Saturday, 31 July 2010

போதிகாவா? பொதுகாவா? எது பழைய புதுச்சேரி?

போதிகாவா? பொதுகாவா? எது பழைய புதுச்சேரி?
புதுச்சேரியில் பௌத்தம் பகுதி-7


முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
பட்ட மேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8

பொதுகா:
கி.பி. முதலாம் இரண்டாம் நூற்றாண்டுகளில் சிறப்புற்று விளங்கிய கிழக்குக் கடற்கரைத் துறைமுகங்களாக காமரா, பொதுகே, சோபத்மா ஆகிய மூன்று துறைமுகங்களைக் குறிப்பிடுவர் பெரிபுளுசு, தாலமி என்ற அயல்நாட்டுப் பயண நூலாசிரியர்கள். இவற்றுள் காமரா காவிரிப்பூம் பட்டினத்தையும், சோபத்மா மரக்காணத்தையும் பொதுகே புதுச்சேரியையும் குறிப்பிடுகின்றது என்பது ஆய்வாளர்களின் முடிபு. (சோ.முருகேசன், ழூவோ துய்ப்ரேய் நோக்கில் புதுச்சேரி, பக். 1-11)

இக்கால அருக்கன்மேடுதான் பண்டைக்காலத்தில் பொதுகே என்னும் பெயரில் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்னும் உண்மையை இப்பகுதியில் அகழ்வாய்வுப் பணிகளை மேற்கொண்ட மார்டடிமர் வீலர், கசால், விமலா பெக்லி, பீட்டர் பிரான்சிஸ் ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர். (சு.தில்லைவனம், புதுச்சேரி மாநிலம் வரலாறும் பண்பாடும், ப.15)

அருக்கன்மேடுதான் பெரிபுளுஸ், தாலமி குறிப்பிடும் பொதுகா என்பது உறுதியாகியுள்ள நிலையில் பொதுகா என்ற சொல் குறிப்பிடும் துறைமுகப் பெயர் எது? என்பது ஆய்வுக் குரியதாகிறது.

ஏனெனில் அயல்நாட்டுப் பயணியர் நம் தமிழகத்தின் எந்த ஊர்ப்பெயரையும் சரியான உச்சரிப்போடு குறிப்பிடுவதில்லை. அவர்கள் தொண்டியைத் திண்டிஸ் என்றும் கொற்கையைக் கொல்சாய் என்றும் காவிரிப் பூம்பட்டினத்தைக் காமரா என்றும் மரக்காணத்தைச் சோபட்மா என்றும் குறிப்பிட்டுள்ளனர். புதுச்சேரி வரலாற்று ஆய்வாளர்கள் பலரும் புதுச்சேரி என்ற பெயர்தான் பொதுகே –பொதுகா என்று பெரிபுளுஸ், தாலமி போன்றவர்களால் குறிப்பிடப்பட்டது என்கிறார்கள்.

புதுச்சேரி – போதுச்சேரி – போது – பொதுக்கே

Puducherri – Poducheri – Podu - Poduke

என்று விளக்குகிறார் சோ. முருகேசன். (ழூவோ துய்ப்ரேய் நோக்கில் புதுச்சேரி, ப. 9)

இன்றைக்கு வழக்கிலுள்ள புதுச்சேரி என்ற பெயரைத்தான் பெரிபுளுஸ், தாலமி போன்றோர் பொதுகா எனக் குறிப்பிட்டார்கள் என்பது பொருத்தமில்லை. ஏனெனில் 16 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் புதிதாக மக்கள் வாழத் தொடங்கிய இன்றைய புதுச்சேரி நகரம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள்தாம் புதுச்சேரி என்ற பெயரால் அழைக்கப்பட்டது. கி.பி. முதல், இரண்டாம் நூற்றாண்டுகளில் அருக்கன்மேட்டுத் துறைமுகப் பகுதியை இப்பெயரால் குறிப்பிட்டிருக்க வாய்ப்பேயில்லை.

