Thursday 26 November 2009

அட! வலைப்பதிவுக்குள்ள இவ்வளவு இருக்கா? -பகுதி-1

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8




1. வலைப்பதிவுத் தலைப்பு
(Title):

ஒவ்வொரு வலைப்பதிவுக்கும் ஒரு தலைப்பு உண்டு. இதுவே அவ்வலைப்பதிவின் பெயர். இதழ்கள், செய்தித்தாள்களுக்கு எப்படி ஒரு பெயரைச் சூட்டுகிறோமோ அதுபோல் வலைப்பதிவுக்கு நாம் சூட்டும் பெயர். வலைப்பதிவரின் பெயர், குறியீட்டுப்பெயர், இடுகுறியாக ஒருபெயர், வித்தியாசமான கவரத்தக்க வாசகம் எப்படி வேண்டுமானாலும் வலைப்பதிவுக்குப் பெயர் வைக்கலாம். அந்தப் பெயரே வலைப்பதிவுக்கான அடையாளம் என்பதைக் கவனத்தில் கொண்டு பெயரிடுதல் நலம். மேலே சான்றுக்காக காட்டப்பட்டிருக்கும் வலைப்பதிவுப் படத்தில் இடம்பெற்றுள்ள மலையருவி கவிதைகள் என்பது அந்த வலைப்பதிவின் தலைப்பு ஆகும்.

2. வலைப்பதிவு முகப்பு
(Description):

வலைப்பதிவுத் தலைப்பை அடுத்து, வலைப்பதிவர் தம்மைப் பற்றியோ, தமது வலைப்பதிவின் நோக்கத்தைப் பற்றியோ சுருக்கமாகக் குறிப்பிடும் பகுதி இது. புதிதாகக் குறிப்பிட்ட வலைப்பதிவைப் பார்வையிடும் ஒருவருக்கு வலைப்பதிவை அறிமுகப்படுத்தும் நோக்கில் இந்த முகப்பு வாசகங்கள் இடம்பெறுதல் வேண்டும். செய்தித்தாள்களில் செய்தித் தலைப்பை அடுத்து இடம்பெறும் முகப்பு (டுநயன) போல சுருங்கிய வடிவில் அமைக்கப்படுவதால் இப்பகுதி வலைப்பதிவின் முகப்பு என்று அழைக்கப்படுகிறது. மேலே சான்றுக்காகக் காட்டப்பட்டிருக்கும் வலைப்பதிவுப் படத்தில் இடம்பெற்றுள்ள மலையருவி கவிதைகளுக்கான புதிய மேடை என்பது அந்த வலைப்பதிவின் முகப்பு ஆகும்.

3. பதிவின் தலைப்பு
(Title of the Post):

வலைப்பதிவில் ஒருவர் பதிக்கும் ஒவ்வொரு பதிவுக்கும் தலைப்பிடுதல் அவசியம். ஒரு பதிவு நாம் வாசிப்பதற்குரியது தானா? என்பதைப் பார்வையாளர் தெரிந்து கொள்ள உதவும் பகுதி இது. வலைப்பதிவுகளில் ஒருவர் படைப்பு முக்கியத்துவம் பெறுவது பதிவுகளுக்கு அவர் இடும் தலைப்பைப் பொறுத்தே அமையும். தலைப்பு, பதிவின் உள்ளடக்கங்களின் சாரமாகவோ, அதையொட்டியோ அமைதல் வேண்டும். தலைப்பில்லாத பதிவுகள் தலையில்லாத உடலுக்குச் சமம். மேலே சான்றுக்காகக் காட்டப்பட்டிருக்கும் வலைப்பதிவுப் படத்தில் இடம்பெற்றுள்ள துளித் துளியாய்… என்பது அந்தப் பதிவின் தலைப்பு ஆகும். பதிவில் இடம்பெற்றுள்ள துளிப்பாக்களைக் குறிக்கும் விதத்தில் துளித் துளியாய் என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

4. பதிவின் உடல்பகுதி
(Post):

