Tuesday 22 December 2009

நாவலாசிரியர் டி.பி.ராஜலட்சுமி -சினிமாராணி டி.பி.ராஜலட்சுமி பகுதி-3

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

நாவலாசிரியர் டி.பி.ராஜலட்சுமி:

“தமிழ் நாவல் நூறாண்டு வரலாறும் வளர்ச்சியும்” நூலை எழுதிய பெ.கோ. சுந்தரராஜன் (சிட்டி), சோ. சிவபாதசுந்தரம் ஆகியோர் டி.பி.ராஜலட்சுமி அவர்களின் நாவல் படைப்புகளைப் போகிறபோக்கில் பின்வருமாறு (ப. 144)சுட்டிச் செல்கின்றனர்.

“அதே ஆண்டில் (1931) மற்றொரு பெண்மணி தென்னிந்திய நாடக மேடைகளிலும் சினிமா காட்சிகளிலும் பிரசித்தி பெற்ற டி.பி. ராஜலட்சுமி, “கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன்” என்ற ஒரு நாவல் எழுதியிருக்கிறார். இந்த நாவலிலும் சமூக முன்னேற்றக் கருத்துக்கள் காணப்படுகின்றன.

கமலவல்லியை டாக்டர் சந்திரசேகரன் காதலிப்பதும் உமையப்பன் என்ற தீயவனால் பல இடையூறுகள் ஏற்படுவதும் பின்னர் பிறர் உதவியால் யாவும் சுபமாய் முடிவதும்தான் கதை. ஆனால் இந்த நாவலின் பின்அட்டையில் காணப்படும் விளம்பரத்தில், ‘இது அனுபவ ஞானக் கலா விலாசங்கள் நிறைந்திலங்கும் அமிர்தச் சுவையுள்ள அழகிய தமிழ் நாவல்’ என்று காணப்படுவதால் ஆசிரியை வளர்ந்த சூழ்நிலையின் சமகாலச் சமூகச் சித்திரம் என்றுதான் கொள்ளப்படலாம். இவர் மற்றும் ஐந்து நாவல்கள் எழுதியதாக ஒரு விளம்பரம் குறிப்பிடுகிறது.”
சிட்டி, சிவபாதசுந்தரம் ஆகிய இந்நூலாசிரியர்கள் மறவாமல் டி.பி.ராஜலட்சுமியை ஒரு நாவலாசிரியராகப் பதிவு செய்துள்ளமை காலத்தினால் செய்த உதவியாகும்.

இந்நூலைத் தவிர நாவல் தொடர்பாக வெளிவந்துள்ள ஆய்வு நூல்கள் வரலாற்று நூல்கள் மற்றும் நாவல் விளக்க நூல்கள் எவற்றிலுமே டி.பி.ராஜலட்சுமி அவர்களின் நாவல்கள் குறித்த பதிவு இடம்பெறாதது ஒரு வரலாற்றுச் சோகமே. (என்னுடைய பார்வை எல்லைக்குட்பட்ட நூல்களில்)

இணையதள தமிழ் விக்கிப்பீடியா http://ta.wikipedia.org/wiki/- “டி.பி.ராஜலட்சுமி: தமிழ் சினிமாவின் முதல் நடிகையும், புதின எழுத்தாளரும் ஆவார். தமிழில் வெளிவந்த முதல் பேசும்படமான காளிதாஸ் (1931) திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். --- --- ராஜலட்சுமி எழுதிய முதல் புதினம் கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன் என்பதாகும். விமலா, மல்லிகா, சுந்தரி, வாஸந்திகா, உறையின் வாள் ஆகியவை இவர் எழுதிய மற்ற நாவல்கள்”
என்று குறிப்பிட்டுள்ள செய்தி நாவல் ஆய்வாளர்களுக்கும் தமிழிலக்கிய வரலாற்று ஆய்வாளர்களுக்கும் பயனளிக்கும் அரிய செய்தியாகும்.

கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன்:

நாவலாசிரியர் டி.பி.ராஜலட்சுமியின் முதல் நாவல் கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன் ஆகும். இவர் இந்நாவலைத் தம் இருபதாவது வயதில் எழுதியுள்ளார். டி.பிராஜலட்சுமி கதாநாயகியாக நடித்துத் தமிழின் முதல் பேசும்படம்; வெளிவந்த அதே ஆண்டில் (1931) டி.வி. பாலகிரு~;ண நாயுடு என்பவரால் இந்நாவல் வெளியிடப்பட்டுள்ளது.

