Thursday 15 October 2009

தமிழ்த் திரைப்படங்களில் கால நகர்வுக் குறியீடுகள்

தமிழ்த் திரைப்படங்களில் கால நகர்வுக் குறியீடுகள்

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
தமிழ்த்துறை
கா.மா.பட்ட மேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8

காலம் என்பது இயக்கத்தில் இருப்பது. கண்ணால் காண முடியாதது. திரைப்படங்களில் இடத்தைச் சித்தரிப்பதைப் போல் அவ்வளவு எளிதாகக் காலத்தைச் சித்தரித்துவிட முடியாது. காட்சியின் தொடக்கத்திலேயே இட மாற்றத்தை பார்வையாளனுக்கு உணர்த்திவிட முடியும். கால மாற்றத்தை / கால நகர்வை வெளிப்படுத்தாமலேயே பார்வையாளன் உணர்வான். ஏனெனில் ஒவ்வொரு செயலுக்கும் நேரம் தேவை. ஒவ்வொரு செயலின் முடிவும் காலம் பயன் படுத்தப்பட்டிருப்பதை அறிவுறுத்துகிறது. திரைப்படத்தில் காட்சிகள் தொடர்ந்து ஆற்றொழுக்கு போல் காண்பிக்கப்பட்டாலும், திரைக்கதை என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட காட்சிகளின் தொகுப்புதான் என்பதை நாம் உணர்தல் வேண்டும். சொல்லப்பட்ட காட்சிகளுக்கிடையே சொல்லப்படாத காட்சிகள் புதைநிலையில் உள்ளன. எனவே காட்சிகளுக்கு இடையே கடந்துபோன காலம், நிமிடங்களா? மணிநேரமா? பொழுதா? நாட்களா? மாதங்களா? ஆண்டுகளா? என்பதைத் திரைப்படம் சொல்லித்தான் ஆகவேண்டும்.

காட்சிகளுக்கு உள்ளேயே ஷாட்களுக்கு இடையே காலம் நகர்கிறபோது, அநேகமாக நிமிடம், மணிநேரம் என்ற அளவில் காலம் கடந்ததைக் கடிகாரத்தின் துணையோடு, அதாவது கடிகார முள் சுழற்சியை டிசால்வ், சூப்பர் இம்போஸ் செய்து காண்பித்துவிடுவார்கள். சான்றாக, நாயகன் கடிதம் எழுதும் நேரம், நாயகி உடை மாற்றிக்கொண்டு வரும் நேரம், நோயாளி மருத்துவருக்காகக் காத்திருக்கும் நேரம் போன்ற கால நகர்வுகள் இவ்வகைக் குறியீடுகளின் வழி பார்வையாளருக்கு உணர்த்தப்படும். அழகன் திரைப்படத்தில் நாயகனும் நாயகியும் தொலைபேசியில் மாலை தொடங்கி இரவு கடந்து மறுநாள் காலை வரை உரையாடும் காட்சியில் கால நகர்வுகள் இயக்குநர் பாலசந்தர் அவர்களால் பல்வேறு குறியீடுகளின் வழியாக காண்பிக்கப்படுவதை இங்கு நினைவில் கொள்ளலாம்.

இரண்டு காட்சிகளுக்கிடையே இடையீட்டுக் காட்சியின்றி காலம் நகர்கிற பொழுது அதாவது நாள் அல்லது காலை, மாலை போன்ற பொழுது நகர்கிறபோது இத்தகு காலநகர்வைக் வெளிப்படுத்துவதற்காகத் தமிழ்த் திரைப்படங்களில், விளக்கேற்றப்படுதல் அல்லது விளக்கணைத்தல், சூரிய உதயம் அல்லது சூரிய அஸ்தமனம், கோயில் மணியோசை, பாங்கோசை, தேவாலய மணியோசை, பூபாள இசை, சுப்ரபாதம், பறவைகளின் சப்தம், நாள்காட்டியில் நாள்தாள் கிழித்தல் முதலான காலநகர்வுக் குறியீடுகள் இடம்பெறுவதுண்டு.

காட்சிகளுக்கிடையே சில நாட்கள் கடந்துள்ளமையைப் புலப்படுத்த நாள்காட்டியின் நாள்தாள்கள் படபடவெனப் பறந்து ஒரு குறிப்பிட்ட நாளில் நிலைகொள்வதாகக் காண்பிப்பதுண்டு. இயக்குநர் பாலச்சந்தர் தம் சிந்து பைரவி திரைப்படத்தில் கதைநாயகன், கதைநாயகி இருவரும் கோபித்துக் கொண்டு சிலநாட்கள் பேசாமல், சந்திக்காமல் காலம் கடத்துவதை ஒவ்வொரு நாளும் செய்தித்தாள் மற்றும் ஒரு கிழமை இதழ் என இணைத்துப் போடும் ஷாட்களைத் தொடர்ந்து காண்பித்து நாட்களின் நகர்வை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார்.