வலைப்பதிவில் ஒருவர் எழுதிப் பதிக்கும் உள்ளடக்கமே பதிவு. ஒரு வரிப் பதிவு தொடங்கி நூற்றுக்கணக்கான வரிகள் வரை பதிவின் அளவு இருக்கலாம். பதிவுகளின் அளவு குறித்து எல்லைகள் ஏதுமில்லை. அளவில் சிறிய பதிவுகளுக்குத்தான் வலைப்பதிவுகளில் வாசகர்கள் மிகுதி. பதிவின் உள்ளடக்கங்கள் எழுத்துரைகளாக மட்டுமில்லாமல் வரைபடங்கள், படங்கள், ஒலிகள், சலனப்படங்கள் என்று பல்லூடக உள்ளடக்கங்களாகவும் அமையலாம். பதிவுகளில் மீஉரை (Hyper Text) வசதிகளையும் உருவாக்கலாம். கடைசியாகப் பதித்த பதிவே முதலில் இடம்பெறும் வகையில் வலைப்பதிவுகள் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

பதிவுகள் கவிதை, கதை, கட்டுரை போன்ற படைப்பாக்கங்களாக, கருத்துரைகளாக, துணுக்குகளாக எப்படி வேண்டுமானாலும் அமையலாம். ஒரு பதிவின் மீது, தேர்ந்தெடுத்தல், வடிகட்டல், திருத்துதல், நீக்குதல், சான்றளித்தல் என்று அதிகாரம் செலுத்த யாருமற்ற புதுமையைச் சாத்தியமாக்கும் இடம் பதிவின் உடல்பகுதியே. தரப்படுத்தலுக்கும் தாமதத்திற்கும் ஆளாகாமல் உடனுக்குடன் வாசகர்களைச் சென்றடையும் பதிவுகளே வலைப்பதிவுகளின் தலையாய பகுதி. மேலே சான்றுக்காகக் காட்டப்பட்டிருக்கும் வலைப்பதிவுப் படத்தில் இடம்பெற்றுள்ள துளித் துளியாய்… என்ற தலைப்பின் கீழ் இடம்பெற்றுள்ள நான்கு துளிப்பாக்களும் தான் பதிவின் உடல்பகுதி.

அட! வலைப்பதிவுக்குள்ளே இவ்வளவு இருக்கா? -பகுதி-2

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8




5. பதித்த நாள், நேரம், பதித்தவர் பெயர் முத்திரைகள்
(Date, Time, Author Stamp)

சில வலைப்பதிவுகள் தனிநபர் வலைப்பதிவுகளாக இல்லாமல் குழு வலைப்பதிவுகளாக இருக்கும். அத்தகு வலைப்பதிவுகளில் எழுதியவர் பெயர் முத்திரை இன்றியமையாதது. தனிநபர் வலைப்பதிவுகளில் இந்த முத்திரை அவசியமில்லை என்றாலும் எல்லா வலைப்பதிவுகளும் இந்த வசதியைப் பெற்றுள்ளன. பதிவுகள் பதிவு செய்யப்பட்ட நாளும், நேரமும் முக்கியமான தகவல்கள் என்பதால் பதிவுகளுக்கு மேலே பதிவுகள், பதிவுசெய்யப்பட்ட நாள், கிழமை பற்றிய முத்திரையும் பதிவுகளுக்குக் கீழே பதிவுசெய்யப்பட்ட நேரமும் வலைப்பதிவுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

ஒரே நாளில் வலைப்பதிவுகள் பலமுறை இற்றைப் படுத்தப்படும் (up-to-date) போது அல்லது பலமுறைப் பதிவுகளைப் பதிக்கும் போது நேர முத்திரை முக்கியத்துவம் பெறும். மேலே சான்றுக்காகக் காட்டப்பட்டிருக்கும் வலைப்பதிவுப் படத்தில் பதிவின் மேலே, SATURDAY, NOVEMBER, 17, 2007 என்று பதிவின் நாள் முத்திரையும் பதிவின் கீழே, Posted by முனைவர் நா.இளங்கோ at 6:55 P.M என்று பதித்தவர் பெயர் மற்றும் நேர முத்திரையும் இடம்பெற்றிருப்பதைக் காணலாம்.

6. பின்னூட்டங்கள்
(Comments):

வலைப்பதிவின் முக்கிய அம்சமே வாசகர் ஊடாடுவதற்கான வசதியினைப் பெற்றிருப்பதுதான். வலைப்பதிவின் இந்த வாசகர் ஊடாட்டமே பின்னூட்டம் (Feed- back) என்றழைக்கப்படுகிறது. பதிவை வாசிப்பவர் உடனுக்குடன் தம் கருத்தைப் பதிக்கும் வசதியே இது. வலைப்பதிவுகளில் ஒவ்வொரு பதிவின் கீழும் Comments என்ற பகுதி இடம்பெற்றிருக்கும்.

