Tuesday, 1 May 2012

இரத்தின. வேங்கடேசனின் நற்றமிழ் விருந்து நூல் வாழ்த்துரை

முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

    தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் தமிழகத்திற்குமான தொடர்பு ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றுச் சிறப்புடையது. மலேசிய நாட்டின் கடாரத்தில் உள்ள பூஞ்சோங் அருங்காட்சியகத்தில் காணக்கிடைக்கும் தமிழர்களின் மரக்கலங்கள் நமக்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் இடையிலான ஆழமான உறவைப் பறைசாற்றுகின்றன. பிற்காலச் சோழர்களின் ஆட்சிக்காலத்தில் வேரூன்றிய இந்த உறவு ஆங்கிலேய, ஐரோப்பிய காலனியாட்சிக் காலங்களில் பல்கிப் பெருகியது. ஆனால் இந்த இரண்டு நிலைகளுக்கும் அடிப்படையில் பாரிய வேறுபாடுண்டு.

சோழர்கால உறவு நம் அதிகாரத்தை நிலைநாட்டிய உறவு. காலனியாதிக்கக் கால உறவு நம்மைக் கொத்தடிமைகளாக்கிய உறவு. இன்று வணிகம், கல்வி, வேலைவாய்ப்பு என உறவுகள் தொடர்கதையாகத் தொடர்கின்றன. எப்படியிருப்பினும் மலேசிய, சிங்கப்பூர் நாடுகளின் பிரிக்கமுடியாத அங்கமாகத் தமிழும், தமிழர்களும், தமிழ்ப் பண்பாடும் இடம் பிடித்துவிட்டன. தமிழ் மொழிசார்ந்தும், பண்பாடு சார்ந்தும் தமிழகத்துக்கு அப்பால் இலங்கைக்கு அடுத்து மலேசிய, சிங்கப்பூர் நாடுகளின் பங்களிப்புகள் குறித்துப் பேசவும் எழுதவும் களம் அமைந்துவிட்டன.

இந்த இரு நாடுகளிலும் இன்றைக்கு, மாதம் தவறாமல், ஏன்? வாரம் தவறாமல் தமிழிலக்கிய நிகழ்ச்சிகள் பல நடத்தப்படுகின்றன. பல தமிழ்நூல்கள் வெளியிடப் படுகின்றன. பல தமிழ் அமைப்புகள் வெற்றிகரமாக இயங்கிவருகின்றன. தமிழ்க் கவிஞர்கள், எழுத்தாளர்கள், அறிஞர்களைச் சிறப்பிக்கும் பல நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பல தமிழ் விழாக்கள் மதம் சார்ந்தும் மதம் சாராமலும் தொடர்ந்து கொண்டாடப் படுகின்றன. கடந்த இரண்டு, மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு புலம் பெயர்ந்த தமிழர்களும் இன்றைக்கு வேலைவாய்ப்பு, கல்வி, வணிகங்களின் பொருட்டுப் புலம்பெயரும் தமிழர்களும் என அனைவரும் இணைந்தே இத்தகு தமிழ்ப் பணிகளை ஆற்றிவருகின்றனர்.

அந்த வரிசையில் சிங்கப்பூரில் ஆசிரியப் பணிக்காகப் புலம் பெயர்ந்து வாழும் முனைவர் இரத்தின. வேங்கடேசனும் தம் வரலாற்றுக் கடமையைச் சிறப்பாகச் செய்து வருகின்றார். இவருக்கும் சிங்கப்பூருக்குமான தொடர்பு அவருடைய தந்தையார் இரத்தினவேலு முதலியார் காலத்திலிருந்தே தொடங்குகின்றது. தொடக்கத்தில் வியாபாரத்தின் பொருட்டுச் சிங்கைவந்த அவர், இந்திய விடுதலைப் போராட்ட இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு அப்பொழுது மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அமைத்த இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்து தம் அயராத உழைப்பாலும் அர்ப்பணிப்பு உணர்வாலும் ஜொகூர்  படைப்பிரிவின் தலைவராகப் பணியாற்றக் கூடிய வாய்ப்பினைப் பெற்றவர். தந்தையின் சிங்கைத் தொடர்பு ஏற்படுத்திய ஆர்வமே புதுச்சேரிக் கல்லூரிப் பேராசிரியப் பணியை விட்டுவிட்டு வேங்கடேசன் சிங்கப்பூரில் தமிழாசிரியப் பணியை ஏற்கக் காரணமாயிற்று. சிங்கப்பூரின் பணி நெருக்குதல்களுக்கு இடையிலும் தொடர்ந்து அவர் தமிழ்சார்ந்து இயங்குவதற்கு அடித்தளம் அமைத்துத் தந்தது அவரின் புதுச்சேரிப் பின்னணியே.

நண்பர் இரத்தின. வேங்கடேசன்  புதுச்சேரி, தாகூர் கலைக்கல்லூரியில் முதுகலைத் தமிழ் பயிலும் காலத்தில் என்னுடைய மாணவர். பின்னர் உற்ற தோழராகப் பழகிவருபவர். அந்த நாட்களில் புதுச்சேரி மேடைகளில் என்னோடு அவர் பங்கேற்காத மேடைகள் அரிது. என்னுடைய தலைமையில் பல பட்டிமன்றங்கள், வழக்காடு மன்றங்களைக் களம்கண்டவர். புதுச்சேரியின் நம்பிக்கை நட்சட்திரமாக வலம்வந்த அவரைச் சிங்கப்பூர் அழைத்து அரவணைத்துக் கொண்டது. பணியாற்ற வந்த இடத்திலும் தம் இலக்கியப் பணியைத் தொடர்ந்து ஆற்றிவருவது அவரின் தனிச்சிறப்பு. சிங்கப்பூர்த் தமிழிலக்கிய மேடைகளில் கவிஞராக, பேச்சாளராக, பட்டிமன்ற வழக்காடு மன்ற நடுவராக இப்படிப் பலநிலைகளில் வெற்றிகரமாக அவர் செயல்பட்டு வருவது மகிழ்ச்சிக்குரியது. தம் இனிய பேச்சாற்றலால் சொல்லின் செல்வர் என்று சிங்கை இலக்கிய அன்பர்களால் விருதளித்துப் பாராட்டிச் சிறப்பிக்கப் பெற்றுள்ளார்.

அவர் புதுச்சேரியில் இருந்த காலத்தில் பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார் என்றாலும் சிங்கப்பூர் முனைவர் இரத்தின. வேங்கடேசனாக அவர் எழுதியளிக்கும் இரண்டாவது நூல் இந்த நற்றமிழ் விருந்து. பல்வேறு சூழல்களில் அவர் எழுதிக் கருத்தரங்குகளில் வாசித்தளித்த கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவருகின்றது.

நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

1. சங்க இலக்கியத்தில் விருந்து
2. கலித்தொகையில் திருக்குறள்; இடைப்பனுவலியல் ஆய்வு
3. அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றம்
4. பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழியல் உரையாசிரியர்கள்
5. இருபதாம் நூற்றாண்டுக் கவிதைகளில் தமிழ்மொழி
6. காலத்தை வென்ற கவியோகி
7. அண்ணாவின் சந்திரோதயம் ஒரு சமூக நோக்கு
8. தமிழ்ப் பண்பாட்டின் ஆணிவேர் நாட்டுப்புறப் பழக்க வழக்கங்களே
9. சமூக இயக்கங்களும் இலக்கியப் போக்குகளும்
10. சிங்கப்பூர் மலேசிய நாடுகளில் தமிழ்ப் பண்பாடு
11. சிங்கப்பூரின் தொடக்கக்கால (பக்தி) இலக்கியங்கள் ஒரு பார்வை
12. விழா பண்பாடு

நூலின் பன்னிரண்டு கட்டுரைகளிலும் மையப் பொருளாயிருப்பது தமிழ் இலக்கியம், தமிழ்ப் பண்பாடு குறித்த உள்ளடக்கங்களே. கல்வியாளர்களுக்கே விளங்கும் ஆழமான ஆய்வுப் பொருண்மையில் இல்லாமல் அனைத்துக் கட்டுரைகளுமே பொது வாசிப்புக்கானதாக அமைக்கப் பட்டுள்ளது. சங்க இலக்கியம், கலித்தொகை, திருக்குறள், சிலப்பதிகாரம் முதலான பழந்தமிழ் இலக்கியங்கள் தொடங்கி பாரதி, அண்ணா போன்ற இக்கால இலக்கிய ஆளுமைகள் வரை பேசும் இலக்கியப் பகுதியிலும் தமிழர்களின் பண்பாட்டுச் சுவடுகளை நாட்டுப்புற வழக்காறு, நாட்டுப்புற இலக்கியம், மற்றும் எழுத்து இலக்கியம் இவற்றிலிருந்து தெரிந்தெடுத்து வழங்கும் பண்பாட்டுப் பகுதியிலும் நூலாசிரியரின் கடும் உழைப்பு நமக்குத் தெளிவாகத் தெரிகின்றது.

இந்நூலில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க பகுதி சிங்கப்பூர் மற்றும் மலேசியத் தமிழர்களின் தமிழ்ப் பண்பாடு மற்றும் சிங்கப்பூரின் பக்தி இலக்கியங்கள் குறித்த கட்டுரைகளாகும். இவ்விரண்டு கட்டுரைகளும் தமிழகத் தமிழர்களுக்குப் பல புதிய செய்திகளைத் தருகின்றன.
நூலில் இடம்பெற்றுள்ள, சிங்கப்பூர் மலேசிய நாடுகளில் தமிழ்ப் பண்பாடு என்ற கட்டுரையின் ஒருபகுதியை இங்கே சுட்டிக்காட்டுவது பொருத்தமாயிருக்கும்,

சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்கு இடம்பெயர்ந்த தமிழர்கள் இன்றும் தங்கள் மொழி, பண்பாட்டைப் பேணிவருவது குறிப்பிடத்தக்கது. அனைத்துக்கும் மேலாகத் தமது மக்கள் தொகையில் 7 சதவீதத்திற்கும் குறைவான தமிழர்களைக் கொண்ட சிங்கப்பூர், தமிழைத் தேசிய மொழிகளில் ஒன்றாக அறிவித்துள்ளது. இது தமிழர்க்குத் தாய்மண்ணில் கிடைக்காத மற்றுமொரு சிறப்பாகும். மேலும் அரசாங்கத்தின் ஆதரவோடு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் தமிழ்மொழி மாதம் என்னும் தலைப்பில் தமிழ்மொழி நிகழ்வுகளை நடத்துகிறது. மலேசியாவில் ஒரு குறிப்பிட்ட வயதுவரை அனைத்துப் பாடங்களையும் தாய்மொழியில் கற்கத் தமிழ்ப் பள்ளிகள் அங்கு இயங்குகின்றன. தமிழ் பேசவும் படிக்கவும் ஊக்கம் தரும் அரசும் அதைச் சார்ந்த நிறுவனங்களும் தொண்டாற்றுவதால் இவ்விரு நாடுகளிலும் இருக்கும் தமிழருக்குக் கொண்டாட்டங்கள், விழாக்கள் போன்றவற்றில் அதிக ஈடுபாடும் தொன்மையைக் காக்கும் வாய்ப்பும் மிகுந்து காணப்படுகின்றது. சிங்கப்பூரில் அனைத்துப் பள்ளிகளிலும் தமிழை இரண்டாம் மொழியாகக் கற்கும் வாய்ப்பைக் கல்லூரிக்குச் செல்லும்வரை அரசாங்கம் தந்திருக்கிறது.

இரத்தின. வேங்கடேசனின் மேற்சொன்ன கட்டுரையின் பகுதியை வாசிக்க வாசிக்க, சிங்கப்பூர், மலேசியா முதலான நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களுக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்புகள் கூடத் தாய்த் தமிழகத்தில் நமக்குக் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம்தான் மிகுகிறது.
இப்படி, நூலின் பயன்மிக்க பக்கங்கள் பலவாக விரிந்துள்ளன. மொத்தத்தில் நற்றமிழ் விருந்து நூலை உருவாக்கியுள்ள இனிய நண்பர் இரத்தின. வேங்கடேசன் தமிழ் இலக்கிய உலகிற்குத் தக்கதோர் விருந்தைப் படைத்து அளித்துள்ளார் என்றே நாம் மகிழ்வு கொள்ளலாம். தொடர்ந்து நல்ல பல நூல்களை எழுதியளிப்பார் என்ற நம்பிக்கையுடன் அவரை வாழ்த்துகின்றேன்.

Friday, 6 April 2012

மலர் நீட்டம் நூலுக்கான முன்னுரையின் ஒருபகுதி

Dr.N.Ilango
Associate Professor
Dept.of Tamil
P.G. Centre,
Govt. of Puducherry
Puducherry-8

முனைவர் நா.இளங்கோ

ஐரோப்பியர் வருகையும் அச்சு இயந்திரத்தின் அறிமுகமும் தமிழ்க் கல்விப் புலத்திற்கு ஒரு புதிய பரிமாணத்தைத் தந்தன. உயர் வர்க்கத்தினருக்கு மட்டுமாயிருந்த கல்வியை அனைத்துச் சமூகத்தினருக்குமான கல்வியாக விரிவு படுத்தியதில் ஐரோப்பியர் களுக்குக் கூடுதல் பங்களிப்புண்டு. ஏடுகளில் ஒடுங்கிக்கிடந்த தமிழ் இலக்கியங்கள் அச்சு வாகனம் ஏறிப் பழந்தமிழர் பெருமைக்குக் கட்டியம் கூறியதில் அச்சு இயந்திரங்களின் அறிமுகத்திற்கு முக்கிய இடமுண்டு. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் அச்சாக்கம் பெறத் தொடங்கிய சங்க இலக்கியப் பதிப்பு முயற்சிகள் இருபதாம் நூற்றாண்டின் முதல் கால் நூற்றாண்டில் முழுமைபெற்றன. 1857 இல் வெளியான கால்டுவெல்லாரின்  ஒப்பிலக்கண அறிமுகம் தமிழ்மொழியின் பெருமையை உலகுக்கு உணர்த்திற்று. 1921இல் சிந்து சமவெளி ஆய்வுகள் வெளிவந்தன. உலகோர் வியந்து போற்றும் இச்சிந்து சமவெளி நாகரிகம் பழந்தமிழருடையது என்ற ஆய்வு முடிவுகள் வெளிவரத் தொடங்கின.

