Tuesday, 1 May 2012

இரத்தின. வேங்கடேசனின் நற்றமிழ் விருந்து நூல் வாழ்த்துரை

முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

    தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் தமிழகத்திற்குமான தொடர்பு ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றுச் சிறப்புடையது. மலேசிய நாட்டின் கடாரத்தில் உள்ள பூஞ்சோங் அருங்காட்சியகத்தில் காணக்கிடைக்கும் தமிழர்களின் மரக்கலங்கள் நமக்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் இடையிலான ஆழமான உறவைப் பறைசாற்றுகின்றன. பிற்காலச் சோழர்களின் ஆட்சிக்காலத்தில் வேரூன்றிய இந்த உறவு ஆங்கிலேய, ஐரோப்பிய காலனியாட்சிக் காலங்களில் பல்கிப் பெருகியது. ஆனால் இந்த இரண்டு நிலைகளுக்கும் அடிப்படையில் பாரிய வேறுபாடுண்டு.

சோழர்கால உறவு நம் அதிகாரத்தை நிலைநாட்டிய உறவு. காலனியாதிக்கக் கால உறவு நம்மைக் கொத்தடிமைகளாக்கிய உறவு. இன்று வணிகம், கல்வி, வேலைவாய்ப்பு என உறவுகள் தொடர்கதையாகத் தொடர்கின்றன. எப்படியிருப்பினும் மலேசிய, சிங்கப்பூர் நாடுகளின் பிரிக்கமுடியாத அங்கமாகத் தமிழும், தமிழர்களும், தமிழ்ப் பண்பாடும் இடம் பிடித்துவிட்டன. தமிழ் மொழிசார்ந்தும், பண்பாடு சார்ந்தும் தமிழகத்துக்கு அப்பால் இலங்கைக்கு அடுத்து மலேசிய, சிங்கப்பூர் நாடுகளின் பங்களிப்புகள் குறித்துப் பேசவும் எழுதவும் களம் அமைந்துவிட்டன.

இந்த இரு நாடுகளிலும் இன்றைக்கு, மாதம் தவறாமல், ஏன்? வாரம் தவறாமல் தமிழிலக்கிய நிகழ்ச்சிகள் பல நடத்தப்படுகின்றன. பல தமிழ்நூல்கள் வெளியிடப் படுகின்றன. பல தமிழ் அமைப்புகள் வெற்றிகரமாக இயங்கிவருகின்றன. தமிழ்க் கவிஞர்கள், எழுத்தாளர்கள், அறிஞர்களைச் சிறப்பிக்கும் பல நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பல தமிழ் விழாக்கள் மதம் சார்ந்தும் மதம் சாராமலும் தொடர்ந்து கொண்டாடப் படுகின்றன. கடந்த இரண்டு, மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு புலம் பெயர்ந்த தமிழர்களும் இன்றைக்கு வேலைவாய்ப்பு, கல்வி, வணிகங்களின் பொருட்டுப் புலம்பெயரும் தமிழர்களும் என அனைவரும் இணைந்தே இத்தகு தமிழ்ப் பணிகளை ஆற்றிவருகின்றனர்.

அந்த வரிசையில் சிங்கப்பூரில் ஆசிரியப் பணிக்காகப் புலம் பெயர்ந்து வாழும் முனைவர் இரத்தின. வேங்கடேசனும் தம் வரலாற்றுக் கடமையைச் சிறப்பாகச் செய்து வருகின்றார். இவருக்கும் சிங்கப்பூருக்குமான தொடர்பு அவருடைய தந்தையார் இரத்தினவேலு முதலியார் காலத்திலிருந்தே தொடங்குகின்றது. தொடக்கத்தில் வியாபாரத்தின் பொருட்டுச் சிங்கைவந்த அவர், இந்திய விடுதலைப் போராட்ட இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு அப்பொழுது மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அமைத்த இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்து தம் அயராத உழைப்பாலும் அர்ப்பணிப்பு உணர்வாலும் ஜொகூர்  படைப்பிரிவின் தலைவராகப் பணியாற்றக் கூடிய வாய்ப்பினைப் பெற்றவர். தந்தையின் சிங்கைத் தொடர்பு ஏற்படுத்திய ஆர்வமே புதுச்சேரிக் கல்லூரிப் பேராசிரியப் பணியை விட்டுவிட்டு வேங்கடேசன் சிங்கப்பூரில் தமிழாசிரியப் பணியை ஏற்கக் காரணமாயிற்று. சிங்கப்பூரின் பணி நெருக்குதல்களுக்கு இடையிலும் தொடர்ந்து அவர் தமிழ்சார்ந்து இயங்குவதற்கு அடித்தளம் அமைத்துத் தந்தது அவரின் புதுச்சேரிப் பின்னணியே.

