Saturday 31 July 2010

போதிகாவா? பொதுகாவா? எது பழைய புதுச்சேரி?

போதிகாவா? பொதுகாவா? எது பழைய புதுச்சேரி?
புதுச்சேரியில் பௌத்தம் பகுதி-7


முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
பட்ட மேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8

பொதுகா:
கி.பி. முதலாம் இரண்டாம் நூற்றாண்டுகளில் சிறப்புற்று விளங்கிய கிழக்குக் கடற்கரைத் துறைமுகங்களாக காமரா, பொதுகே, சோபத்மா ஆகிய மூன்று துறைமுகங்களைக் குறிப்பிடுவர் பெரிபுளுசு, தாலமி என்ற அயல்நாட்டுப் பயண நூலாசிரியர்கள். இவற்றுள் காமரா காவிரிப்பூம் பட்டினத்தையும், சோபத்மா மரக்காணத்தையும் பொதுகே புதுச்சேரியையும் குறிப்பிடுகின்றது என்பது ஆய்வாளர்களின் முடிபு. (சோ.முருகேசன், ழூவோ துய்ப்ரேய் நோக்கில் புதுச்சேரி, பக். 1-11)

இக்கால அருக்கன்மேடுதான் பண்டைக்காலத்தில் பொதுகே என்னும் பெயரில் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்னும் உண்மையை இப்பகுதியில் அகழ்வாய்வுப் பணிகளை மேற்கொண்ட மார்டடிமர் வீலர், கசால், விமலா பெக்லி, பீட்டர் பிரான்சிஸ் ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர். (சு.தில்லைவனம், புதுச்சேரி மாநிலம் வரலாறும் பண்பாடும், ப.15)

அருக்கன்மேடுதான் பெரிபுளுஸ், தாலமி குறிப்பிடும் பொதுகா என்பது உறுதியாகியுள்ள நிலையில் பொதுகா என்ற சொல் குறிப்பிடும் துறைமுகப் பெயர் எது? என்பது ஆய்வுக் குரியதாகிறது.

ஏனெனில் அயல்நாட்டுப் பயணியர் நம் தமிழகத்தின் எந்த ஊர்ப்பெயரையும் சரியான உச்சரிப்போடு குறிப்பிடுவதில்லை. அவர்கள் தொண்டியைத் திண்டிஸ் என்றும் கொற்கையைக் கொல்சாய் என்றும் காவிரிப் பூம்பட்டினத்தைக் காமரா என்றும் மரக்காணத்தைச் சோபட்மா என்றும் குறிப்பிட்டுள்ளனர். புதுச்சேரி வரலாற்று ஆய்வாளர்கள் பலரும் புதுச்சேரி என்ற பெயர்தான் பொதுகே –பொதுகா என்று பெரிபுளுஸ், தாலமி போன்றவர்களால் குறிப்பிடப்பட்டது என்கிறார்கள்.

புதுச்சேரி – போதுச்சேரி – போது – பொதுக்கே

Puducherri – Poducheri – Podu - Poduke

என்று விளக்குகிறார் சோ. முருகேசன். (ழூவோ துய்ப்ரேய் நோக்கில் புதுச்சேரி, ப. 9)

இன்றைக்கு வழக்கிலுள்ள புதுச்சேரி என்ற பெயரைத்தான் பெரிபுளுஸ், தாலமி போன்றோர் பொதுகா எனக் குறிப்பிட்டார்கள் என்பது பொருத்தமில்லை. ஏனெனில் 16 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் புதிதாக மக்கள் வாழத் தொடங்கிய இன்றைய புதுச்சேரி நகரம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள்தாம் புதுச்சேரி என்ற பெயரால் அழைக்கப்பட்டது. கி.பி. முதல், இரண்டாம் நூற்றாண்டுகளில் அருக்கன்மேட்டுத் துறைமுகப் பகுதியை இப்பெயரால் குறிப்பிட்டிருக்க வாய்ப்பேயில்லை.

ஐராவதம் மகாதேவன் பொதிகை என்ற சொல்லோடு தொடர்புடையது பொதுகே என்கிறார். பொதிகை மலை, அகத்தியர் முதலான தொன்மச் செய்திகளோடு தொடர்புபடுத்தி முற்காலத்தில் இப்பகுதியில் அகத்தியர் வந்து தங்கியிருக்கலாம் என்றும் அதன்பொருட்டு இவ்வூர் பொதிகை என வழங்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர் குறிப்பிடும் செய்திகள் வெறும் யூகங்களேயன்றி உண்மையில்லை. ஏனெனில், புதுச்சேரி ஊரின் மேற்குப்பகுதி நிலப்பரப்பு சற்று உயர்ந்து செம்மண் மேடாக உள்ளதேயன்றி மலைகளோ குன்றுகளோ இப்பகுதியில் இல்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.