காட்சிகளுக்கிடையே பல மாதங்கள் கடந்திருப்பதை வெளிப்படுத்த இலையுதிர்ந்த மரத்தைக் காண்பித்து அதே பிரேமில் சூப்பர் இம்போஸில் அந்த மரமே பூத்துக் குலுங்குவதைப்போல் காண்பிப்பதுண்டு. சற்றேறக்குறைய இதே உத்தியில் செடி வளர்வது, கொடி வளர்ந்து பூ பூப்பது போன்ற காலக்குறியீடுகள் தமிழ்த் திரைப்படங்களில் இடம் பெறுவதுண்டு.

இரண்டு காட்சிகளுக்கிடையே பல ஆண்டுகள் கடந்திருக்கும் நிலையில் இத்தகு கால நகர்வைப் பார்வையாளர்களுக்கு விளக்கிக் காட்டச் சுழலும் சக்கரத்தைக் காண்பிப்பதுண்டு. காலச் சக்கரத்தின் சுழற்சியைக் குறிப்பிடும் சக்கரங்களாகக் திரைக்காட்சியில் வண்டிச் சக்கரம், தையல் இயந்திரச் சக்கரம், தொழிற்சாலையின் ஏதேனும் ஒரு இயந்திரச் சக்கரம் முதலான சக்கரங்களில் ஒன்று இடம்பெறுவதுண்டு. ஒரு சில திரைப்படங்களில் கால நகர்வைச் சில நாட்களுக்குப் பின்.., சில ஆண்டுகளுக்குப் பின்.., 20 வருடங்களுக்குப் பிறகு.. என எழுத்தில் எழுதிக் காண்பித்து விடுவதும் உண்டு.

திரைப்படங்களில் இடம்பெறும் பாடல் காட்சிகள் குறித்துப் பலவகை விமர்சனங்கள் உண்டு. பல தமிழ்த் திரைப்படங்களில் பாடல்காட்சிகள் கால நகர்வுக்கான உத்தியாகப் பயன்படுத்தப் படுகின்றன என்பதை நாம் கவனத்தில்கொள்ள வேண்டும். சில பல நாட்கள், மாதங்கள், ஆண்டுகள் திரைக்கதையில் கடக்கும் கால நகர்வைப் பாடல்காட்சி ஒன்றைப் புகுத்துவதன் மூலம் மிக எளிமையாக இயக்குநர் பார்வையாளர்களுக்குப் புலப்படுத்தி விடுவார்.

தமிழ்த்திரைப்படங்களில் ஒரே பாடல் காட்சியில் ஒருத்தி கலெக்டர் ஆகிவிடுவதையும், ஓர் ஏழை பணக்காரன் ஆகிவிடுவதையும் நாம் பலமுறை பார்த்ததுண்டு. விபத்துக்குள்ளான/ நோய்வாய்ப்பட்ட கதைப் பாத்திரங்கள் பலர் முழுக்குணம் பெறுவதற்கான கால நகர்த்தலைப் பாடல் காட்சிகள்தாம் செய்கின்றன. இத்தகு பாடல் காட்சிகள் அந்தச் செயல்ககளுக்குரிய முழுமையான கால இடைவெளியைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்றன.

அன்பே சிவம் திரைப்படத்தில் இடம்பெறும் "யார் யார் சிவம்? அன்பே சிவம்!" என்ற பாடல் காட்சியில் கடுமையான விபத்துக்குள்ளான கதைநாயகன் முழுமையாக குணம்பெறும் நெடியகாலம் கடத்தப்பட்டிருப்பதை இங்கு நினைவில் கொள்ளலாம்.

இயக்குநர் கௌதமன் இயக்கத்தில் அண்மையில் வெளிவந்த "வேட்டையாடு விளையாடு" திரைப்படம் காட்சிகளுக்கிடையிலான கால நகர்வை (இட நகர்வையும் சேர்த்து) படம் முழுவதும் எழுத்தில் எழுதிக் (Sub Title) காண்பித்தது.

சான்றாக, கதாநாயகன் விமானத்தில் மதுரை வந்திறங்கி, கொலையைத் துப்புத் துலக்கும் ஒருநாள் நிகழ்ச்சியை விளக்கும் தொடர்ச்சியான காட்சிகளில் காலை 8-30 மணி, காலை 10-30 மணி, மாலை 5-00 மணி எனக் கால நகர்வை எழுத்தில் காண்பித்தது. இந்த உத்தி சற்றேறக்குறைய ஊமைப்படக் கால உத்தி என்றாலும் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தைப் பொறுத்தமட்டில் கதையின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் புதிய உத்தியாகவே பயன்பட்டது. ஏனெனில் கதாநாயகன் துப்பறியும் கதையின் வேகப் போக்குக்கு, வழக்கமான இடையீட்டுக் காட்சிகளால் கால நகர்வை வெளிப்படுத்தும் பழைய முறை பொருத்தமற்றதாக இருக்கலாம் என்று இயக்குநர் கருதியிருப்பார்.

No comments:

Post a Comment

புலவர் பூங்கொடி பராங்குசம் அவர்களின் இலக்கியக்களம் - நூல் அணிந்துரை

  முனைவர் நா . இளங்கோ கவிதை இரசனை , இது படைப்புக்கு இணையானதோர் முருகியல் செயற்பாடு . என்றைக்குக் கவிதைகள் தோன்றினவோ அன்றைக்கே கவ...