அவ்விடத்தில் இதுவரை எத்தனைக் கருத்துக்கள் பின்னூட்டங்களாக இடப்பட்டுள்ளன என்ற விபரத்துடன் கூடிய சுட்டி ஒன்று இடம்பெற்றிருக்கும். அந்தச் சுட்டியைச் சொடுக்கினால் பின்னூட்டங்களைக் காணவும் மேலும் பின்னூட்டங்களைப் பதிவுசெய்யவும் வாய்ப்பளிக்கும் புதிய சன்னல் திறக்கப்படும். மேலே சான்றுக்காகக் காட்டப்பட்டிருக்கும் வலைப்பதிவுப் படத்தில் இடம்பெற்றுள்ள துளித் துளியாய்… என்ற பதிவின் கீழ் 0 Comments என்ற சுட்டி இடம்பெற்றிருப்பதைக் காணலாம்.

7. சேமிப்பகம்
(Archives):

வலைப்பதிவுகள் தொடர்ச்சியாக இற்றைப் படுத்தப்படும் வசதியினைப் பெற்றிருப்பதால் வலைப்பதிவில் இடம்பெற்றுள்ள அனைத்துப் பதிவுகளையும் ஒரே பக்கத்தில் இடம்பெறச் செய்வது சாத்தியமில்லை. முதல் பக்கத்தில் இடம்பெற்றுள்ள பதிவுகள் தவிர்த்த முந்தைய பதிவுகள் வார வாரியாகவோ, மாத வாரியாகவோ தனியே சேமிப்பகம் என்ற பகுதியில் சேமித்து வைக்கப்படும்.

வலைப்பதிவுகளில் Archives என்ற பெயரில் இடம்பெறும் இப்பகுதி தனி வலைப்பக்கங்களாக வடிவமைக்கப்பட்டு அவற்றைத் திறப்பதற்கான மீஉரை சுட்டியுடன் அமைக்கப்பட்டிருக்கும். சேமிப்பகங்களைப் பராமரித்துப் பட்டியலிடும் பணிகளை வலைப்பதிவுச் சேவையை வழங்கும் வலைத்தளங்களே பார்த்துக்கொள்ளும். மேலே சான்றுக்காகக் காட்டப்பட்டிருக்கும் வலைப்பதிவுப் படத்தில் இடம்பெற்றுள்ள துளித் துளியாய்… என்ற பதிவுக்கு இடப்பக்கம் கீழே Blog Archive என்ற தலைப்பில் முந்தைய பதிவுகள் 2007 (11)> November (7) என்று பட்டியலிடப்பட்டிருப்பதைக் காணலாம்.

8. இணைப்புகள்
(Links):

ஒவ்வொரு வலைப்பதிவரும் தங்களுக்கு விருப்பமான வலைத்தளங்களுக்கோ, வலைப்பதிவுகளுக்கோ இணைப்பு கொடுப்பது வழக்கம். வலைப்பதிவுத் திரட்டிகள், மென்பொருள் வழங்கும் தளங்கள், எழுத்துருக்கள் கிடைக்குமிடம், இணைய இதழ்கள் முதலான பல இணைப்புகளை வழங்க வலைப்பதிவுகளில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்புகள் வழங்குதல் என்பது முழுக்க முழுக்க வலைப்பதிவரின் விருப்பத்தைச் சார்ந்தது. இத்தகு இணைப்புகளுக்கான சுட்டிகளைச் சொடுக்கிப் புதிய சன்னலில் இணைப்புக்குரிய வலைத்தளங்களையோ வலைப்பதிவுகளையோ நாம் பார்வையிடலாம்.

9. வலைப்பதிவுகளில் பக்கக் கூறுகள்
(Page Elements):

வலைப்பதிவுகளில் இடப்பெறும் பதிவுகளுக்கு இடப்பக்கத்திலோ வலப்பக்கத்திலோ வார்ப்புருவின் (Template) வடிவமைப்புக்கு ஏற்பச் சில பக்கக் கூறுகளை இணைக்க முடியும். பக்கக் கூறுகளைப் பயன்படுத்தி வலைப்பதிவரின் புகைப்படம், வலைப்பதிவர் பற்றிய குறிப்புகள் போன்றவற்றை வலைப்பதிவுகளில் இணைக்கலாம். மேலே சான்றுக்காகக் காட்டப்பட்டிருக்கும் வலைப்பதிவுப் படத்தில் இடம்பெற்றுள்ள துளித் துளியாய்… என்ற பதிவுக்கு இடப்பக்கம் மேலே எனது புகைப்படம் என்ற தலைப்பில் வலைப்பதிவரின் புகைப்படமும் About Me என்ற தலைப்பில் வலைப்பதிவர் பற்றிய குறிப்புகளும் இடம்பெற்றிருப்பதைக் காணலாம்.

