Monday 21 December 2009

தமிழின் முதல் பெண் இயக்குநர் - சினிமாராணி டி.பி.ராஜலட்சுமி பகுதி-2

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

முதல் பெண் இயக்குநர்:

1931 தொடங்கி 1950 வரை தொடர்ந்து இருபத்திரண்டு படங்களில் டி.பி.ராஜலட்சுமி நடித்துள்ளார். அவற்றுள் முக்கியமானதாகக் காளிதாஸ் (1931), கோவலன் (1933), வள்ளித் திருமணம் (1933), குலேபகாவலி (1935), ஹரிச்சந்திரா (1935), மிஸ்.கமலா (1936), நந்தகுமார் (1939), மதுரை வீரன் (1939), ஜீவஜோதி (1947), இதயகீதம் (1950) போன்ற படங்களைக் குறிப்பிடலாம்.

காளிதாஸைத் தொடர்ந்து 1932 இல் ராமாயணம் என்ற படத்தில் டி.பி.ராஜலட்சுமி நடித்தார். இப்படத்தில் டி.எஸ். மணிக்கு இராமன் வேடம். டி.பி.ராஜலட்சுமிக்கு சூர்ப்பனகை, சீதை என்று இரண்டு வேடம். ஒரே படத்தில் முதன்முதலில் இரண்டு வேடங்களில் தோன்றி மக்களை அதிசயிக்க வைத்த பெருமையும் இவருக்கே உண்டு.

தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடித்து, பாடி, பேசி வெற்றிக்கொடி நாட்டிய டி.பி. ராஜலட்சுமி 1936 இல் தமிழ்த் திரைப்பட உலகில் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என்ற புதிய பரிமாணங்களோடு மிஸ். கமலா என்ற திரைப்படத்தைத் தயாரித்து இயக்கினார். மிஸ். கமலா திரைப்படத்தின் கதாசிரியரும் அவரே, அவரே திரைக்கதை அமைத்து உரையாடல்களையும் எழுதினார். இப்படத்திற்கான பாடல்களை எழுதியதோடு கதாநாயகி வேடமேற்று பாடி, நடிக்கவும் செய்தார். டி.பி.ராஜலட்சுமியே தமிழின் முதல் பெண் தயாரிப்பாளர். முதல் பெண் இயக்குநர்.

மிஸ். கமலா திரைப்படத்திற்கு

நடிப்பு
பாடகர்
பாடலாசிரியர்
கதை
திரைக்கதை
உரையாடல்
இயக்கம்
தயாரிப்பு

ஆகிய பல பணிகளை ஏற்றுத் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முதன்முறையாகத் திறம்படச் செயல்படுத்திக் காட்டிய பெருமை டி.பி.ராஜலட்சுமி அவர்களையே சாரும். 1936 லேயே இந்திய, தமிழகத் திரைப்பட உலகின் சகலகலாவல்லி என்ற பெரும்புகழ் பெற்றவர் அவரே. தமிழ்த்திரையுலகம் அவரைச் சினிமா ராணி எனக் கொண்டாடியது.

இந்தச் சாதனை குறித்து 1956 ஆம் ஆண்டின் தமிழ் சினிமா இதழின் தீபாவளி மலரில் டி.பி.ராஜலட்சுமி எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி பின்வருமாறு.

“இப்படி ஆரம்பமான எனது நட்சத்திர வாழ்க்கைத் தொடர்ந்து ஓய்வில்லாமல் செல்ல ஆரம்பித்தது. ‘வள்ளி’ எனக்கு நல்ல பெயரைச் சம்பாதித்துக் கொடுக்கவே கல்கத்தாவில் முகாம் போட்டுத் தொடர்ந்து பத்து படங்களில் நடித்தேன். அனுபவம் எனக்கு அருமையான ஆசானாக அமைந்தது. ஒரு ஆசிரியரிடம் பாடம் கேட்டால் கூட அவ்வளவு பழக்கம் எனக்கு ஏற்பட்டிராது. அந்தச் சமயத்தில்தான் நான் சொந்தமாக ஒரு படத்தைத் தயாரித்தேன். அதுதான் மிஸ். கமலா. அதன் கதை, வசனம், பாடல்கள், டைரக்~ன் அனைத்தையுமே நான்தான் கவனித்துக் கொண்டேன். தொடர்ந்து மதுரை வீரன், இந்தியத் தாய் ஆகிய படங்களையும் தயாரித்தேன்.”
(அறந்தை நாராயணன், தமிழ் சினிமாவின் கதை, பக் 95-96)

அனுபவத்தையே ஆசானாகக் கொண்டு சாதித்துக் காட்டிய சினிமா ராணி டி.பி.ராஜலட்சுமி நடிகை, இயக்குநர், தயாரிப்பாளர் என்ற திரைப்படம் சார்ந்த ஆளுமைகளுக்கு வெளியே ஒரு சிறந்த படைப்பாளியாகவும் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டவர் என்பது தமிழிலக்கிய உலகில் மறக்கப்பட்ட செய்தி.

No comments:

Post a Comment

புலவர் பூங்கொடி பராங்குசம் அவர்களின் இலக்கியக்களம் - நூல் அணிந்துரை

  முனைவர் நா . இளங்கோ கவிதை இரசனை , இது படைப்புக்கு இணையானதோர் முருகியல் செயற்பாடு . என்றைக்குக் கவிதைகள் தோன்றினவோ அன்றைக்கே கவ...