Tuesday 2 November 2021

வெ.புருஷோத்தமனின் ஆன்மீகக் கட்டுரைகள் நூல் அணிந்துரை

முனைவர் நா.இளங்கோ


 

தமிழர்க்குச் சொந்தத் தத்துவ ஞானம் உண்டா? என்ற வினா இந்தியத் தத்துவ வரலாற்றில் அடிக்கடி கேட்கப்படுவ துண்டு. உலகின் மூத்தகுடி என்ற பெருமைக்குரிய தமிழ்க்குடிக்குச் சொந்த தத்துவ ஞானம் இல்லாமல் போகுமா! இந்தியத் தத்துவ ஞான வரலாற்றை எழுதும் எவரும் தமிழின் பழந்தமிழ் நூல்களாம் தொல்காப்பியத்தையோ சங்க அகப்புற இலக்கியங்களையோ ஒரு மேலோட்டமான பார்வைகூட பார்ப்பது இல்லை.

 

நிலம் தீ நீர் வளி விசும்பொடு ஐந்தும்

கலந்த மயக்கம் உலகம் ஆதலின் (தொல். - மரபியல் 91)

 

மண்டிணிந்த நிலனும் 
நிலனேந்திய விசும்பும் 
விசும்பு தைவரு வளியும் 
வளித் தலைஇய தீயும் 
தீ முரணிய நீருமென்றாங்கு 
ஐம்பெரும் பூதத்தியற்கை போல      (புறம். 2)

மேற்காட்டிய தொல்காப்பியரின் மரபியல் நூற்பாவும், முரஞ்சியூர் முடிநாகனாரின் புறப்பாடல் அடிகளும் தமிழரின் தத்துவ அறிவியல் ஞானத்தை அடையாளப் படுத்தவில்லையா? இவை பதச்சோறுதான் .பழந்தமிழ் நூல்களாம் தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் சிலம்பு, மேகலை போன்ற காப்பியங்களிலும் நாம் கண்டெடுக்கக் கூடிய தமிழர் தத்துவச் சிதறல்கள் ஏராளம்.

 முறையான தத்துவப் பதிவாக எழுதப்பெற்ற தமிழர் தத்துவ நூல்கள் காலவெள்ளத்தில் சிதைந்தோ, சிதைக்கப்பட்டோ மறைந்திருக்கலாம். நல்ல வேளையாகத் தமிழின் ஆகச்சிறந்த இலக்கியங்களான திருக்குறளும் திருமந்திரமும் நமக்கு முழுமையாகக் கிடைத்தன. தமிழர்க்கான தத்துவத் தேடலில் நமக்குக் கிடைக்கும் முதன்மைக் களஞ்சியங்கள் இவ்விரண்டு நூல்களே.

       மெய்ஞானச் செல்வர் வெ.புருஷோத்தமனின் ஆன்மீகக் கட்டுரைகள் என்ற இக்குறுநூல் தமிழர் தத்துவத் தேடலின் இன்றியமையாத பல பக்கங்களை வெளிச்சமிட்டுக் காட்டுவதில் வெற்றி பெற்றுள்ளது. நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் ஒவ்வான்றும் தமிழர் தத்துவ ஞானச் சிந்தனைகள் பலவற்றை விளக்கும் போக்கில் மட்டுமின்றி அவை எவ்வாறு வைதீகச் சிந்தனைகளோடு ஒத்தும் உறழ்ந்தும் இலங்குகின்றன என்பதனையும் விளக்கிச் செல்கின்றது. தொல்காப்பியம் தொடங்கி சங்க இலக்கியம், திருக்குறள், திருமந்திரம், தேவாரம், நாலாயிர திவ்ய பிரபந்தம், பெரியபுராணம், சித்தர் இலக்கியம், திருவருட்பா, பாரதியார் கவிதைகள் வரையிலுமான தமிழ் இலக்கிய மேற்கோள்களால் தமது நூலுக்கு அணிசேர்த்துள்ளார் நூலாசிரியர்.  தமிழ் இலக்கிய நெடும்பரப்பில் இந்நூல் பயணப்படாத தடங்களே இல்லை என்று சொல்லுமளவிற்குச் சங்க இலக்கியம் தொடங்கி பாரதியார் கவிதைகள் வரை இந்நூலில் இடம் பெற்றிருப்பது நூலாசிரியரின் பரந்துபட்ட இலக்கிய அறிவை வெளிப்படுத்துகின்றது.