முனைவர் சு. தில்லைவனம், பொதுக்கம் என்ற பெயரின் திரிபு வடிவமே பொதுகே என்கிறார். அதற்கு அவர் காட்டும் சான்று, “புள்ளிக் கள்வன் புனல்சேர் பொதுக்கம்” என்ற கலித்தொகை (பா.88. அடி.10) பாடலடியாகும். பொதுக்கம் என்பது நெய்தல் நிலத்தைச் சார்ந்த கடற்கரைப் பகுதி என்று அவர் விளக்கமளிக்கிறார். (சு.தில்லைவனம், புதுச்சேரி மாநிலம் வரலாறும் பண்பாடும், ப.19) அவர் மேற்கோள் காட்டும் பாடல் ஒரு மருதக்கலி பாடலாகும். அப்பாடலில் இடம்பெறும் சொல் பொதுக்கம் அன்று, ஒதுக்கம் என்பதாகும். ஒதுக்கம் என்பதற்கு நடை என்பது பொருள். நண்டின் நடை மணலில் ஏற்படுத்திய கீறலைப் பற்றியது அப்பாடல் குறிப்பிடும் செய்தி. எனவே பொதுக்கம் என்று கலித்தொகை குறிப்பிடும் சொல்லே பொதுகா என்பதன் மூலவடிவம் என்று தில்லைவனம் குறிப்பிடும் விளக்கம் பொருந்துமாறில்லை.

பொதிகை, பொதுக்கம் என்ற இரண்டு விளக்கங்களும் பொருந்தாத நிலையில் பொதுகா, பொதுகே என்ற சொல்லால் குறிப்பிடப்படும் அருக்கன்மேட்டுத் துறைமுகப் பகுதியின் பழையபெயர் குறித்த ஆய்வு தேவைப்படுகின்றது.

போதிகா – பொதுகா – பொதுகே

அருக்கன்மேடு, காக்கையன் தோப்பு என்றழைக்கப்படும் சாக்கையன் தோப்பு, மேல் சாத்தமங்கலம் முதலான ஒத்த வரலாற்றுச் சிறப்புடைய ஊர்கள் அனைத்திலும் பௌத்த மதமே செல்வாக்கு பெற்ற மதமாயிருந்தமையும், பௌத்த வழிபாடே பெருவழக்காய் இருந்தமையும் முன்னர் மெய்ப்பிக்கப்பட்ட காரணத்தால் பொதுகா என்ற துறைமுகப் பெயரும் பௌத்த அடையாளங்களோடு கூடிய ஊர்ப்பெயராய் இருந்திருக்க வாய்ப்புகள் அதிகமுண்டு. அந்த வகையில் பொதுகா என்ற சொல்லோடு ஒலி ஒப்புமையுடைய போதிகா (போதி+கா) என்பதே அருக்கன்மேடு துறைமுகத்தின் பழைய பெயராயிருக்கலாம்.

பௌத்தர்கள் தங்கள் பெயருடனோ அல்லது தங்கள் வழிபாட்டுத் தலங்களின் பெயர்களுடனோ போதி என்ற சொல்லை இணைத்துப் பெயரிடுவது மரபு. சான்று: இளம் போதியார், வச்சிர போதி, போதி மங்கலம். பௌத்தரை போதியார் என்று தேவாரம் குறிப்பிடுவதும் ஒப்பு நோக்கத்தக்கது.

போதி +கா, பண்டைக்காலத்தில் பூந்தோட்டங்களுக்கு இடையில்தான் புத்தக் கோயில்களை அமைப்பது வழக்கம். கா என்பது தோட்டம், சேர நாட்டில் இன்றும் சாத்தன் காவு என்ற பெயர் வழங்குகிறது. புத்த வழிபாடாகிய சாத்தன் வழிபாடு இன்று சாஸ்தா வழிபாடாக மாறியுள்ளமையை நினைவுகூர்தல் வேண்டும். போதி+கா, புத்தன் வழிபாடுள்ள தோட்டம் என்ற பொருளில் போதிகா என்று வழங்கப்பட்ட பெயரே பெரிபுளுஸ், தாலமி போன்றவர்களால் பொதுகா –பொதுகே என்று வழங்கப்பட்டிருக்க வேண்டும். E. H. Warmington வார்மிங்டன் போதிகாவை போதுஸ் என்று குறிப்பிடுவதனையும் இங்கு ஒப்பிட்டுப் பார்க்கலாம். (சு.தில்லைவனம், புதுச்சேரி மாநிலம் வரலாறும் பண்பாடும், ப. 15)

போதிகா – போதுகா – பொதுகா – பொதுகே

அருக்கன்மேடு, சாக்கையன் தோப்பு முதலான பௌத்தச் சிற்றூர்களை ஒட்டி அமைந்திருந்த மிகப்பெரிய துறைமுகப் பட்டினமே போதிகா என்பதாகும். தாலமி இவ்வூரைப் பொதுகா எம்போரியம் என்று குறிப்பிட்டுள்ளார். எம்போரியம் என்பதற்கு வணிகத்தலம் என்பது பொருள். தாலமி குறிப்பிட்டுள்ளது போல் போதிகா ஒரு மிகச்சிறந்த வணிகத்தலமாகத் திகழ்ந்திருந்தமை புதைபொருள் சான்றுகளால் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.

