முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8
சீர்திருத்தம் பேசிய தேசியவாதி
நாவலாசிரியர் டி.பி.ராஜலட்சுமி இந்நாவலை எழுதி வெளியிட்ட ஆண்டு 1931 ஆகும் சற்றேறக்குறைய இக்காலக்கட்டத் தமிழகத்தில் சமூக, அரசியல் தளங்களில் இரண்டு வகையான இயக்கங்கள் தோன்றிச் செயலாற்றிக் கொணடிருந்தன. ஒன்று, தேச விடுதலையை மையமிட்ட தேசிய இயக்கம், மற்றொன்று சமூகச் சீர்த்திருத்தங்களில் மையம் கொண்ட திராவிட இயக்கம்.
முப்பதுகள் மற்றும் நாற்பதுகளில் தமிழகத்தில் தோன்றிய அனைத்துப் படைப்பிலக்கியங்களிலும் இவ்விரண்டு இயக்கப்போக்குகளின் தாக்கம் தவிர்க்க முடியாததாய் இருந்தமை கண்கூடு. தீவிர அரசியல், தீவிர இயக்கம், தீவிரப் படைப்பாக்கங்களில் செயல்படுவோர் என்ற இத்தகு தீவிரப் போக்குடையவர்களிலிருந்து மாறுபட்டுத் திரைத்துறை சார்ந்து இயங்கும் ஒருவர், அதிலும் ஆதிக்கம் மிகுந்த ஆண் வர்க்கத்தினரின் மேய்ச்சலுக்காக மட்டுமே பெண்ணும் பெண்ணின் உடலும் என்று இன்றுவரை இயங்கிவரும் திரைப்படத்துறையில் ஒரு ஆளுமை மிக்க பெண்ணாக, படைப்பாளியாக டி.பி.ராஜலட்சுமி வெளிப்பட்டமை வியந்து பாராட்டுதற்குரியது.
காங்கிரஸ் இயக்கக் கொள்கைகளில் பிடிப்பு கொண்டவராக மேடைகளில் தோன்றி தேசபக்திப் பாடல்களைப் பாடி தேசவிடுதலைக்கு எழுச்சியூட்டும் பணியாற்றி வந்த டி.பி.ராஜலட்சுமி படைப்பிலக்கியத் துறையில் குறிப்பாக நாவல் இலக்கியத்தில் செயலாற்றும் போது முற்றமுழுதாகச் சீர்திருத்த இயக்கக் கருத்தாக்கங்களை உள்வாங்கிப் படைப்புக்களில் வெளிப்படுத்தி உள்ளமை ஓர் அழகிய முரணாகும்.
டி.பி.ராஜலட்சுமியின் அனுபவ வழிப்பட்ட சீர்திருத்தம்
மாயூரம் வேதநாயகர் தொடங்கி டி.பி.ராஜலட்சுமி காலம் வரையிலும் படைப்பிலக்கியங்களில் பெண்கள் முன்னேற்றம், பெண்கல்வி, பெண்விடுதலை முதலான கருத்துக்கள் தொடர்ந்து பேசப்பட்டுவந்தன. படைப்பிலக்கியங்கள் எனும்போது கவிதை இலக்கியங்கள், புனைகதை இலக்கியங்கள் இரண்டிலும் இப்போக்கு காணப்பட்டது. நாவல் படைப்பதற்கு முன்பே, கவிதை இலக்கியங்களில் மேலே சொல்லப்பட்ட உள்ளடக்கங்களைத் தெளிந்த சிந்தனையோடு பதிவுசெய்ததில் முதன்மையானவர் மாயூரம் வேதநாயகரே. அவரைத் தொடர்ந்தே பாரதி, பாரதிதாசன் முதலான கவிஞர்கள் பெண்விடுதலை குறித்துப் பேசத்தொடங்கினர்.
வேதநாயகர் எத்தகைய இயக்கப் பின்னணியும் இல்லாமல் ஆங்கிலக் கல்வி தந்த அறிவு வெளிச்சத்தில் பெண்விடுதலை பேசினார். பாரதி, பாரதிதாசன் போன்றவர்கள் பெண்விடுதலை பேசியதில் இயக்கப் பின்னணிகள் இருந்தன. புனைகதைகளில், குறிப்பாக நாவல்களில் பெண்விடுதலை பேசப்பட்டபோது ஆங்கிலக் கல்வி, மேற்கத்திய பண்பாட்டுத் தாக்கம் குறித்த விழிப்புணர்வின் விளைவாகவே பெண் விடுதலைச் சிந்தனைகள் பேசப்பட்டன. மாயூரம் வேதநாயகர் தொடங்கி, தொடக்கக்கால நாவல் வரலாற்றில் இப்போக்கினை நாம் காணலாம்.