       நூலாசிரியர் வெ.புருஷோத்தமன் அவர்களின் ஆளுமை தனித்தன்மை வாய்ந்தது. எண்பதாண்டு கால அவரின் வாழ்க்கைப் பயணம் என்பது கடந்த ஒருநூற்றாண்டு காலத் தமிழகத்தின் சமூக, சமய, அரசியல் வரலாற்றோடு நெருங்கிய தொடர்பு கொண்டது. இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழ் ஆளுமையர்கள் பலரோடும் அவருக்கு நெருக்கமான உறவும் நட்பும் இருந்தது என்றால் அதுமிகைக் கூற்றன்று. தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராசர், பாவேந்தர் பாரதிதாசன், சிலம்புச்செல்வர் ம.பொ.சி, டி.எஸ். அவினாசி லிங்கம் செட்டியார், குன்றக்குடி அடிகளார், இலக்கியப் பேராசான் ப.ஜீவானந்தம், சர்வோதயத் தலைவர் எஸ்.ஆர்.சுப்பிரமணியம், டாக்டர் மு.வரதராசனார், சின்ன அண்ணாமலை, ஜி.உமாபதி, கவி. கா.மு.ஷெரீப், கவிஞர் கு.சா.கிருஷ்ணமூர்த்தி, கவிஞர் கு.மா.பாலசுப்பிரமணியம், டி.கே.சண்முகம், பொள்ளாச்சி நா.மகாலிங்கம் முதலான தமிழ்ப் பெரியோர்கள் பலரோடும் நெருங்கிப் பழகி அவர்களின் அன்பைப் பெற்ற புருஷோத்தமன் ஐயா அவர்களிடம் முற்போக்குச் சிந்தனைகளும் தேசியச் சிந்தனைகளும் திராவிடச் சிந்தனைகளும் ஆன்மீகச் சிந்தனைகளும் இயைந்து வெளிப்படுவதில் வியப்பேதும் இல்லை.

       நூலாசிரியர் வெ.புருஷோத்தமன் அவர்கள் பலமுரண்பட்ட இயக்கங்கள், தலைவர்களோடு பழகியிருந்தாலும் அவரின் அரசியலும் சிந்தனையும் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. ஐயா அவர்களைச் சார்ந்தே இருந்தது. தமிழரசுக் கழகத்தின் செயற்குழு உறுப்பினராக, தலைமைப் பேச்சாளராக, கழகத்தின் இதழாசிரியராக, தலைவரின் உடனுறைத் தோழராக, அவர் நூல்களைப் படியெடுக்கும் தொண்டராகஇப்படித் தமிழரசுக் கழகம் சார்ந்தே தம்மை வடிவமைத்துக் கொண்ட நூலாசிரியர் அவர்கள் எந்த நிலையிலும் காந்தீயத்தைக் கைவிடாமல் இருந்தார் என்பதுஅவரின் தனிப்பெருஞ் சிறப்பு.

       ஒரு மூத்த பத்திரிக்கையாளராகத் தம்மை அடையாளப்படுத்திக் கொள்வதில் எப்பொழுதும் பெருமைப்படும் நூலாசிரியர் அவர்கள் பொறுப்பேற்று நடத்திய பத்திரிக்கைகள் பல. மாணவ மணி (கையெழுத்திதழ் முதற்படி பெற்றவர் பாவேந்தர் பாரதிதாசன்), கிராமராஜ்யம், காந்திவழி, சமநீதி, தமிழரசு வார இதழ் என அவரின் பத்திரிக்கைப் பணி நீண்டது.

       ஆன்மீகக் கட்டுரைகள் என்ற இந்நூல், பின்வரும் பதினொரு தலைப்புகளில் அமைந்த கட்டுரைகளின் தொகுப்பாகும்.