முடிப்பாக:

அரிக்க மேடு அன்று அது அருக்கன் மேடு.

அருக்கன் மேட்டின் விருமன் கோயிலில் உள்ள சிலை புத்தர் சிலையே.

காக்காயன் தோப்பு முந்தைய சாக்கையன் தோப்பே.

மேல்சாத்தமங்கலம் அகழ்வாய்வும் அருக்கன் மேட்டின் பௌத்தத் தொடர்பை உறுதி செய்கின்றது.

அருக்கன்மேட்டுப் பானை ஓட்டு பிராமி எழுத்து வடிவங்கள் பௌத்தர்களால் நடைமுறைப் படுத்தப்பட்டனவே.

பொதுகா புதுச்சேரியைக் குறிப்பிடவில்லை.

பொதுகாவின் பழைய சரியான பெயர் போதிகா என்பதே.


துணை நின்ற நூல்கள்:

1. அ. இராமசாமி -
புதுச்சேரி வரலாறு,
பூங்குன்றம் பதிப்பகம்,
மதுரை-9
1992
2. கல்லாடன் -
புதுச்சேரி மரபும் மாண்பும்,
புதுச்சேரி வரலாற்றுச் சங்கம்,
புதுச்சேரி-1,
2002

3. சு. தில்லைவனம் -
புதுச்சேரி மாநிலம் வரலாறும் பண்பாடும்,
சிவசக்தி பதிப்பகம்,
புதுச்சேரி-8,
2007
4. சோ. முருகேசன் -
கசாலின் பார்வையில் அரிக்கமேடு,
அம்மா முத்து பதிப்பகம்,
புதுச்சேரி -11
1997
5. சோ. முருகேசன் -
ழுவொ துய்ப்ரேய் நோக்கில் புதுச்சேரி
அம்மா முத்து பதிப்பகம்,
புதுச்சேரி -11
2000
6. சீனி. வேங்கடசாமி -
பௌத்தமும் தமிழும்,
பாவை பப்ளிகேஷன்ஸ்,
சேன்னை-14
2007
7. ந. வேங்கடேசன் -
வரலாற்றில் அரிக்கமேடு,
திருமுடிப் பதிப்பகம்,
வில்லியனூர், (புதுச்சேரி)
1990

Tuesday 13 July 2010

அருக்கன்மேட்டு பிராமி எழுத்துக்கள் -புதுச்சேரியில் பௌத்தம் பகுதி -6

அருக்கன்மேட்டு பிராமி எழுத்துக்கள்

முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
பட்ட மேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8

அருக்கன்மேட்டு பிராமி எழுத்துக்கள்



அருக்கன்மேட்டில் கிடைத்த புதைபொருட் சின்னங்களில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. பழந்தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளே. அருக்கன்மேட்டுப் பானை ஓடுகளில் சில பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
‘யாடு வளபூதியின் பானை’ என்ற பிராமி எழுத்துக்கள் இடப்பட்ட பானைஓடு ஒன்று அருக்கன்மேட்டில் கிடைத்துள்ளது. (அ. இராமசாமி, புதுச்சேரி வரலாறு, ப. 19)

இப் பானைகளில் காணப்படும் எழுத்துக்கள் கி.மு. 2 முதல் கி.பி. 2 வரையிலான தமிழகப் பாறைக் கல்வெட்டுக்களில் காணப்படும் பிராமி எழுத்துக்களே.

பிராமி எழுத்துக்களைக் கண்டுபிடித்தவர் பகவான் புத்தர் என்ற நம்பிக்கையுண்டு. மாமன்னர் அசோகர் தொடங்கி பௌத்தர்களே இந்தியா முழுவதிலும் பிராமி எழுத்தைப் பரவலாக உபயோகத்திற்குக் கொண்டுவந்தார்கள் என்பதில் ஐயமில்லை. அருக்கன்மேட்டுப் பானை ஓடுகளில் பிராமி எழுத்துக்களின் உபயோகம் பௌத்தர்களாலேயே நடைமுறைப் படுத்தப்பட்டது என்று கருதவும் வாய்ப்புள்ளது.

பௌத்தம் அழிக்கப்பட்டது -புதுச்சேரியில் பௌத்தம் பகுதி -5

பௌத்தம் அழிக்கப்பட்டது

முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
பட்ட மேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8

பௌத்தம் அழிக்கப்பட்டது:

புதுச்சேரியில் பௌத்தமதம் பெருவழக்காயிருந்த வரலாற்றுச் செய்தியை உறுதிப்படுத்தும் வகையிலும் பிற்காலத்தில் பௌத்த விகாரைகளும் பௌத்தமும் பௌத்தமத அடையாளங்களும் மத வன்முறைகளால் திட்டமிட்டுத் தாக்கி அழிக்கப்பட்டன என்பதை உறுதிப்படுத்தும் வகையிலும் சில சான்றுகள் புதுவைப் பகுதிகளில் கிடைத்துள்ளன.