Wednesday 11 November 2009

காலக் குறியீடுகள் -திரைப்பட மொழி ஆய்வு

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

திரைப்படங்களில் காலக் குறியீடு

திரைப்படத்தில் ஒரு திரைக்கதை எடுத்துக் கொள்கிற கதையின் முழுமையான கால அளவு என்பது வரையறுக்க முடியாதது. அது ஒரு மணிநேரத்தில் நடந்த கதையாக இருக்கலாம் அல்லது ஓராயிரம் ஆண்டுகள் நடந்த கதையாக இருக்கலாம். ஆனால் திரைப்படம் ஓடக்கூடிய நேரம் சுமார் இரண்டரை (2½) மணி நேரம்தான். திரைப்படத்தில் காட்சி நடக்கும் நேரம் என்பது உண்மையான நேரத்திற்குச் சமமானதாக இருக்கும். இது திரைப்படத்தின் பொதுவிதி.

இந்த இரண்டரை மணி நேரத் திரைப்படத்தில்தான் பல நூறு ஆண்டுக் காலத்தைப் பார்க்கிறோம். அதாவது கதை நிகழ்கின்ற ஆயிரக்கணக்கான மணி நேரத்தை நாம் வெறும் இரண்டரை மணி நேரத்தில் மட்டுமே பார்க்கிறோம். மீதி உள்ள நேரங்கள் காட்சிகளுக்கு இடையே உள்ள இடைவெளிகளில் இருக்கின்றன.

ஒரு காட்சிக்கும் அடுத்த காட்சிக்குமான மாற்றத்தின்போது உள்ள கால இடைவெளி ஒரு நொடியின் மிகச்சிறிய பகுதி, இந்தக் கால இடைவெளியில்தான் திரைக்கதை சில நாட்களையோ, மாதங்களையோ, சில ஆண்டுகளையோ கடந்து விடுகின்றது. இந்த இடைவெளிகளின் கால ஓட்டத்தைப் பார்வையாளனுக்குச் சரியான அளவில் புரிய வைப்பதில்தான் திரைப்பட மொழி முழுமை பெறுகின்றது.

திரைப்படத்தில் காலத்தைப் பொறுத்தவரை இரண்டு கூறுகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். 1. காட்சி நடக்கும் நேரம். 2. காட்சிகளுக்கு இடையிலான நேரம்.

முதல் கூறாகிய காட்சி நடக்கும் நேரங்களைக் கணக்கிட்டால் திரைப்படம் ஓடக்கூடிய மொத்த நேரத்தைப் பெறலாம். இரண்டாம் கூறாகிய காட்சிகளுக்கு இடையிலான நேரத்தை/ காலத்தை மொத்தமாகக் கணக்கிட்டு முதல் கூறாகிய காட்சி நடக்கும் நேரத்தோடு கூட்டினால் திரைக்கதை நிகழக்கூடிய முழுமையான காலஅளவைக் கண்டுபிடிக்கலாம்.

காட்சிகள் நிகழும் மொத்த நேரம்
+
காட்சிகளுக்கு இடையிலான மொத்த நேரம்
=
திரைக்கதையின் முழுமையான கால அளவு

திரைப்படத்தில் காட்சிகள் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து வருகின்றன. காட்சிகளுக்கான காலமும் தொடர்ந்து நகர்ந்து கொண்டிருக்கின்றது. முதல் காட்சியைத் தொடர்ந்து இரண்டாம் காட்சி, முதல்காட்சி நடைபெற்ற காலத்தைத் தாண்டி இரண்டாம் காட்சி நடைபெறும் காலம். முதல், இரண்டாம் காட்சிகளில் காலம் இடையீடு இன்றித் தொடர்வதில்லை. அப்படித் தொடர்ந்தால் வேறு வேறு காட்சிகளாக அவைகள் சித்தரிக்கப்படுவது பொருத்தமில்லை. காட்சிகள் வேறுபடுவதால் காட்சிகளுக்கிடையே கடந்துசென்ற காலத்தின் அளவைத் தெளிவுபடுத்துவதே காலக் குறியீடுகளின் வேலை.

