நூலாசிரியரின் பெயரைக் குறிப்பிடாமல், நூற்பெயரை மட்டுமே மீண்டும் மீண்டும் குறிப்பிடுவதை நோக்கும் பொழுது நூல் கிடைத்த காலத்திலேயே கூட நூலாசிரியர் பெயர் பற்றிய குறிப்பு கிடைக்காமல் போயிருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் வாயிலாக முத்தொள்ளாயிரத்தைப் பதிப்பித்த சேதுரகுநாதன் அவர்கள் தம் உரைநூலின் முன்னுரையில் முத்தொள்ளாயிரத்தின் நூலாசிரியர் யாராயிருக்கக் கூடும் என்று ஓர் ஒப்பியல் ஆய்வினை நிகழ்த்தி, முத்தொள்ளாயிர நூலுக்கும் கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி, திருஈங்கோய் மலை எழுபது ஆகிய இருநூல்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமைக் கூறுகள் பலவற்றையும் எடுத்துக்காட்டி, மேற்குறிப்பிட்ட இருநூல்களின் ஆசிரியராகிய நக்கீரதேவ நாயனாரே முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியராயிருத்தல் கூடும் என்று எழுதுகின்றார். சேதுரகுநாதன் காட்டிய ஒப்புமைப் பகுதிகள் உண்மையில் மிகுந்த வியப்பளிக்கக் கூடிய விதத்தில் ஒத்து அமைகின்றன என்றாலும் இக்கருத்தினை முடிந்த முடிபாக ஏற்றுக்கொள்ளுதல் எளிதன்று.

தமிழகத்தில் மூவேந்தர்களும் எந்தக் காலத்திலும் இணைந்து செயல்படாத ஒரு வரலாற்றுச் சூழலில் மூவேந்தர்களையும் ஒத்த நிலையில் இணைத்துப் பாட்டுடைத் தலைவர்களாக்கி ஓர் இலக்கியம் படைக்கவேண்டுமென்ற முத்தொள்ளாயிர ஆசிரியரின் பெருவிருப்பம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகள் உருவாக்கிக் காட்டிய ஒன்றுபட்ட தமிழகம் என்ற பாதையில் புதுநடை போட்ட பெருமை இந்நூலாசிரியருக்கு உண்டு. மூவேந்தர்களைக் குறிப்பிடும் போதும் அவர்களின் வெற்றியைக் குறிப்பிடும் போதும் பகைவர்கள் மற்றும் சிற்றரசர்களைக் குறிப்பிடும் போதும் வரலாற்று அடையாளங்கள் தோன்றாமல் பொதுப் பெயர்களையே கையாண்டு நூலை அமைத்துள்ள நூலாசிரியரின் திறம் அவரின் தமிழ்நிலப் பொதுநோக்கைப் புலப்படுத்துகின்றது.

மூவேந்தர்களும் வலிமையிழந்து அந்நியர் ஆட்சியில் கீழ்நிலை உற்ற காலத்தில் தமிழ் வேந்தர்களின் ஒற்றுமையை வலியுறுத்தும் நோக்கோடும் தமிழின எழுச்சியின் அடையாளமாகவும் முத்தொள்ளாயிரம் பாடப்பட்டிருக்க வேண்டும் என ஊகிக்க முடிகின்றது. முத்தொள்ளாயிரத்தில் இடம்பெற்றுள்ள, “மாறனை இன்தமிழால் யாம்பாடும் பாட்டு” (முத். பா.2), “பார்படுப செம்பொன் பதிபடுப முத்தமிழ் நூல்” (முத். பா.5), “தண்படா யானை தமிழ்நர் பெருமாற்கென்” (முத். பா.32) முதலான பகுதிகள் இக்கருத்திற்கு அரண் சேர்ப்பனவாக அமைந்துமை கண்கூடு.

நூலாசிரியர் சமயம்:

முத்தொள்ளாயிர நூலாசிரியர் யார்? என்பது தெரியவில்லை என்றாலும் அவரின் சமயம் இன்னது என்று அறிவதற்கான சான்று நூலில் வெளிப்படையாகவே அமைந்துள்ளது.

மன்னிய நாண்மீன் மதிகனலி யென்றிவற்றை
முன்னம் படைத்த முதல்வனைப் -பின்னரும்
ஆதிரையா னாதிரையான் என்றென் றயருமால்
ஊர்திரைநீர் வேலி யுலகு (முத். பா.1)

என்ற பாடல் கடவுள் வாழ்த்துச் செய்யுளாக முத்தொள்ளாயிரத்தில் அமைந்துள்ளது. இப்பாடல் ஆதிரையான் என்று சிறப்பிக்கப்படும் சிவபெருமானை வாழ்த்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால் இக்கடவுள் வாழ்த்துப்பாடலை நூலின் காப்புச் செய்யுளாகப் பாடிய முத்தொள்ளாயிர நூலாசிரியர் சைவ சமயத்தினர் என்பது வெளிப்படையாகிறது.