ஆக வடமொழியும் ஆரியப் பண்பாடும்தாம் இந்தியத் திருநாட்டின் முகவரி என்று கருதிக் கொண்டிருந்தவர்களின் மத்தியில் பழந்தமிழர் இலக்கண இலக்கியங்களின் மறுவருகையும், தமிழ்மொழியின் தொன்மை குறித்த ஆய்வு முடிபுகளும் சிந்து சமவெளி நாகரிகம் தமிழர் நாகரிகம் எனக் கண்டறியப்பட்டதும் ஆன அடுத்தடுத்த நிகழ்வுகள் இருபதாம் நூற்றாண்டின் முதல் கால் நூற்றாண்டு களில் தமிழ் மறுமலர்ச்சி தோன்றுவதற்கு வித்திட்டது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தமிழைச் செம்மொழி என்று அறிவித்தவர் பரிதிமாற் கலைஞர். செந்தமிழ் மாத இதழில் 1902 ஆம் ஆண்டில் அவர் எழுதிய ‘உயர்தனிச் செம்மொழி’ என்ற தலைப்பிட்ட கட்டுரையில் முதன்முதலாகத் தமிழை உயர்மொழி, தனிமொழி, செம்மொழி என மதிப்பிட்டுத் தமிழே உயர்தனிச் செம்மொழி என்பதனைத் தக்க ஆதாரங்களுடன் நிறுவினார். 1902 ஆம் ஆண்டில் பரிதிமாற் கலைஞர் தொடங்கிவைத்த செம்மொழி உரிமைப் போர், தமிழறிஞர்களின் தொடர்ச்சியான பல கோரிக்கைகள், தீர்மானங்கள், போராட்டங்களின் விளைவாக 2004 அக்டோபர் 12 இல் வெளியிடப்பட்ட இந்திய அரசின் செம்மொழி அறிவிப்பால் வெற்றியாய் முடிந்தது. தமிழர்களின் நூறாண்டுக் கால மொழி உரிமைப் போரின் தளபதி பரிதிமாற் கலைஞர். அவரின் முழக்கமே இந்தச் செம்மொழி உரிமைப் போரின் வெற்றிக்கு உந்துசக்தியாக இருந்தது.

2004 இல் இந்திய நடுவணரசு சான்றளித்த தமிழ் செம்மொழி என்ற தகுதி தமிழாய்வுலகில் ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. கடந்த இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அதிகம் பேசப்பட்ட, எழுதப்பட்ட சங்க இலக்கியங்கள் இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தம் செல்வாக்கை இழந்தன. சங்க இலக்கியங்களைக் குறித்துப் பேசுவோர், எழுதுவோர், ஆய்வு செய்வோர் குறைந்தனர். தமிழ் செம்மொழி என்ற அறிவிப்பு, மீண்டும் சங்க இலக்கியங்களுக்குப் புத்துயிர்ப்பு அளித்தது. கடந்த ஆறு ஆண்டுகளில் (2005- 2011) தமிழில் வெளிவந்த ஆய்வுகளில் சங்க இலக்கிய ஆய்வுகளே பெரும்பங்கு வகிக்கின்றன. சங்க இலக்கியப் பதிப்புகள், உரைகள், அறிமுக நூல்கள் எனத் தமிழ்ப் பதிப்புலகம் மீண்டும் சங்க இலக்கியங்களின் பக்கம் திரும்பியுள்ளது. ஆய்வு மாணவர்கள் சங்க இலக்கியத் தலைப்புகளில் ஆய்வு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். நோக்கம் எப்படியிருப்பினும் இந்த மாற்றம் மகிழ்வளிக்கக் கூடியதே. மீண்டும் தமிழ் மறுமலர்ச்சி யுகம் தோன்ற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மலர் நீட்டம் என்ற இக்கட்டுரைத் தொகுப்பு நூலும் செம்மொழி இலக்கியங்கள் குறித்த ஆய்வு நூலே. இலக்கிய வரலாற்று நோக்கிலும் ஆய்வு நோக்கிலும் செம்மொழி இலக்கியங்களை அறிமுகம் செய்யும் பணியை மலர் நீட்டமும் மேற்கொள்கின்றது.
II

நான் பல்வேறு சூழல்களில் எழுத்துரையாக எழுதி வாசித்த கட்டுரைகளைத் திரட்டித் தமிழ் இணர் என்ற பெயரிலும் படர்க்கை என்ற பெயரிலும் படைத்தளித்த இரண்டு நூல்களும் தமிழாய்வுலகில் நல்ல வரவேற்பைப் பெற்றன. புதுச்சேரி பட்டமேற்படிப்பு மையம் அமைத்துத் தந்த நல்ல ஆய்வுச் சூழலால் சாத்திமானது அது. இரண்டு ஆய்வுத் தொகுப்பு நூல்கள் தந்த உற்சாகத்தில் மூன்றாவது நூலை உருவாக்கியுள்ளேன். செம்மொழி இலக்கியங்கள் சிலவற்றைக் குறித்து இலக்கிய வரலாற்று நோக்கிலும் ஆய்வு நோக்கிலும் வௌ;வேறு சூழல்களில் நான் எழுதிய கட்டுரைகள் சிலவற்றைத் திரட்டி இந்நூலை உருவாக்கியுள்ளேன். மலர் நீட்டம் என்பது இக்கட்டுரைத் தொகுப்பு நூலின் பெயர். உருவகக் குறியீடாக அமைக்கப் பட்டுள்ள பெயர். இந்த நூலில் பத்துக் கட்டுரைகள் உள்ளன.

இலக்கிய வரலாற்று நோக்கில்..
1. குறுந்தொகை                           
2. பொருநராற்றுப்படை                           
3. முல்லைப்பாட்டு                            
4. முத்தொள்ளாயிரம்                           
ஆய்வு நோக்கில்..
5. பழந்தமிழர் தாய்த்தெய்வ வழிபாடு
-கொற்றவை வழிபாட்டை முன்வைத்து               
6. சங்க அகப்பொருள் மரபுகள்
-நாட்டுப்புறக் காதல் பாடல்களை முன்வைத்து           
7. பாலியல் அறமும் பரத்தையரும்                   
8. பழந்தமிழர் ஈகைக் கோட்பாடு                    
9. ஒளவை துரைசாமி பிள்ளை பதிப்புகள் (சங்க இலக்கியம்)       
சிறப்புக் கட்டுரை
10. செம்மொழி அறிஞர் பரிதிமாற் கலைஞர்   
           
நூலின் பத்துக் கட்டுரைகளில் கடைசிக் கட்டுரை நீங்கலாக மற்ற ஒன்பது கட்டுரைகளும் செம்மொழி இலக்கியங்கள் தொடர்பானவை. அந்த ஒன்பது கட்டுரைகளில் முதல் நான்கு கட்டுரைகளும் இலக்கிய வரலாற்று அணுகுமுறையில் படைக்கப் பட்டுள்ளவை. அடுத்த ஐந்து கட்டுரைகளும் ஆய்வு நோக்கிலானவை. பத்தாவதாக இடம்பெற்றுள்ள சிறப்புக் கட்டுரை தமிழின் செம்மொழித் தகுதியினை உலகுக்கு உணர்த்திய முதல் தமிழறிஞர் பரிதிமாற் கலைஞரின் வாழ்க்கை மற்றும் படைப்புகள் பற்றியது. செம்மொழி இலக்கியங்கள் தொடர்பான இந்நூலில் பரிதிமாற்கலைஞரைச் சிறப்பிக்கும் விதத்தில் இக்கட்டுரை இணைக்கப்பட்டுள்ளது. 