ஐராவதம் மகாதேவன் பொதிகை என்ற சொல்லோடு தொடர்புடையது பொதுகே என்கிறார். பொதிகை மலை, அகத்தியர் முதலான தொன்மச் செய்திகளோடு தொடர்புபடுத்தி முற்காலத்தில் இப்பகுதியில் அகத்தியர் வந்து தங்கியிருக்கலாம் என்றும் அதன்பொருட்டு இவ்வூர் பொதிகை என வழங்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர் குறிப்பிடும் செய்திகள் வெறும் யூகங்களேயன்றி உண்மையில்லை. ஏனெனில், புதுச்சேரி ஊரின் மேற்குப்பகுதி நிலப்பரப்பு சற்று உயர்ந்து செம்மண் மேடாக உள்ளதேயன்றி மலைகளோ குன்றுகளோ இப்பகுதியில் இல்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.

முனைவர் சு. தில்லைவனம், பொதுக்கம் என்ற பெயரின் திரிபு வடிவமே பொதுகே என்கிறார். அதற்கு அவர் காட்டும் சான்று, “புள்ளிக் கள்வன் புனல்சேர் பொதுக்கம்” என்ற கலித்தொகை (பா.88. அடி.10) பாடலடியாகும். பொதுக்கம் என்பது நெய்தல் நிலத்தைச் சார்ந்த கடற்கரைப் பகுதி என்று அவர் விளக்கமளிக்கிறார். (சு.தில்லைவனம், புதுச்சேரி மாநிலம் வரலாறும் பண்பாடும், ப.19) அவர் மேற்கோள் காட்டும் பாடல் ஒரு மருதக்கலி பாடலாகும். அப்பாடலில் இடம்பெறும் சொல் பொதுக்கம் அன்று, ஒதுக்கம் என்பதாகும். ஒதுக்கம் என்பதற்கு நடை என்பது பொருள். நண்டின் நடை மணலில் ஏற்படுத்திய கீறலைப் பற்றியது அப்பாடல் குறிப்பிடும் செய்தி. எனவே பொதுக்கம் என்று கலித்தொகை குறிப்பிடும் சொல்லே பொதுகா என்பதன் மூலவடிவம் என்று தில்லைவனம் குறிப்பிடும் விளக்கம் பொருந்துமாறில்லை.

பொதிகை, பொதுக்கம் என்ற இரண்டு விளக்கங்களும் பொருந்தாத நிலையில் பொதுகா, பொதுகே என்ற சொல்லால் குறிப்பிடப்படும் அருக்கன்மேட்டுத் துறைமுகப் பகுதியின் பழையபெயர் குறித்த ஆய்வு தேவைப்படுகின்றது.

போதிகா – பொதுகா – பொதுகே

அருக்கன்மேடு, காக்கையன் தோப்பு என்றழைக்கப்படும் சாக்கையன் தோப்பு, மேல் சாத்தமங்கலம் முதலான ஒத்த வரலாற்றுச் சிறப்புடைய ஊர்கள் அனைத்திலும் பௌத்த மதமே செல்வாக்கு பெற்ற மதமாயிருந்தமையும், பௌத்த வழிபாடே பெருவழக்காய் இருந்தமையும் முன்னர் மெய்ப்பிக்கப்பட்ட காரணத்தால் பொதுகா என்ற துறைமுகப் பெயரும் பௌத்த அடையாளங்களோடு கூடிய ஊர்ப்பெயராய் இருந்திருக்க வாய்ப்புகள் அதிகமுண்டு. அந்த வகையில் பொதுகா என்ற சொல்லோடு ஒலி ஒப்புமையுடைய போதிகா (போதி+கா) என்பதே அருக்கன்மேடு துறைமுகத்தின் பழைய பெயராயிருக்கலாம்.

பௌத்தர்கள் தங்கள் பெயருடனோ அல்லது தங்கள் வழிபாட்டுத் தலங்களின் பெயர்களுடனோ போதி என்ற சொல்லை இணைத்துப் பெயரிடுவது மரபு. சான்று: இளம் போதியார், வச்சிர போதி, போதி மங்கலம். பௌத்தரை போதியார் என்று தேவாரம் குறிப்பிடுவதும் ஒப்பு நோக்கத்தக்கது.