முத்தொள்ளாயிரத்தின் பாடுபொருள்:

பழந்தமிழ் மரபு, பாடுபொருளை அகம், புறம் என இரண்டாகப் பகுக்கின்றது. முத்தொள்ளாயிரமும் பழந்தமிழ் மரபைப் பின்பற்றி அகம், புறம் என்ற இரண்டு பொருண்மையிலேயே அமைந்து சிறக்கின்றது. இதில் புகழ், நாடு, நகர், திறை, எயில் கோடல், குதிரை மறம், யானை மறம், களம், பகைப்புலம் பழித்தல், வெற்றி என்ற பகுதியில் அமையும் பாடல்கள் அனைத்தும் புறம் சார்ந்த நிலையிலும், கைக்கிளை சார்ந்த பாடல்கள் அனைத்தும் அகம் சார்ந்த நிலையிலும் அமைந்துள்ளன.

புறம் சார்ந்த உள்ளடக்கங்களைக் கொண்டு எழுதப்பட்ட முத்தொள்ளாயிரப் பாடல்கள் பெரிதும் பழைய புறப்பொருள் மரபினைச் சார்ந்தே அமைகின்றன. பாடல்களின் வெளிப்பாட்டுப் பாங்கு முத்தொள்ளாயிரத்திற்கே உரிய தனிச்சிறப்போடு வெளிப்படுகின்றது. திணை, துறை முதலான பகுப்புகளின்றி உரிப்பொருளையே முதன்மைப்படுத்தித் திருவள்ளுவர் அகப்பாடல்களை அமைத்த நெறி போன்று முத்தொள்ளாயிர ஆசிரியர் திணை, துறைப் பகுப்புகளின்றி உரிப்பொருளையே முதன்மைப்படுத்திப் புறப்பாடல்களை அமைத்துக் காட்டுகின்றார். இப்புதிய மரபு முத்தொள்ளாயிரப் புறப்பாடல்களுக்குப் புதிய பரிமாணத்தைத் தருகின்றது.

முத்தொள்ளாயிரக் கைக்கிளைப் பாடல்கள்:

தற்போது கிடைத்துள்ள 130 முத்தொள்ளாயிரப் பாடல்களில் 85 பாடல்கள் கைக்கிளைப் பொருண்மையில் அமைந்துள்ளன. இக் கைக்கிளைப் பாடல்கள் புறத்திணையில் இடம்பெறும் பெண்பாற் கைக்கிளைப் பாடல்களாகும். ‘அங்கதப் பாட்டவற் றளவோ டொக்கும்’ என்ற தொல்காப்பியச் செய்யுளியல் 159 ஆம் நூற்பாவிற்கான உரையில் பேராசிரியர், ‘கைக்கிளைச் செய்யுள் முத்தொள்ளாயிரத்துட் போலப் பலவாயினும்’ என்று உரை எழுதியுள்ளமையை நோக்க இரண்டு உண்மைகள் புலனாகின்றன. அவை, கிடைக்காமல் போன முழு முத்தொள்ளாயிர நூலிலும் கைக்கிளைப் பாடல்கள் மிகுதி என்பதும் இவ்வகைப் பாடல்களைக் கைக்கிளை எனப்பாகுபாடு செய்வதே மரபு என்பதுமாகும்.

முத்தொள்ளாயிரக் கைக்கிளைப் பாடல்கள்,

காமப் பகுதி கடவுளும் வரையார்
ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர் (தொல். புறத். 28)

என்ற தொல்காப்பியப் புறத்திணையியல் பாடாண் திணை கூறும் கைக்களைப் பொருண்மை உடையது. இந்நூற்பா உரையில் நச்சினார்க்கினியர், “இக்காமப் பகுதி எழுதிணைக்குரிய காமமும், ‘காமஞ் சாலா இளமையோள் வயின்’ காமமுமன்றி இது வேறொரு காமமென்று கொள்க” என்கிறார். இவ்வுரையின் வழிப் பாடாண் திணைக் கைக்கிளை என்பது அகம் எழுதிணையின் முதலில் இடம்பெறும் கைக்கிளையோ, கைக்கிளைக் குறிப்போ அன்று என்பதும் இது வேறு ஒரு கைக்கிளை, அதாவது புறப்பொருள் கைக்கிளை என்பதும் பெறப்படும். எனவே, பெண்களின் காமப்பகுதியைக் கூறும் முத்தொள்ளாயிரக் கைக்கிளைப் பாடல்கள் புறப்பொருள் பெண்பாற் கைக்கிளைப் பாடல்களே என்பது பெறப்படும். நூற்பாவில் இடம்பெறும் ‘ஏனோர் பாங்கினும்’ என்பதற்கு விளக்கமளிக்கும் நச்சினார்க்கினியர், “கிளவித் தலைவனல்லாத பாட்டுடைத் தலைவனைக் கிளவித் தலைவனாகக் கூறுவனவும் கொள்க” என்பார். முத்தொள்ளாயிரக் கைக்கிளைப் பாடல்களில் சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்கள் பாட்டுடைத் தலைவர்களாக மட்டுமன்றிக் கிளவித் தலைவர்களாவும் வந்துள்ளமையைக் காணமுடியும்.

