Sunday, 20 December 2009

சினிமாராணி டி.பி.இராஜலட்சுமி:

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8



சினிமாராணி டி.பி.இராஜலட்சுமி:
தமிழ்த் திரைப்படங்கள் பேசத்தொடங்கி எழுபத்தைந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. 1931 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி சனிக்கிழமை தமிழின் முதல் பேசும்படம் வெளியானது. திரைப்படத்தின் பெயர் காளிதாஸ்.
1931 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22ஆம் தேதி சுதேசமித்திரன் இதழில் வெளியான காளிதாஸ் திரைப்பட விளம்பரம் இது.

கினிமா சென்டிரல்
1931-ம் வருஷம் அக்டோபர் மாதம்31-ம் தேதி சனி முதல்
தமிழ், தெலுங்கு பாஷையில் தயாரிக்கப்பட்ட
முதல் பேசும் படக்காட்சியைக் கேளுங்கள்
மிஸ். டி. பி. ராஜலட்சுமி நடிக்கும்
“காளிதாஸ்”
முழுதும் பேச்சு, பாடல், நடனம் நிறைந்த காட்சி
இம்பீரியல் மூவிடோன் கம்பெனியாரால் தயாரிக்கப்பட்டது
உயர்ந்த கீர்த்தனங்கள், தெளிவான பாடல்கள், கொரத்தி நாட்டியங்கள்
பாதி கெஜட் காட்சிகளும் காண்பிக்கப்படும்

(அறந்தை நாராயணன், தமிழ் சினிமாவின் கதை, ப.41)

இத்திரைப்பட விளம்பரத்தில் மிஸ்.டி.பி.ராஜலட்சுமி நடிக்கும் காளிதாஸ் என்று விளம்பரப்படுத்தப் பட்டிருப்பதைக் கவனித்தால் தமிழ்த்திரைப்பட உலகுக்கும் டி.பி.ராஜலட்சுமிக்கும் உள்ள தொப்புள்கொடி உறவுபுரியும். வழக்கமாகக் கதாநாயகர்களைக் கொண்டே திரைப்படங்கள் விளம்பரப் படுத்தப்படும் மரபை மீறித் தமிழின் முதல் திரைப்படமே கதாநாயகியை முன்னிறுத்துவது கவனத்திற்குரியது. அதற்குக் காரணம், காளிதாஸ் முதல் தமிழ்த் திரைப்படம் மட்டுமல்ல முதல் தெலுங்குத் திரைப்படமும் கூட. இப்படத்தில் கதாநாயகி வித்யாதரி (டி.பி.ராஜலட்சுமி) தமிழில் பேசுவாள், பாடுவாள். கதாநாயகன் காளிதாசன் தெலுங்கில் பேசுவான், பாடுவான். வேறு சில துணைப் பாத்திரங்கள் இந்தியில் பேசுவார்கள்.

ஆக முதல் தமிழ்ப்படத்தில் உருப்படியாகத் தமிழில் பேசி, பாடியவர் டி.பி.ராஜலட்சுமிதான். எனவே தமிழ்த்திரைப்பட வரலாறு டி.பி.ராஜலட்சுமியிலிருந்துதான் தொடங்குகிறது.
1931 அக்டோபர் 31 இல் பொதுமக்கள் பார்வைக்குக் ‘காளிதாஸ்’ வருமுன்னரே அக்டோபர் 29 ஆம் தேதியிட்ட சுதேசமித்திரன் நாளேட்டில் வெளியான ‘காளிதாஸ்’ திரைப்பட விமர்சனத்தின் ஒரு பகுதி,

“தென்னிந்திய நாடக மேடையில் கீர்த்தி வாய்ந்து சிறந்து விளங்கும் மிஸ். டி.பி.ராஜலட்சுமி முதல் முறையாக சினிமாவில் தோன்றுவதை, இவளை நாடக மேடையில் கண்ணுற்ற அனைவரும் பார்க்க இது சமயமாகும்."

"நாடக மேடையில் இவள் பாட்டுக்களில் சிறந்ததாகிய தியாகராஜ கிருதிகளான, எந்தரா நீதானோ, சுராக சுதா என்றவிரு பாட்டுக்களையும் ஹரி காம்போதி, சங்கராபரணம் முதலிய ராகங்களில் கேட்கலாம். இதைத் தவிர “இந்தியர்கள் நம்மவர்களுக்குள் ஏனோ வீண்சண்டை”, “ராட்டினமாம் காந்தி கைபாணமாம்” என்ற பாட்டுக்களையும் இனிய குரலுடன் பாடுகிறாள். வார்த்தைகள் தெளிவாகவிருப்பது படத்தின் மேன்மையை அதிகரிக்கிறது.”
(அறந்தை நாராயணன், தமிழ் சினிமாவின் கதை, பக். 42-43)

சுதேசமித்திரன் விமர்சனத்தில் காளிதாசனாக நடித்த தெலுங்குக் கதாநாயகனின் பெயர் கூடக் குறிப்பிடப்படவில்லை.

