Thursday 26 November 2009

அட! வலைப்பதிவுக்குள்ளே இவ்வளவு இருக்கா? -பகுதி-2

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8




5. பதித்த நாள், நேரம், பதித்தவர் பெயர் முத்திரைகள்
(Date, Time, Author Stamp)

சில வலைப்பதிவுகள் தனிநபர் வலைப்பதிவுகளாக இல்லாமல் குழு வலைப்பதிவுகளாக இருக்கும். அத்தகு வலைப்பதிவுகளில் எழுதியவர் பெயர் முத்திரை இன்றியமையாதது. தனிநபர் வலைப்பதிவுகளில் இந்த முத்திரை அவசியமில்லை என்றாலும் எல்லா வலைப்பதிவுகளும் இந்த வசதியைப் பெற்றுள்ளன. பதிவுகள் பதிவு செய்யப்பட்ட நாளும், நேரமும் முக்கியமான தகவல்கள் என்பதால் பதிவுகளுக்கு மேலே பதிவுகள், பதிவுசெய்யப்பட்ட நாள், கிழமை பற்றிய முத்திரையும் பதிவுகளுக்குக் கீழே பதிவுசெய்யப்பட்ட நேரமும் வலைப்பதிவுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

ஒரே நாளில் வலைப்பதிவுகள் பலமுறை இற்றைப் படுத்தப்படும் (up-to-date) போது அல்லது பலமுறைப் பதிவுகளைப் பதிக்கும் போது நேர முத்திரை முக்கியத்துவம் பெறும். மேலே சான்றுக்காகக் காட்டப்பட்டிருக்கும் வலைப்பதிவுப் படத்தில் பதிவின் மேலே, SATURDAY, NOVEMBER, 17, 2007 என்று பதிவின் நாள் முத்திரையும் பதிவின் கீழே, Posted by முனைவர் நா.இளங்கோ at 6:55 P.M என்று பதித்தவர் பெயர் மற்றும் நேர முத்திரையும் இடம்பெற்றிருப்பதைக் காணலாம்.

6. பின்னூட்டங்கள்
(Comments):

வலைப்பதிவின் முக்கிய அம்சமே வாசகர் ஊடாடுவதற்கான வசதியினைப் பெற்றிருப்பதுதான். வலைப்பதிவின் இந்த வாசகர் ஊடாட்டமே பின்னூட்டம் (Feed- back) என்றழைக்கப்படுகிறது. பதிவை வாசிப்பவர் உடனுக்குடன் தம் கருத்தைப் பதிக்கும் வசதியே இது. வலைப்பதிவுகளில் ஒவ்வொரு பதிவின் கீழும் Comments என்ற பகுதி இடம்பெற்றிருக்கும்.

அவ்விடத்தில் இதுவரை எத்தனைக் கருத்துக்கள் பின்னூட்டங்களாக இடப்பட்டுள்ளன என்ற விபரத்துடன் கூடிய சுட்டி ஒன்று இடம்பெற்றிருக்கும். அந்தச் சுட்டியைச் சொடுக்கினால் பின்னூட்டங்களைக் காணவும் மேலும் பின்னூட்டங்களைப் பதிவுசெய்யவும் வாய்ப்பளிக்கும் புதிய சன்னல் திறக்கப்படும். மேலே சான்றுக்காகக் காட்டப்பட்டிருக்கும் வலைப்பதிவுப் படத்தில் இடம்பெற்றுள்ள துளித் துளியாய்… என்ற பதிவின் கீழ் 0 Comments என்ற சுட்டி இடம்பெற்றிருப்பதைக் காணலாம்.

7. சேமிப்பகம்
(Archives):

வலைப்பதிவுகள் தொடர்ச்சியாக இற்றைப் படுத்தப்படும் வசதியினைப் பெற்றிருப்பதால் வலைப்பதிவில் இடம்பெற்றுள்ள அனைத்துப் பதிவுகளையும் ஒரே பக்கத்தில் இடம்பெறச் செய்வது சாத்தியமில்லை. முதல் பக்கத்தில் இடம்பெற்றுள்ள பதிவுகள் தவிர்த்த முந்தைய பதிவுகள் வார வாரியாகவோ, மாத வாரியாகவோ தனியே சேமிப்பகம் என்ற பகுதியில் சேமித்து வைக்கப்படும்.