1.        ஞானசபைத்தலைவர்

2.        திருமந்திரம்

3.        சற்குரு

4.        ஒளி

5.        ஞானம்

6.        ஆன்மா

7.        உபநிஷத்துகள்

8.        பிரணவமந்திரம்

9.        இறை

10.     இறைநிலைபெறல்

11.     ஓர்இறை

இந்நூலில் இடம்பெற்ற கட்டுரைகள் அனைத்துமே உயர் ஞானதீபம்என்ற ஆன்மீக இதழில் வெளிவந்த கட்டுரைகளாகும். நூலின் மையப்பொருள் ஆன்மீகம். ஆன்மீகம் என்பது எல்லா உயிர்களும் ஒன்றே என்ற தெளிவின் வழி செயற்படும் உயிர் இரக்கம். அதுவே ஜீவகாருண்யம். நூலாசிரியர் இதனைப் பின்வருமாறு விளக்குகின்றார்:

பக்தி என்பது மனநெகிழ்ச்சி, மனஉருக்கம். அன்பு என்பது ஆன்ம நெகிழ்ச்சி, ஆன்ம உருக்கம். எல்லா உயிர்களிடத்தும் கடவுள் வியாபித்து இருப்பதை அறிதலே ஈஸ்வர பக்தியாகும். ஜீவகாருண்யம் உண்டானால் அருளுண்டாகும்; அருள் உண்டானால் அன்பு உண்டாகும்; அன்பு உண்டானால் சிவானுபவம் உண்டாகும் என்பது வள்ளற் பெருமான் வாக்காகும். (தலைப்பு: திருமந்திரம்)

தயவைகாருண்யத்தை, ஜீவகாருண்யத்தை விருத்தி செய்வதற்குத் தடையாய் இருப்பன சமய ஏற்பாடுஜாதி ஏற்பாடு முதலிய கட்டுப்பாட்டு ஆச்சாரங்கள். ஜாதியாச்சாரம்குலஆச்சாரம் -ஆசிரமஆச்சாரம்லோகாச்சாரம்தேசஆச்சாரம்கிரியாச்சாரம்சமயாச்சாரம்மதாச்சாரம்மார்க்காச்சாரம்கலாச்சாரம்சாதனாச்சாரம்அந்தாச்சாரம்சாஸ்திராச்சாரம் முதலிய ஆச்சாரங்கள் தடையாய் இருக்கின்றன. (தலைப்பு: ஞானசபைத்தலைவர்).

ஆன்மீகம் என்பது உயிர்இரக்கம். சக உயிர்களிடத்துக் காட்டுகிற அன்பும் அருளும். இத்தகைய உயிர் இரக்கமாம் ஜீவகாருண்யத்திற்குத் தடையாய் இருக்கும் எல்லா ஆச்சாரங்களையும் நாம் புறந்தள்ள வேண்டும். அது சாதி ஏற்பாடாக இருந்தாலும் மத ஏற்பாடாக இருந்தாலும் ஆசிரம ஏற்பாடாக இருந்தாலும் என்பதுதான் இப்பகுதியின் விளக்கம். இது வள்ளலார் வழிவந்த தமிழர் தத்துவம்.

       இந்நூலின் கடைசி மூன்று கட்டுரைகள் இறை- இறைவன் குறித்துப் பேசுகின்றன. அவற்றுள் இறை என்ற தலைப்பிலான ஒன்பதாம் கட்டுரை ஒரு சிறந்த சொல்லாராய்சிக் கட்டுரை. நூலாசிரியரின் மொழித்திறனுக்கு இக்கட்டுரை ஒரு சிறந்த சாட்சி. நூலின் நிறைவுக் கட்டுரையாக இடம் பெற்றுள்ள ஓர் இறை என்ற கட்டுரை இத்தொகுப்பின் மிகச்சிறந்த கட்டுரைகளில் ஒன்று. நூலாசிரியரின் பொதுமைப் பார்வைக்கும் சர்வ சமய சமரச நோக்கிற்கும் மத நல்லிணக்க அணுகுமுறைக்கும் சான்றாக அமையும் கட்டுரை இது. நூலின் பின்வரும் பகுதியைக் காண்போம் :

கட்டுரையின் தொடக்கத்தில்,

எல்லா மதங்களும் சமயங்களும் மார்க்கங்களும் இறை ஒன்று என்றே போதித்திருக்கின்றன. அனைத்துச் சமயங்களும் ஒரே நோக்கில் ஒன்றுபட்டு வலியுறுத்துகின்ற இந்த ஏகத்துவத் தத்துவ போதனை மிக முக்கியமானதன்றோ? அவ்விறைக்கு இணையாகக் கல்லாலோ மண்ணாலோ உருவாக்கப்பட்ட ஒன்றையோ அல்லது பிரகாசிக்கும் சூரியனையோ இன்பம் நல்கும் சந்திரனையோ கொள்ளலாமா? மனிதனை இறையாகக் கொள்ளலாமா?

