முனைவர் நா.இளங்கோ
கவிதை இரசனை, இது படைப்புக்கு இணையானதோர் முருகியல் செயற்பாடு. என்றைக்குக் கவிதைகள் தோன்றினவோ அன்றைக்கே கவிதைகள் குறித்த இரசனையும் தோன்றிவிட்டது. படைப்பவன் இரசனையும் படிப்பவன் இரசனையும் ஒன்றுபடுவதுதான் கவிதை இரசனை என்பதில்லை, வேறுபடவும் செய்யும். கவிதைகளை இரசிப்பதில் பல சமயங்களில் படைப்பாளியை விஞ்சி விடுவான் சுவைஞன். சுவைஞனுக்கு இருக்கும் சுதந்திரம் மிகப்பெரிது. அவனுக்குள்ளே, வாசிக்கும் குறிப்பிட்ட அந்த ஒரு கவிதை மட்டுமன்று, அதன் முன்னர் பல நூறு ஆண்டுகளாய்த் தோன்றிய கவிதைகளும் அதன் இரசனைகளும் புதைபடிமங்களாகப் பொதிந்து கிடக்கின்றன. தமிழ் போன்ற மூவாயிரம் ஆண்டு மூத்த இலக்கிய இலக்கண வளங்கள் மிகுந்த செம்மொழியில் எழுதப்படும் கவிதைகளை வாசிக்கும் ஒரு சுவைஞனுக்கு அம்மொழியின் நீண்ட கவிதைப் பாரம்பரியமே ஒரு பெரும் பலம். தமிழுக்கு மூவாயிர ஆண்டுகாலக் கவிதைப் பாரம்பரியம் மட்டுமன்று கவிதையியல் பாரம்பரியமும் உண்டு. தொல்காப்பியச் செய்யுளியல், கவிதைப் படைப்பு பற்றிமட்டும் பேசவில்லை. கவிதை நுகர்வு குறித்தும் விரிவாகப் பேசுகின்றது. தொல்காப்பியர் குறிப்பிடும் நோக்கு என்னும் செய்யுள் உறுப்பு, இன்றைய இலக்கிய இரசனை, இலக்கிய மதிப்பீடு, இலக்கியத் திறனாய்வு முதலான இலக்கிய நுகர்ச்சியோடு தொடர்புடைய கவிதையியல் கோட்பாடு ஆகும். இலக்கிய இரசனை என்பது ஒருவகையில் இலக்கியக் கல்வியோடு தொடர்புடையது ஆயினும் அடிப்படையில் இரண்டும் வேறு வேறு தளங்களில் இயங்கவல்லன. இன்றைக்கு இலக்கியக் கல்வி என்பது பாடத்திட்டம் சார்ந்ததோர் செயற்பாடாகக் குறுகிவிட்டது. கல்விப் புலத்திற்கு வெளியேதான் உண்மையில இலக்கிய இரசனை முருகியல் சார்ந்த அனுபவங்களைத் தரவல்ல நுகர்வாகி முழுமை பெறுகின்றது. புலவர் பூங்கொடி பராங்குசம் அவர்களின் இலக்கியக் களம் என்ற இந்தக் இக்கட்டுரைத் தொகுப்பு தமிழ் இலக்கியம், இலக்கணம், வரலாறு சார்ந்த பொருளடக்கங்களோடு இலக்கியக் கல்வி மற்றும் இலக்கிய இரசனை என்ற இருவேறு தளங்களிலும் இணைந்தே இயங்குகின்றது.
புலவர் பூங்கொடி பராங்குசம், புதுச்சேரியின் புகழ்பூத்த சுயமரியாதைக் கவிஞர்; புதுவைச் சிவத்தின் மகளாவார். ஓய்வு பெற்ற தமிழாசிரியைÉ புதுச்சேரி அரசின் கலைமாமணி விருது பெற்றவர் இயல்துறையில் கலைமாமணி விருது பெற்ற புதுச்சேரியின் முதல் பெண்மணிÉ புதுச்சேரியில் மரபுக் கவிதை நூல் எழுதி வெளியிட்ட முதல் பெண்மணி என்ற பெருமையும் இவருக்குண்டு. தமது துணைவர் பெ.பராங்குசம் அவர்களோடு இணைந்து புதுச்சேரியில் இலக்கியப் பொழில் இலக்கிய மன்றம் என்ற அமைப்பினை நீண்ட காலமாக நடத்திவருபவர். சிறந்த தமிழ் உணர்வாளர்É தமிழ் மொழிவளம் தமிழ் இனநலம் குறித்துக் கவிதைகள் எழுதுவதோடு நின்று விடாமல் மொழியுரிமைப் போர்க்களத்தில் இறங்கிப் போராடும் செயலாற்றவர் மிக்கவர். இலக்கிய இணையர்களாக பூங்கோடி பராங்குசம் -பெ.பராங்குசம் இருவரும் இணைந்தே மொழிநலம் பேணுவர் என்பது மிகச் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கது. இலக்கியக்களம் என்ற இந்நூல் இவரது ஆறாவது படைப்பு.
