Saturday, 1 June 2019

சிங்கப்பூரில் பாவேந்தர் விழா -2019 : முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா.இளங்கோவின் முத்தமிழ் உரை:

ஏ.பி.இராமன் அவர்களின் முகநூல் பதிவிலிருந்து (26-04-2019)
தமிழோடு சுழன்ற சொற்போர்-
இலக்கியக் களத்தின் பேச்சு விழா!

முனைவர் நா.இளங்கோ - சிறப்புரை

முனைவர் நா.இளங்கோ - நினைவுப் பரிசு

முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா.இளங்கோ - சிங்கப்பூர்

’சங்கே முழங்கு’ நடனத்துடன் (கிருபா-மீனலோசனி) சிங்கப்பூர் தமிழ் இலக்கிய களத்தின் ‘பாவேந்தர் 129’ நிகழ்ச்சி 21/4 ஞாயிறன்று நடந்தபோது, கூடியிருந்தோரின் ஆவல் அனைத்தும் இறுதியில் இடம் பெற விருந்த சுழலும் சொற்போரிலேயே இருந்தது. காரணம், பாரதிதாசனின் தமிழ் அருவியில் குளித்து எழுந்த புதுவை முனைவர் நா.இளங்கோவின் சிறப்புப் பங்கேற்பு!
நெறி தவறா நெறியாளர் கவிஞர் விஜயபாரதி நிகழ்ச்சிக்குக் கவிதைக் காற்று வீச, இன்னொரு பேச்சாளர் வீர விஜயபாரதி , சொற்போர் நிகழ்ச்சிக்குத் தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தார்.இதன் மற்ற இருவர் இலக்கியக் களத்தின் தலைவர் முனைவர் இரத்ன வேங்கடேசன், ஸ்டாலின் போஸ்!
சுருதிலயாவின் சுருதி சேர்ந்த தமிழ் வாழ்த்திற்குப் பின் சரளாதேவி தங்கதுரை கச்சித வரவேற்பு தந்தார்.தலைமை வகித்த தமிழ் வள்ளல் போப் ராஜ், மாண்டிசோரி கல்வி நிலயத்தின் தலைவர் டி.சந்துரு இருவரும் சுருக்க உரையாற்றி சிறக்க முடித்தனர். பாரதிதாசன் வழியில் இன்றும் பணியாற்றுபவர்களில் ஒருவராக கவிஞர் பொன்னடியானை போப்ராஜ் குறிப்பிட்டார்.அந்தக் காலத்தில் கலைமக்ள் பள்ளியில் பாவேந்தரின் பிறந்த நாள் கொண்டாடப் பட்டதை நினைவு படுத்தினார்.அருமை.
நம் மூத்த எழுத்தாளர்-ஆய்வாளர் செ.ப. பன்னீர்செல்வத்திற்குப் பொருத்தமான பாரதிதாசன் விருதை அளித்து சிறப்பித்தனர்.
பட்டிமன்ற பாணியிலான சுழலும் சொற்போர் நிகழ்ச்சியின் தொடக்க உரையில், பாண்டிப் பேச்சாளர், பாரதிதாசனை முற்றிலும் ’விழுங்கிய ’ முனைவர் நா.இளங்கோ , பளிச்செனப் புரியும் முன்னுரை ஒன்றைத் தன்னுரையாகத் தந்தார்.
மேடை மாண்பைக்குறைக்காத இலக்கியக் களம் என்ற புகழுரையுடன், தமிழ் உணர்வுக்கு ஊக்கம் தந்த ராமலிங்க வள்ளலாரை முதலில் முன்னிறுத்தினார். சிறந்த மாதா மொழி சமஸ்கிருதம் என்றபோது,ஆத்திரமடையாமல் , வள்ளலார், உண்மைதான் . ஆனால் தமிழ் பித்ரு மொழி என்றவர் என கைதட்டல்களுக்கிடையே பேச்சைத் துவக்கினார். சாதி, சழக்கை வெறுத்த வள்ளலார், மொழிப் பற்றை வளர்த்தவர் என்பதை உணர்த்த இந்த உதாரணம்.பயிர்களுக்கு வேலி போட்டால் மட்டும் வளராது- வளர்க்க வேண்டும் என்பது போல், தமிழை நாம் பாதுகாப்புடன் வளர்க்க வேண்டும் என்றார் முனைவர் இளங்கோ. 21ம் நூற்றாண்டில் பாரதியார் தொட்டதை யெல்லாம், பாரதி தாசன் பெரிதாக்கினார். பாகவதர் பாடிய பிரபல பாடல் ‘பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமே’ என்ற பாபநாசம் சிவனின் பாடல் மெட்டில், பாவேந்தர் இயற்றிய வாழ்வியல் நீயே என்ற பாடலை அருங் கருத்துடன் இயற்றியதை முனைவர் பாடி நினைவூட்டினார். பாரதிக்குப் பின் பாரதிதாசனே கவிதைகளில் மன்னனாகத் திகழ்ந்தவர் எனக் குறிப்பிட்ட முனவர் இளங்கோ, பாவேந்தரின் பழக்கத்தில் வராத பல்சுவைப் பாடல்களை யெல்லாம் சரளமாக எடுத்துச் சொல்லி பிரமிக்க வைத்தார்.