நண்பர் இரத்தின. வேங்கடேசன்  புதுச்சேரி, தாகூர் கலைக்கல்லூரியில் முதுகலைத் தமிழ் பயிலும் காலத்தில் என்னுடைய மாணவர். பின்னர் உற்ற தோழராகப் பழகிவருபவர். அந்த நாட்களில் புதுச்சேரி மேடைகளில் என்னோடு அவர் பங்கேற்காத மேடைகள் அரிது. என்னுடைய தலைமையில் பல பட்டிமன்றங்கள், வழக்காடு மன்றங்களைக் களம்கண்டவர். புதுச்சேரியின் நம்பிக்கை நட்சட்திரமாக வலம்வந்த அவரைச் சிங்கப்பூர் அழைத்து அரவணைத்துக் கொண்டது. பணியாற்ற வந்த இடத்திலும் தம் இலக்கியப் பணியைத் தொடர்ந்து ஆற்றிவருவது அவரின் தனிச்சிறப்பு. சிங்கப்பூர்த் தமிழிலக்கிய மேடைகளில் கவிஞராக, பேச்சாளராக, பட்டிமன்ற வழக்காடு மன்ற நடுவராக இப்படிப் பலநிலைகளில் வெற்றிகரமாக அவர் செயல்பட்டு வருவது மகிழ்ச்சிக்குரியது. தம் இனிய பேச்சாற்றலால் சொல்லின் செல்வர் என்று சிங்கை இலக்கிய அன்பர்களால் விருதளித்துப் பாராட்டிச் சிறப்பிக்கப் பெற்றுள்ளார்.

அவர் புதுச்சேரியில் இருந்த காலத்தில் பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார் என்றாலும் சிங்கப்பூர் முனைவர் இரத்தின. வேங்கடேசனாக அவர் எழுதியளிக்கும் இரண்டாவது நூல் இந்த நற்றமிழ் விருந்து. பல்வேறு சூழல்களில் அவர் எழுதிக் கருத்தரங்குகளில் வாசித்தளித்த கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவருகின்றது.

நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

1. சங்க இலக்கியத்தில் விருந்து
2. கலித்தொகையில் திருக்குறள்; இடைப்பனுவலியல் ஆய்வு
3. அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றம்
4. பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழியல் உரையாசிரியர்கள்
5. இருபதாம் நூற்றாண்டுக் கவிதைகளில் தமிழ்மொழி
6. காலத்தை வென்ற கவியோகி
7. அண்ணாவின் சந்திரோதயம் ஒரு சமூக நோக்கு
8. தமிழ்ப் பண்பாட்டின் ஆணிவேர் நாட்டுப்புறப் பழக்க வழக்கங்களே
9. சமூக இயக்கங்களும் இலக்கியப் போக்குகளும்
10. சிங்கப்பூர் மலேசிய நாடுகளில் தமிழ்ப் பண்பாடு
11. சிங்கப்பூரின் தொடக்கக்கால (பக்தி) இலக்கியங்கள் ஒரு பார்வை
12. விழா பண்பாடு

நூலின் பன்னிரண்டு கட்டுரைகளிலும் மையப் பொருளாயிருப்பது தமிழ் இலக்கியம், தமிழ்ப் பண்பாடு குறித்த உள்ளடக்கங்களே. கல்வியாளர்களுக்கே விளங்கும் ஆழமான ஆய்வுப் பொருண்மையில் இல்லாமல் அனைத்துக் கட்டுரைகளுமே பொது வாசிப்புக்கானதாக அமைக்கப் பட்டுள்ளது. சங்க இலக்கியம், கலித்தொகை, திருக்குறள், சிலப்பதிகாரம் முதலான பழந்தமிழ் இலக்கியங்கள் தொடங்கி பாரதி, அண்ணா போன்ற இக்கால இலக்கிய ஆளுமைகள் வரை பேசும் இலக்கியப் பகுதியிலும் தமிழர்களின் பண்பாட்டுச் சுவடுகளை நாட்டுப்புற வழக்காறு, நாட்டுப்புற இலக்கியம், மற்றும் எழுத்து இலக்கியம் இவற்றிலிருந்து தெரிந்தெடுத்து வழங்கும் பண்பாட்டுப் பகுதியிலும் நூலாசிரியரின் கடும் உழைப்பு நமக்குத் தெளிவாகத் தெரிகின்றது.