புலவர் பூங்கொடி பராங்குசம் அவர்களின் இலக்கியக்களம் என்ற இந்நூலை ஒரு கட்டுரைக் கலம்பகம் என்று குறிப்பிடலாம். சிற்றிலக்கியக் கலம்பகம் போல் இக்கட்டுரைத் தொகுப்பும், இலக்கிய ஆய்வு, இலக்கிய இரசனை, யாப்பிலக்கணம், அணி இலக்கணம், சொல்லாய்வு, வரலாறு, தமிழிசை, மருத்துவம், தமிழர் பண்பாடு முதலான பல்வேறு பொருண்மையுடைய இருபத்திரண்டு இனிய கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவருகின்றது. இவ்வகையில் இலக்கியக் களம் ஒரு கட்டுரைக் கலம்பகம். சங்க இலக்கியங்கள் தொடங்கித் திருக்குறள், பட்டினத்தார் பாடல், சிற்றிலக்கியங்கள், தனிப்பாடல்கள், புதுச்சேரி இலக்கியங்கள் எனத் தமிழிலக்கிய நெடும்பரப்பின் அடி முதல் நுனிவரை தொட்டுச் செல்லும் இலக்கியக் களம் தனது மையத்தைச் சங்க இலக்கிய அகப்பாடல்களில் குவித்துள்ளமை இந்நூலின் தனிச்சிறப்பு.
தமிழ் இலக்கிய இலக்கண ஆர்வலர்களையும், தமிழ் மாணவர்களையும் முன்னிறுத்திப் பொதுவாசிப்பு என்ற நிலையிலேயே நூலாசிரியர் இந்நூலைப் படைத்துள்ளார் என்றாலும் நூலின் பல கட்டுரைகள் ஆழ்ந்த இலக்கிய, வரலாற்று ஆய்வுக் கட்டுரைகளாக அமைந்து சிறக்கின்றன. குறிப்பாக, ஒளவையார் என்ற கட்டுரையும் வேளிர்கள் என்ற கட்டுரையும் இலக்கிய வரலாறு மற்றும் தமிழ்நாட்டு வரலாறு சார்ந்த கட்டுரைகளாக மிகுந்த தரவுகளோடு வாசகர்களின் அறிவுப் பரப்பை விரிவு செய்யும் போக்கில் அமைந்துள்ளன. அதேபோல், நெஞ்சில் தைக்கும் நெருஞ்சில், ஏறு தழுவுதல் அன்றும் இன்றும் போன்ற கட்டுரைகள் நுணுக்கமான ஆய்வுக் கண்ணோட்டத்துடன் தமிழிலக்கிய வாசிப்பைக் கூர்மைப்படுத்தும் வகையிலும் தமிழ்ப் பண்பாட்டுப் பதிவுகளோடும் எழுதப்பட்டுள்ளன. மேலும், இலக்கியக்களம், இலக்கியத்தில் தொழில் வளம், தமிழர் மருத்துவம் முதலான கட்டுரைகள் தமிழர்களின் பன்முக ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் ஆய்வு அணுகுமுறையோடு படைக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் நூலின் ஒவ்வொரு கட்டுரையும் கற்போர் நெஞ்சைக் கவரும் வகையில் தகவல் செறிவுகளோடும் உயிரோட்டமுடைய மொழிவளத்தோடும் கட்டுரைக்கப்பட்டுள்ளன.
நூலின் பிற்பகுதியில் அமைந்துள்ள செம்பாதிக் கட்டுரைகள் அழகான இலக்கிய இரசனைப் போக்கிலான கட்டுரைகளாகப் புனையப்பட்டுள்ளன. ஓர் இலக்கியப்பாடல், அதன் பின்னணி, பாடலின் கருத்து, பாடல் சொற்பொருள் நுட்பம், பின்னர் அந்தக் கவிதையின் நயம் என்று ஒவ்வொரு கட்டுரையும் இலக்கிய நுகர்வுக் கட்டுரைகளாக விரிந்து செல்லும். கட்டுரைகளின் ஊடாக ஆசிரியர், ஒரு கதைசொல்லி போல் அக இலக்கியக் காட்சிகளைக் கதைகளாக விவரித்துச் சொல்லும் பாங்கு இந்நூலின் தனியழகு. சான்றாக, காட்டிக் கொடுத்த களவு மாலை என்ற தலைப்பில் நூலாசிரியர், சோழன் நல்லுருத்திரன் எழுதிய முல்லைக்கலி பாடலை விவரிக்கும் கட்டுரையைக் குறிப்பிடலாம்.