திரைக்கதையில் கால நகர்வு

திரைப்படத்தில் இரண்டு காட்சிகளுக்கிடையே காலம் கடந்திருப்பதைப் பார்வையாளர்களுக்கு உணர்த்த வேண்டுமெனில் அந்த இரண்டு காட்சிகளுக்கிடையே வேறொரு இடத்தில் நிகழ்கின்ற புதிய காட்சி ஒன்றைப் புகுத்த வேண்டும். இந்தப் புதிய காட்சிக் குறுக்கீடு திட்டமிட்டுத் திரைக்கதை ஆசிரியரால் புகுத்தப்படுவது.

தமிழ்த் திரைப்படங்களில் இந்தவகை இடையீட்டுக் காட்சிக்குப் பெரிதும் பயன்படுத்தப்படும் உத்தி நகைச்சுவைக் காட்சிகளை இணைத்தலே. திரைப்படத்தின் பிரதான திரைக்கதைக்கு இணையாகத் தனித்ததொரு துணைக்கதை (Comedy Track) என்ற போக்கில் இத்தகு காட்சிகள் இணைக்கப்படும்.

Friday 6 November 2009

வலைப்பதிவு சில கூடுதல் தகவல்கள்

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

வலைப்பதிவு சேவை வழங்குவோர்:

வலைத்தளங்கள் போல் அல்லாமல் வலைப்பதிவு சேவைகளைப் பல இணையதளங்கள் இலவசமாக வழங்குகின்றன. வலைப்பதிவு சேவையை வழங்கும் சில இணையதளங்கள்:
1. http://www.blogger.com
2. http://www.blogdrive.com
3. http://www.livejournal.com
4. http://blogs.sify.com
5. http://wordpress.com
6. http://www.blogsome.com
7. http://www.rediffblogs.com

இந்த இணைய தளங்கள் மட்டுமன்றி வேறு பல இணையதளங்களும் வலைப்பதிவு சேவையை வழங்குகின்றன.

Blogger.com
வலைப்பதிவுச் சேவைகளிலேயே மிகவும் விரும்பப்படுவது இந்த ப்ளாக்கர்.காம் சேவைதான். எளிமையான அமைப்புகளுடனும் அதேசமயம் தேவையான பல வசதிகளுடன் இந்தச் சேவை வழங்கப்படுகிறது. கூகிள் (google.com) தேடுபொறி நிறுவனம் வழங்கும் இந்த ப்ளாக்கர். காம் மிகுந்த நம்பகத்தன்மை உடையது என்று தமிழ் வலைப்பதிவாளர்கள் பலராலும் பாராட்டப்படுகிறது.

வலைப்பதிவின் அமைப்பு:
ஒவ்வொரு வலைப்பதிவும் சில அடிப்படை உறுப்புகள் அல்லது பகுதிகளைப் பெற்றிருக்கும். அவை பின்வருமாறு:
1. வலைப்பதிவுத் தலைப்பு
2. வலைப்பதிவு முகப்பு
3. பதிவின் தலைப்பு
4. பதிவின் உடல்பகுதி
5. பதித்த நாள், நேரம், பதித்தவர் பெயர் முத்திரைகள்
6. பின்னூட்டங்கள்
7. சேமிப்பகம்
8. இணைப்புகள்

மேலே குறிப்பிடப்பட்ட எட்டுப் பகுதிகளையும் வலைப்பதிவின் அடிப்படைப் பகுதிகள் அல்லது வலைப்பதிவின் உறுப்புகள் என்று குறிப்பிடலாம். இவை தவிர்ந்த வேறுசில இணைப்புகளும் பகுதிகளும் அரிதாகப் பதிவுகளில் இடம்பெறுவதுண்டு.

வலைப்பதிவின் ஒவ்வொரு அங்கம் குறித்தும் தனித்தனியாக விரிவான விளக்கம் தொடரும்.

Monday 2 November 2009

வலைத்தளங்கள் - வலைப்பதிவுகள் ஒப்பீடு

வலைத்தளங்கள் - வலைப்பதிவுகள் ஒப்பீடு

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

இணையத்தின் மிக முக்கிய அங்கமான வலைத்தளங்களிலிருந்து வலைப்பதிவுகள் வேறுபட்டவை. வலைத்தளங்கள் அமைத்துக்கொள்ள இடம்பிடிப்பது, வடிவமைப்பது போன்ற பணிகளுக்குக் கட்டணம் வசூலிப்பதுண்டு.