போதி +கா, பண்டைக்காலத்தில் பூந்தோட்டங்களுக்கு இடையில்தான் புத்தக் கோயில்களை அமைப்பது வழக்கம். கா என்பது தோட்டம், சேர நாட்டில் இன்றும் சாத்தன் காவு என்ற பெயர் வழங்குகிறது. புத்த வழிபாடாகிய சாத்தன் வழிபாடு இன்று சாஸ்தா வழிபாடாக மாறியுள்ளமையை நினைவுகூர்தல் வேண்டும். போதி+கா, புத்தன் வழிபாடுள்ள தோட்டம் என்ற பொருளில் போதிகா என்று வழங்கப்பட்ட பெயரே பெரிபுளுஸ், தாலமி போன்றவர்களால் பொதுகா –பொதுகே என்று வழங்கப்பட்டிருக்க வேண்டும். E. H. Warmington வார்மிங்டன் போதிகாவை போதுஸ் என்று குறிப்பிடுவதனையும் இங்கு ஒப்பிட்டுப் பார்க்கலாம். (சு.தில்லைவனம், புதுச்சேரி மாநிலம் வரலாறும் பண்பாடும், ப. 15)

போதிகா – போதுகா – பொதுகா – பொதுகே

அருக்கன்மேடு, சாக்கையன் தோப்பு முதலான பௌத்தச் சிற்றூர்களை ஒட்டி அமைந்திருந்த மிகப்பெரிய துறைமுகப் பட்டினமே போதிகா என்பதாகும். தாலமி இவ்வூரைப் பொதுகா எம்போரியம் என்று குறிப்பிட்டுள்ளார். எம்போரியம் என்பதற்கு வணிகத்தலம் என்பது பொருள். தாலமி குறிப்பிட்டுள்ளது போல் போதிகா ஒரு மிகச்சிறந்த வணிகத்தலமாகத் திகழ்ந்திருந்தமை புதைபொருள் சான்றுகளால் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.

முடிப்பாக:

அரிக்க மேடு அன்று அது அருக்கன் மேடு.

அருக்கன் மேட்டின் விருமன் கோயிலில் உள்ள சிலை புத்தர் சிலையே.

காக்காயன் தோப்பு முந்தைய சாக்கையன் தோப்பே.

மேல்சாத்தமங்கலம் அகழ்வாய்வும் அருக்கன் மேட்டின் பௌத்தத் தொடர்பை உறுதி செய்கின்றது.

அருக்கன்மேட்டுப் பானை ஓட்டு பிராமி எழுத்து வடிவங்கள் பௌத்தர்களால் நடைமுறைப் படுத்தப்பட்டனவே.

பொதுகா புதுச்சேரியைக் குறிப்பிடவில்லை.

பொதுகாவின் பழைய சரியான பெயர் போதிகா என்பதே.


துணை நின்ற நூல்கள்:

1. அ. இராமசாமி -
புதுச்சேரி வரலாறு,
பூங்குன்றம் பதிப்பகம்,
மதுரை-9
1992
2. கல்லாடன் -
புதுச்சேரி மரபும் மாண்பும்,
புதுச்சேரி வரலாற்றுச் சங்கம்,
புதுச்சேரி-1,
2002

3. சு. தில்லைவனம் -
புதுச்சேரி மாநிலம் வரலாறும் பண்பாடும்,
சிவசக்தி பதிப்பகம்,
புதுச்சேரி-8,
2007
4. சோ. முருகேசன் -
கசாலின் பார்வையில் அரிக்கமேடு,
அம்மா முத்து பதிப்பகம்,
புதுச்சேரி -11
1997
5. சோ. முருகேசன் -
ழுவொ துய்ப்ரேய் நோக்கில் புதுச்சேரி
அம்மா முத்து பதிப்பகம்,
புதுச்சேரி -11
2000
6. சீனி. வேங்கடசாமி -
பௌத்தமும் தமிழும்,
பாவை பப்ளிகேஷன்ஸ்,
சேன்னை-14
2007
7. ந. வேங்கடேசன் -
வரலாற்றில் அரிக்கமேடு,
திருமுடிப் பதிப்பகம்,
வில்லியனூர், (புதுச்சேரி)
1990

No comments:

Post a Comment

புலவர் பூங்கொடி பராங்குசம் அவர்களின் இலக்கியக்களம் - நூல் அணிந்துரை

  முனைவர் நா . இளங்கோ கவிதை இரசனை , இது படைப்புக்கு இணையானதோர் முருகியல் செயற்பாடு . என்றைக்குக் கவிதைகள் தோன்றினவோ அன்றைக்கே கவ...