அருக்கன்மேட்டு புத்தர் சிலையை ஒத்த, மேலும் இரண்டு புத்தர் சிலைகள் புதுவையில் கிடைத்துள்ளன. ஓன்று, புதுவை அரசின் பழைய பொதுப்பணித்துறை அலுவலகத்திலும் மற்றொன்று கருவடிக்குப்பம் பகுதியிலும் கண்டெடுக்கப்பட்டன. இரண்டு சிலைகளுமே தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடைத்துள்ள கழுத்து வரையிலான கருங்கல் சிலைகளாகும்.

அருக்கன்மேட்டுப் புத்தர் சிலை குறித்து P.Z. பட்டாபிராமன் தந்துள்ள வருணனைகளை முற்றிலும் ஒத்ததாக இச்சிலைகள் உள்ளன. சிலையின் இடுப்பில் ஒரு வேட்டியும் மார்பில் மடித்துப் போடப்பட்டுள்ள துண்டும் காணப்படுகின்றன. பத்மாசன முறையில் அமர்ந்த நிலையில் வடிக்கப்பட்டுள்ள இச்சிலைகளில் பகவான் புத்தர் இரண்டு கைகளும் கோர்த்து தியான முத்திரை நிலையில் அமர்ந்துள்ளார்.

இந்த இரண்டு தலையில்லாத புத்தர் சிலைகள் மட்டுமல்லாமல் கிருமாம்பாக்கத்தில் ஒரு புத்தர் சிலையின் தலைப்பகுதி மட்டும் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. உடைத்துத் துண்டிக்கப்பட்ட நிலையில் கிடைக்கும் இப்புத்தர் தலைச்சிற்பம் 40 செ.மீ. உயரமுள்ளது. தலையின் அளவை நோக்க இச்சிலை முழுவடிவத்தில் சுமார் 120 செ.மீ அளவில் அருக்கன்மேட்டு புத்தர் சிலையை ஒத்த உயரம் உடையதாய் இருந்திருக்க வேண்டும் என ஊகிக்க முடிகிறது. கிருமாம்பாக்கத்தில் கிடைத்த இப்புத்தர் தலைச் சிற்பம் முதல் நூற்றாண்டைச் சேர்ந்ததாயிருக்கலாம் என்பார் கே. இராஜாராம் தம் புதுவையில் அருங் காட்சியகங்கள் என்ற கட்டுரையில். (புதுச்சேரி மரபும் மாண்பும், ப. 223)

இப்படிப் புத்தர் சிலையின் துண்டிக்கப்பட்ட உடல் மற்றும் தலைப்பகுதிகள் புதுவைப் பகுதிகளில் கிடைப்பதிலிருந்து பௌத்த மதமும் மத அடையாளங்களும் பிற்காலத்தில் திட்டமிட்டு சிதைக்கப்பட்டு அழிக்கப்பட்டமை உறுதியாகின்றது.

மேலே குறிப்பிட்டுள்ள இம்மூன்று புத்தர்சிலையின் பகுதிகளும் தற்போது புதுச்சேரி அரசின் அருங்காட்சியகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டிருப்பதோடு பார்வைக்கும் வைக்கப்பட்டுள்ளன.

சாக்கையன் தோப்பும் சாத்தமங்கலமும் -புதுச்சேரியில் பௌத்தம் பகுதி-4

சாக்கையன் தோப்பும் சாத்தமங்கலமும்

முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
பட்ட மேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8

அருக்கன் மேடும் சாக்கையன் தோப்பும்:

அரிக்கன்மேடு என்ற பெயரால் வழங்கப்படும் புதையுண்ட நகரம் அருக்கன் மேடே என்பதும் அங்குள்ள பழைய சிலை புத்தர் சிலையே என்பதனையும் உறுதிப்படுத்தும் மற்றுமொரு அகச்சான்று அருக்கன்மேட்டின் ஒட்டிய பகுதியாகிய காக்காயன் தோப்பு என்ற ஊர்ப்பெயராகும்.

காக்காயன் தோப்பு என்ற பெயரால் அறியப்படும் அவ்வூர் முற்காலத்தில் சாக்கையன் தோப்பு என்று வழங்கப் பட்டிருக்கலாம். சாக்கியன் - சாக்கையன் வழிபாடு நிகழ்த்தப்பட்ட தோப்பு சாக்கையன் தோப்பு. சாக்கியன் என்பது புத்தரைக் குறிக்கும் பெயராகும். செஞ்சியாற்றின் கிழக்கு மற்றும் தெற்குக் கரைகளில் அருக்கன்மேடு அமைந்திருப்பதும் அருக்கன்மேட்டை ஒட்டிய தென்பகுதி நிலப்பரப்பாகச் சாக்கையன் தோப்பு அமைந்திருப்பதும் புத்தர் வழிபாடு இப்பகுதிகளில் பெருவழக்காய் இருந்திருக்கக் கூடும் என்பதனை உறுதி செய்கின்றன.

