Sunday 6 December 2009

விளம்பரங்கள் காட்டும் வாழ்க்கை யாருடைய வாழ்க்கை?

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

விளம்பரங்கள் விற்பதும் இலவசமும்:

விளம்பரங்களின் முழுமையான அரசியல் அது செய்யும் விளம்பரங்களில் இல்லை. மாறாக விளம்பரங்கள் விற்பனை செய்யும் நுகர்வோர் கலாச்சார மனோநிலையில்தான் உள்ளது. இந்தியா ஒரு விவசாய நாடு. இந்திய மக்கள் தொகையில் 70 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் விவசாயத்தையே நம்பியுள்ளனர். இந்நாட்டில் வறுமைக் கோட்டிற்கும் கீழே வாழும் மக்கள் 30 விழுக்காட்டிற்கும் மேல். இந்தியர்களில் பலருக்கு மூன்றுவேளை உணவு என்பதே பெருங்கனவு. அடிப்படை வசதிகளான குடிநீர், சுகாதாரம், இருப்பிடம், உணவு, உடை போன்றவைகள் இன்னும் இந்தியர்களுக்கு முழுமையாகக் கிடைத்துவிடவில்லை. 130 கோடி மக்கள் தொகையுள்ள இந்தியத் திருநாட்டின் யதார்த்த நிலைமை இப்படியிருக்க, நம் ஊடக விளம்பரங்கள் சித்தரித்துக் காட்டும் வாழ்க்கை உண்மையில் யாருடைய வாழ்க்கை?

விளம்பரங்கள் உருவாக்கும் கனவு வாழ்க்கையும் மேற்கத்திய கருத்தாக்கங்களும், போலியான மதிப்பீடுகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இத்தகு புதிய கருத்தாக்கங்களும் மதிப்பீடுகளும் நுகர்வோராகிய நம் மனதில் ஆழப்பதிந்து பல்வேறு உளச் சிக்கல்களுக்கும் வாழ்க்கைச் சிக்கல்களுக்கும் நம்மை ஆளாக்குகின்றன. இந்தப் புதிய கருத்தாக்கங்களும் மதிப்பீடுகளும்தாம் விளம்பரங்கள் நமக்கு இலவசமாய் வழங்கியவை.

இந்த இலவசங்களில் முக்கியமானவை பாலியில் சார்ந்த மதிப்பீடுகள். அழகு, கவர்ச்சி குறித்த புதிய சித்தாந்தங்கள். சிவப்பாயிருப்பதும், ஸ்லிம் என்ற மெல்லிய தேகமும், நீண்ட அடர்த்தியான பட்டுப்போன்ற கூந்தலுமே அழகு. தமிழகத்தில் சிவப்பழகுக் கிரீமைத் தெரிந்துகொள்ளாதவர் அபூர்வம். இந்த அழகுகள் எல்லாம் ஓரிரு நாட்களில் ஒரு பாக்கெட் கிரீம், ஷாம்பு போன்றவைகளால் சாத்தியமாகும் என நம்பவைக்கின்றன விளம்பரங்கள். இத்தகு விளம்பரங்கள் பொருளை மட்டும் விற்கவில்லை. அழகு குறித்த புதிய சித்தாந்தங்களையும் விற்கின்றன.

முழுக்க முழுக்க உடலுழைப்பு சார்ந்த, அழுக்கும் வியர்வையும் கொண்ட உண்மையான இந்தியக் கிராமியப் பெண்களுக்கும் இவ்வகை விளம்பரங்களுக்கும் உள்ள முரணை உணர்ந்தால் விளம்பரங்களின் அரசியல் புரியும்.

ஆண்களின் சாதனையே பெண்களை வசீகரிப்பதில்தான் உள்ளது என்பதாக விளம்பரங்கள் சித்தரிக்கின்றன. குறிப்பிட்ட ஷேவிங் கிரீம், ஜட்டி, வாசனை திரவியங்கள், பற்பசை போன்றவற்றைப் பயன்படுத்தும் ஆடவர்களைப் பெண்கள் மொய்த்துக் கொள்வார்கள், விரும்புவார்கள், உடன்படுவார்கள் என்பதாக விளம்பரங்கள் சொல்கின்றன. ஆண்களின் பார்வையில் உருவாக்கப்படும் இவ்வகை விளம்பரங்கள் பெண்களைக் கொச்சைப் படுத்துவதோடு பாலியல் ஈர்ப்பு குறித்த பிழையான மதிப்பீடுகளையும் நம்மிடம் திணிக்கின்றன.

விளம்பரங்கள் பாலியல் ரீதியில் எவ்வளவுதான் புதிய கருத்தாக்கங்களோடும் மேற்கத்திய மதிப்பீடுகளோடும் படைக்கப்பட்டாலும் பெண் குறித்த நமது பழைய சித்தாந்தங்களை விளம்பரங்கள் ஒருபோதும் மாற்றிக் கொண்டதில்லை. நமது விளம்பரங்களில் பெண்கள் எப்போதும் துணிதுவைத்து, சமைத்து, குழந்தைகளைப் பராமரித்து, நாப்கின் தேர்ந்தெடுத்து, அலங்கரித்துக் கொண்டு, கணவன் மெச்ச வாழ்கிறார்கள். ஆணாதிக்கச் சமூகத்தின் பார்வையில் பெண் ஒரு அழகுப்பதுமை, சுகம் தரும் கவர்ச்சிப் பொருள் மற்றொரு கோணத்தில் சேவை செய்யும் அடிமை, பணிப்பெண் என்பதாகவே கட்டமைக்கப்பட்டுள்ளது. புதிய விளம்பரங்களும் பழைய சித்தாந்தங்களை மீறாமல் கட்டிக் காப்பாற்றுகின்றன.

2 comments:

  1. நன்றி! முனைவர் குணசீலன் அவர்களே!
    -முனைவர் நா.இளங்கோ

    ReplyDelete

புலவர் பூங்கொடி பராங்குசம் அவர்களின் இலக்கியக்களம் - நூல் அணிந்துரை

  முனைவர் நா . இளங்கோ கவிதை இரசனை , இது படைப்புக்கு இணையானதோர் முருகியல் செயற்பாடு . என்றைக்குக் கவிதைகள் தோன்றினவோ அன்றைக்கே கவ...