ஆனால் வலைப்பதிவுச் சேவைகள் முற்றிலும் இலவசமானது. வலைத்தளங்களுக்கும் வலைப்பதிவுகளுக்கும் இடையிலான சில வேற்றுமைகளைப் பின்வரும் பட்டியல் தெளிவுபடுத்தும்.

வலைத்தளங்கள்: வலைத்தளங்களை உருவாக்க html அறிவு ஓரளவேனும் தேவை.
வலைப்பதிவுகள்: வலைப்பதிவுகளை உருவாக்க html அறிவு தேவையில்லை. வலைப்பக்கங்களை உருவாக்குவது மிகவும் எளிது. ஏற்கனவே உருவாக்கப்பட்டிருக்கும் படிவங்களில் உள்ளடக்கத்தை உருவாக்கி சமர்ப்பித்துவிட்டால் தானாக வலைப்பதிவு ஒன்று உருவாக்கப்பட்டுவிடும். வார்ப்புருக்கள் (Templates) இந்தப் பணியைச் செய்து முடிக்கின்றன.

வலைத்தளங்கள்: வலைத்தளத்திற்கான உள்ளடக்கங்களை உருவாக்கி எழுதுபவர் ஒருவராகவும், html கொண்டு அத்தகவல்களை உள்ளிட்டு வடிவமைப்பவர் வேறு ஒருவராகவும் இருப்பர்.
வலைப்பதிவுகள்: வலைப்பதிவுக்கான உள்ளடக்கங்களை எழுதுபவரே உள்ளீடு செய்பவராகவும் இருப்பார். எந்தத் தனிப்பட்ட மென்பொருளும் தேவையில்லை. வலைப்பதிவு சேவையை வழங்குபவரே இதற்கான அனைத்து வசதிகளையும் உருவாக்கி வைத்திருப்பார்.

வலைத்தளங்கள்: வலைத்தளங்கள் அடிக்கடிப் புதுப்பிக்கப் படுவதில்லை. சில தளங்கள் மட்டுமே அத்தகைய வசதியைப் பெற்றிருக்கும்.
வலைப்பதிவுகள்: வலைப்பதிவுகள் அன்றாடம் புதுப்பிக்கப்பெறும். தேவைப்பட்டால் ஒருநாளில் பலமுறைகூட புதுப்பிக்கப்பெறும். எப்பொழுதாவது ஒருமுறை புதுப்பிக்கப்படும் பதிவுகளும் உண்டு.

வலைத்தளங்கள்: வலைத்தளங்களில் பெரும்பாலும் கருத்துப்பரிமாற்ற வசதி இருப்பதில்லை. மின்னஞ்சல் வழிப் பின்னூட்டம் சில தளங்களில் உண்டு.
வலைப்பதிவுகள்: வாசகர்கள் உடனுக்குடன் தமது கருத்துக்களை வலைப்பதிவிலேயே பதிவுசெய்யும் வசதி உண்டு. வாசகர் பின்னூட்டங்கள் ஒரு விவாதம் போலத் தொடரவும் பதிவுகளில் வாய்ப்புண்டு.

மேலே பட்டியலிடப்பட்ட வேறுபாடுகள் மட்டுமின்றி வலைப்பதிவுகளுக்கென்றே சில தனித்த வசதிகளும் இணையத்தில் உண்டு.

வலைப்பதிவுகளின் இற்றைப்படுத்தல்கள் உடனுக்குடன் செய்தியோடைகள் வழியாக அனுப்பப்படும். இவ்வசதியைப் பயன்படுத்தி வாசகர்கள் தமக்குப் பிடித்த வலைப்பதிவுகளின் செய்தியோடைகளைத் தத்தமது கணினிகளில் அதற்கான மென்பொருட்களின் உதவியுடன் இணைத்துக் கொண்டு, வலைப்பதிவுகளுக்குச் செல்லாமலேயே இற்றைப்படுத்தல்களைக் கணினியில் பெற்றுக்கொள்ளலாம்.

புலவர் பூங்கொடி பராங்குசம் அவர்களின் இலக்கியக்களம் - நூல் அணிந்துரை

  முனைவர் நா . இளங்கோ கவிதை இரசனை , இது படைப்புக்கு இணையானதோர் முருகியல் செயற்பாடு . என்றைக்குக் கவிதைகள் தோன்றினவோ அன்றைக்கே கவ...