முதல் தமிழ்த் திரைப்படத்தில் முதன் முதலாகத் தமிழில் பேசி, பாடி நடித்துப் புகழ்பெற்ற டி.பி.ராஜலட்சுமி முதன்முதலாகச் செய்து சாதித்த சாதனைகள் பலப்பல.

இவர் 1911 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 13ஆம் தேதியன்று திருவையாறு சாலியமங்கலம் கர்ணம் பஞ்சாபகேச சாஸ்திரிகளுக்கும் மீனாட்சி அம்மாளுக்கும் மகளாகப் பிறந்தார். ஏழு வயதிலேயே சுந்தரம் என்பவருக்கு மணம் முடித்து வைக்கப்பட்டார். திருமண வாழ்க்கை ஒன்றிரண்டு வருடங்கிலேயே முடிவுக்கு வந்துவிட்டது. வரதட்சணைக் கொடுமை அல்லது சுந்தரத்தின் மரணம், ஏதோவொன்று தெளிவான குறிப்புகளில்லை. பிறந்தகம் மீண்டார். மீண்டும் சோதனை தந்தையாரின் அகால மரணம். விதவைத் தயாரோடு வாழ்க்கையை இழந்த டி.பி.ராஜலட்சுமி வறுமையின் கோரப்பிடியில் சிக்கினார். திருவையாறு தந்த இசைப்புலமை கைகொடுக்க நாடகத்துறையை நாடினார்.

டி.பி.ராஜலட்சுமி தமது பதினோராம் வயதில் நாடகக் கம்பெனிகளில் காலடி எடுத்துவைத்தார். நாடக உலகம் இருகரம் நீட்டி அவரை வரவேற்று அரவணைத்துக் கொண்டது. முதலில் அவர் மதுரை சாமண்ணா நாடகக் கம்பெனியில் சேர்ந்தார். சங்கரதாஸ் சுவாமிகளின் பவளக்கொடி நாடகத்தில் பவேந்திரன் பாத்திரத்தில் தம் பதினோராம் வயதில் நடிக்கத் தொடங்கினார் டி.பி.ராஜலட்சுமி.

இவருக்கு முன் நாடகமேடைகளில் பெண்கள் நடிக்கும் பழக்கம் கிடையாது. ஆண்களே பெண்வேடம் புனைந்து நடிப்பார்கள். முதன்முதலாக நாடகமேடையில் தோன்றி நடித்த பெண் என்ற பெருமைக்குரியரானார் டி.பி.ராஜலட்சுமி. கடல்கடந்த நாடுகளிலும் குறிப்பாக, மலேசியா, இலங்கை முதலான நாடுகளுக்குச் சென்று நாடகமேடைகளில் பாடி, நடித்துப் பெரும்புகழ் பெற்றார். இந்தவகையிலும் இவரே முதல்பெண்மணி என்ற பெருமை பெறுகின்றார்.

இலங்கை யாழ்ப்பாணத்தில் கோவலன் நாடகத்தில் மாதவி வேடத்தில் டி.பி.ராஜலட்சுமி தோன்றி நடித்த நாடகத்திற்குச் சிறப்பு விருந்தினராக வந்திருந்த மகாத்மா காந்தி அவரின் நடிப்பைப் பாராட்டி ஒரு புலி பொம்மையைப் பரிசளித்தார் என்றும் டி.பி.ராஜலட்சுமி தன்கையில் அணிந்திருந்த தங்க வளையல்களைக் கழற்றி கஸ்தூரிபாய் நிதிக்கென்று வழங்கினார் என்றும் எஸ்.எம். உமர் அவர்கள் தம் ‘கலை உலக சக்ரவர்த்திகள்’ என்ற நூலில் (ப. 434) குறிப்பிடுகின்றார்.

ஒரு நடிகையாகத் தம் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்தபோதும் அவர் அத்துடன் நிறைவடைந்து விடவில்லை. பொதுவாழ்வில் நாட்டம் கொண்டவராகவும் சமூக அக்கறை உடையவராகவும் தேச விடுதலைக்குப் பணியாற்றுபவராகவும் தம்மை வெளிப்படுத்திக் கொண்டு பணியாற்றியமை மிகச் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கதாகும்.

டி.பி.ராஜலட்சுமி காந்தீயக் கொள்கைகளில் மிகுந்த நாட்டமுடையவராகவும் தேச விடுதலைக்குப் பாடுபடும் காங்கிரஸ் இயக்கக் கொள்கைகளில் தீவிரப் பிடிப்புக் கொண்டவராகவும் இருந்துள்ளார். இவர் நாடகங்களில் நடிக்கும் காலங்களில் நாடகம் முடிந்தவுடன் தேசபக்திப் பாடல்களைப் பாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என்றும் இதன் காரணமாகப் பலமுறை சிறைக்குச் சென்றுள்ளார் என்றும் தெரியவருகின்றது.

No comments:

Post a Comment

புலவர் பூங்கொடி பராங்குசம் அவர்களின் இலக்கியக்களம் - நூல் அணிந்துரை

  முனைவர் நா . இளங்கோ கவிதை இரசனை , இது படைப்புக்கு இணையானதோர் முருகியல் செயற்பாடு . என்றைக்குக் கவிதைகள் தோன்றினவோ அன்றைக்கே கவ...