‘விடுதலைக்கு முந்தைய பெண் எழுத்தாளர்களின் நாவல்கள்’ என்ற தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வுக்காக சென்னை ஆவணக் காப்பகத்தில் நூல்களைத் தேடித் திரட்டியபோது இந்நூலைக் கண்டெடுத்ததாகவும் பின்னர் இந்நாவலின் தனித்தன்மைகளை உணர்ந்து புலம் பதிப்பகத்தின் வழியாக இந்நாவலைப் பதிப்பித்ததாகவும் குறிப்பிடுகின்றார் இந்நூலின் புதிய பதிப்பாசிரியர் ப.பத்மினி அவர்கள்.

புதிய மறுபதிப்பு

டி.பி.ராஜலட்சுமி
கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன்
பதிப்பாசிரியர் ப.பத்மினி
புலம் வெளியீடு
மதுரவாயல், சென்னை- 95
முதல்பதிப்பு மார்ச் 2009

என்ற பதிப்புத் தகவல்களோடு வெளிவந்துள்ளது.

இந்நூலின் பதிப்பாசிரியர் ப.பத்மினி அவர்கள் இந்நாவலின் முக்கியத்துவத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது,

“திரைப்படத் துறையில் இருக்கும் பெண்களில் இவரைத்தவிர இலக்கிய உலகில் வேறு யாரும் பிரவேசித்ததுபோல் தெரியவில்லை. இவருக்குப் பின்வந்த திரைப்படப் பெண் நடிகர்களில் பலர் தம்முடைய வாழ்க்கையைப் பத்திரிக்கைகளில் தொடர்களாக மட்டுமே வெளியிட்டனரேயன்றி இவரைப் போன்று சமூக உணர்வுடன் கூடிய இலக்கியப் படைப்பை அளித்ததாகத் தெரியவில்லை. ஆனால் திரைப்படத்துறையில் புகழின் உச்சத்தில் இருந்த இவரின் படைப்போ சமூக உணர்வுடன் கூடியதாக இருப்பதைக் காணலாம்.”
(ப.பத்மினி, கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன், முன்னுரை, பக் 9-10)

என்று குறிப்பிடுவதோடு இந்நூலை மீண்டும் மறுபதிப்பாக வெளியிடுவதற்கான காரணங்களாகப் பதிப்பாசிரியர் ப.பத்மினி இரண்டினைக் குறிப்பிடுகின்றார்.

ஒன்று, கலைப்பட்டறையில் வாழ்ந்திருந்தாலும் யதார்த்தத்தில் சிந்திக்கும்போது அன்றைய பெண்களின் சிக்கல்களை மையமாகக் கொண்டு மிகவும் துணிச்சலோடு இப்படைப்பைப் படைத்திருப்பது வியப்புக்குரியது.

இரண்டு, இந்திய விடுதலைக்கு முன் பெண் எழுத்தாளர்கள் பலர் எழுதிய படைப்புகள் சமூகத்திற்குக் குறிப்பாகப் பெண்களுக்கு விழிப்புணர்வு தரக்கூடியவையாக இருந்துள்ளன. சில படைப்புகள் சமூக மாற்றங்களை உண்டாக்கக் கூடியவையாகவும் இருந்துள்ளன. இது குறித்துப் பெரிதாகப் பதிவுகள் செய்யப்படவில்லை. இந்நாவல் அப்படிப்பட்ட ஒரு பதிவாக இருக்கும் (ப.பத்மினி, கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன், முன்னுரை, பக். 10-11)

நூலமைப்பு:

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கக் காலங்களில் இரட்டைத் தலைப்பிடும் முறை வழக்கத்திலிருந்தது. பத்திரிக்கைகளில் இடம்பெறும் செய்தியின் தலைப்புகள் தொடங்கி, நாவல் தலைப்புகள், சிறுகதைத் தலைப்புகள், நூலின் தலைப்புகள், திரைப்படத் தலைப்புகள் என அனைத்துத் தலைப்புகளும் இரண்டிரண்டாக இடப்படுவது வழக்கம். முதல் தலைப்புக்கும் அடுத்த தலைப்புக்கும் இடையே அல்லது என்றசொல் இடம்பெறும். இம்மரபைப் பின்பற்றி இந்நாவலுக்கும் கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன் என இரட்டைத் தலைப்பு இடப்பட்டுள்ளது.