இந்நூலில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க பகுதி சிங்கப்பூர் மற்றும் மலேசியத் தமிழர்களின் தமிழ்ப் பண்பாடு மற்றும் சிங்கப்பூரின் பக்தி இலக்கியங்கள் குறித்த கட்டுரைகளாகும். இவ்விரண்டு கட்டுரைகளும் தமிழகத் தமிழர்களுக்குப் பல புதிய செய்திகளைத் தருகின்றன.
நூலில் இடம்பெற்றுள்ள, சிங்கப்பூர் மலேசிய நாடுகளில் தமிழ்ப் பண்பாடு என்ற கட்டுரையின் ஒருபகுதியை இங்கே சுட்டிக்காட்டுவது பொருத்தமாயிருக்கும்,

சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்கு இடம்பெயர்ந்த தமிழர்கள் இன்றும் தங்கள் மொழி, பண்பாட்டைப் பேணிவருவது குறிப்பிடத்தக்கது. அனைத்துக்கும் மேலாகத் தமது மக்கள் தொகையில் 7 சதவீதத்திற்கும் குறைவான தமிழர்களைக் கொண்ட சிங்கப்பூர், தமிழைத் தேசிய மொழிகளில் ஒன்றாக அறிவித்துள்ளது. இது தமிழர்க்குத் தாய்மண்ணில் கிடைக்காத மற்றுமொரு சிறப்பாகும். மேலும் அரசாங்கத்தின் ஆதரவோடு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் தமிழ்மொழி மாதம் என்னும் தலைப்பில் தமிழ்மொழி நிகழ்வுகளை நடத்துகிறது. மலேசியாவில் ஒரு குறிப்பிட்ட வயதுவரை அனைத்துப் பாடங்களையும் தாய்மொழியில் கற்கத் தமிழ்ப் பள்ளிகள் அங்கு இயங்குகின்றன. தமிழ் பேசவும் படிக்கவும் ஊக்கம் தரும் அரசும் அதைச் சார்ந்த நிறுவனங்களும் தொண்டாற்றுவதால் இவ்விரு நாடுகளிலும் இருக்கும் தமிழருக்குக் கொண்டாட்டங்கள், விழாக்கள் போன்றவற்றில் அதிக ஈடுபாடும் தொன்மையைக் காக்கும் வாய்ப்பும் மிகுந்து காணப்படுகின்றது. சிங்கப்பூரில் அனைத்துப் பள்ளிகளிலும் தமிழை இரண்டாம் மொழியாகக் கற்கும் வாய்ப்பைக் கல்லூரிக்குச் செல்லும்வரை அரசாங்கம் தந்திருக்கிறது.

இரத்தின. வேங்கடேசனின் மேற்சொன்ன கட்டுரையின் பகுதியை வாசிக்க வாசிக்க, சிங்கப்பூர், மலேசியா முதலான நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களுக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்புகள் கூடத் தாய்த் தமிழகத்தில் நமக்குக் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம்தான் மிகுகிறது.
இப்படி, நூலின் பயன்மிக்க பக்கங்கள் பலவாக விரிந்துள்ளன. மொத்தத்தில் நற்றமிழ் விருந்து நூலை உருவாக்கியுள்ள இனிய நண்பர் இரத்தின. வேங்கடேசன் தமிழ் இலக்கிய உலகிற்குத் தக்கதோர் விருந்தைப் படைத்து அளித்துள்ளார் என்றே நாம் மகிழ்வு கொள்ளலாம். தொடர்ந்து நல்ல பல நூல்களை எழுதியளிப்பார் என்ற நம்பிக்கையுடன் அவரை வாழ்த்துகின்றேன்.

No comments:

Post a Comment

புலவர் பூங்கொடி பராங்குசம் அவர்களின் இலக்கியக்களம் - நூல் அணிந்துரை

  முனைவர் நா . இளங்கோ கவிதை இரசனை , இது படைப்புக்கு இணையானதோர் முருகியல் செயற்பாடு . என்றைக்குக் கவிதைகள் தோன்றினவோ அன்றைக்கே கவ...