தலைவனைத் தனியாக அடிக்கடி யாருமறியாமல் சந்திக்கும் தலைவி, அன்றும் இரவுப்போதில் சந்தித்து அன்புரையாடுகிறாள். அன்பின் மேலீட்டால் தலைவன் அவள் தலையில் முல்லை மலர்களையும் தான் அணிந்திருந்த முல்லை மலர்களால் தொடுத்த சிறுமாலையையும் கூந்தலில் சூட்டி மகிழ்கின்றான்.
காதலர் சந்திப்பு, நேரம் நீண்டு விட்டமையால் தலைவியும் தன்னில்லத்திற்கு விரைந்து செல்லுதற் பொருட்டுத் தலைவன் சூடிய முல்லை மலர், முல்லை மாலையைக் கொண்டையிலிருந்து எடுக்க மறந்து இல்லுள் யாருமறியாமல் நுழைந்து படுக்கையில் படுத்துவிடுகிறாள்.
மறுநாட் காலை தலைவியின் தாயும் தந்தையும் இல்லின்கண் முற்றத்தே அமர்ந்திருந்த வேளை, செவிலித்தாய் தலைவியின் கூந்தலிலே வெண்ணெய் தடவிக் கொண்டிருந்த போது விரித்த கூந்தலினின்றும் தலைவன் சூடிய முல்லை மலர்களும் ஆண்கள் மட்டுமே அணிந்து கொள்ளும் முல்லை மாலையும் செவிலி முன்னே விழுந்ததைத் தாய் தந்தையரும் ஒருசேரக் கண்ணுற்றனர். கண்டவுடனே மூவரும் திடுக்கிடுகின்றனர்.
தலைவி அச்சம் காரணமாக உடல்நடுங்க நின்றிருப்பதைப் பார்த்த நற்றாய், ஆண்கள் அணியும் முல்லைமாலை அன்பு மகளின் கூந்தலுக்கு எவ்வாறு வந்தது என்பதைக் கேட்கவுமின்றிச் சினக்கவும் இன்றி நெருப்பைத் தொட்டவள் போல் உணர்வடைந்து உடனடியாகப் புறங்கடைப் பக்கம் ஏகினள்.
தந்தையும் செவிலித்தாயும் திகைப்புற்று நின்றிருக்க, அச்சத்துடன் செய்வதறியாது நின்றிருந்த தலைவியும் தன் களவு தெரிந்துவிட்ட நிலைக்கு நாணி மயிர்ச்சாந்து பூசி உலர்த்திய கூந்தலை உடனே அள்ளிச் செருகி அவ்விடத்தைவிட்டு அகன்றுவிட வேண்டுமென்று, பூப்போட்ட தன்னுடைய நீல நிறங்கொண்ட ஆடை தாழ இருந்ததால் ஏற்பட்ட நடை தடுமாற்றத்தைப் போக்கக் கையால் அதனைப் பற்றிக்கொண்டு, அச்சத்தால் நடை தடுமாற எங்குச் செல்வதென மனத்துள் எண்ணிக் கொண்டே அருகாமையில் உள்ள கானகத்தே சென்று ஒளிந்துகொள்கிறாள்.
மேலே இடம்பெற்றுள்ள நூலின் பகுதி, நூலாசிரியரின் நடைநலத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு. இலக்கியக் காட்சியை மனக்கண் முன் கொண்டுவரும் நடைநலமும் கதைசொல்லும் தொனியிலான காட்சி விவரிப்பும் இவ்வாறே நூலின் இலக்கிய கட்டுரைகள் பலவற்றிலும் விரவிக் கிடக்கின்றன.
இலக்கியக் களம் என்ற நூலின் ஒவ்வொரு கட்டுரையுமே நூலாசிரியரின் ஆழ்ந்த இலக்கியப் புலமை, உலகியல் அறிவு, பழகுதமிழ் நடைநலம் இவற்றை விளக்கிநிற்கும் என்றாலும் சான்றுக்காக, நெஞ்சில் தைக்கும் நெருஞ்சில் ஒரு கட்டுரையை இங்கே கொஞ்சம் கூர்ந்து நோக்குவோம்.