முதல் பேச்சாளர் முனைவர் இரத்ன வேங்கடேசன், தாசனாரின் கவிதைச் சிறப்பை வெளிக் கொணர்ந்த விதம், நுட்பமானது. சூரியனை, நிலவைக் காட்டும் அழகினைபாரதி தாசன் விவரித்த கவிதைத்துவத்தை கண்முன் நிறுத்தினார்.. சிறந்த கவித்துவத்திற்குத் தேவையான ஆழம், பொருள்,கற்பனைத் திறம், உவமை அத்தனையையும் அடக்கம், புரட்சிக் கவிஞனின் கவிதை வரிகளிலே என்று அழுத்தம் திருத்தமாக விளக்கிய போது, அரங்கின் பாராட்டு எம்பிக் குதித்தது. கவிதைகளுக்கு சிறப்புச் செய்த நாடகப் பாணித் தமிழையும் நினைவு படுத்தினார் முனைவர்.
வீரத்துடன் வலம் வந்த வீர விஜயபாரதி, தமிழை கருத்தாழத்துடன் சுவாசித்தவர் பாரதி தாசன் என்றார். இந்தியைத் திணிக்க முனைந்த ஒரு காலத்தில், தமிழ் தழைக்கக் கருத்துக் குரல் எழுப்பினார் பாரதிதாசன். குருநாதர் பாரதியார் வைத்த புள்ளியைத் தான், பாவேந்தர் பின்பற்றினார். அவரின் கருத்துக்கள் ஒவ்வொன்றும் கவனிக்கப்பட்டன-தேவைப்பட்டன. தமிழிசையைப் பற்றிக் கருத்து கூறியவர் பாரதிதாசன். கடவுளின் பெயரால் சோம்பித் திரிந்த நமக்கு அவருடைய பாடல்களின் கருத்து மிக அவசியமாக இருந்தது. காலத்தைத் திசை மாற்றிய கருத்து, பாரதிதாசனுடையது என முடித்தார்.
உணர்ச்சியிலேயே ஊறித் திளைத்த பாவேந்தரின் பாடல்களில் விஞ்சி நின்று நெஞ்சை ஈர்ப்பது உணர்ச்சி தான் என்று எழுந்து நின்ற பேச்சாளர் ஸ்டாலின் போஸ். இவர் பேச வர மாட்டார் -பேசினால் பேசித் தீர்த்து விடுவார். எல்லாரும் ஆத்திச்சூடி எழுதினர் - யாராவது ‘அம்மா’ என்ற உணர்வுப் பெருக்கைத் தந்தார்களா? தாலாட்டை எடுத்துக் கொள்ளுங்கள், உணர்ச்சிகளைத் தானே ஊட்டி வளர்க்கிறார். அவரின் பாடல்களில் அடுப்படியிலிருந்து உணர்ச்சி கொப்பளிக்கிறது. பாரதி தாசனின் ஒவ்வொரு பாடலிலும் உணர்ச்சியைத் தவிர வேரொன்றும் காணோம் என்று முடித்தார்.
அஞ்சலைப் பெட்டி இல்லாவிட்டால் சுக்கு எப்படிக் கிடைக்கும் என கவித்துவத்தை நிலை நாட்ட முனைந்தார் முனைவர் இரத்தின வேங்கடேசன். நூலைப் படி-முறைப்படி படி - படி-படி படி படி என கவித்துவம் பொங்கக் கூறினாரே பாவேந்தர் என்றார் அவர்.
நடனத்தில் கூட கருத்தைக் காட்டியவர் பாரதி தாசன். ஆலையின் சங்கே ஊதாயோவில் எத்தனை கருத்து!தமிழை விட்டு விடாதே , அதுதான் உனக்கு உயிர் என்று சொன்னவர் பாவேந்தர் என்று முடித்துரைத்தவர் வீரவிஜயபாரதி.
உணர்ச்சி தான் கவிதை. அதைத் தான் பாவேந்தர் தந்தார். முதுமைக் காதலிலும் உணர்ச்சியைக் கொட்டியவர் அவர் என்றவர் ஸ்டாலின் போஸ்.
சொல்லாற்றல் மிக்க நடுவர் இளங்கோ, கம்பர், வள்ளுவர், மற்ற அனைவரையும் அழகாக வரிசைப் படுத்தினார் .. கவித்துவம், கருத்து அத்தனைக்கும்பொருத்தச் சுவை சேர்த்த அவர், பாரதி தாசனுக்கு உணர்ச்சி தான் உயிர் நாடி என்றார்.
இறுதியில் நன்றி உரை! அதிலும் தனிச் சுவை சேர்த்தார் மேடைக் கலைஞர் கண்ணன் சேஷாத்ரி.
--ஏ.பி.ஆர்.
ஏன் தாமதம்?
கடந்த சில வாரங்களாக தமிழ் மொழி மாத நிகழ்ச்சிகள் பலவற்றிற்கும் நிர்ப்பந்த அழைப்பில் கலந்து கொள்ள நேரிட்டது. நாள் முழுவதும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதால், செய்திகளை அன்றாடம் முகநூலில் பதிவு செய்வது சாத்தியமற்றதாகப் போய்விட்டது. குறிப்பாக புரட்சிக் கவிஞனின் நிகழ்வை, பேச்சாளர்களின் கருத்துக்களை நினைவு வைத்து எழுதுமளவுக்கு எனக்கு ஆற்றலும் கிடையாது. எப்படியோ யோசித்து எழுதி உங்கள் பார்வைக்குத் தாமதமாக வைக்கிறேன்.

சிங்கப்பூர் மூத்த எழுத்தாளர் ஏ.பி.இராமன் ஐயாவுக்கு நன்றி!

No comments:

Post a Comment

புலவர் பூங்கொடி பராங்குசம் அவர்களின் இலக்கியக்களம் - நூல் அணிந்துரை

  முனைவர் நா . இளங்கோ கவிதை இரசனை , இது படைப்புக்கு இணையானதோர் முருகியல் செயற்பாடு . என்றைக்குக் கவிதைகள் தோன்றினவோ அன்றைக்கே கவ...