உலா போந்த மூவேந்தர்களைக் கண்டு, பருவப் பெண்கள் காமுற்றதாகப் புனையப்பட்டுள்ள முத்தொள்ளாயிரக் கைக்கிளைப் பாடல்கள் இடைக்காலத்தில் எழுந்த பல அகப்பொருள் சிற்றிலக்கியங்களுக்கு வித்தாக அமைந்தமை இப்பாடல்களின் தனிச் சிறப்பாகும். பக்தி இலக்கியங்கள் புனைந்து காட்டும் நாயக நாயகி பாவத்திலமைந்த கைக்கிளைப் பாடல்களுக்கும் முத்தொள்ளாயிரக் கைக்கிளைப் பாடல்களும் உள்ள தொடர்பு சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. முத்தொள்ளாயிரத்தின் காலத்தைச் சரியாக வரையறுத்தால் மட்டுமே இக் கைக்கிளை மரபைப் பக்தி இலக்கியங்களிடமிருந்து முத்தொள்ளாயிரம் பெற்றதா? அல்லது முத்தொள்ளாயிர இலக்கியத்திலிருந்து பக்தி இலக்கியங்கள் பெற்றனவா? என்பதை உறுதிப்படுத்த முடியும். எப்படியாயினும் இரண்டிலும் செயல்படும் அகப்பொருள் படைப்பாக்க உத்தி என்பது ஒன்றே.

முடிப்பாக:

இலக்கியச் சுவை மிகுந்த முத்தொள்ளாயிரப் பாடல்களின் நயத்தினை வியத்தலும், பண்பாட்டுச் செய்திகளைத் திரட்டலும், அணிநலன்களின் அழகை வெளிப்படுத்தலும் எனப் பல நிலைகளில் முத்தொள்ளாயிரப் பாடல் குறித்த திறனாய்வுகள் விரிக்கின் பெருகும் சிறப்புடையன. மாறாக, இக்கட்டுரை முத்தொள்ளாயிரம் குறித்த சில விளக்கங்களை முன்னோர் கருத்துக்களை ஒட்டியும் உறழ்ந்தும் முன்வைக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளது. அவை வருமாறு,

1. முத்தொள்ளாயிரம் எண் செய்யுள் என்று பாட்டியல் நூல்கள் குறிப்பிடும் சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது
2. தொள்ளாயிரம் என்ற எண்ணிக்கையால் பெயர் பெற்ற இலக்கிய வகைகளில் முத்தொள்ளாயிரமும் ஒன்று.
3. இந்நூல் விருந்து என்ற வனப்பு வகையால் பாடப்பட்டது.
4. முத்தொள்ளாயிரத்தின் பாடல் எண்ணிக்கை 2,700 அன்று.
5. முத்தொள்ளாயிரம் என்பது மூன்று வகையினதாகிய தொள்ளாயிரம் எனப் பொருள்படும்.
6. முத்தொள்ளாயிரம் வையாபுரிப்பிள்ளை அவர்கள் கருத்தின்படி கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாடப்பட்டிருக்கலாம்.
7. முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியர் நக்கீரதேவ நாயனாராக இருக்கலாம் என்ற சேதுரகுநாதன் அவர்களின் கருத்து ஆய்விற்குரியது.
8. தமிழ் வேந்தர்களின் ஒற்றுமையை வலியுறுத்தும் நோக்கத்தோடும் தமிழின எழுச்சியின் அடையாளமாகவும் முத்தொள்ளாயிரம் பாடப்பட்டிருக்க வேண்டும்.
9. முத்தொள்ளாயிர ஆசிரியர் சைவ சமயத்தைச் சேர்ந்தவர்.
10. பழந்தமிழ் மரபினை ஒட்டி அகம், புறம் என்ற பாடுபொருளைக் கொண்டுள்ளது இந்நூல்.
11. முத்தொள்ளாயிரக் கைக்கிளைப் பாடல்கள் தொல்காப்பியப் பாடாண் திணை கூறும் பெண்பாற் கைக்கிளை மரபினைச் சார்ந்தது.
12. பக்தி இலக்கிய நாயக நாயகி பாவத்திலமைந்த கைக்கிளைப் பாடல்களும் முத்தொள்ளாயிரக் கைக்கிளைப் பாடல்களும் ஒன்றோடொன்று தொடர்புடையன.

No comments:

Post a Comment

புலவர் பூங்கொடி பராங்குசம் அவர்களின் இலக்கியக்களம் - நூல் அணிந்துரை

  முனைவர் நா . இளங்கோ கவிதை இரசனை , இது படைப்புக்கு இணையானதோர் முருகியல் செயற்பாடு . என்றைக்குக் கவிதைகள் தோன்றினவோ அன்றைக்கே கவ...