அருக்கன் மேடும் மேல் சாத்தமங்கலமும்:

இன்றைய புதுச்சேரிக்கு மேற்கே 12 கி.மீ. தொலைவில் வில்லியனூருக்கு அருகே வில்லியனூர் ஏம்பலம் சாலையில் உள்ள ஊர் மேல்சாத்தமங்கலம். சாத்தன் என்ற சொல்லும் மங்கலம் என்ற சொல்லும் புத்த மதத்தின் அடையாளங்களைக் கொண்டிருக்கும் சொற்களாகும். சாத்தமங்கலம் என்ற பெயரே அவ்வூர் ஒரு பௌத்த ஊர் என்பதனை வெளிப்படுத்தும்.

மேல் சாத்தமங்கலத்தில் இந்தியத் தொல்பொருள் துறையின் தென்பகுதிப் பொறுப்பாளர்கள் 26-2-83 முதல் 6-3-83 முடிய அகழ்வாய்வு மேற்கொண்டார்கள். அவ்வகழ்வாய்வில் சாத்தமங்கலத்தின் தொன்மை குறித்த அடையாளங்கள் கண்டெடுக்கப்பட்டன. அவ்வகழ்வில் உடனிருந்து பணியாற்றிய வில்லியனூர் வேங்கடேசன் தரும் செய்திகள் மிகவும் இன்றியமையாதன.

“இரண்டு மீட்டர் சதுரத்தில் இரண்டரை மீட்டர் ஆழத்தில் சோதனைக்குழி தோண்டப்பட்டது. அதில் பல அரிய செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன. கிடைத்த பொருள்கள்: கருப்பு சிவப்புப் பானை ஓடுகள், வண்ணம் தீட்டப்பெற்ற ஓடுகள், ரௌலட்டட் என்றழைக்கும் ரோமாபுரியில் செய்த மட்பாண்ட ஓடுகள், ஆம்போரா என்றழைக்கப்பெறும் மது ஜாடிகளின் துண்டுகள், ஜாடியின் மூடிக் குமிழ்கள், வழவழப்பான ஓட்டுத் துண்டுகள், மெகலித்திக் காலக் கட்டத்தைச் சேர்ந்த ஓடுகள்” (வரலாற்றில் அரிக்கமேடு, ப. 147)

மேல் சாத்தமங்கலத்தில் கிடைத்த அத்துணைப் பொருள்களும் நமக்கு அருக்கன் மேட்டில் கிடைத்த புதைபொருட்களையே ஒத்திருக்கின்றன. அருக்கன் மேட்டின் காலத்தை ஒத்த கி.பி. முதலிரு நூற்றாண்டுகளின் நாகரீகச் சின்னங்களே சாத்தமங்கலப் புதைபொருட்கள் என்பது தெளிவு. அருக்கன்மேட்டு நாகரிகமே சாத்தமங்கலம் வரை பரவியிருந்தமை தொல்லியல் ஆய்வுகளால் உறுதிப் படுத்தப்பட்ட நிலையில் அருக்கன்மேடு தொடங்கிச் சாத்தமங்கலம் வரை பௌத்த மதமே பெருவழக்கு பெற்றிருந்தது என்று துணிய இடமுள்ளது.

Monday 5 July 2010

அருக்கன்மேடு – அரிக்கமேடானது -புதுச்சேரியில் பௌத்தம் -பகுதி 3

அருக்கன்மேடு – அரிக்கமேடானது

முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
பட்ட மேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8

அருக்கன்மேடு – அரிக்கமேடானது:

அரிக்கமேடு பெயராய்விற்கும் சமயப் பின்னணி குறித்த ஆய்வுகளுக்கும் தக்க ஆதாரமாயிருக்கும் குறிப்பிட்ட அப்புத்தர் சிலை குறித்த ஆய்வு முதலில் முக்கியத்துவம் பெறுகின்றது. புதுச்சேரி வரலாற்றாய்வாளர் P.Z. பட்டாபிராமன் 1956 மே மாதம் வெளியான ‘லெ த்ரே துய்னியம்’ le trait-d’union என்ற மாத இதழில் எழுதியுள்ள கட்டுரை இச்சிலை புத்தர் சிலையே என்பதனையும் இம்மேடு அரிக்கன்மேடே என்பதனையும் உறுதிசெய்கின்றது.