தமிழ் இலக்கியங்களில் இடம்பெறும் நெருஞ்சி பற்றிய பதிவுகளைக் குறித்து விளக்கமுறையில் விவரிக்கும் இக்கட்டுரையைத் தொடங்குகின்ற போதே, நெருஞ்சி குறித்த நாட்டுப்புற விடுகதைக் கவிதையுடன் தொடங்குகின்றார் நூலாசிரியர். தொடர்ந்து பதிற்றுப்பத்து, அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, சீவக சிந்தாமணி முதலான இலக்கியங்களில் இடம்பெறும் நெருஞ்சித் தாவரவகை தொடர்பான இலக்கியப் பகுதிகளை விளக்கியுரைக்கிறார். பின்னர் நெருஞ்சியின் வகைகள், அதன் வேறு பெயர்கள், வகைகளை வேறுபடுத்திக்காண உதவும் குறிப்புகள், நெருஞ்சியின் மருத்துவ குணம், மருந்து தயாரிக்கும் முறை எனக் கட்டுரையை விரித்துச் செல்லும் நூலாசிரியரின் கட்டுரைத்திறன் படிப்பவர்களை வியப்பில் ஆழ்த்துகின்றது. ஏட்டிலக்கியங்களோடு நாட்டுப்புற இலக்கியங்களையும் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் நூலாசிரியரின் அணுகுமுறை பாராட்டத்தக்கது.
இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள நெருஞ்சியின் மருத்துவ குணம் என்ற பகுதி பின்வருமாறு,
பல்வேறு விதமான மருத்துவக் குணங்கள் நெருஞ்சில் செடிகளுக்கு உண்டு. நெருஞ்சிலின் உறுப்புகளனைத்தும் பல நோய்களைத் தீர்க்கவல்லவை. இரும்புச்சத்து, சுண்ணாம்புச் சத்து, பாசுபரசு போன்றவை நிறைந்துள்ள நெருஞ்சிலை அரைத்துச் சாறுபருக சிறுநீருடன் குருதி கலப்பது நிற்கும். மேலும், சிறுநீர்ப்பையில் கற்கள் உருவாவதும் தடைபடும். வயிற்றுவலி நீங்கும், மலட்டுத் தன்மை நீங்கும், விதையினை அவித்துக் காயவைத்துப் பொடித்து இளநீருடன் உட்கொண்டால் சிறுநீர் தொடர்பான அனைத்து நோயினின்றும் விடுபடலாம். நெருஞ்சில் செடிகள் வேருடன் இரண்டும் ஒரு கைப்பிடி அருகம்புல்லும் சேர்த்து மண்சட்டியில் வதக்கி 1 மடங்கு நீர் அரை மடங்காகுமாறு சுண்டக் காய்ச்சிக் குடிநீராகப் பயன்படுத்தலாம். காலை, மாலை இருவேளையும் 50 மி.லி. அளவு 3 நாட்களுக்கு வெறும் வயிற்றில் குடித்தால் உடல் வெப்பம், கண் எரிச்சல், கண்ணில் நீர்வடிதல், சிறுநீரக ஒழுக்கு அனைத்தும் நீங்கும்.
இலக்கியப் புலமையோடு உலகியல் அறிவும் மிக்கவர் நூலாசிரியர் என்பதற்கு மேலே விவரித்த கட்டுரையும் கட்டுரைப் பகுதிகளும் ஓர் எடுத்துக்காட்டு மட்டுமே. நூலை நுணுகிக் கற்போருக்குப் பல சுவையான இலக்கிய மேற்கோள்களும் விளக்கங்களும் அரிய தகவல்களும் இலக்கியக் களத்தில் காத்திருக்கின்றன.
இலக்கியக் களம் எனும் இக்கட்டுரைத் தொகுப்பு தமிழுக்குப் புது வரவு என்பதோடு புதுமையான வரவு. நூலாசிரியர் புலவர் பூங்கொடி பராங்குசம் அவர்களின் நோக்கம் தெளிவானது. தமிழ் இலக்கண இலக்கிய அறிவுப்பரப்பின் ஒரு பகுதியைத் தமிழில் மெத்தப் படித்தவர்களுக்கு மட்டுமல்லாது பொதுமக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே அது. இந்நூல் படைப்புமன்று ஆராய்ச்சியும் அன்று. நுகர்ச்சி, இலக்கிய நுகர்ச்சி. தமிழ்க் கடலமுதின் சில துளிகள் இவை. இலக்கிய நுகர்ச்சி குறைந்துவரும் இருபத்தோராம் நூற்றாண்டுத் தமிழர்களுக்கு நூலாசிரியரின் அமுதப் படையல் இதுவே.
நூலாசிரியருக்குப் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ
No comments:
Post a Comment