கட்டுரைகள் ஒவ்வொன்றும் உருவான சூழல்கள் வேறுவேறானவை. எனவே கட்டுரையின் பக்க அளவுகளில் ஒரு சீர்மை அமையவில்லை. ஆய்வு நோக்கில் மட்டுமின்றி இலக்கிய மாணவர்களும் இலக்கிய ஆர்வலர்களும் விரும்பிப் படிக்கத் தக்க மொழிநடையில் கட்டுரைகள் அமைந்துள்ளன. ஆய்வுக் கட்டுரைகள் என்றாலே இறுக்கமான மொழிநடையில் தான் இருக்கவேண்டும் என்று நான் நம்புவதில்லை.  ஆய்வரங்கு மற்றும் கருத்தரங்குகளில், எழுதிவந்த கட்டுரையை எழுத்துவிடாமல் வாசிப்பவர்கள் பலருண்டு. நான் பெரும்பாலும் அப்படிச் செய்வதில்லை. எழுத்துரையைக் கையில் வைத்துக்கொண்டு கட்டுரையின் பொருளை எளிய இனியநடையில் விளக்கிப் பேசுவது என்பாணி. எப்பொழுதும் வெற்றிபெறும் சூத்திரம் அது. பேச்சின் அந்த எளிமையையும் இனிமையையும் கட்டுரையில் அப்படியே கொண்டுவர முன்றிருக்கிறேன். வெற்றிபெற்றேனா? இல்லையா? என்பதை நீங்கள்தாம் சொல்லவேண்டும். பேனா பிடித்து எழுதுவதில் எனக்குள்ள சிக்கல், தட்டச்சும் தெரியாது என்றாலும் ஒரே விரலால் நானே தட்டச்சு செய்து உருவாக்கும் நூல்கள் என்னுடையவை. ஒவ்வொரு கட்டுரையையும் உருவாக்குவதில் எனக்குள்ள தனிப்பட்ட சிரமங்கள் அத்தனையும் அந்தக் கட்டுரைகள் கற்றோர் அரங்கில் அரங்கேறும்போது சூரியன் முன் பனித்துளிபோல் காணாமல் போய்விடும். அந்த உற்சாகத்தில்தான் நான் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கின்றேன்.

  
முனைவர் நா.இளங்கோ
9943646563

Wednesday, 4 May 2011

தமிழ் ஆராய்ச்சி வரலாறு -ஒரு சுருக்க அறிமுகம்

முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
புதச்சேரி-8

தமிழர்களின் ஆய்வுத் தேட்டத்தைத் தொல்காப்பியத்திலும் திருக்குறளிலும் இடைக்கால உரையாசிரியர்களின் உரைப்பகுதிகளிலும் பரக்கக் காணலாம். "மாத்திரை முதலா அடிநிலை காறும் நோக்குதல் காரணம் நோக்கெனப் படுமே" என்று தொல்காப்பியர் குறிப்பிடும் நோக்கு தமிழரின் ஆய்வு அணுகுமுறையின் ஒரு கூறு. முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணுவதும் பாடலுள் பயின்றவை நாடுவதும் ஒருவகை ஆய்வு அணுகுமுறையே. திருவள்ளுவர் குறிப்பிடும் நவில்தொறும் நூல் நயமும், குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளலும் ஆய்வு அணுகுமுறைகளே. இடைக்கால இலக்கண இலக்கிய உரையாசிரியர்கள், அனைவரும் ஆய்வாளர்களே. ஆங்கிலக் கல்வி நம்மிடம் இயல்பாக, மரபாக அமைந்திருந்த ஆய்வு மனப் பான்மையை கூர்மைப்படுத்தியது என்பது உண்மை.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கக் காலங்களில் தமிழாய்வு சிறிய அளவில் நிறுவனம் சார்ந்த கல்வியாளர்களாலும் பெரும்பான்மை நிறுவனம் சாராத கல்வியாளர்களாலும் வளர்த்தெடுக்கப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதி பல்கலைக் கழகங்களின் பெருக்கத்தாலும் ஆய்வுப் படிப்புகளின் நெருக்கத்தாலும் தமிழாய்வு பெரிதும் நிறுவனம் சார்ந்த கல்வியாளர்களையே சார்ந்து நிற்கவேண்டிய கட்டாயத்திற்குள்ளானது. கல்வியாளர் ஆய்வுகளுக்கு அப்பாற்பட்டு சிறுபத்திரிக்கை வட்டங்களிலும் சில சுதந்திர ஆய்வாளர்களாலும் தமிழாய்வு குறிப்பிடத்தக்க இலக்கை எட்டியுள்ளமை நிறைவளிக்கக் கூடியதே.

கடந்த பத்தாண்டுகளில் கல்விப்புலம் சார்ந்து நடத்தப்பெறும் ஆய்வரங்குகள் பெருகியுள்ளன. ஆராய்ச்சி நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள் மட்டுமில்லாமல் பல அரசு, தனியார் கல்லூரிகளும் தமிழ் கலை இலக்கிய அமைப்புகள் பலவும் சிற்றிதழ்கள் சார்ந்தும் இவ்வகை ஆய்வரங்குகள் நடத்தப்படுகின்றன. இவ் ஆய்வரங்குகளில் வாசிக்கப்படும் கட்டுரைகள் பெரும்பாலும் நூலாக்கம் பெருகின்றன. இன்னும் சிலகாலம் கழித்து இவ்வகை ஆய்வரங்குகளின் ஆய்வுகள் மதிப்பிடப்படும். தமிழாய்வுக்கு உண்மையிலேயே இவ்வகை ஆய்வரங்குகளின் பங்களிப்பு யாது? என்பது சீர்தூக்கிப் பார்க்கப்படும். அல்லன நீக்கி நல்லன பாதுகாக்கப்படும்.

அண்மைக் காலங்களில் தமிழாய்வு மேலை இலக்கியத் திறனாய்வு அணுகுமுறைகள் பலவற்றையும் தம்முள் இணைத்துக் கொண்டுள்ளது. புதிய புதியத் துறைகள் புதிய புதிய அணுகுமுறைகள் தமிழாய்வை மேலும் செழுமைப்படுத்தும் என்பதில் நமக்கு எள் அளவும் ஐயமில்லை. அதே சமயம் தமிழின் மரபார்ந்த ஆய்வு அணுகுமுறைகளையும் நாம் மீட்டெடுத்தல் அவசியம்.

Sunday, 21 November 2010

முத்தொள்ளாயிரம் -சில குறிப்புகள் -(பகுதி-1)

முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
பட்டமேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8

முத்தொள்ளாயிரம் -சில குறிப்புகள்

இந்திய அரசின் செம்மொழித் தமிழ் உயராய்வு நிறுவனம் பட்டியலிட்டுள்ள நாற்பத்தொரு செம்மொழி இலக்கண இலக்கியங்களில் முத்தொள்ளாயிரமும் ஒன்று. சங்க இலக்கியங்களோடு ஒருங்குவைத்து எண்ணப்படும் தகுதிவாய்ந்தது இந்நூல். வெண்பா யாப்பில் இயற்றப்பட்ட இந்நூல் சேர, சோழ, பாண்டியர்களாகிய மூவேந்தர்களின் புகழ்பாடும் ஓர் அரிய புதையலாகும். மூவேந்தர்களைப் பாடினாலும் குறிப்பிட்ட எந்த மன்னனையும் பெயர்சுட்டிப் பாடாமல் வேந்தர்களின் பொதுப் பெயர்களாலேயே அவர்களைச் சிறப்பித்துப் பாடும் வகையில் இந்நூலை யாத்துள்ளார் இந்நூலாசிரியர். அகம், புறம் என்ற இருவகைப் பாடுபொருளாலும் வேந்தர்களைச் சிறப்பிக்கும் இந்நூலின் ஆசிரியர் யாரென்று அறிய இயலவில்லை. நூலும் காலவெள்ளத்தில் காணாமல் போய்விட்டது. ஆயினும் புறத்திரட்டு என்னும் நூலின்வழியாக 108 பாடல்கள் முத்தொள்ளாயிரச் செய்யுள்களாக இன்றைக்குக் கிடைக்கின்றன. முத்தொள்ளாயிரம் என்ற முழுநூல் மூவேந்தர்கள் ஒவ்வொருவர் மீதும் முந்நூறு முந்நூறு பாடல்களாக மொத்தம் தொள்ளாயிரம் பாடல்களைக் கொண்ட பேரிலக்கியமாகத் திகழ்ந்திருக்க வேண்டும் என்பது அறிஞர்களின் துணிபு.