நாவல் பதினாறு அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அத்தியாத்திற்கும் நாவலாசிரியராலேயே பொருத்தமான கவித்துவமிக்க தலைப்பிடப்பட்டுள்ளது. (காட்டேரியும் கருப்பண்ணசாமியும், சுவர்க்கவாசலும் அம்பிகைசேனையும், பூனைக்குக் கொண்டாட்டம் எலிக்குத் திண்டாட்டம் என்பன போன்ற தலைப்புகள்) முதல் நான்கு பகுதிகள் மட்டும் அதிகாரம் என்ற பெயரிலும் ஐந்துமுதல் பதினாறு வரையிலான பகுதிகள் அத்தியாயங்கள் என்ற பெயரிலும் பகுக்கப்பட்டுள்ளன.

நாவலின் கதைப் பாத்திரங்கள்:

கமலவல்லி - கதைத் தலைவி
கண்ணப்பன் - கமலவல்லியின் காதலன்
மகாலிங்கம் - கண்ணப்பனின் நண்பன்
டாக்டர் சந்திரசேகரன் - கமலவல்லியின் கணவன்
பத்மாசனி - கண்ணப்பனின் தமக்கை
பாரிஸ்டர் பக்தவசலம் - பத்மாசனியின் கணவர்
செல்வாம்பாள் - பாரிஸ்டர், பத்மாசனி இவர்களின் மகள்
சோமசுந்தரம் பிள்ளை - கமலவல்லியின் வளர்ப்புத் தந்தை
மாணிக்கவல்லி - கமலவல்லியின் வளர்ப்புத் தாய்
உமையப்பன் - கமலவல்லியை விலைபேசும் முரடன்

கதைச் சுருக்கம்:

இந்நாவலின் கதைத்தலைவி கமலவல்லியும் கண்ணப்பனும் காதலர்கள். கமலவல்லியின் வளர்ப்புப் பெற்றோர் ரூபாய் 5000 பணம் பெற்றுக் கொண்டு அவளை டாக்டர் சந்திரசேகரனுக்கு வலிந்து மணம் செய்து வைக்கின்றனர். முதலிரவில் கமலவல்லி டாக்டர் சந்திரசேகரனிடம் தான் கண்ணப்பனைக் காதலிக்கும் செய்தியைச் சொல்லி கண்ணப்பனோடு தன்னைச் சேர்த்துவைக்க வேண்டுமென்று வேண்டுகிறாள். சந்திரசேகரனும் உடன்படுகிறான். மீண்டும் வளர்ப்புப் பெற்றோர் வசம்வந்த கமலவல்லியை உமையப்பன் என்ற முரடன் ஒருவனுக்கு மணம்முடிக்க அவர்கள் முயற்சி செய்ய, கமலவல்லி அவ்வீட்டைவிட்டுத் தப்பிவந்து தற்கொலைக்கு முயல்கிறாள்.

அவளைக் காப்பாற்றித் தம் வீட்டில் அடைக்கலம் தருகின்றனர் பாரிஸ்டர் பக்தவச்சலமும் அவரது துணைவியார் பத்மாசனியும். பாரிஸ்டர் பத்மாசனி இணையரின் முயற்சியால் டாக்டர் சந்திர சேகரனின் துணையோடு கமலவல்லி கண்ணப்பன் திருமணம் பல போராட்டங்களுக்கிடையே நடந்தேறுகிறது. டாக்டர் சந்திரசேகரன் பாரிஸ்டர் மகள் செல்வாம்பாளைக் காதலித்து மணமுடிக்கிறார்.

காதலித்தவனைத் திருமணம் செய்துகொள்ள முடியாமல் வேறுஒருவனைத் திருமணம் செய்துகொள்கிறாள் ஒருபெண். அவள் கணவன் தன்மனைவி வேறு ஒருவனின் காதலி என்பதை அறிந்தவுடன் அவளின் காதலனுக்கே அவளை மணமுடித்து வைப்பதாகச் சொல்லும் புதுமையான கருத்தே கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன் நாவலின் கதைக்கரு.

No comments:

Post a Comment

புலவர் பூங்கொடி பராங்குசம் அவர்களின் இலக்கியக்களம் - நூல் அணிந்துரை

  முனைவர் நா . இளங்கோ கவிதை இரசனை , இது படைப்புக்கு இணையானதோர் முருகியல் செயற்பாடு . என்றைக்குக் கவிதைகள் தோன்றினவோ அன்றைக்கே கவ...