என்று ஓர் இறைக் கொள்கையை வலியுறுத்தியும் மற்றும் உருவ வழிபாட்டிற்கு எதிராகவும் ஒரு சிறந்த முன்னுரையை வழங்கிய நூலாசிரியர், அடுத்ததாக,

பரலோகத்தில் இருக்கின்ற ஒருவனே உங்களுக்குப் பிதாவாக இருக்கிறார்என்று பைபிள் (மத்தேயு) போதிக்கிறது.

மனிதர்களே! உங்கள் வணக்கத்திற் குரியவன் அல்லாஹ் ஒருவனேதான். அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனு மாகிய அவனைத் தவிர வணக்கத்திற் குரியவன் வேறு எவனுமில்லைஎனக்குரான் கூறுகிறது. இவைகள் எதை உணர்த்துகின்றன.

பரப்பிரம்மம் என்பதும் பரமபிதா என்றழைப்பதும் அல்லாஹ் என வழிபடுவதும் ஒன்றேயாகும்.

என்று பைபிள், குரான் முதலான சகோதர சமயத்தாரின் வேதநூல்களை மேற்கோள் காட்டித் தமிழர் தத்துவமாம், ஒன்றே குலம் ஒருவனே தேவன்என்ற திருமந்திர உண்மையை நிறுவும் நூலின் பகுதி உண்மையில் வருங்காலத் தலைமுறைக்கு                வழிகாட்டும் பகுதியாகும்.

       நூலாசிரியரின் மெய்ஞ்ஞான அகம் என்பது திருமந்திரத்தாலும் திருவருட்பாவாலும் நிறைந்துள்ளது என்பதற்கு நூலின் பக்கங்கள் தோறும் சாட்சியாய் நிற்கின்றன. தமிழர் தத்துவத்தின் உயிர்ப்பான சிந்தனையாளர்களாக திருமூலரையும் திருவருட் பிரகாச வள்ளலாரையுமே நூலாசிரியர் கொண்டாடுகின்றார் என்பதனை அவர் மேற்கோள் காட்டுகின்ற மெய்ஞ்ஞானப் பாடல்களில் இருந்து நாம் உணர்ந்து கொள்ள முடியும். நூலாசிரியரின் பழுத்த அனுபவ முதிர்ச்சியின் முதிர்கனியாக நமக்குக் கிடைத்திருக்கும் இந்நூல் நிச்சயம் நல்ல ஆன்மீகச் சிந்தனைகளை நமக்குள் விதைக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

       நூலின் முதல் கட்டுரையில் இடம் பெற்றுள்ள நூலாசிரியரின் பின்வரும் வாசகங்களோடு இந்த அணிந்துரையை நிறைவுசெய்ய விரும்புகின்றேன் :

வித்தின்றி விளைவில்லை, தத்துவமின்றிச் செயலொன்றில்லை, அருளியல் ஆயினும் பொருளியல் ஆயினும் அறிவியல் ஆயினும் பொறியியல் ஆயினும் மன இயலாயினும் மனை இயலாயினும் அரசியல் ஆயினும் சமுதாய இயலாயினும் ஒவ்வொன்றும் அதனதன் அடிப்படைத் தத்துவங்களைக் கொண்டே இயங்குகின்றன. ஒவ்வொரு அமைப்புக்கும் ஸ்தபனத்திற்கும் இயக்கங்களுக்கும் இது பொருந்தும். இத்தத் துவத்தைப் படித்துத் தெரிந்து கொள்ளுவோர் உண்டு. கற்றுத் தெளிந்தோர் உண்டு. உய்த்து உணர்ந்தோர் உண்டு. உணர்ந்து கலந்தோரும் உண்டு.

 

நாம் எப்படி?

      

முனைவர்நா.இளங்கோ

nagailango@gmail.com

 

 

No comments:

Post a Comment

புலவர் பூங்கொடி பராங்குசம் அவர்களின் இலக்கியக்களம் - நூல் அணிந்துரை

  முனைவர் நா . இளங்கோ கவிதை இரசனை , இது படைப்புக்கு இணையானதோர் முருகியல் செயற்பாடு . என்றைக்குக் கவிதைகள் தோன்றினவோ அன்றைக்கே கவ...