நாவலாசிரியை டி.பி.ராஜலட்சுமியின் பெண் விடுதலை குறித்த சிந்தனைகள் மேலே சொல்லப்பட்ட கோணங்களிலிருந்து மாறுபட்டவை.
டி.பி.ராஜலட்சுமியின் முறைசார் கல்வி இரண்டாம் வகுப்புவரைதான், மற்றபடி அவரின் எழுத்தறிவு, புலமை எல்லாம் அனுபவ வழிப்பட்டதே. ஆங்கிலக் கல்விக்குப் பெரிதும் வாய்ப்பில்லை. எனவே டி.பி.ராஜலட்சுமியின் பெண்விடுதலைச் சிந்தனைகளுக்குக் களம் அமைத்தவை அவரின் வாழ்க்கைப் பேராட்டங்களும், அனுபவங்களுமே எனல் பொருந்தும். அதிலும் தம் முதல் நாவலான கமலவல்லியில் அவர் எடுத்துக்கொண்ட பிரச்சனை, பெண்கள் தம் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பற்றியதாயிருப்பது தனித்தன்மை உடையது.
இருபதாம் நூற்றாண்டின்; தொடக்ககாலப் படைப்புகள் மிகுதியும் பேசிய பெண்கல்வி, கைம்பெண்டிர் மறுமணம், குழந்தைமண எதிர்ப்பு போன்ற உள்ளடக்கங்களிலிருந்து மாறுபட்டு, ஒருபெண் விருப்பமின்றி வேறு ஒருவருக்குக் கட்டாயத் திருமணம் செய்து கொடுக்கப்பட்டாலும் அப்பெண் அத்திருமண வாழ்வில் ஈடுபடாமல் திருமணம் செய்துகொண்ட கணவனின் துணையோடு பல்வேறு போராட்டங்களுக்கிடையே தன்னுடைய காதலனையே மீண்டும் திருமணம் செய்துகொள்வதாக நாவலைப் படைத்துள்ளமை டி.பி.ராஜலட்சுமியின் புரட்சிகரமான சிந்தனைக்குச் சான்றாகிறது.
கணவன் இறந்தபிறகு பெண்கள் மறுமணம் செய்துகொள்வதை வலியுறுத்தும் விதவைத் திருமணம் போன்ற மரபு மீறல்களிலிருந்து டி.பி.ராஜலட்சுமி தம் நாவலில் கையாண்ட மரபு மீறல் முற்றிலும் புதுமையானது. கணவன் உயிருடன் இருக்கும்போதே ஒருபெண் வேறுஒருவனைத் திருமணம் செய்துகொள்வது. பலர் அறிய மறுமணம், அதுவும் கணவனின் துணையோடு. இவ்வுள்ளடக்கம் அவர் காலத்தில் புதிது, புதுமையானது.
இத்தகு புதிய மரபு மீறலுக்கான நியாயங்கள் நாவலில் பேசப்படுகின்றன. நாவலாசிரியர் டி.பி.ராஜலட்சுமி, நாவலில் ஆசிரியர் கூற்றாக இவ்விவாதங்களைப் பதிவுசெய்யாமல் பாத்திரங்களின் கூற்றாகவே பதிவு செய்திருப்பது அதன் கட்டுக்கோப்பில் வெகுஇயல்பாகப் பொருந்திக் கொள்கிறது.
கமலவல்லியின் மறுமணத்திற்கு உடன்படும் அவளின் கணவன் டாக்டர் சந்திரசேகரனிடம் இப்பிரச்சனை குறித்துத் தீவிரமாக விவாதிக்கின்றார் பாரிஸ்டர் பகதவச்சலம். அவ் உரையாடலின் ஒருபகுதி பின்வருமாறு,
பாரிஸ்டர்: உங்களுக்குக் கமலவல்லியின் நடத்தைகள் பிடிக்காமல்தானே! இப்போது அவளுடைய நிர்ப்பந்தத்திற்காக அவள் மறுவிவாகம் செய்துகொள்ள வேண்டுமென்று அனுமதிக்கின்றீர்கள்?
