முன்னுரையாக…
“நமக்குத்
தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல் இமைப்பொழுதும் சோரா திருத்தல்” என்றான் பாரதி. எனக்குத்
தொழில் கவிதை இல்லை. இப்பொழுது யாருக்கும் கவிதை தொழிலாய் இருக்க முடியாது, இருக்கவும்
கூடாது. நான் ஒரு ஆய்வாளன், ஆசிரியன். அதே சமயம் பாரதி சொன்னது போல் கொஞ்சம் போல தவம்
செய்து வருவதனால் யோகம் வந்து சேர்ந்திருக்கிறது. புரியும் படியாகவே சொல்கிறேன். பாரதி
விநாயகர் நான்மணி மாலையில்,
செய்க தவம்! செய்க தவம்! நெஞ்சே! தவம் செய்தால்
எய்த விரும்பியதை யெய்தலாம் - வையகத்தில்
அன்பிற் சிறந்த தவமில்லை; அன்புடையார்
இன்புற்று வாழ்த லியல்பு.
எய்த விரும்பியதை யெய்தலாம் - வையகத்தில்
அன்பிற் சிறந்த தவமில்லை; அன்புடையார்
இன்புற்று வாழ்த லியல்பு.
என்று பாடியதற்கேற்ப
கொஞ்சம் தவம் செய்து வருகிறேன். அதாவது சாதி மதங்களைக் கடந்து சக மனிதர்கள் மீதும்
பிற உயிரினங்களின் மீதும் அன்பு பாராட்டி வருகிறேன். அதன் பொருட்டு ஊருக்கு உழைக்க
முயல்கிறேன். அதுதான் எனக்கு வந்து சேர்ந்த யோகம். “ஊருக்கு உழைத்தல் யோகம்” என்பது
பாரதியின் வாக்கு அல்லவா?
அன்பு செய்யத் தொடங்கினாலே சிக்கல்தான். இன்றைக்கு
அன்புக்கு எதிரான சுயநலமிக்க மதவெறியும் சாதிவெறியும் கொண்டு அலையும் மனித விலங்குகளைப்
பார்க்கும்போது கோபம் கோபமாக வருகிறது. திருவள்ளுவர் சொன்னதுபோல் (அறத்திற்கே அன்புசார்
பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை –குறள்: 76) சமூகத்தோடு முரண்பட்டுச் செயலாற்று
வதற்கும் நாம் செய்யும் அன்பே காரணமாகி விடுகிறது. நமது காந்தி தேசத்தில் நாமெல்லாம்
அகிம்சையைத்தான் ஆயுதமாக எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து போதிக்கப் பட்டு வருகிறது.
ஆனால் அரசு ஒருபோதும் அகிம்சையின் பக்கம் வருவதே யில்லை, அது அகிம்சைப் போராட்டங்களை
ஒடுக்குவதற்கு வன்முறையைதான் கையில் எடுக்கிறது. இதற்குப் பல உதாரங்களைச் சொல்ல முடியும்.
சமீபத்திய உதாரணம் மெரீனாப் போராட்டம், ஸ்டெர்லைட் தூத்துக்குடிப் போராட்டம். நான்
யார் பக்கம் நிற்க! அன்பு செய்பவன் எப்பொழுதும் அடக்கி ஒடுக்கப் படுகிறவர்கள் பக்கம்தான்
நிற்பான், நிற்க வேண்டும். நானும் அப்படித்தான்.
என்னுடைய கவிதை உலகம் அலாதியானது. அது சமூகத்தின் வெளிமுரண்களைப்
பற்றி மட்டுமே பேசுவதில்லை. அது மனிதனின், சமூகத்தின் அகமுரண்களையும் பேசுகிறது. எல்லாவற்றுக்கும்
அன்புதான் அடிப்படைக் காரணம். அகமுரண்கள் எப்பொதும் கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருக்கும்.
