Monday, 2 November 2009

வலைத்தளங்கள் - வலைப்பதிவுகள் ஒப்பீடு

வலைத்தளங்கள் - வலைப்பதிவுகள் ஒப்பீடு

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

இணையத்தின் மிக முக்கிய அங்கமான வலைத்தளங்களிலிருந்து வலைப்பதிவுகள் வேறுபட்டவை. வலைத்தளங்கள் அமைத்துக்கொள்ள இடம்பிடிப்பது, வடிவமைப்பது போன்ற பணிகளுக்குக் கட்டணம் வசூலிப்பதுண்டு.

ஆனால் வலைப்பதிவுச் சேவைகள் முற்றிலும் இலவசமானது. வலைத்தளங்களுக்கும் வலைப்பதிவுகளுக்கும் இடையிலான சில வேற்றுமைகளைப் பின்வரும் பட்டியல் தெளிவுபடுத்தும்.

வலைத்தளங்கள்: வலைத்தளங்களை உருவாக்க html அறிவு ஓரளவேனும் தேவை.
வலைப்பதிவுகள்: வலைப்பதிவுகளை உருவாக்க html அறிவு தேவையில்லை. வலைப்பக்கங்களை உருவாக்குவது மிகவும் எளிது. ஏற்கனவே உருவாக்கப்பட்டிருக்கும் படிவங்களில் உள்ளடக்கத்தை உருவாக்கி சமர்ப்பித்துவிட்டால் தானாக வலைப்பதிவு ஒன்று உருவாக்கப்பட்டுவிடும். வார்ப்புருக்கள் (Templates) இந்தப் பணியைச் செய்து முடிக்கின்றன.

வலைத்தளங்கள்: வலைத்தளத்திற்கான உள்ளடக்கங்களை உருவாக்கி எழுதுபவர் ஒருவராகவும், html கொண்டு அத்தகவல்களை உள்ளிட்டு வடிவமைப்பவர் வேறு ஒருவராகவும் இருப்பர்.
வலைப்பதிவுகள்: வலைப்பதிவுக்கான உள்ளடக்கங்களை எழுதுபவரே உள்ளீடு செய்பவராகவும் இருப்பார். எந்தத் தனிப்பட்ட மென்பொருளும் தேவையில்லை. வலைப்பதிவு சேவையை வழங்குபவரே இதற்கான அனைத்து வசதிகளையும் உருவாக்கி வைத்திருப்பார்.

வலைத்தளங்கள்: வலைத்தளங்கள் அடிக்கடிப் புதுப்பிக்கப் படுவதில்லை. சில தளங்கள் மட்டுமே அத்தகைய வசதியைப் பெற்றிருக்கும்.
வலைப்பதிவுகள்: வலைப்பதிவுகள் அன்றாடம் புதுப்பிக்கப்பெறும். தேவைப்பட்டால் ஒருநாளில் பலமுறைகூட புதுப்பிக்கப்பெறும். எப்பொழுதாவது ஒருமுறை புதுப்பிக்கப்படும் பதிவுகளும் உண்டு.

வலைத்தளங்கள்: வலைத்தளங்களில் பெரும்பாலும் கருத்துப்பரிமாற்ற வசதி இருப்பதில்லை. மின்னஞ்சல் வழிப் பின்னூட்டம் சில தளங்களில் உண்டு.
வலைப்பதிவுகள்: வாசகர்கள் உடனுக்குடன் தமது கருத்துக்களை வலைப்பதிவிலேயே பதிவுசெய்யும் வசதி உண்டு. வாசகர் பின்னூட்டங்கள் ஒரு விவாதம் போலத் தொடரவும் பதிவுகளில் வாய்ப்புண்டு.

மேலே பட்டியலிடப்பட்ட வேறுபாடுகள் மட்டுமின்றி வலைப்பதிவுகளுக்கென்றே சில தனித்த வசதிகளும் இணையத்தில் உண்டு.

வலைப்பதிவுகளின் இற்றைப்படுத்தல்கள் உடனுக்குடன் செய்தியோடைகள் வழியாக அனுப்பப்படும். இவ்வசதியைப் பயன்படுத்தி வாசகர்கள் தமக்குப் பிடித்த வலைப்பதிவுகளின் செய்தியோடைகளைத் தத்தமது கணினிகளில் அதற்கான மென்பொருட்களின் உதவியுடன் இணைத்துக் கொண்டு, வலைப்பதிவுகளுக்குச் செல்லாமலேயே இற்றைப்படுத்தல்களைக் கணினியில் பெற்றுக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment

புலவர் பூங்கொடி பராங்குசம் அவர்களின் இலக்கியக்களம் - நூல் அணிந்துரை

  முனைவர் நா . இளங்கோ கவிதை இரசனை , இது படைப்புக்கு இணையானதோர் முருகியல் செயற்பாடு . என்றைக்குக் கவிதைகள் தோன்றினவோ அன்றைக்கே கவ...