டாக்டர்: கமலவல்லி வெறுக்கத்தக்க குணங்களுள்ளவளல்ல. இன்னும் பார்த்தால் குணவிசேடங்களிலும் மதிநுட்பத்திலும் அவள் மிக மேம்பாடானவள். கல்யாண விஷயத்தில் ஆணாயிருந்தாலும் சரியே, பெண்ணாயிருந்தாலும் சரியே, அவரவர் தத்தம் மனசாட்சியின்படி சர்வசதந்திரமாய் நடக்க விட்டுவிடுவதே மேன்மையாகும். இந்த விசாலமான நோக்கத்தினாலேயே நான் கமலவல்லி மறுபடியும் கண்ணப்பனை விவாகம் செய்துகொள்ள என் முழுமனதுடன் சம்மதிக்கிறேன்.
(டி.பி.ராஜலட்சுமி, கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன், ப. 107)
பாரிஸ்டர்: பகிரங்கமாய் ஒருவரை மணம் செய்துகொண்ட ஒரு பெண், வேறொருவருடன் வாழ்ந்திருக்கும்படி செய்வது முறையாகுமா?
டாக்டர்: ஏன் முறையாகாது? விவாகமென்பதே ஆணும் பெண்ணும் தங்கள் வாழ்க்கையை முன்னிட்டுச் செய்துகொள்ளும் ஒரு ஒப்பந்தந்தானே. நீங்கள் கொஞ்சம் நன்றாய் ஆலோசித்துப் பாருங்கள். கல்யாணம் ஆணுக்கா? அல்லது பெண்ணுக்கா? இருபாலருக்குந்தானே. அப்படியிருக்க ஆண்கள் மட்டும் பல பெண்களை மணக்க அனுமதிக்கும் நாம், பெண்கள் தங்கள் விருப்பப்படி ஒருவரை விவாகம் செய்து கொள்வதை ஏன் அனுமதிக்கக்கூடாது?
குருட்டுத்தனமான இந்தக் கொடுமைகள் பெண்கள் சமூகத்திற்கே உலை வைப்பதாயிருக்கின்றன. பெண்கள் ஆண்களைவிட எவ்வகையிலேனும் தாழ்ந்தவர்கள் என்று கூறமுடியுமா? நாம் நம்முடைய சௌகர்யத்திற்காகப் பெண்களை அடக்கியாண்டு கொடுமைப் படுத்துகிறோம். இது பெரும் பாபமான காரியமாகும். இன்னும் ஒரு வேடிக்கையைப் பாருங்கள். பெண்களுக்கு மட்டும் விதவைத் தன்மை கற்பிக்கப்பட்டிருக்கும் கொடுமை இப்பாழும் நாட்டைத் தவிர, வேறு நாகரீகம் பெற்ற எந்த நாட்டிலேனும் உண்டா? பெண்களைப் போலவே ஆண்களும் மனைவிமார்களைப் பிரிந்தவுடன் மொட்டையடித்து மூலையில் உட்காரவைக்கப்பட்டால் அப்போது ஆணுலகம் அறிவுபெறும்.
(டி.பி.ராஜலட்சுமி, கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன், பக். 108-109)
டாக்டர் சந்திரசேகரனின் கருத்துக்களாக வெளிப்படுவது நாவலாசிரியர் டி.பி.ராஜலட்சுமியின் குரலே. உடல் வலிமையாலும் அறிவாலும் எல்லாவகையிலும் பெண்கள் ஆண்களைவிட ஒருபடி தாழ்ந்தவர்களே என்ற கருத்து வலிமை பெற்றிருந்த ஒரு சமூகத்தில் “பெண்கள் ஆண்களைவிட எவ்வகையிலேனும் தாழ்ந்தவர்கள் என்று கூறமுடியுமா? நாம் நம்முடைய சௌகர்யத்திற்காகப் பெண்களை அடக்கியாண்டு கொடுமைப்படுத்துகிறோம்.” என்ற நாவலாசிரியரின் எதிர்க்குரல் எத்துணை அழுத்தமாகவும் உரத்தும் ஒலிக்கின்றது.
அதுமட்டுமின்றி பெண்களுக்கு நேரும் கொடுமைகள் குறித்து, “பெண்களைப் போலவே ஆண்களும் மனைவிமார்களைப் பிரிந்தவுடன் மொட்டையடித்து மூலையில் உட்காரவைக்கப்பட்டால் அப்போது ஆணுலகம் அறிவுபெறும்.” என்று நாவலாசிரியர் பேசுவது பெண்ணடிமைச் சமூகம் பற்றிய அவரின் தார்மீகக் கோபத்தின் உச்சம் என்பதை நாம் உணர்தல் வேண்டும்.