எண் செய்யுள் சிற்றிலக்கியம்:

முத்தொள்ளாயிரம் என்ற நூற்பெயரில் உள்ள தொள்ளாயிரம் என்பது ஒருவகை சிற்றிலக்கியமாகும். தொள்ளாயிரம் என்ற தொகையுடைய நூல்கள் தமிழில் பல இருந்தன என்று அறிகிறோம். ‘வச்சத் தொள்ளாயிரம்’, ‘அரும்பைத் தொள்ளாயிரம்’ முதலான நூல்கள் பற்றிய குறிப்பினை இலக்கண உரையாசிரியர்களின் உரைவழி அறிய முடிகின்றது. தொள்ளாயிரம் என்ற சிற்றிலக்கிய வகை எண் செய்யுள் என்று பாட்டியல் நூல்கள் குறிப்பிடும் இலக்கிய வகையின் ஓர் உட்பிரிவாயிருக்கக் கூடும் என ஊகிக்க முடிகின்றது.

ஊரையும் பேரையும் உவந்தெண் ணாலே
சீரிதிற் பாடல்எண் செய்யு ளாகும்.
(இ.வி.பாட்டியல், நூ.88)

ஏற்றிடும் பாட்டுடைத் தலைவனூர்ப் பெயரினை
யிசைத்து மெண்ணாற் பெயர் பெற
ஈரைந்து கவிமுதல் ஆயிரம் வரைசொலல்
எண்செய்யு ளாகு மன்றே
(பிரபந்த தீபிகை, நூ.14)

இலக்கண விளக்கப் பாட்டியல் எண் செய்யுள் நூற்பாவிற்கு எழுதியுள்ள உரையில், “பாட்டுடைத் தலைவன் ஊரினையும் பெயரினையும் உவந்து எண்ணாலே பத்து முதல் ஆயிரமளவும் பொருட்சிறப்பினாலே பாடுதல் அவ்வவ் எண்ணாற் பெயர்பெற்று நடக்கும் எண் செய்யுளாம். அவை முத்தொள்ளாயிரம், அரும்பைத் தொள்ளாயிரம் முதலியன” என்று விளக்கம் தரப்பட்டுள்ளது. இவ்விளக்கங்களை மேற்கோள் காட்டிப் பாட்டியல் நூல்கள் குறிப்பிடும் எண் செய்யுள் எனும் இலக்கிய வகையே முத்தொள்ளாயிரம் என விளக்கமளிக்கிறார் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை. (இலக்கிய தீபம், பக். 178-79)

ஆக, பாட்டியல் நூல்கள் குறிப்பிடும் எண் செய்யுள் என்ற இலக்கிய வகையில் பல பிரிவுகள் உண்டென்பதும் பத்து பாடல்கள் முதல் ஆயிரம் பாடல்கள் வரை பாடப்படும் எண் செய்யுள்கள் பாடப்படும் பாடல்களின் எண்ணிக்கைக்கேற்பப் பெயர்பெறும் என்பதும் பெறப்படுகின்றது. அப்படிப் பாடப்படும் எண் செய்யுள்களில் தொள்ளாயிரம் எண்ணிக்கை அமைய, பாட்டுடைத் தலைவனைப் புகழ்ந்து பாடும் ஒரு மரபு உண்டென்பதும் அத்தகு மரபின் அடிப்படையின் முத்தொள்ளாயிரம் பாடப்பட்டது என்பதும் நாம் கவனத்தில் கொள்ளத்தக்க செய்தியாகும்.

மரபாகப் பாடப்படும் இலக்கியவகை அல்லாது புதிதாகப் புனைந்து பாடப்படும் இலக்கியவகையைத் தொல்காப்பியர் விருந்து என்று குறிப்பிடுவார்.

விருந்தே தானும்
புதுவது கிளந்த யாப்பின் மேற்றே
(தொல். செய்யுளியல் நூ. 551)

பேராசிரியர் இந்நூற்பா உரையில் விருந்து இலக்கியவகை குறித்து விளக்கமளிக்கையில், “புதிதாகத் தாம் வேண்டியவாற்றாற் பல செய்யுளுந் தொடர்ந்துவரச் செய்வது, அது முத்தொள்ளாயிரமும், பொய்கையார் முதலாயினோர் செய்த அந்தாதிச் செய்யுளுமென உணர்க” என்று எழுதியுள்ளதனால் முத்தொள்ளாயிரம் விருந்து என்ற வனப்பினால் அமைந்த இலக்கியவகை என்பது பெறப்படும்.

கிடைத்துள்ள முத்தொள்ளாயிரப் பாடல்களின் எண்ணிக்கை:

முத்தொள்ளாயிரம் கால வெள்ளத்தில் மறைந்து போன தமிழ் நூல்களில் ஒன்று என்றாலும், புறத்திரட்டு என்ற நூலின் வழியாகவும் (108 பாடல்கள்) உரையாசிரியர்களின் இலக்கண உரைகளின் வழியாகவும் நூலின் ஒரு சிறு பகுதியேனும் நமக்குக் கிடைத்திருப்பது உண்மையில் ஓர் அருமைப்பாடுடைய நிகழ்வே. இப்பொழுது முத்தொள்ளாயிரப் பாடல்கள் என்று நமக்குக் கிடைப்பன நூற்று முப்பது பாடல்களேயாகும். இதில் இருபதுக்கும் மேற்பட்ட பாடல்கள் பழைய உரைகளினிடையே கண்டெடுக்கப்பட்டு முத்தொள்ளாயிரச் செய்யுளாக இருக்கக்கூடும் என்ற யூகத்தில் சேர்க்கப்பட்டவைகளாகும்.

முத்தொள்ளாயிரத்தை முதன்முதலில் தனி நூலாகப் பதிப்பித்தவர் இரா.இராகவய்யங்கார். 1905 இல் இப்பதிப்பு வெளிவந்துள்ளது. இப்பதிப்பில் 110 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. பின்வந்த பதிப்பாசிரியர்கள் பலரும் இதனையே பின்பற்றி 110 பாடல்களைப் பதிப்பித்தனர். ரசிகமணி டி.கே.சி. அவர்கள் தம் பதிப்பில் 99 பாடல்களை மட்டுமே பதிப்பித்தார். 1946 இல் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் வாயிலாக முத்தொள்ளாயிரத்தைப் பதிப்பித்த ந.சேதுரகுநாதன் அவர்கள் 130 பாடல்களைப் பதிப்பித்துள்ளார். கூடுதலாக அவர் பதிப்பித்தப் பாடல்கள் குறித்து முன்னுரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

இற்றைக்கு ஐந்நூறியாண்டுகட்கு முன்னர்ப் புறத்திரட்டு என்னுந் தொகைநூல் தொகுத்த சான்றோர், அந்நூலின்கண் இடையிடையே மிளிரவைத்துப் போந்த நூற்றெட்டு முத்தொள்ளாயிரச் செய்யுட்களைப் பெற்று, அவற்றைப் பயின்று இன்பந் துய்த்துத் தன்னை மறந்து உவகை எய்தும் பேறும் கிடைத்துள்ளது.