கசாலின் பார்வையில் அரிக்கமேடு என்னும் நூலில் டாக்டர் சோ.முருகேசன் அவர்கள் மேற்கோள் காட்டும் பகுதி பின்வருமாறு,

“அரியாங்குப்பத்திலிருந்து வீராம்பட்டினம் செல்லும் வழியில் காக்காயன் தோப்பு என்ற குக்கிராமம் உள்ளது. அதற்கு வடக்கே அரிக்கன்மேடு என்ற ஒரு பெருமணல்மேடு அரியாங்குப்பம் ஆற்றிற்குக் கீழ்க்கரையில் கம்பீரமாக உயர்ந்து காட்சியளிக்கிறது.
அம்மணல்மேட்டில் ஒரு பழங்கால புத்தர் சிலை உள்ளது. இம்மேட்டிற்கு ‘அரிக்கன்மேடு’ என்று பெயர் வரக்காரணம் என்ன என்று யோசிக்கும் போது புத்தருக்கு ‘அருக்கன்’ என்ற ஒரு பெயருமுண்டு (சூடாமணி நிகண்டு) என்பது நமது நினைவுக்கு வருகிறது.
ஆகவேதான் இம்மேடு அருக்கன்மேடு என்று அழைக்கப்பட்டு, பின்னர் அரிக்கமேடு என மருவியுள்ளது.

கருங்கல் சிற்பமாகிய அப்புத்தர் சிலையின் உயரம் 118 செ.மீ ஆகும். தலைமுடி சுருட்டையாகவும் தலைஉச்சியில் கொண்டையும், காதுகளின் கீழ்ப்பாகம் தொங்கிக்கொண்டும் காணப்படுகின்றன. சிலையின் இடையில் ஒரு வேட்டியும் மார்பில் ஒரு துண்டும் (போர்த்திய நிலையில்) அலங்கரிக்கின்றன. பத்மாசன முறையில் சிலை ஒரு பத்ம பீடத்தில் உட்கார்ந்துள்ளது. இரண்டு கைகளும் கோர்த்து தியான முத்திரை நிலையில் உள்ளன. இது 10ஆம் நூற்றாண்டு இறுதி அல்லது 11ஆம் நூற்றாண்டில் அமைந்ததாக இருத்தல் வேண்டும்.”

P.Z. பட்டாபிராமன் சிலை குறித்துத் துல்லியமாகத் தரும் தகவல்கள், அதாவது இடையில் ஒரு வேட்டியும் மார்பில் ஒரு துண்டும் என்று ஆடை குறித்துக் குறிப்பிடும் செய்திகள் அச்சிலை புத்தர் சிலையே என்பதனை உறுதிப் படுத்துகின்றன.

அருகன் சிலை, புத்தர் சிலை இரண்டும் சற்றேறக்குறைய ஒரே வடிவில் செதுக்கப்பட்டாலும் இரண்டு சிலைகளுக்கும் உள்ள அடிப்படையான வேறுபாடு ஆடையே ஆகும். அருகன் சிலைகளில் ஆடை இருப்பதில்லை. புத்தர் சிலைகளில் மட்டுமே ஆடையிருப்பதாகச் செதுக்கப்படும். (சிலையின் ஆடை குறித்த தகவல்களைக் கட்டுரை ஆசிரியரும் நேரில் கண்டும் புகைப்படமெடுத்தும் உறுதி செய்துகொண்டார்)

இச்சிலை குறித்த பழைய குறிப்பொன்று உண்டு. 1761 ஆம் ஆண்டில் வெளியான லெ ழாந்த்தீய் -le gentil என்ற வரலாற்று அறிஞரின் பயணநூலில் இச்சிலை குறித்த விபரங்களை அவர் பதிவு செய்துள்ளார், “அம்மணல் வெளியில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள இச்சிலையானது தாய்லாந்திலுள்ள புத்தர் சிலை போன்றே காணப்படுகிறது. தலையின் வடிவம், முகபாவம், கைகளை அமைத்திருக்கும் முறை, அதன் காதுகள் அனைத்தும் புத்தர் சிலையை ஒத்திருக்கின்றன. அங்கிருந்த மக்களிடம் நான் விசாரித்தபோது அவர்களும் இது பவுத்த சிலை (Baouth) என்று கூறினர்” (கசாலின் பார்வையில் அரிக்கமேடு, ப.115)

வரலாற்று அறிஞர் லெ ழாந்த்தீய் -le gentil அவர்களின் பயணக் காலத்தில் மக்களால் பவுத்த சிலை என்று அடையாளப் படுத்தப்பட்ட சிலை காலப்போக்கில் பல பெயர் மாற்றங்களையும் பண்பாட்டு மாற்றங்களையும் எதிர்கொள்ள நேர்ந்தது.

லெ ழாந்த்தீய் -le gentil அவர்கள் கைவிடப்பட்ட நிலையில் அப்புத்தர் சிலை இருந்ததாகக் குறிப்பிடுகின்றார். ஆனால் அச்சிலை நிறுவப்பட்ட காலத்தில் வழிபாட்டுக்குரிய நிலையில் புத்த விகாரையில் வைத்து வழிபடப்பட்டிருக்க வேண்டும். பின்னர் அவ்விகாரை காணாமல் போனது வரலாற்றில் ஒரு வினாக்குறியே! புத்த விகாரையாக இருந்த காலத்தில் இக்கோயிலுக்கு பர்மா கோயில் என்ற பெயர் வழங்கப்பட்டமை பற்றிய குறிப்பொன்று உண்டு.