எல்லாக் கேள்விகளுக்கும் விடை கிடைத்துவிடாது. விடை கிடைக்க வில்லை என்றோ கிடைக்காது
என்றோ கருதிச் சோர்ந்துவிடக் கூடாது. கேள்விகளை நாம் தொடர்ந்து உற்பத்தி செய்துகொண்டே
இருக்க வேண்டும். எனக்கு அதிகமாகப் பிரபஞ்சம் குறித்தும் காலம், இடம் குறித்தும் கேள்விகள்
தோன்றிக் கொண்டே இருக்கின்றன. “நழுவும் காலம்” என்பது என்னுடைய வினா விடைகளுக்கான கூட்டுப்
படிமம்.
எனக்கு அரசியல் பிடிக்கும் ஆனால் அரசியலற்ற அரசியல்வாதிகளைப் பிடிப்பதில்லை.
இன்றைக்குக் கண்முன்னே தட்டுப்படும் பெரும்பாலான அரசியல்வாதிகள் செய்யும் அரசியல் சகிக்கக்
கூடியதாயில்லை. அரசியல்தான் இப்படியென்றால் ஆன்மீகம் என்ற பெயரில் நடக்கும் அடாவடிகள்
மத அடிப்படை வாதிகளின் சமீபத்திய அசுர வளர்ச்சிக்குப்பின் எல்லையில்லாமல் போய்விட்டது.
அன்பே தவமாய் வாழும் எங்களின் ஆன்மீகம் வேறு. மத அடிப்படை வாதிகளின் போலி ஆன்மீகம்
வேறு. எங்கள் ஆன்மீகத்திற்குக் கடவுள் தேவையில்லை. அவர்களோ கடவுளின் பெயரால்தான் ஆதிக்கம்
செய்கிறார்கள், அத்துமீறு கிறார்கள். எனவே இப்பொழுது என்ன செய்ய? பொய்ம்மையைத் தோலுரிக்காமல்
மெய்ம்மையைப் பேச முடியுமா? என்னுடைய கவிதை உலகம் இதுதான்.
Ø விருந்தைப் பரிமாறிவிட்டுச் சாப்பாட்டின் பெருமையை விரிவுரை ஆற்றிக்
கொண்டிருப்பதைப் போலத்தான் இதுபோன்ற முன்னுரைகளும். இன்னபிற உரைகளும் விருந்துக்கு
விரையுங்கள் எங்கள் விளக்க வுரைகளை விட்டு விலகுங்கள்.
Ø சம்பிரதாயமாக இல்லை, உண்மையில் உளப்பூர்வமான நன்றிக்கு உரியவர்களைப்
போற்றி மகிழ்கிறேன்.
Ø என் கல்லூரிக் காலத் தோழர் என் எழுத்துக்களைக் கண்டு உவப்பவர். அதனைத்
தன்பராமரிப்பால் வளர்ந்தெடுப்பவர் இனிய நண்பர் சின்ன.சேகர் அவருக்கு இந்நூல் அன்புக்
காணிக்கை.
Ø நழுவும் காலம் என்ற இந்நூலை ஓராண்டுக்கு முன்பாகவே நேர்த்தியான செயலியாக
(ANDROID APP) வடிவமைத்து உலகத் தமிழர்களின் கரங்களில் உலவவிட்ட மென்பொருள் வித்தகர்
கனடாவைச் சேர்ந்த இனிய நண்பர் அந்தமில் கார்த்தி
அவர்களுக்கு அகங்கனிந்த நன்றி.
Ø பதிப்புத் துறையில் பல புதுமைகள் படைப்பதோடு தேர்ந்த படைப்பாளியாகவும்
வலம்வரும் விழிகள் பதிப்பகத் தோழர் தி.நடராசன்
அவரின் நேர்த்தியான கைவண்ணத்திற்கு நன்றிகள் பல.
மலையருவி
(முனைவர் நா.இளங்கோ)
nagailango@gmail.com
No comments:
Post a Comment