கிடைக்கப்பெற்ற விழுமிய பாடல்களின் விழுமிய சுவையானது தூண்ட இனிமேலும் இத்தகைய பாடல்கள் கிடைக்கும் கொல்லோ என ஆராய்ந்து செல்வுழிப் பழைய உரைகளினிடையே பயின்று கிடந்தனவாய இருபத்திரண்டு பாடல்கள் இவற்றோடு ஒத்த இயல்பினவாய்க் காணப்பட்டமையின் அவையும் இவற்றோடு சேர்த்து உரையெழுதி வெளியிடப் பெறுவனவாயின. (சேதுரகுநாதன், முன்னுரை, ப.6)

என்கிறார் முத்தொள்ளாயிர உரையாசிரியர் சேதுரகுநாதன் அவர்கள். அவர் பதிப்பின்படி கடவுள் வாழ்த்துப் பாடல்- 1, பாண்டியன் பற்றிய பாடல்கள்- 60, சோழன் பற்றிய பாடல்கள்- 46, சேரன் பற்றிய பாடல்கள்- 23 என 130 பாடல்கள் நூலில் இடம்பெற்றுள்ளன.

தொள்ளாயிரமா? மூன்று தொள்ளாயிரமா?

இன்றைக்கு முத்தொள்ளாயிரம் நூல் என்றவகையில் நமக்குக் கிடைப்பன 130 பாடல்கள் என்றாலும் முழுநூல் பாடல்களின் எண்ணிக்கை குறித்து இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. முத்தொள்ளாயிரம் என்ற நூற்பெயர் மூன்று தொள்ளாயிரம் பாடல்களைக் கொண்ட நூல் என்று பொருள்படும் என்பார் சிலர். அதாவது, சேர, சோழ, பாண்டியர்களாகிய மூவேந்தர்கள் ஒவ்வொருவர் மீதும் பாடப்பட்ட மூன்று தொள்ளாயிரம் பாடல்கள் என இரண்டாயிரத்து எழுநூறு பாடல்களைக் கொண்ட நூல் முத்தொள்ளாயிரம் என்பது அவர்கள் கருத்து. பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை அவர்களும் தொடக்கத்தில் இக்கருத்தினராயிருந்து பின்னர் இக்கருத்தினை மறுத்துரைக்கின்றார்.

எண் செய்யுள் என்ற இலக்கியவகையை விளக்கும் பாட்டியல் உரையாசிரியரும் பிரபந்த தீபிகையும் ‘ஈரைந்து கவிமுதல் ஆயிரம் வரைசொலல் எண்செய்யுளாகும்’ என்று பேரெல்லையை வரையறுத்துச் சொல்லியிருப்பதனால் முத்தொள்ளாயிரம் என்ற எண் செய்யுள் ஆயிரம் என்ற பேரெல்லையைக் கடந்து 2,700 பாடல்களால் பாடப்பட்டது என்பது பொருந்தாது என்றும் முத்தொள்ளாயிரச் செய்யுட்கள் மொத்தம் தொள்ளாயிரமே என்றும் மூன்று வகைப்பட்ட தொள்ளாயிரம் பாடல்களைக் கொண்ட நூல் என்று பொருள்கொள்ளலே பொருந்துமென்றும் சேர, சோழ, பாண்டிய வேந்தர்கள் ஒவ்வொருவர் மீதும் முந்நூறு முந்நூறு செய்யுட்களாக முத்தொள்ளாயிரம் இயற்றப்பட்டிருக்க வேண்டுமென்றும் வையாபுரிப்பிள்ளை கருதுகின்றார். (இலக்கிய தீபம், ப.179)

இக்கருத்தே வலிமையுடையது. ஏனெனில் 2,700 பாடல்களால் ஒரு சிற்றிலக்கியம் பாடப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்பதோடு வச்சத் தொள்ளாயிரம், அரும்பைத் தொள்ளாயிரம் முதலான நூல்களும் தொள்ளாயிரம் என்ற எண்ணால் பெயர் பெற்றிருத்தலை நோக்க முத்தொள்ளாயிரம் மொத்தம் தொள்ளாயிரம் பாடல்களைக் கொண்ட இலக்கியமே என்பது வெளிப்படை.

முத்தொள்ளாயிரத்தின் காலம்:

முத்தொள்ளாயிரத்தை முதல் முதலில் பதிப்பித்து வெளியிட்ட இரா. இராகவய்யங்கார் இந்நூலினை ‘ஓர் அரிய பெரிய பண்டைத் தமிழ் நூல்’ என்று குறிப்பிட்டுள்ளார். பின்னர்வந்த பதிப்பாசிரியர்கள் பலரும் சங்க காலத்திற்குப் பிற்பட்ட பழந்தமிழ் நூல் என்ற கருத்தினைப் பதிவு செய்கின்றார்கள். தொல்காப்பிய இலக்கண உரையாசிரியர்கள் பலரும் முத்தொள்ளாயிரத்தைப் பல இடங்களில் சான்று காட்டி உரை வரைந்துள்ளமையை நோக்க இடைக்காலத்தில் முத்தொள்ளாயிரம் தமிழறிஞர் களிடையே பெருவழக்காகப் பயின்று வந்துள்ளமையை உணர முடிகின்றது.

முத்தொள்ளாயிர நூல் முழுமையும் வெண்பா யாப்பில் பாடப்பட்டிருப்பதனைக் கொண்டு இந்நூல் பதினெண் கீழ்க்கணக்குக் காலத்தை ஒட்டியோ அல்லது அதன்பிறகோ பாடப்பட்டிருக்க வேண்டும் என்று கருத வாய்ப்புள்ளது. தொல்காப்பிய உரையாசிரியர் இளம்ப+ரணர் தம் பொருளதிகாரப் புறத்திணையியல் உரையில் முத்தொள்ளாயிரச் செய்யுள் ஒன்றினை மேற்கோள் காட்டுகிறார். அவரது காலம் கி.பி. 12 ஆம் நூற்றாண்டு என்பர். எனவே அவர் காலத்திற்கு முந்தைய நூல் முத்தொள்ளாயிரம் என்பது தெளிவாகின்றது.

‘முத்தொள்ளாயிரத்தின் காலம்’ என்ற கட்டுரையில் இந்நூலின் காலம் குறித்துத் தனிப்பட ஆய்வுசெய்யும் வையாபுரிப்பிள்ளை அவர்கள் பல்வேறு அகப்புறச் சான்றுகளின் வழியாகக் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முத்தொள்ளாயிரம் இயற்றப்பட்டிருக்க வேண்டுமென நிறுவுகிறார். (இலக்கிய தீபம், பக். 183-88) இக்கருத்தே வலிமையுடையதென்றால், மூவேந்தர்களைப் புகழ்ந்து பாடும் இந்நூல் கி.பி. 6 முதல் 8 ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் கோலோச்சிய பல்லவப் பேரரசு குறித்து ஏதும் குறிப்பிடாமல் மௌனம் சாதித்திருப்பதற்கான காரணங்கள் குறித்து ஆராயப்பட வேண்டியதாகிறது.