அருக்கன்மேட்டு புத்தர் சிலை - இன்றைய தோற்றம்

புகைப்படம்: கட்டுரை ஆசிரியர்


“நாகப்பட்டினத்தில் சீனக் கோயில் இருந்தது போன்றே புதுச்சேரியிலும் அக்காலத்தில் பர்மா கோயில் இருந்துள்ளது. இதுவும் ஒரு புத்த கோவிலேயாகும். இங்கு புத்த கோவிலிருப்பதானது புதுச்சேரி துறைமுகத்தின் புகழை உயர்த்துவதுடன் இங்கு ஒரு புத்த சமூகமும், புத்தமத இயக்கமும் இருந்திருந்தன என்பதைக் காட்டுகிறது. அத்துடன் இந்தோ சீனாவிலிருந்து வந்த ஒரு புத்த சமுதாயமே இங்கு வாழ்ந்திருந்தது என்பதையும் உறுதிப்படுத்துகிறது.” என்று லெ ழாந்த்தீய் -le gentil அவர்களின் பயண நூலை மேற்கோள் காட்டி எழுதுகிறார் டாக்டர் சோ.முருகேசன் அவர்கள் (ழுவோ துய்ப்ரேய் நோக்கில் புதுச்சேரி, ப.53)

அருக்கன் மேட்டின் பவுத்த கோயில், பர்மா கோயில் என்ற பெயரால் வழங்கப்பட்டது என்பதற்கு அடையாளமாக இருபதாம் நூற்றாண்டில் அச்சிலையை நிறுவி இந்து சமயக் கலப்புடன் வழிபாடு செய்துவரும் அப்பகுதி மக்கள் தொடக்கத்தில் அக்கோயிலை பிரமன் கோயில் என்றழைத்தனர். பர்மா கோயில் என்பதுதான் பிரமன் கோயில் என்று மாறியிருக்கலாம். அண்மைக் காலமாக அக்கோயில் விருமன் கோயில் என்று வழங்கப்படுவது களஆய்வில் கண்டறியப்பட்டது.

பர்மா கோயில் - பிரம்மன் கோயில் - விருமன் கோயில்

விருமன் கோயிலில் புத்தர் ருத்ராட்சம் அணிந்து நெற்றியிலும் உடம்பிலும் நீறு பூசி புதிய அவதாரம் எடுத்திருப்பது போதாதென்று கோயிலின் கருவறையின் மேல் புதிதாக ஸ்ரீ பிரும்மரிஷி ஆலயம் என்று பெயரிடப்பட்டிருப்பது கால மாற்றத்தின் விளைவு.

அரிக்கமேடு - பெயர்க் காரணம் -புதுச்சேரியில் பௌத்தம் பகுதி 2

அரிக்கமேடு - பெயர்க் காரணம்

முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
பட்ட மேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8

அரிக்க மேடு:

புதுச்சேரியை அடுத்துள்ள அரிக்கமேடு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க துறைமுக நகரமாகும் கி.பி.முதல் இரண்டாம் நூற்றாண்டுகளில் புகழ்பெற்று விளங்கிய இந்நகரம் இன்று மண்மேடாகக் காட்சியளிக்கிறது. இன்றைய புதுச்சேரிக்குத் தெற்கே வங்காள விரிகுடாவை ஒட்டி வராகநதி எனப்படும் செஞ்சியாற்றங் கரையில் அமைந்துள்ள மேட்டுப்பாங்கான பகுதியே அரிக்கமேடு.
அரிக்கமேடு பெயர்க்காரணம் குறித்துப் பல்வேறு யூகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கே.ஆர். சீனிவாசன் தம் வாழ்வியல் களஞ்சியக் கட்டுரையில் அரிக்கமேடு என்பது அருக்குமேடு (Mound of ruins)அல்லது அருகுமேடு (Mound on ariver bank)என்பதன் திரிபாகலாம் என்கிறார். (வாழ்வியல் கலைக் களஞ்சியம் தொகுதி-1, ப. 732) ஆற்றின் போக்கால் அரிக்கப்பட்ட கரை என்பது இன்றைய நிலை. இன்றைய நிலையை விளக்கும் பெயர்க் குறியீட்டை அன்றைக்கே அப்பகுதிக்கு இட்டு வழங்கியிருப்பார்கள் என்ற விளக்கம் பொருத்தமாயில்லை.

