Friday 4 December 2009

எது நுகர்வுக் கலாச்சாரம்

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

எது நுகர்வுக் கலாச்சாரம்:

பொருள்களை வாங்கிக் குவிக்க வேண்டும் என்ற பெருவிருப்பே நுகர்வுக் கலாச்சாரத்தின் அடையாளம். நமக்கு எது தேவை? எவையெவை தேவையில்லை என்ற தெளிவில்லாமல், விளம்பரம் செய்யப்படும் அனைத்துமே நமக்குத் தேவை என்று எண்ணும் ஆசை மனம்.

இன்றைக்கு உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வரும் அனைத்துப் பொருட்களுமே மக்களின் தேவை கருதி உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக நினைப்பது சரியல்ல. மாறாக உற்பத்தி செய்யப்பட்டு அங்காடிக்கு வந்துள்ள பொருட்களின் அடிப்படையிலேயே நம்முடைய தேவைகள் நிர்ணயிக்கப்படுகின்றன என்பதுதான் உண்மை.

சான்றாக, சுத்திகரிக்கப்பட்ட பாதுகாப்பான குடிநீர் என்ற அறிமுகத்தோடு பாட்டிலில் அடைத்து ஒரு லிட்டர் 15 ரூபாய் வரை விற்கப்படும் மினரல் வாட்டர். இன்று மினரல் வாட்டர் குடிப்பதே பாதுகாப்பானது, ஆரோக்கியமானது என்பதே பொது நியதி ஆக்கப்பட்டு விட்டது. பாட்டிலில் அடைத்து விற்கப்படும் மினரல் வாட்டர் பாதுகாப்பானதா? ஆரோக்கியமானதா? என்றால் இல்லை என்பதுதான் மிகப்பெரிய சோகம்.

அது ஒரு புறமிருக்கட்டும். மினரல் வாட்டர் பாட்டில்கள் மக்களின் தேவை கருதி உருவாக்கப்பட்டதா? அல்லது உற்பத்தியாகி விற்பனைக்கு வந்தபிறகு நம்முடைய தேவை நிர்ணயிக்க அல்லது நிர்பந்திக்கப்பட்டதா? என்று பார்த்தால் உற்பத்தி, விற்பனை, விளம்பரம் என்ற தொடர்ச்சியிலேயே அவை நம்மீது திணிக்கப்பட்டது என்பதுதான் உண்மை. நுகர்வோர் மனதில் தூய்மை, சுகாதாரம், ஆரோக்கியம் என்று கட்டப்பட்ட புனைவுகள் நுகர்வுக் கலாச்சாரத்தின் பண்பு.

நுகர்வுக் கலாச்சாரத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருளின் தரத்தைவிட அதன் வடிவமைப்பு, பேக்கிங், மிகுத்துச் சொல்லப்படும் வாக்குறுதிகள், விளம்பரப்படுத்தும் பிரபலம் இவைகளே முக்கியத்துவம் பெறுகின்றன. கிரிக்கெட் வீரர்களும் சினிமா நடிகர் நடிகைகளும் தோன்றி விளம்பரம் செய்யும் பொருள்கள் அதிகம் விற்பனைகின்றன. தரமான பொருள்களுக்குத்தான் அவர்கள் விளம்பரம் செய்வார்கள் என்பதா உண்மை? எந்த நிறுவனம் அதிகக் கோடிகளைக் கூலியாகத் தருகிறதோ அந்த நிறுவனப் பொருள்களைத்தானே அவர் விளம்பரம் செய்வார். இதை நாம் தெரிந்திருந்தும் உணராமலிருக்கிறோமே அதுதான் நுகர்வோர் கலாச்சாரத்தின் பண்பு.

சந்தையில் அறிமுகமாகும் புதிய பொருள் எது? எது வாங்கினால் எது இலவசம்? எந்தப் பொருளுக்கு எவ்வளவு தள்ளுபடி? முதலான நுகர்வுக் கலாச்சாரத் தகவல்களை ஊடகங்கள் நம்மீது வாரி இறைக்கின்றன. அந்தத் தகவல்களைச் சுமந்து கொண்டுதான் ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் உலகைப் பார்க்கிறார்கள்.

புதிதாகச் சந்தையில் அறிமுகமாகும் பொருள்கள், முன்பே அறிமுகமான பொருள்களுக்கான புதிய மாடல்கள், மேம்படுத்தப்பட்டதாக வாக்குறுதியளிக்கப் பழைய பொருள்கள் போன்றவை விளம்பரப் படுத்தப்படும்போது நுகர்வோரிடத்தில் ஒருவகைப் பதற்றம் தொற்றிக்கொள்கிறது. புதியதை வாங்கும்வரை சமூக அந்தஸ்தில் பிறருக்குப் பின்தங்கி விட்டோமோ என்ற குற்ற உணர்ச்சிக்கு நுகர்வோர் ஆளாகிவிடுகின்றனர். பொருள்களை வாங்கும் ஆசையிருந்தும் வாங்க வசதியில்லாதவர்கள் ஒருவிதமான தாழ்வுணர்ச்சிக்கு ஆளாகிறார்கள். தேவை, ஆசை இரண்டும் சமனற்ற முரணிலேயே வாழ்க்கையைப் நிறுத்திவைக்கிறது நுகர்வுக் கலாச்சாரம். உண்மையில் விளம்பரங்கள் முன்னிறுத்தும் மகிழ்ச்சியான குடும்பம் என்பது ஒரு கற்பனையே.

No comments:

Post a Comment

புலவர் பூங்கொடி பராங்குசம் அவர்களின் இலக்கியக்களம் - நூல் அணிந்துரை

  முனைவர் நா . இளங்கோ கவிதை இரசனை , இது படைப்புக்கு இணையானதோர் முருகியல் செயற்பாடு . என்றைக்குக் கவிதைகள் தோன்றினவோ அன்றைக்கே கவ...