முத்தொள்ளாயிரம் -சில குறிப்புகள் -(பகுதி-2)

முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
பட்டமேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8

முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியர்:

முழுநூல் நமக்குக் கிடைக்காத காரணத்தால் முத்தொள்ளாயிர நூலின் ஆசிரியர் பற்றி ஏதும் அறியமுடியவில்லை. உரையாசிரியர்கள் பலரும் முத்தொள்ளாயிரத்தை மேற்கோள் காட்டும் சமயங்களில் கூட நூலாசிரியரின் பெயரைக் குறிப்பிடாமல், நூற்பெயரை மட்டுமே மீண்டும் மீண்டும் குறிப்பிடுவதை நோக்கும் பொழுது நூல் கிடைத்த காலத்திலேயே கூட நூலாசிரியர் பெயர் பற்றிய குறிப்பு கிடைக்காமல் போயிருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் வாயிலாக முத்தொள்ளாயிரத்தைப் பதிப்பித்த சேதுரகுநாதன் அவர்கள் தம் உரைநூலின் முன்னுரையில் முத்தொள்ளாயிரத்தின் நூலாசிரியர் யாராயிருக்கக் கூடும் என்று ஓர் ஒப்பியல் ஆய்வினை நிகழ்த்தி, முத்தொள்ளாயிர நூலுக்கும் கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி, திருஈங்கோய் மலை எழுபது ஆகிய இருநூல்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமைக் கூறுகள் பலவற்றையும் எடுத்துக்காட்டி, மேற்குறிப்பிட்ட இருநூல்களின் ஆசிரியராகிய நக்கீரதேவ நாயனாரே முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியராயிருத்தல் கூடும் என்று எழுதுகின்றார். சேதுரகுநாதன் காட்டிய ஒப்புமைப் பகுதிகள் உண்மையில் மிகுந்த வியப்பளிக்கக் கூடிய விதத்தில் ஒத்து அமைகின்றன என்றாலும் இக்கருத்தினை முடிந்த முடிபாக ஏற்றுக்கொள்ளுதல் எளிதன்று.

தமிழகத்தில் மூவேந்தர்களும் எந்தக் காலத்திலும் இணைந்து செயல்படாத ஒரு வரலாற்றுச் சூழலில் மூவேந்தர்களையும் ஒத்த நிலையில் இணைத்துப் பாட்டுடைத் தலைவர்களாக்கி ஓர் இலக்கியம் படைக்கவேண்டுமென்ற முத்தொள்ளாயிர ஆசிரியரின் பெருவிருப்பம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகள் உருவாக்கிக் காட்டிய ஒன்றுபட்ட தமிழகம் என்ற பாதையில் புதுநடை போட்ட பெருமை இந்நூலாசிரியருக்கு உண்டு. மூவேந்தர்களைக் குறிப்பிடும் போதும் அவர்களின் வெற்றியைக் குறிப்பிடும் போதும் பகைவர்கள் மற்றும் சிற்றரசர்களைக் குறிப்பிடும் போதும் வரலாற்று அடையாளங்கள் தோன்றாமல் பொதுப் பெயர்களையே கையாண்டு நூலை அமைத்துள்ள நூலாசிரியரின் திறம் அவரின் தமிழ்நிலப் பொதுநோக்கைப் புலப்படுத்துகின்றது.

மூவேந்தர்களும் வலிமையிழந்து அந்நியர் ஆட்சியில் கீழ்நிலை உற்ற காலத்தில் தமிழ் வேந்தர்களின் ஒற்றுமையை வலியுறுத்தும் நோக்கோடும் தமிழின எழுச்சியின் அடையாளமாகவும் முத்தொள்ளாயிரம் பாடப்பட்டிருக்க வேண்டும் என ஊகிக்க முடிகின்றது. முத்தொள்ளாயிரத்தில் இடம்பெற்றுள்ள, “மாறனை இன்தமிழால் யாம்பாடும் பாட்டு” (முத். பா.2), “பார்படுப செம்பொன் பதிபடுப முத்தமிழ் நூல்” (முத். பா.5), “தண்படா யானை தமிழ்நர் பெருமாற்கென்” (முத். பா.32) முதலான பகுதிகள் இக்கருத்திற்கு அரண் சேர்ப்பனவாக அமைந்துமை கண்கூடு.

நூலாசிரியர் சமயம்:

முத்தொள்ளாயிர நூலாசிரியர் யார்? என்பது தெரியவில்லை என்றாலும் அவரின் சமயம் இன்னது என்று அறிவதற்கான சான்று நூலில் வெளிப்படையாகவே அமைந்துள்ளது.

மன்னிய நாண்மீன் மதிகனலி யென்றிவற்றை
முன்னம் படைத்த முதல்வனைப் -பின்னரும்
ஆதிரையா னாதிரையான் என்றென் றயருமால்
ஊர்திரைநீர் வேலி யுலகு (முத். பா.1)

என்ற பாடல் கடவுள் வாழ்த்துச் செய்யுளாக முத்தொள்ளாயிரத்தில் அமைந்துள்ளது. இப்பாடல் ஆதிரையான் என்று சிறப்பிக்கப்படும் சிவபெருமானை வாழ்த்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால் இக்கடவுள் வாழ்த்துப்பாடலை நூலின் காப்புச் செய்யுளாகப் பாடிய முத்தொள்ளாயிர நூலாசிரியர் சைவ சமயத்தினர் என்பது வெளிப்படையாகிறது.

முத்தொள்ளாயிரத்தின் பாடுபொருள்:

பழந்தமிழ் மரபு, பாடுபொருளை அகம், புறம் என இரண்டாகப் பகுக்கின்றது. முத்தொள்ளாயிரமும் பழந்தமிழ் மரபைப் பின்பற்றி அகம், புறம் என்ற இரண்டு பொருண்மையிலேயே அமைந்து சிறக்கின்றது. இதில் புகழ், நாடு, நகர், திறை, எயில் கோடல், குதிரை மறம், யானை மறம், களம், பகைப்புலம் பழித்தல், வெற்றி என்ற பகுதியில் அமையும் பாடல்கள் அனைத்தும் புறம் சார்ந்த நிலையிலும், கைக்கிளை சார்ந்த பாடல்கள் அனைத்தும் அகம் சார்ந்த நிலையிலும் அமைந்துள்ளன.

புறம் சார்ந்த உள்ளடக்கங்களைக் கொண்டு எழுதப்பட்ட முத்தொள்ளாயிரப் பாடல்கள் பெரிதும் பழைய புறப்பொருள் மரபினைச் சார்ந்தே அமைகின்றன. பாடல்களின் வெளிப்பாட்டுப் பாங்கு முத்தொள்ளாயிரத்திற்கே உரிய தனிச்சிறப்போடு வெளிப்படுகின்றது. திணை, துறை முதலான பகுப்புகளின்றி உரிப்பொருளையே முதன்மைப்படுத்தித் திருவள்ளுவர் அகப்பாடல்களை அமைத்த நெறி போன்று முத்தொள்ளாயிர ஆசிரியர் திணை, துறைப் பகுப்புகளின்றி உரிப்பொருளையே முதன்மைப்படுத்திப் புறப்பாடல்களை அமைத்துக் காட்டுகின்றார். இப்புதிய மரபு முத்தொள்ளாயிரப் புறப்பாடல்களுக்குப் புதிய பரிமாணத்தைத் தருகின்றது.