களப்பிரர் காலத்துச் சமணசமய ஆக்கிரமிப்பின் காரணமாகத் தமிழகத்தில் நுழைந்த அருக வழிபாடு பொதுகே பகுதியில் நிலைபெற்றதால் பண்டைய பொதுகே என்னும் பெயர் மறைந்து அருகன்மேடு என்னும் பெயரே பரவலாக வழங்கப்படலாயிற்று, அருகன்மேடு என்னும் பெயரே காலப்போக்கில் மருவி அரிக்கமேடு என்றாயிற்று என்பார் முனைவர் சு.தில்லைவனம் (புதுச்சேரி மாநிலம் வரலாறும் பண்பாடும், ப.23).

இக்கூற்றுக்கு, இப்பகுதியில் கிடைத்த புத்தர் சிலையை அருகன் சிலை என்று தவறாகக் கணித்துச் சான்று காட்டுவார் அவர். அவர் சான்று காட்டும் சிலை புத்தர் சிலையே என்பது ஐயத்திற்கிடமின்றி மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. எனவே முனைவர் சு.தில்லைவனம் அவர்களின் கூற்று பொருந்தாது.

புதுச்சேரியில் பௌத்தம் பகுதி-1

புதுச்சேரியில் பௌத்தம்

முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
பட்ட மேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8

கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் கௌதம புத்தரால் வட இந்தியாவில் தோற்றுவிக்கப்பட்ட பௌத்தமதம், தமிழகத்தில் பரவி செல்வாக்கு பெற்ற காலம் குறித்து மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. கடைச்சங்க நூல்களில் பௌத்தம் குறித்த வெளிப்படையான குறிப்புகள் கிடைக்காத நிலையில் கடைச்சங்க காலத்திற்குப் பின்னர்தான், சற்றேறக்குறைய கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் பௌத்தமதம் தமிழ்நாட்டில் பரவியிருக்கக்கூடும் என்று பொதுவாகக் கருதப்படுகின்றது. ஆனால் இக்கருத்து பொருந்தாது.

ஏனெனில் மாமன்னர் அசோகர் காலத்திலேயே அதாவது கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே பௌத்தம் தமிழகத்தில் பரப்பப்பட்டது என்பதற்கான அகச்சான்றாக அசோகரின் கல்வெட்டு ஒன்றனை எடுத்துக்காட்டி நிறுவுகின்றார் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள். அவர் கூறும் ஆதாரம் பின்வருமாறு,

வட இந்தியாவின் பிஷாவர் நகரத்துக்கருகில் காணப்படும் அசோகரின் சாசனத்தில் (Rock Edict iii) தரும விஜயம் (அறவெற்றி) என்னும் வெற்றியே மாட்சி மிக்க அரசரால் (அசோக மன்னரால்) முதல்தரமான வெற்றியென்று கருதப்படுகின்றது. இந்த வெற்றி இந்த இராச்சியத்திலும், இதற்கப்பாற்பட்ட அறுநூறு யோசனை தூரத்திலுள்ள அண்டியோகஸ் என்னும் யவன அரசருடைய தேசத்திலும் அதற்கும் அப்பால் டாலமி, அண்டிகொனஸ் மகஸ், அலெக்ஸாந்தர் என்னும் பெயருள்ள நான்கு அரசர்களின் தேசங்களிலும், இப்பால் தெற்கேயுள்ள சோழ, பாண்டிய, தாம்பிரபரணி (இலங்கை) வரையிலும் இந்த (அற) வெற்றி அடிக்கடி அரசரால் கைப்பற்றப்பட்டது.

இந்தச் சாசனம் கி.மு. 258 இல் எழுதப்பட்டது. அசோகமன்னர் தமிழ் நாட்டிலும், இலங்கையிலும் தரும விஜயத்தை- அதாவது, பௌத்த தருமத்தைப் போதித்து அதனைப் பரவச் செய்வதால் வந்த அறவெற்றியைக் கைப்பற்றினார் என்னும் செய்தியை இச்சாசனம் தெரிவிக்கின்றது. இதன் திரண்டபொருள் என்னவென்றால், அசோகச் சக்கரவர்த்தி தூதர்களை (பௌத்த பிட்சுக்களை) அனுப்பிப் பௌத்த தருமத்தைத் தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் மற்றும் பலநாடுகளிலும் பரவச் செய்தார் என்பதே. (மயிலை சீனி. வேங்கடசாமி, பௌத்தமும் தமிழும், ப.25)

ஆக கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே பௌத்தமதம் தமிழ்நாட்டில் பரப்பப்பட்டது என அறிகிறோம். தமிழகத்தில் பௌத்தம் பரவப் பணியாற்றியவர் மாமன்னர் அசோகரின் தம்பியாகிய மகிந்தர் என்றழைக்கப்படும் மகேந்திரர் ஆவார்.

புலவர் பூங்கொடி பராங்குசம் அவர்களின் இலக்கியக்களம் - நூல் அணிந்துரை

  முனைவர் நா . இளங்கோ கவிதை இரசனை , இது படைப்புக்கு இணையானதோர் முருகியல் செயற்பாடு . என்றைக்குக் கவிதைகள் தோன்றினவோ அன்றைக்கே கவ...