வலைப்பதிவுகளில் Archives என்ற பெயரில் இடம்பெறும் இப்பகுதி தனி வலைப்பக்கங்களாக வடிவமைக்கப்பட்டு அவற்றைத் திறப்பதற்கான மீஉரை சுட்டியுடன் அமைக்கப்பட்டிருக்கும். சேமிப்பகங்களைப் பராமரித்துப் பட்டியலிடும் பணிகளை வலைப்பதிவுச் சேவையை வழங்கும் வலைத்தளங்களே பார்த்துக்கொள்ளும். மேலே சான்றுக்காகக் காட்டப்பட்டிருக்கும் வலைப்பதிவுப் படத்தில் இடம்பெற்றுள்ள துளித் துளியாய்… என்ற பதிவுக்கு இடப்பக்கம் கீழே Blog Archive என்ற தலைப்பில் முந்தைய பதிவுகள் 2007 (11)> November (7) என்று பட்டியலிடப்பட்டிருப்பதைக் காணலாம்.

8. இணைப்புகள்
(Links):

ஒவ்வொரு வலைப்பதிவரும் தங்களுக்கு விருப்பமான வலைத்தளங்களுக்கோ, வலைப்பதிவுகளுக்கோ இணைப்பு கொடுப்பது வழக்கம். வலைப்பதிவுத் திரட்டிகள், மென்பொருள் வழங்கும் தளங்கள், எழுத்துருக்கள் கிடைக்குமிடம், இணைய இதழ்கள் முதலான பல இணைப்புகளை வழங்க வலைப்பதிவுகளில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்புகள் வழங்குதல் என்பது முழுக்க முழுக்க வலைப்பதிவரின் விருப்பத்தைச் சார்ந்தது. இத்தகு இணைப்புகளுக்கான சுட்டிகளைச் சொடுக்கிப் புதிய சன்னலில் இணைப்புக்குரிய வலைத்தளங்களையோ வலைப்பதிவுகளையோ நாம் பார்வையிடலாம்.

9. வலைப்பதிவுகளில் பக்கக் கூறுகள்
(Page Elements):

வலைப்பதிவுகளில் இடப்பெறும் பதிவுகளுக்கு இடப்பக்கத்திலோ வலப்பக்கத்திலோ வார்ப்புருவின் (Template) வடிவமைப்புக்கு ஏற்பச் சில பக்கக் கூறுகளை இணைக்க முடியும். பக்கக் கூறுகளைப் பயன்படுத்தி வலைப்பதிவரின் புகைப்படம், வலைப்பதிவர் பற்றிய குறிப்புகள் போன்றவற்றை வலைப்பதிவுகளில் இணைக்கலாம். மேலே சான்றுக்காகக் காட்டப்பட்டிருக்கும் வலைப்பதிவுப் படத்தில் இடம்பெற்றுள்ள துளித் துளியாய்… என்ற பதிவுக்கு இடப்பக்கம் மேலே எனது புகைப்படம் என்ற தலைப்பில் வலைப்பதிவரின் புகைப்படமும் About Me என்ற தலைப்பில் வலைப்பதிவர் பற்றிய குறிப்புகளும் இடம்பெற்றிருப்பதைக் காணலாம்.

No comments:

Post a Comment

புலவர் பூங்கொடி பராங்குசம் அவர்களின் இலக்கியக்களம் - நூல் அணிந்துரை

  முனைவர் நா . இளங்கோ கவிதை இரசனை , இது படைப்புக்கு இணையானதோர் முருகியல் செயற்பாடு . என்றைக்குக் கவிதைகள் தோன்றினவோ அன்றைக்கே கவ...