முத்தொள்ளாயிரக் கைக்கிளைப் பாடல்கள்:

தற்போது கிடைத்துள்ள 130 முத்தொள்ளாயிரப் பாடல்களில் 85 பாடல்கள் கைக்கிளைப் பொருண்மையில் அமைந்துள்ளன. இக் கைக்கிளைப் பாடல்கள் புறத்திணையில் இடம்பெறும் பெண்பாற் கைக்கிளைப் பாடல்களாகும். ‘அங்கதப் பாட்டவற் றளவோ டொக்கும்’ என்ற தொல்காப்பியச் செய்யுளியல் 159 ஆம் நூற்பாவிற்கான உரையில் பேராசிரியர், ‘கைக்கிளைச் செய்யுள் முத்தொள்ளாயிரத்துட் போலப் பலவாயினும்’ என்று உரை எழுதியுள்ளமையை நோக்க இரண்டு உண்மைகள் புலனாகின்றன. அவை, கிடைக்காமல் போன முழு முத்தொள்ளாயிர நூலிலும் கைக்கிளைப் பாடல்கள் மிகுதி என்பதும் இவ்வகைப் பாடல்களைக் கைக்கிளை எனப்பாகுபாடு செய்வதே மரபு என்பதுமாகும்.

முத்தொள்ளாயிரக் கைக்கிளைப் பாடல்கள்,

காமப் பகுதி கடவுளும் வரையார்
ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர் (தொல். புறத். 28)

என்ற தொல்காப்பியப் புறத்திணையியல் பாடாண் திணை கூறும் கைக்களைப் பொருண்மை உடையது. இந்நூற்பா உரையில் நச்சினார்க்கினியர், “இக்காமப் பகுதி எழுதிணைக்குரிய காமமும், ‘காமஞ் சாலா இளமையோள் வயின்’ காமமுமன்றி இது வேறொரு காமமென்று கொள்க” என்கிறார். இவ்வுரையின் வழிப் பாடாண் திணைக் கைக்கிளை என்பது அகம் எழுதிணையின் முதலில் இடம்பெறும் கைக்கிளையோ, கைக்கிளைக் குறிப்போ அன்று என்பதும் இது வேறு ஒரு கைக்கிளை, அதாவது புறப்பொருள் கைக்கிளை என்பதும் பெறப்படும். எனவே, பெண்களின் காமப்பகுதியைக் கூறும் முத்தொள்ளாயிரக் கைக்கிளைப் பாடல்கள் புறப்பொருள் பெண்பாற் கைக்கிளைப் பாடல்களே என்பது பெறப்படும். நூற்பாவில் இடம்பெறும் ‘ஏனோர் பாங்கினும்’ என்பதற்கு விளக்கமளிக்கும் நச்சினார்க்கினியர், “கிளவித் தலைவனல்லாத பாட்டுடைத் தலைவனைக் கிளவித் தலைவனாகக் கூறுவனவும் கொள்க” என்பார். முத்தொள்ளாயிரக் கைக்கிளைப் பாடல்களில் சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்கள் பாட்டுடைத் தலைவர்களாக மட்டுமன்றிக் கிளவித் தலைவர்களாவும் வந்துள்ளமையைக் காணமுடியும்.

உலா போந்த மூவேந்தர்களைக் கண்டு, பருவப் பெண்கள் காமுற்றதாகப் புனையப்பட்டுள்ள முத்தொள்ளாயிரக் கைக்கிளைப் பாடல்கள் இடைக்காலத்தில் எழுந்த பல அகப்பொருள் சிற்றிலக்கியங்களுக்கு வித்தாக அமைந்தமை இப்பாடல்களின் தனிச் சிறப்பாகும். பக்தி இலக்கியங்கள் புனைந்து காட்டும் நாயக நாயகி பாவத்திலமைந்த கைக்கிளைப் பாடல்களுக்கும் முத்தொள்ளாயிரக் கைக்கிளைப் பாடல்களும் உள்ள தொடர்பு சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. முத்தொள்ளாயிரத்தின் காலத்தைச் சரியாக வரையறுத்தால் மட்டுமே இக் கைக்கிளை மரபைப் பக்தி இலக்கியங்களிடமிருந்து முத்தொள்ளாயிரம் பெற்றதா? அல்லது முத்தொள்ளாயிர இலக்கியத்திலிருந்து பக்தி இலக்கியங்கள் பெற்றனவா? என்பதை உறுதிப்படுத்த முடியும். எப்படியாயினும் இரண்டிலும் செயல்படும் அகப்பொருள் படைப்பாக்க உத்தி என்பது ஒன்றே.

முடிப்பாக:

இலக்கியச் சுவை மிகுந்த முத்தொள்ளாயிரப் பாடல்களின் நயத்தினை வியத்தலும், பண்பாட்டுச் செய்திகளைத் திரட்டலும், அணிநலன்களின் அழகை வெளிப்படுத்தலும் எனப் பல நிலைகளில் முத்தொள்ளாயிரப் பாடல் குறித்த திறனாய்வுகள் விரிக்கின் பெருகும் சிறப்புடையன. மாறாக, இக்கட்டுரை முத்தொள்ளாயிரம் குறித்த சில விளக்கங்களை முன்னோர் கருத்துக்களை ஒட்டியும் உறழ்ந்தும் முன்வைக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளது. அவை வருமாறு,

1. முத்தொள்ளாயிரம் எண் செய்யுள் என்று பாட்டியல் நூல்கள் குறிப்பிடும் சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது
2. தொள்ளாயிரம் என்ற எண்ணிக்கையால் பெயர் பெற்ற இலக்கிய வகைகளில் முத்தொள்ளாயிரமும் ஒன்று.
3. இந்நூல் விருந்து என்ற வனப்பு வகையால் பாடப்பட்டது.
4. முத்தொள்ளாயிரத்தின் பாடல் எண்ணிக்கை 2,700 அன்று.
5. முத்தொள்ளாயிரம் என்பது மூன்று வகையினதாகிய தொள்ளாயிரம் எனப் பொருள்படும்.
6. முத்தொள்ளாயிரம் வையாபுரிப்பிள்ளை அவர்கள் கருத்தின்படி கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாடப்பட்டிருக்கலாம்.
7. முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியர் நக்கீரதேவ நாயனாராக இருக்கலாம் என்ற சேதுரகுநாதன் அவர்களின் கருத்து ஆய்விற்குரியது.
8. தமிழ் வேந்தர்களின் ஒற்றுமையை வலியுறுத்தும் நோக்கத்தோடும் தமிழின எழுச்சியின் அடையாளமாகவும் முத்தொள்ளாயிரம் பாடப்பட்டிருக்க வேண்டும்.
9. முத்தொள்ளாயிர ஆசிரியர் சைவ சமயத்தைச் சேர்ந்தவர்.
10. பழந்தமிழ் மரபினை ஒட்டி அகம், புறம் என்ற பாடுபொருளைக் கொண்டுள்ளது இந்நூல்.
11. முத்தொள்ளாயிரக் கைக்கிளைப் பாடல்கள் தொல்காப்பியப் பாடாண் திணை கூறும் பெண்பாற் கைக்கிளை மரபினைச் சார்ந்தது.
12. பக்தி இலக்கிய நாயக நாயகி பாவத்திலமைந்த கைக்கிளைப் பாடல்களும் முத்தொள்ளாயிரக் கைக்கிளைப் பாடல்களும் ஒன்றோடொன்று தொடர்புடையன.

புலவர் பூங்கொடி பராங்குசம் அவர்களின் இலக்கியக்களம் - நூல் அணிந்துரை

  முனைவர் நா . இளங்கோ கவிதை இரசனை , இது படைப்புக்கு இணையானதோர் முருகியல் செயற்பாடு . என்றைக்குக் கவிதைகள் தோன்றினவோ அன்றைக்கே கவ...